வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

21 November 2011

ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம்


வணக்கம் நண்பர்களே!  நீண்ட நாட்களாக பதிவு எதுவும் எழுத முடியவில்லை.  தீபாவளிக்கு எடுத்த ஓய்வு சுகமாக இருந்ததால் அதை அப்படியே தொடர வேண்டியதாகிவிட்டது.  நான் ஒரு சுகவாசி உட்கார்ந்தால் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டேன்.  எழுந்தால் வேலையை முடிக்கும் வரை ஓயமாட்டேன்.  இது எனது சுபாவம்.  இந்த தொடரை முடிக்கும் வரை எந்த இடைஞ்சல்களும் இல்லாமல் இறைவன் எமக்கு அருள்புரிய வேண்டும்.  பார்ப்போம் எவ்வளவு தூரம் நடக்கிறதென்று.

தமிழ் வளைதளங்களில் நானும் ஜோதிடம் குறித்த பதிவுகள் பலவற்றை படித்து பார்த்து, நல்ல ஆரோக்கியமான விஷயங்களை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது தான் அதிகம்.  பலரும் ஜோதிடத்தை ஒரு வியாபார நோக்கத்தோடு தான் பார்க்கிறார்கள்.  விளம்பரத்திற்காக ஜோதிடம் குறித்து எழுதுகிறார்கள்.  அல்லது ஆரம்பகட்ட அரிச்சுவடிகளாக, பாலபாடங்களாக பெயருக்கு எழுதி விளம்பரம் தேடுகிறார்கள்.  இது பல ஜோதிட ஆர்வலர்களை ஏமாற்றமடைய செய்கின்றது.  ஜோதிடத்தை நல்ல ஒரு ஆரோக்கியமான பாதையில் கொண்டு சென்று விவாதிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.  

எனவே ஜோதிட ஆய்வுத் தொடர் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.  12 லக்னங்களையும், 9 ராசிகளையும் முடிந்தவரை அலசி ஆராய்ந்து பலன்களை எழுத முடிவு செய்திருக்கிறேன்.  இந்த பலன்கள் எனது அனுபவத்தில் ஆராய்ந்த ஜாதகங்ளின் மூலம் அறிந்து கொண்டவை மற்றும் பல ஜோதிட ஆய்வு நூல்களை ஆதாரமாக கொண்டு எழுதுகிறேன்.  

எனவே இந்த பலன்கள் அப்படியே உங்களுக்கு பொருந்தி வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.  உங்கள் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் மற்றும் நடப்பு தசா புக்தி, கோச்சாரம் போன்றவற்றால் பலன்கள் மாறுபட்டு நடக்கலாம்.  எனினும் ஒரு ஆய்வுக்காக ஜோதிடத்தில் உருப்படியாக, கோர்வையாக ஏதேனும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த தொடரை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.  மற்றவர்களைப் போல டிப்ஸ் மற்றும் அடிப்படை பாடங்களை கொடுத்து வாசகர்களை சலிப்படைய செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை.

இங்கு குறிப்பிட்ட பலன்கள் உங்களுக்கு நடைபெற்றிருக்கிறதா அல்லது நீங்கள் கண்ட ஜாதகங்களில் நடைபெற்றிருக்கிறதா என்று கவனித்து வாருங்கள்.  அப்படி நடந்திருந்தால் எமக்கு எழுதுங்கள்.  ஒரு கர்ஃபர்மேஷன் தான்.  இல்லை இத்தகைய கிரகநிலைகள் அமைந்து வேறு மாதிரியான பலன்கள் நடைபெற்றால் அவற்றையும் குறிப்பிடுங்கள்.  

இது ஒரு கூட்டு முயற்சியே.  ஊர் கூடி தேர் இழுப்பதை போன்றது.  நல்லதொரு ஆரோக்கியமான ஜோதிடம் குறித்த விவாதங்கள், ஆய்வுகளை செய்வதன் மூலம் நமது ஜோதிட அறிவை விருத்தி செய்து கொள்ளலாம்.  இனிவரும் காலங்களில் ஜோதிடத்தின் மூலம் நம் வாழ்வில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நம்மை வழிநடத்திகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

சரி இனி பதிவுக்கு செல்வோம்.

