வணக்கம், முந்தைய சில பதிவுகளில் ஜோதிடம் குறித்தும் மற்றும் பல விஷயங்கள் குறித்தும் பொதுவானதொரு கருத்துகளை எழுதியிருந்தேன். இந்த பதிவில் உருப்படியான ஜோதிடம் குறித்த விஷயங்களை எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
”நானும் எவ்வளவு நாளைக்கு தான் மொக்கையாகவே எழுதிக்கொண்டிருப்பது, அதான் திருந்திடலாம்னு முடிவு செய்துவிட்டேன்” -- மங்காத்தா தல வசனம் ஞாபகம் வருதோ.
ஜோதிடத்தில் மிக முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது என்றால் அது காரகத்துவம் தான். அதனை சரியாக கையாளத்தெரிந்தால் கவலையில்லை.
காரகத்துவம் என்றால் என்ன?
காரகத்துவம் என்பது ஒரு விஷயத்தை உள்ளடக்கியிருப்பது. அதாவது நம் வாழ்வில் நடக்கவிருக்கும் பலன்களுக்கு காரணமாக இருப்பது அவற்றை தன்னகத்தே கொண்டிருப்பது எனலாம்.
ஜோதிடம் என்பது 12 வீடுகள், 9 கிரகங்கள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கலவையே, இவற்றில் எதனை, எங்கு, எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்தே பலன்களில் ஒரு தெளிவை காணமுடியும்.
12 பாவங்களுக்கும் தனித்தனியே காரகத்துவம் உள்ளன. அவ்வாறே 9 கிரகங்களுக்கும் தனித்தனி காரகத்துவங்கள் உள்ளன. அவற்றை ஆரம்பம் முதல் வரிசையாக நான் இங்கே எழுதப்போவதில்லை. இவையெல்லாம் ஆரம்ப நிலையில் உள்ள புத்தகங்களில் தாராளமாக காணக்கிடைக்கின்றன. நீங்களும் ஓரளவிற்கு நன்றாக அறிந்திருப்பீர்கள். தெரியவில்லையென்றாலும் தவறில்லை அவ்வப்போது பார்த்து தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். போகப் போக அனுபவத்தில் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.
பொதுவாக ஆரம்பநிலையில் உள்ள ஜோதிடர்கள் அனைவரும் கிரகங்களின் காரகத்துவத்தை பயன்படுத்தியே பலன்களை சொல்வதை கண்டிருக்கிறேன். நானும் ஆரம்பத்தில் அப்படிதான் இருந்தேன். விடாமுயற்சி என்று ஒன்று இருக்கிறதே அது மேலும் பல விஷயங்களை அறிந்துகொள்ள என்னை தூண்டியது.
உண்மையில் பாவங்களின் காரகத்துவமே கிரகங்களின் காரகத்துவத்தை காட்டிலும் வலிமையானது. பாவ காரகத்தின் தன்மைக்கு ஏற்பதான் கிரகங்களின் காரகத்துவத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
என்னதான் கிரகம் ஆட்சி, உச்சம் என்று வலிமையாக இருந்தாலும் குறிப்பிட்ட பாவம் வலிமையாக இருந்தால் மட்டுமே அந்த பாவத்தின் பலனை அந்த ஜாதகர் முழுமையாக அனுபவிப்பார். இங்கு பாவத்தின் பலன்தான் வலிமையாக இருக்க வேண்டும். கிரகத்தின் பலம் எவ்வளவு இருந்தாலும் அது முக்கியமல்ல.
ஒரு பாவம் வலிமையடைவது என்பது பல காரணிகளை உள்ளடக்கியது.
அந்த பாவத்தின் அதிபதி வலிமையாக இருந்தால் மட்டும் போதாது. அவர் எதாவது ஒரு வகையில் லக்னத்திற்கும், தனது பாவத்திற்கும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த பாவத்தில் தீயக்கிரகங்கள் இருக்கக்கூடாது. அப்படியே இருந்தாலும் அவை வலிமையாக இருந்துவிடக்கூடாது. மேலும் தீயக்கிரகங்கள் அந்த பாவத்தை பார்த்தாலும் பாவத்தின் வலிமை குறைந்துவிடும். அந்த பாவம் பாப கர்த்தாரி யோகம் (இருபுறமும் தீயகிரகங்கள் இருப்பது) பெற்றாலும் அல்லது அந்த பாவத்திற்கு 8-ல் தீயக்கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவத்தின் பலன் குறைந்துவிடும் அல்லது தீமையான பலனை தரும். இது மிகவும் அவசியம்.
