வணக்கம் நண்பர்களே!
ஒரு கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் பலன்களை சார்ந்துவிடுகிறது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் சுய முயற்சியுடையவர். 2-ல் இருந்தால் குடும்பத்தின் மீது பற்று உடையவர். 4-ல் இருந்தால் தாயார் மீது அன்புடையவர். 5-ல் இருந்தால் குழந்தைகள் மீது பாசம் அதிகம் இருக்கும். 9-ல் இருந்தால் தந்தைபாசம் உடையவர்.
ஜோதிடத்தில் குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்திருந்தால் இன்னென்ன குணாதிசியங்கள் ஜாதகருக்கு இருக்கும் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
உதாரணமாக சிம்ம லக்னத்தில் பிறந்திருந்தால் நேர்மையாக இருப்பார்கள், ஈகோ அதிகம் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முக்கியத்துவம் பெறுவதை விரும்புவார்கள். முன்கோபம் உடையவர்கள் என்று அவர்களுக்குரிய பொதுவான குணாதிசியங்களை குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதில் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது சிம்மத்தின் குணாதிசியங்களை பெற்றிருக்க ஒருவர் சிம்ம லக்னத்தில் தான் பிறக்க வேண்டுமென்பதில்லை. லக்னத்தில் சூரியன் பலம் பெற்று எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் அவர் சூரியனுக்கு உரிய குணாதிசியங்களை பெற்றிருப்பார்.
சிம்ம லக்னத்தில் பிறந்திருந்தும் சிம்மத்தின் குணாதிசியங்கள் அவரிடத்தில் காணப்பட வில்லையெனில் அவர் சிம்மலக்னத்தில் பிறந்திருந்தாலும் அவரது லக்னத்தில் வேறு கிரகங்கள் பலமாக இருந்தோ அல்லது அந்த கிரகங்கள் பலம் பெற்று லக்னத்தை பார்த்தோ இருந்திருக்கும். எனவே அவரிடம் சிம்மத்தின் குணாதிசியங்களை விட அந்த கிரகங்களின் குணாதிசியங்களே அதிகம் இருக்கும்.
ஆக ஒரு கிரகத்தின் பலனை பெற்றிருக்க அந்த லக்னத்தில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பதில்லை. எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் கிரகங்கள் அவரது லக்ன பாவத்தில் பெறும் பலத்திற்கு ஏற்பவே ஜாதகருடைய குணாதிசியங்கள் இருக்கும். லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை, எந்த கிரகமும் பார்க்கவில்லை எனில் ஜாதகர் லக்னாதிபதியின் குணாதிசியங்களை பெற்றிருப்பார்.
நான் கண்ட ஜாதகங்களில் லக்னத்திற்கு பல கிரகங்களின் சம்பந்தம் பெற்றிருப்பதை கண்டிருக்கிறேன். லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு ஏழில் கிரகங்கள் அதிகம் அமையப்பெற்ற ஜாதகர்கள் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். பன்முகத் திறமைகளை பெற்றிருப்பார்கள். அந்தந்த கிரகங்களின் குணாதிசியங்கள் அவர்களிடம் இருக்கும்.
சரி இப்போது மேஷலக்ன பலன்களுக்கு வருவோம்.
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு லக்னம் முதல் 5 பாவங்கள் வரையிலான வீடுகளில் லக்னாதிபதியான செவ்வாய் அமர்ந்திருக்க தரும் பலன்களை சென்ற பதிவில் பார்த்தோம்.
செவ்வாயானவர் மேஷலக்னத்திற்கு 6-ல் கன்னியில் அமர்ந்தால் என்ன பலன்களை தருவார்.
மேஷலக்னத்தாருக்கு புதன் கொடிய பாவியாகிறார். எப்படி?
புதன் தீயபாவங்களான 3-க்கும் 6-க்கும் உடையவர். மேலும் லக்னாதிபதியான செவ்வாய்க்கு புதன் பகைவர். ஆனாலும் புதனுக்கு செவ்வாய் சமம் என்ற அளவில் வருவார்.
என்னதான் புதன் செவ்வாயை சமம் என்று இருந்தாலும் சற்று அலட்சியமாகவே நினைப்பார்.
செவ்வாய் என்றால் கோபம், ஆத்திரம் ஆகியவற்றிற்கு காரகர்.
புதன் என்றால் புத்திசாலித்தனத்திற்கு காரகர்.
எனவே தான் ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி வந்ததோ?!