வானில் உள்ள ராசி மண்டலத்தில் உள்ள 12 ராசிகளில் முதன்மையானது மேஷம்.  இந்த ராசியின் உள்ள் நட்சத்திரங்கள் பூமியிலிருந்து பார்ப்பதற்கு ஆடு போன்று தோற்றமளிப்பதால் இந்தப் பெயர் வந்தது.

மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை-1-ம் பாதம் ஆகியவை அடங்கியுள்ளன.

இந்த ராசியின் அதிபதி செவ்வாய்.  மேலும் செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் ஆகிய இரண்டு ராசிகளில் மேஷம் தான் செவ்வாயின் மூலத்திரிகோண வீடாகும்.  மேலும் ஆண் ராசியாகவும் வருகிறது. எனவே செவ்வாயின் குணாதிசியங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகம் இருக்கும்.  இந்த ராசிகளில் பிறந்த பெண்களின் செயல்கள்  ஆண்களைப் போல இருக்கும். அச்சம், மடம், நாணம் போன்றவற்றையெல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.
   
போர்க்குணம் மிக்கவர்கள், மேலும் லக்னாதிபதியே 8-க்குடையவராக அமைவதால் இவர்களுக்கு வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நிகழும்.  இவர்களின் செயல்பாடுகளில் அசாதாரணமான வேகம் இருக்கும்.  

மேஷம் சர லக்னமாக அமைவதால் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஒரு இடத்தில் நிலையாக உட்காரமாட்டார்கள்.  சதா எந்நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாக அங்கும் இங்கும் அலைந்தவாறு இருப்பார்கள்.  நெருப்பு ராசியாக அமைவதால் வெப்பமான தேக அமைப்பு உடையவர்கள். பெரும்பாலான மேஷலக்னத்தார் தாடியுடன் காணப்படுவார்கள்.  ஆட்டு தாடியுடன் ஒப்பிட வேண்டாம். அப்புறம் கொம்பு எங்கே என்று கேட்டால் நான் அம்பேல்.

இவர்கள் யாருக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் இல்லை.  மற்றவர்கள் தங்களை விட பெரியவர்களாக, விஷய ஞானம் உள்ளவராக இருந்தாலும் அவர்களை விட தான் சிறந்தவன் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும்.  பிறரிடம் பழகும் போது அவர்கள் பேசுவதை கேட்பதை போல தெரிந்தாலும் உள்ளுக்குள் இவன் பெரிய புடுங்கியா எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பீத்தறான் என்று நினைப்பார்கள்.

மேடத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதியான செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்று அமைந்தால் ருசக யோகம் அமையும்.  இது பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றாகும்.  இதில் பிறந்தவர்கள் நல்ல உடல் பலம் பெற்று காணப்படுவார்கள்.  வசீகரமான தோற்றம், ஒல்லியான இளமையான தேகம்,  சுருண்ட முடி சற்றே உயரமாக இருப்பார்கள்.  வீர தீரம் அதிகம் இருக்கும்.  நிலபுலன்களால் ஆதாயம் கிடைக்கும்.  சீருடைப் பணி, பொறியியல், மருத்துவம், தீயணைப்பு துறை, காவல் துறை போன்ற துறைகளில் இருப்பார்கள்.

பிறரை கேலி கிண்டல் செய்வதில் ஆர்வம் இருக்கும்.  வம்புச் சண்டைக்கு செல்வதென்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இருக்கும்.  இவர்களிடம் தேவையில்லாமல் வாயை கொடுத்து  எதையும் புண்ணாக்கி கொள்ள வேண்டாம்.

கோபம் சட்டென்று வரும்.  செயல்களில் அனல் பறக்கும் வேகம் இருக்கும். இதுதான் இவர்களின் பலம் மற்றும் பலவீனம்.  இவர்கள் பெரும்பாலும் நிதானமாக யோசித்து காரியங்கள் செய்வதை விரும்பமாட்டார்கள்.  தடாலடி முடிவுகள் எடுப்பதில் பேர் பெற்றவர்கள்.  தவறான முடிவுகளாக இருந்தாலும் பின்வாங்க மாட்டார்கள்.  விளைவுகள் எப்படி இருந்தாலும் கவலைப்பட மாட்டார்கள்.  அவர்களைப் பொருத்தவரை அவர்கள் நினைத்ததை செய்துவிட வேண்டும்.  வெற்றி தோல்வியெல்லாம் அதன் பின்பு தான்.  லக்னத்திற்கு குரு பார்வை  அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் நல்லதொரு விவேகமான முடிவுகளை எடுக்க துணைபுரியும்.

இங்கு ஒரு நுணுக்கம் இருக்கிறது.  செவ்வாயானவர் லக்னத்திற்கும் 8க்கும் அதிபதியாக வருகிறார்.  எனவே அவர் அமரும் வீட்டில் எந்த ஸ்தானத்திற்கு வலுவடைகிறாரோ அந்த வீட்டின் பலன்கள் அதிகம் நடைபெறும்.  எனவே இதனையும் கவனத்தில் கொண்டு பலன்களை ஆராய வேண்டும்.

லக்னத்தில் உள்ள செவ்வாய் 4ம் பார்வையாக சுக ஸ்தானமான 4 ஐ பார்ப்பார், 7ம் பார்வையாக 7மிடத்தையும், 8ம் பார்வையாக 8மிடத்தையும் பார்ப்பார்.

7மிடம் காமம், மனைவி, பிறருடன் கொள்ளும் தொடர்பு, பார்ட்னர்ஷிப்,  வியாபாரம், பயணங்கள் ஆகியவற்றை குறிக்கும்.

4மிடம் சுகஸ்தானம், சுகத்தை குறிக்கும்  எனவே செவ்வாய் லக்னத்திலிருந்து இந்த இரண்டு வீடுகளையும் பார்ப்பதால் இவர்களுக்கு காம உணர்வு இயல்பாகவே அதிகம் இருக்கும்.  மேலும் 7க்குரியவர் சுக்கிரனாக அமைவதும் ஒரு காரணம்.  

8மிடம் ஆயுளை குறிப்பதால் லக்னாதிபதி பலம் பெற்று ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பது நல்ல நீண்ட ஆயுளை கொடுப்பதற்கு வழியேற்படும்.
மேஷத்திற்கு 2மிடம் சுக்கிரன் வீடாக அமைகிறது.  2ம் இடம் பேச்சாற்றல், கண், குடும்பம், தனம் முதலியவற்றை குறிக்கிறது.  இவர்கள் பார்வையாலேயே அல்லது பேசிப் பேசியே பெண்களை மடக்கிவிடுவதில் கில்லாடிகள்.  நாக்கில் தேன் தடவுவதை போல் பேசுவார்கள்.  காரியம் முடிந்ததும் மறக்காமல் அல்வா வாங்கி கொடுப்பார்கள். 

சுபிட்சத்திற்கு காரகனான சுக்கிரன் 2க்குடையவராக அமைவதால் கையில் பணப்புழக்கம் எப்போதும் இருக்கும். 7க்குடையவரும் சுக்கிரனாக அமைவதால் பெரும்பாலும் இவர்கள் தொடர்பு கொள்ளும் நபர்களில் அதிகம் பெண்களாக இருப்பார்கள்.  அது காமமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.  இருந்தாலும் இவர்கள் நெருப்பு போன்றவர்கள், பஞ்சுதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

செவ்வாய் ஒரு பாபக்கிரகமாதலால் இவர் லக்னத்திற்கு உப ஜெய ஸ்தானங்களான 3, 6,10, 11 ல் இருப்பது சிறப்பு.

செவ்வாய்க்கு சுக்கிரன் சமம் என்ற அளவில் வரும்.  மேலும் சுக்கிரனுடைய வீடுகளான ரிஷபம், துலாம் இவற்றில் செவ்வாய் சமம் என்ற நிலையை அடைகிறார்.

பொதுவாக ஜோதிடத்தில் செவ்வாய் சுக்கிரன் சம்பந்தம் ஜாதகரை சபல புத்தியுடையவராக ஆக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  சம்பந்தம் என்றால் செவ்வாய் சுக்கிரன் இணைந்து செவ்வாயின் வீடுகளில் அல்லது சுக்கிரனின் வீடுகளில் அமர்வது, பரிவர்த்தனை, சுக்கிரன் வீடுகளில் செவ்வாய் இருப்பது, சுக்கிரனின் நட்சத்திரங்களில் செவ்வாய் அமர்வது, ஒருவரை ஒருவர் சம சப்தமாக பார்ப்பது மற்றும் அம்சத்திலும் செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் தங்களின் வீடுகளில் இணைந்து அல்லது மாறி அமர்வது ஆகியவற்றை குறிக்கும். 