ஆக மேஷ லக்னத்தாருக்கு 6-மிடமாக வரும் கன்னி புதனுடைய வீடாக அமைவதால் எதிரிகள் மிகுந்த புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் கொஞ்சம் ஏமாந்தாலும் அவர்களை காலி செய்து விடுவார்கள். எனவே மேஷத்தில் பிறந்தவர்கள் எதிரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் எதிரியாகவே தெரியமாட்டான் ஆனால் முதுகுக்கு பின்பு ஏகப்பட்ட வேலைகள் நடக்கும். மேஷத்தாரை நேருக்கு நேராக மோதி வெற்றிபெறுவது கடினம் என்பது எதிரிக்கு தெரியும். அதனால் அவர்களை புத்தியால் வென்றுவிடுவார்கள்.
இப்படிப்பட்ட எதிரியின் வீடான கன்னியில் லக்னாதிபதி செவ்வாய் சென்று மாட்டிக்கொண்டால் ஜாதகரின் நிலை?
ஜாதகருக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள், நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் தோன்றும். வம்பு, வழக்குகள், நோய், கடன் தொல்லைகள் என்று தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்.
ஆனாலும் செவ்வாய் பாபக்கிரகம் என்பதாலும் 8-க்குடைய அஷ்டமாதிபத்யம் பெறுவதாலும் அவர் 6-ல் சென்று மறைவது ஒரு விதத்தில் நல்லது தான் என்றாலும் லக்னாதிபதியாயிற்றே அவர் மறையலாமா என்றால் மறையலாம் என்பதுதான் பதில். ஏனெனில் ஜாதகர் அனைத்திலும் வெற்றிபெறுவார். போராட்டம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. போராடி கிடைக்கும் வெற்றி ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரும்.
இங்கு முக்கியமான ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். செவ்வாயுடன் புதன் இணைந்து இருக்கக்கூடாது. அவ்வாறு இணைந்தால் மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் சம்பவிக்கும். ஏனெனில் செவ்வாய் மரணத்தை குறிக்கும் 8-க்கு உடையவராகவும் வருகிறார். இந்த வீட்டில் புதன் உச்சம் அடைகிறார். ஆறாம் அதிபதி பலம் பெற்று லக்னாதிபதி பகை பெறுவதால் தீயபலன்களே அதிகம் நடைபெறும்.
செவ்வாய் 7-ம் இடமான துலாத்தில் இருந்தால் என்ன பலன்களை தருவார்.
ஒரு கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் பலன்களை சார்ந்துவிடுகிறது. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் சுய முயற்சியுடையவர். 2-ல் இருந்தால் குடும்பத்தின் மீது பற்று உடையவர். 4-ல் இருந்தால் தாயார் மீது அன்புடையவர். 5-ல் இருந்தால் குழந்தைகள் மீது பாசம் அதிகம் இருக்கும். 9-ல் இருந்தால் தந்தைபாசம் உடையவர்.
இப்போது சொல்லுங்கள் லக்னாதிபதி மனைவியை குறிக்கும் 7-ல் இருந்தால் பலன் என்ன?
யூகித்துவிட்டீர்களா? அதேதான். ஜாதகர் மனைவியே கதியென்று இருப்பார். மாமனார் வீட்டு மகாராஜன். 7-ம் இடம் காமத்தையும் குறிக்கிறது அல்லவா? எனவே ஜாதகரிடம் காமம் அதிகம் இருக்கும். மேலும் லக்னாதிபதியானவர் செவ்வாயாகவும் 7-க்குடையவர் சுக்கிரனாகவும் இருப்பதால் நம்ம ஆள் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் போடுவார். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.
செவ்வாய் 10-மிடம், லக்னம், 2-மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பார். மேலும் சப்தம கேந்திரம் பெற்றதால் பலம் பெறுகிறார். எனவே செவ்வாய் 7-ல் இருப்பது சிறப்பு.
ஆனாலும் சுக்கிரன் மேஷத்திற்கு 2, 7-க்குடைய பிரபல மாரகாதிபதியாக அமைகிறார். எனவே 7-ல் சுக்கிரனுடன் இணைந்து இருந்தால் மாரகத்திற்கு சமமான கெண்டங்களையும் தருவார். செவ்வாய் 8-க்கும் அதிபதியாயிற்றே. வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை.
செவ்வாய் 8-ல் தனது சொந்த வீடான விருச்சிகத்தில் ஆட்சிபெறுவது நன்மைதான். ஆயுள் பலம் அதிகரிக்கும். ஜாதகர் தான் பிறந்த இடத்திலிருந்து வெளியிடங்களில் சென்று வாழ்வார். அங்கு நல்ல நிலையில் இருப்பார். ஆனாலும் அஷ்டமாதிபதி பலம் பெறுவது எந்த லக்னத்திற்கும் நல்லதில்லை. அந்த வகையில் தேக பீடை, வைத்திய செலவு, நோய்கள், அவமானங்கள், தொல்லைகள், துன்பங்கள் என்று ஏற்படத்தான் செய்யும்.