இத்தகைய அமைப்புகளை பெற்ற ஜாதகர்கள் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் அவர்களின் காம உணர்வுகள் அதிகம் இருக்கும்.  பலர் திருமணத்திற்கு முன்பே எதிர் பாலினத்தாரிடம் நெருக்கமாக பழகும் வாய்ப்புகள் இருக்கும்.  மேஷலக்னத்திற்கு சுக்கிரன் முக்கியமாக 7ம் அதிபதியாக வருகிறார்.  மேலும் குடும்பாதிபதியும் அவரே.  எனவே மேஷலக்னத்தாருக்கு இந்த காதல், கசமுசா விஷயங்கள் எல்லாம் அத்துப்படி.

செவ்வாய் 2ல் இருந்தால் வாக்கில் கடுமை அதிகம் இருக்கும்.  பாபக்கிரகம் 2ல் இருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல.  வீண்செலவுகள், குடும்பத்தில் பிரச்சினைகள், கண்களில் குறைபாடுகள், பிறரை கேலி கிண்டல் செய்து பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளுதல் போன்ற பலன்கள் நடக்கும். லக்னாதிபதி 2க்கு செல்வது நன்மைதான்.  ஜாதகர் செல்வந்தர்.  மேலும் 2லிருந்து தன் வீடான 8 ஐ நேரடியாக பார்ப்பதால் ஆயுள் அதிகரிக்கும்.

செவ்வாய் 3ல் இருப்பது நல்லது என்று முன்பே கூறினோம்.  3மிடம் தைரியம், வீரியம், போக இச்சை, சகோதரர்கள், ஆளடிமை, குறுகிய தூர பயணங்கள், தொலை தொடர்பு,  ஜாதகரின் முயற்சி ஆகியவற்றை குறிக்கிறது. 

மேஷ லக்னத்திற்கு 3ம்மிடம் புதனுடைய வீடான மிதுனமாக அமைவதால் செவ்வாய் இங்கு பகை பெற்றுவிடுகிறார்.  எனவே இவற்றால் இவர்கள் பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.  கடுமையாக முயன்றால் தான் வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.  4மிடமான தயார் ஸ்தானத்திற்கு 3மிடம் 12மிடமாக வருவதால் தயாருக்கு கஷ்டத்தை தருபவராக ஜாதகர் இருப்பார்.

மேலும் 3மிடம் லக்னத்திற்கும் மறைகிறது.  8மிடத்திற்கும் மறைகிறது.  எனவே செவ்வாய் இந்த இரண்டிற்கு ஆதிபத்யம் பெற்று 3ல் அமர்வது மேஷ லக்னத்திற்கு அவ்வளவாக நல்ல பலன்களை அளிப்பதில்லை.  முயற்சிகளில் சுணக்கம், உடல் நலம் பாதிப்பு, சகோதிர வழிகளில் இடைஞ்சல்கள் ஏற்படும்.

செவ்வாய் 4ல் கடகத்தில் நீசமடைகிறார்.  ஒரு வகையில் லக்னாதிபதி கேந்திரம் சென்றது சிறப்பு என்றாலும் நீசம் அடைவது ஜாதகரை டம்மியாக்கிவிடும்.  ஜாதகர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பார்.  ஜாதகரின் தாயாருக்கு பீடை,  தாய்வழி உறவினர்களுடன் பிரச்சினைகள், பூமி, வாகன வழிகளில் பொருள் விரயம், கல்வியில் தடை,  போன்ற பலன்கள் அமையும்.

லக்னாதிபதியும், ஆயுள் ஸ்தானாதிபதியுமான செவ்வாய் நீசம் பெற்று புதன், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று அமர்ந்தால் சாதகருக்கு கெண்டாதி தோஷங்கள் ஏற்படும்.  உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆனாலும் இந்த இடத்தில் குரு அல்லது சந்திரன் இணைந்து இருந்தாலும் அல்லது சந்திரன் மகரத்தில் இருந்து தன் வீட்டை பார்த்தாலும் செவ்வாய் நீசம் பங்கம் அடைந்து பலம் பெற்று விடுவார்.  எனவே இந்த பலன்கள் மாறி இவற்றால் நல்ல பல்ன்கள் நடைபெற வழியேற்படும்.


மேஷலக்னத்திற்கு செவ்வாய் 5ல் அமைவது சிறப்பு.  லக்னாதிபதி 5க்கு செல்வதும், 5க்குக்குடையவர் லக்னத்திற்கு வருவதும் நல்லதொரு அமைப்பாகும்.  ஜாதகர் பூர்வ புண்ணியத்தால் இந்த பிறவியினை அடைந்திருக்கிறார்.  5மிடம் புத்தியை குறிக்கிறது. மேலும் ஜாதகரின் குழந்தைகள், பூர்வ புண்ணியம்,  அதிர்ஷ்டம், உழைக்காமல் வருகின்ற பணம், ஸ்பெகுலேஷன், ஜாதகரின் புகழ், மந்திரங்களில் ஈடுபாடு, காதல் வயப்படுதல் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.

மேலும் மேஷத்திற்கு 5மிடம் சிம்மமாகும்.  இது பஞ்சம திரிகோணம். மேலும் சிம்மத்தின் அதிபதி சூரியன் செவ்வாய்க்கு நட்பு கிரகமும் கூட.  செவ்வாய் சிம்மத்தில் நட்பு நிலை பெறுகிறார்.  எனவே 5ம் பாவத்தின் காரகத்துவ பலன்கள் ஜாதகருக்கு சிறப்பாக அமையும்.  சூரியன் அல்லது குருவின் இணைவு அல்லது பார்வை பெற்று செவ்வாய் சிம்மத்தில் இருந்தால் மிகவும் சிறப்பாக அமையும்.

இந்த இடத்தில் இரண்டு வீடுகளுக்கும் சாதகமாக செவ்வாய் அமர்வதால் இந்த இரண்டு வீட்டின் பலன்களும் ஜாதகருக்கு நன்றாக அமையும்.

சரி.  ஒரே பதிவில் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது.  அதுவும் தொடர்ச்சியாக நிச்சயம் எழுத முடியாது.  தொடர்ந்து ஜோதிடத்தையே எழுதினால் போரடிக்கும்.  நாட்டு நிலவரத்திற்கு ஏற்றவாறு இடையிடையே இடைச் செருகல்கள் இருக்கும்.   நீங்கள் தான் விட்ட இடத்திலிருந்து பிடித்துக்கொள்ள வேண்டும்.  எனவே முடிந்தவரை கொஞ்சம் கொஞ்சமாக தொடந்து எழுதவிருக்கிறேன்.  பொறுமையாக படித்து உங்களின் மேலான ஆலோசனைகளை எமக்கு எழுதுங்கள்.  

(மனசாட்சி: அட யாருப்பா எழுதப்போறாங்க எதுக்கும் சொல்லிவைப்போம்)

டிஸ்கி: பதிவு பிடித்திருந்தால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் காப்பி, பேஸ்ட், பிரஷ் செய்து கொள்ளுங்கள்.  கொஞ்சம் நம்ம பேரையும், பதிவையும் குறிப்பிட்டு தேங்ஸ் கார்டு போட்டீங்கன்னா புண்ணியமா போகும்.  பின்னாளில் யாருக்கும் குஷ்டம் அடச்சே கஷ்டம் எதுவும் வராது.

15 comments:

  1. Nandraga ulladhu thodarungal, best wishes

    ReplyDelete
  2. nalla muyarchi romba virivaa ezhuthureenga thodarnthu padikka aavalaga ullathu thanks

    ReplyDelete
  3. வாங்க ரவிசந்திரன் மற்றும் யோகி உங்கள் கருத்துரைக்கு நன்றி.

    எழுதனும்னு உட்கார்ந்தா விஷயம் அருவிமாதிரி வந்துகிட்டே இருக்கும். ஆனால் எல்லாவற்றையும் ஒரே பதிவில் சொல்லிவிட முடியாதே. தொடர்ந்து எழுத நேரமும் கிடைக்க மாட்டேன்கிறது.