செவ்வாய் தனது நண்பரான குருவின் தனுசுவில் 9-ல் அமர நன்மையான பலன்களை தருவார். லக்னாதிபதி பாக்யம் பெற்றது சிறப்பு. அதுவும் பொது சுபரும், மேஷலக்ன சுபருமான குருவின் வீட்டில் அமருவது என்பது மிகவும் சிறப்பு. ஜாதகர் அனைத்து பாக்கியங்களையும் பெறுவார். தர்ம சிந்தனை மிக்கவர். தெய்வ நம்பிக்கை உடையவராக இருப்பார். ஜாதகர் பெரிய மனிதர், சமுதாயத்தில் மதிப்புமிக்கவராக மதிக்கப்படுவார். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் வரும். பெற்றோர் மீது மிகவும் பாசமாக இருப்பார். ஆனாலும் செவ்வாயானவர் 8-க்குடையவராக 9-ல் அமர்வதால் தந்தைக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். குரு பலம் பெற்றிருந்தால் மிகவும் நன்மையாக அமையும்.
அன்பார்ந்த வாசகர்களே! இந்த தொடர் அவ்வளவு சீக்கிரம் எளிதில் முடிந்துவிடாது. ஏனெனில் ஒவ்வொரு லக்னத்திற்கும் லக்னாதிபதி முதற்கொண்டு மற்ற கிரகங்கள் லக்னம் முதல் 12 வீடுகளில் அமர்ந்திருந்தால் என்ன பலன்களை தரும் என்பதை மேஷம் முதல் மீனம் வரை லக்ன ஆதிபத்யம், லக்ன காரகத்துவம், மற்றும் கிரக காரகத்துவம் ஆகியவற்றை கொண்டு கிரகங்கள் அமர்ந்த வீடுகளில் பெறும் பலம் பலவீனங்களுக்கு ஏற்ப பலன்களை யூகித்து தொடர்ந்து எழுதவிருக்கிறேன்.
பல நூல்களில் மறைந்த புதன் நிறைந்த பலன் தரும், மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளும் என்று பொத்தாம் பொதுவாக பலன்களை தந்திருப்பார்கள். மேலும் கிரகங்கள் 4-ல் இருந்தால் இன்ன பலன், செவ்வாய் சிம்மத்தில் இருந்தால் இன்ன பலன் என்று எழுதியிருப்பார்கள்.
ஆனால் இவையெல்லாம் பொது பலன்கள். இவற்றை வைத்து பலன்கள் கூறினால் சிலவற்றிற்கு சரியாக வரும் பலவற்றிற்று சரியாக வராது. ஏனெனில் எந்த லக்னத்திற்கு அந்த கிரகம் நன்மையை தரும் என்பதை அந்த கிரகம் பெறும் ஆதிபத்யம், காரகத்துவம் மற்றும் அந்த கிரகம் அமர்ந்த வீட்டில் பெறும் பலம் பலவீனம் ஆகியவற்றை கொண்டுதான் சொல்ல வேண்டும்.
இவற்றை லக்னவாரியாக நாம் பொறுமையாக அலசி ஆராய்ந்து தான் பலன்களை சொல்ல வேண்டுமே ஒழிய பொத்தாம் பொதுவாக குருவா! உச்சம் ஆகா ஓகோ, சனியா! நீசம் விளங்காது என்று கூறுவது தவறான பலன்களாகவே அமையும்.
ஜோதிடத்தில் உருப்படியாக ஏதேனும் எழுத வேண்டும் என்றால் இந்த மாதிரி ஒவ்வொரு லக்னத்திற்கும் கிரகங்கள் தரும் பலன்களை முடிந்தவரை அனுபவத்தில் கண்டறிந்து எளிமையாக பலன்களை காண வேண்டும். பல நூல்களில் இவ்வாறு கொடுத்திருக்க மாட்டார்கள்.
பல தொழில் முறை ஜோதிடர்கள் தாங்கள் அனுபவத்தில் கண்ட ஜாதகங்களில் கிரகங்கள் ஜாதகருக்கு கொடுத்த பலன்களை கேட்டு அறிந்திருப்பார்கள். அவற்றை ஜோதிட விதிகளோடு ஒப்பிட்டு எந்த அளவிற்கு அந்த விதிகள் பலன்களை தருகின்றன என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பார்கள். அந்த விதிகளை அவர்கள் அனுபவத்தில் கண்டதால் அவர்களுக்கு மிக எளிதாக மனதில் தங்கிவிடும்.