    ஒரு முறை எழுதிய பிறகு பல விஷயங்கள் இன்னும் சிறப்பாக சொல்லியிருக்கலாமே என்று தோன்றும்.

    முடிந்தவரை சிறப்பாக அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். பொறுமையாக படித்து எனக்கு ஊக்கமும் ஆதரவையும் தாருங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக விஷயங்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. //பெரும்பாலான மேஷலக்னத்தார் தாடியுடன் காணப்படுவார்கள்.//

    வாவ்! யூ ஆர் கிரேட். மிகவும் சரி. என்னுடைய நண்பன் மேஷம் லக்னம்தான். நான் அவனை அடிக்கடி தாடி வைத்தால் தேவதாஸ் மாதிரி இருக்கிறது என்று திட்டுவேன். ஆனால் அவனோ தாடி வைப்பதையே அதிகம் விரும்புகிறான். நானும் ஸ்டைலுக்காக வளர்க்கிறான் என்று தவறாக நினைத்து விட்டேன். இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?

    தேங்க்ஸ் பார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன்.

    ReplyDelete
  5. //இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஒரு இடத்தில் நிலையாக உட்காரமாட்டார்கள். சதா எந்நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாக அங்கும் இங்கும் அலைந்தவாறு இருப்பார்கள்.//

    உண்மை. உண்மை. அவன் ஒரு ஊர் சுற்றிதான்.

    //இவர்கள் யாருக்கும் கட்டுப்படக்கூடியவர்கள் இல்லை. மற்றவர்கள் தங்களை விட பெரியவர்களாக, விஷய ஞானம் உள்ளவராக இருந்தாலும் அவர்களை விட தான் சிறந்தவன் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். பிறரிடம் பழகும் போது அவர்கள் பேசுவதை கேட்பதை போல தெரிந்தாலும் உள்ளுக்குள் இவன் பெரிய புடுங்கியா எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பீத்தறான் என்று நினைப்பார்கள்.//

    அதே அதே.

    //வசீகரமான தோற்றம், ஒல்லியான இளமையான தேகம், சுருண்ட முடி சற்றே உயரமாக இருப்பார்கள். வீர தீரம் அதிகம் இருக்கும்.//

    வாவ்! பென்டாஸ்ட்டிக்!!

    //பிறரை கேலி கிண்டல் செய்வதில் ஆர்வம் இருக்கும். வம்புச் சண்டைக்கு செல்வதென்றால் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்று இருக்கும்....கோபம் சட்டென்று வரும்....... etc...etc //

    ஆமா ஸார்.

    ஸார், என்னுடைய நண்பனுக்காக அப்படியே அவனை தோலுரித்துக் காட்டியது போல் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் ஸார்.

    ReplyDelete
  6. //பார்வையாலேயே அல்லது பேசிப் பேசியே பெண்களை மடக்கிவிடுவதில் கில்லாடிகள். நாக்கில் தேன் தடவுவதை போல் பேசுவார்கள். காரியம் முடிந்ததும் மறக்காமல் அல்வா வாங்கி கொடுப்பார்கள். //

    ஸார், உங்கள் கைகளை தொட்டுக் கும்பிட வேண்டும் போல் உள்ளது. மிகவும் சரி. தங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது. படிக்கும் பொழுது சிரித்தவாறே வாசித்தேன். கீப் இட் அப்.

    ReplyDelete
  7. //ஒரு கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் பலன்களை சார்ந்துவிடுகிறது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் சுய முயற்சியுடையவர். 2-ல் இருந்தால் குடும்பத்தின் மீது பற்று உடையவர். 4-ல் இருந்தால் தாயார் மீது அன்புடையவர். 5-ல் இருந்தால் குழந்தைகள் மீது பாசம் அதிகம் இருக்கும். 9-ல் இருந்தால் தந்தைபாசம் உடையவர்//

    ஸார், முந்திரிக்கொட்டை போல் முந்துவதற்கு மன்னிக்கவும். கும்ப லக்னம் வர இன்னும் நாட்கள் இருப்பதால் தயவுசெய்து என்னை மன்னித்து இந்த ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறுங்களேன். ப்ளீஸ்.

    நான் கும்ப லக்னம், லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில். ஆனால் நான் பாசமாக இருக்க நினைத்தாலும் எனக்கும் எனது தந்தைக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் வாக்குவாதம் போல் இருக்கிறது. என்ன காரணம்? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. வாங்க சுதீப் உங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் எழுதியுள்ள கருத்துரைகள் ஜோதிடத்தில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    நான் மிகவும் தாமதமாக பதிவுகள் எழுதுவதற்கு போதிய நேரமின்மையே காரணம். ஆனாலும் நான் நிச்சயம் மீனம் வரை தொடர்ந்து எழுதி முடிக்காமல் நிறுத்திவிட மாட்டேன் கவலை வேண்டாம்.

    ஜோதிடம் பற்றி அறிந்து கொள்ள உங்களது கும்ப லக்னம் பற்றி மட்டும் படிக்காமல் அனைத்து லக்னங்களைப் பற்றியும் பொறுமையாக படித்து வாருங்கள். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களது லக்ன பலன்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.

    உங்கள் கருத்துரைகளை அவ்வப்போது இங்கு எழுதுங்கள். அதுவே என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகோலாக இருக்கும்.

    ReplyDelete
  9. ///நான் கும்ப லக்னம், லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில். ஆனால் நான் பாசமாக இருக்க நினைத்தாலும் எனக்கும் எனது தந்தைக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் வாக்குவாதம் போல் இருக்கிறது. என்ன காரணம்? தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.////

    லக்னாதிபதி 9க்கு சென்றது உங்களுக்கு பாச உணர்வை தூண்டியது சரி. உங்களிருவருக்கும் இடையேயான புரிதல் இருக்க வேண்டுமானால் இது மட்டும் போதாது. 9-க்குடைய சுக்கிரன் இருக்கும் வீட்டையும் பார்க்க வேண்டும். சுக்கிரன் 6, 8, 12ல் மறையாமல் பகை நீசம் பெறாமல் இருக்க வேண்டும். அவ்வாறே சூரியனும் பாபகிரகங்களுடன் சேராமல் பலம் குறையாமல் இருக்க வேண்டும். மேலும் சூரியனுடைய சிம்ம ராசி பாதிப்படையாமல் இருக்க வேண்டும். ஆக இத்தனை விஷயங்களை பார்க்க வேண்டும். தொடர்ந்து வாசித்து வாருங்கள் உங்களுக்கே புரியும்.

    ReplyDelete
  10. நல்ல விரிவான தெளிவான பதிவு. முத்து இப்பதான் சிதற ஆரம்பித்திருக்கிறது. என்ன பெரிய மனசு, யார் வேண்டுமானாலும் கட் copy செய்து கொள்ளுங்கள்
    என்று சொல்ல எவ்வளவு திடம் வேண்டும். எனக்கு தெரிந்த ஒரு யோகா ஆசிரியர் தான் எழுதியவற்றையெல்லாம்
    யாராவது திருடி பணம் பண்ணி விடுவார்கள் என்று அதுவரை எழுதிய அத்தனை பதிவுகளையும் அழித்து விட்டார். (!!!)
    நீங்க நிறைய எழுதணும். நாங்க நிறைய தெரிஞ்சுக்கணும். இறைஅருள் துணை புரியட்டும்.

    ReplyDelete
  11. வாங்க ஸ்வாமி உங்கள் பாராட்டிற்கு நன்றி.

    காப்பி பேஸ்ட்?!

    நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல?

    நாலு பேருக்கு உபயோகமாகட்டும்னு தான் பதிவு எழுதறறோம். அந்த நோக்கம் நிறைவடைஞ்சா அதுவே நமக்கு திருப்திதான். அது எந்த வழியில், எங்கேயிருந்து போனால் என்ன?

    ReplyDelete
  12. ///காரியம் முடிந்ததும் மறக்காமல் அல்வா வாங்கி கொடுப்பார்கள்.///

    :))

    ReplyDelete
  13. BOSS KALAKKURINGA !
    THANK YOU VERY MUCH .

    ReplyDelete
  14. தங்கள் எழுத்துக்கள் அத்தனையும் முத்துக்கள் ஐயா.
    என்றும் அன்பும் நன்றியும்

    அன்போடு
    விக்னசாயி.

    ===============================

    ReplyDelete
  15. நல்ல பதிவு ஐயா நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.