எனவே ஜோதிட நூல்களை மட்டும் படித்துக்கொண்டு பலன்களை சொல்லிவிட முயலக்கூடாது. அந்த விதிகள் அனுபவத்தில் எவ்வாறு பலன்களை கொடுக்கின்றன என்பதை நடைமுறையில் அறிந்து அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து அறிந்து பலன்களை கூறினால் 100 சதவீதம் பலன்கள் தப்பாமல் அப்படியே நடக்கும்.
நான் இந்த தொடரில் எழுதிய பலன்கள் அப்படியே நடக்க வேண்டும் என்பது எந்தவித கட்டாயமும் இல்லை. ஏனெனில் நான் கிரகங்கள் எந்தெந்த வீடுகளில் அமர்வதால் என்னென்ன பலன்களை என்ன காரணத்தால் தரும் என்று ஒரு யூகத்தின் அடிப்படையில் எனது ஜோதிட அறிவின் அடிப்படையில் மட்டுமே எழுதுகிறேன். ஆனால் உண்மையில் நாம் பார்க்கும் பல ஜாதகங்களில் மிகவும் சிக்கலான பல அமைப்புகள் இருக்கும். பல கிரகங்கள் கூட்டாக ஒரு வீட்டில் அமர்ந்திருக்கும் அல்லது பல கிரகங்கள் ஒரே வீட்டை பார்க்கும். அதில் உச்சம், நீசம், ஆட்சி, அஸ்தமனம், பகை என்று ஏகப்பட்ட கலாட்டாவாக இருக்கும்.
இவற்றையெல்லாம் நிதானமாக கவனித்து எந்த கிரகம் பலம் பெற்றுள்ளது, எது எதனால் பாதிப்படைந்துள்ளது. சேர்க்கை நல்லதா கெட்டதா என்றெல்லாம் அலசி ஆராய்ந்து, ராசி, அம்சம், நடப்பு தசா புக்தி, கோச்சராம் ஆகிவற்றோடு அனுப அறிவையும் உபயோகித்து பலன்களை சொல்ல வேண்டும்.
நான் இங்கு எழுதுவதெல்லாம் எந்த கோணத்தில் நாம் ஜாதகங்களை அலசவேண்டும். எந்தெந்த அம்சங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு வழிகாட்டி முறையே.
ஜோதிடம் என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. அதற்கு பல்முனைநோக்கு திறமையும், நிதானமும், ஆய்வும், ஆராய்ச்சியும், அனுபவமும் அதிகம் தேவை. இவையனைத்தும் ஒரே நாளில் ஒருவருக்கு கிடைத்துவிடாது. பொறுமை, தொடர்ந்த விடா முயற்ச்சி, ஆர்வம் ஆகியவையே ஒருவருக்கு இவற்றை பெற்றுத் தரும்.
அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன் நன்றி.
ஸார்,
ReplyDeleteநீங்கள் நல்ல நல்ல தகவல்களை அருமையாக எடுத்து சொல்றீங்க. ஆனா அடிக்கடி எழுத மாட்டுக்கிறீர்கள் என்பதால் தங்கள் மீது எனக்கு ஒரு சிறு வருத்தம் உண்டு.
தயவுசெய்து நீங்கள் மீன லக்னம் வரை எவ்வித இடைஞ்சலுமின்றி இடைவிடாமல் எழுத வேண்டும் என்பதற்காக முருகப்பெருமானை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் எங்களுக்காக தொடர்ந்து எழுதுங்களேன்.
ப்ளீஸ்.
//இப்போது சொல்லுங்கள் லக்னாதிபதி மனைவியை குறிக்கும் 7-ல் இருந்தால் பலன் என்ன?
ReplyDeleteயூகித்துவிட்டீர்களா? அதேதான். ஜாதகர் மனைவியே கதியென்று இருப்பார். மாமனார் வீட்டு மகாராஜன். 7-ம் இடம் காமத்தையும் குறிக்கிறது அல்லவா? எனவே ஜாதகரிடம் காமம் அதிகம் இருக்கும். மேலும் லக்னாதிபதியானவர் செவ்வாயாகவும் 7-க்குடையவர் சுக்கிரனாகவும் இருப்பதால் நம்ம ஆள் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் போடுவார். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும்.//
SUPER.
உங்கள் கருத்துரைகளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி சுதீப்.
ReplyDeleteஅருமை...
ReplyDelete