லக்னத்திற்கு 8-ல் கிரகங்கள் அதிகம் இருந்தால் ஜாதகர் பிறக்கும் போது உயிர் பிழைப்பதே அரிதாக இருக்கும். மீண்டு வந்தாலும் வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கும். அவ்வாறே எந்த பாவத்திற்கும் 8-ல் தீயக்கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவத்தின் பலனை நசித்துவிடும் என அறிக.
அப்படியென்றால் எப்படிதான் இருக்க வேண்டும் என்கிறீர்களா?
அந்த பாவத்தின் அதிபதி பலம் பெற்று சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றும் அந்த பாவத்திற்கும் சுபக்கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றும் இருந்தால் அந்த பாவம் நன்றாக உள்ளதாக பொருள். அதுமட்டுமல்ல அந்த பாவத்தை குறிக்கும் கிரகங்களின் தசாவும் ஜாதகர் நன்றாக அனுபவிக்கும் வயதில் வரவேண்டும். சிறியவயதில் வந்தால் குடும்பத்திற்கு யோகம் சென்றுவிடும். முதுமையில் வந்தால் யோகத்தை அனுபவிக்க நமக்கு உடலில் வலுவிருக்காது. ( டப்பா டான்ஸ் ஆடிபோயிருக்கும்)
23 வயது முதல் 45 வயதிற்குள் நல்ல யோக தசா வந்தால் ஜாதகர் எல்லா சுகங்களையும் பெற்று சுகமாக வாழ்ந்திருப்பார். அவ்வப்போது வரும் சில சிறிய பிரச்சினைகளையெல்லாம் சமாளிக்கும் மற்ற அமைப்புகளும் அவருக்கு இருக்கும்.
உதாரணமாக சுக்கிர தசாவை எடுத்துக்கொள்ளுங்களேன்.
சுக்கிரன் அந்த ஜாதகருக்கு யோகமளிப்பவராக இருந்து நல்ல இடத்தில் அமர்ந்து தனது தசாவை நடத்துகிறார் எனக்கொள்ளுங்கள்.
அந்த சுக்கிரன் தசாவே சிறுவயதில் வந்தால் குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது ஜோதிட பழமொழி. ஜாதகர் எல்லாவிதமான வசதிகளும், ஆடம்பரங்களையும் பெற்ற குடும்பத்தில் பிறந்து வளர்வார். என்றாலும் செக்ஸ் தொடர்பான சில பழக்கங்களும் ஜாதகருக்கு இருக்கும். தம்மைவிட வயதில் பெரிய பெண்களிடம் மோகம் உண்டாகும். பெரிசு, சிறுசு என்று எது கிடைத்தாலும் ஓ.கே. என்று தான் இருப்பார். ஆனால் அவர் வயதிற்கு அவ்வளவாக கிடைக்காதே. அப்படியே அமைந்தாலும் இல்லறத்தில் பெறும் நிறைவு இருக்காது காரணம் பயம் தான்.
அதே சுக்கிரன் தசா ஒரு 50 வயதிற்கு மேல் வருகிறது என்று கொண்டால் ஜாதகர் ஆசைக்கு ஒரு லட்டு, ஜாங்கிரி கூட சாப்பிட முடியாத நிலை இருக்கும். முக்கியமாக செக்ஸ் விஷயங்களில் அதிகம் அனுபவிக்க முடியாமல் போய்விடும். பாட்டியை போய் தொந்திரவு செய்ய முடியுமா? கொஞ்சம் அப்படி இப்படி என்று போகவும் முடியாது மீறி போனால் மானம் கப்பலில் ஏறிவிடும். (தாத்தா பேத்தியை ரேப் பண்ணியதெல்லாம் கேட்டு மடக்ககூடாது!! அதெல்லாம் எக்ஸாடினரி மேட்டர் கணக்கில் வராது) மற்றபடி காசு பணம், வசதி வாய்ப்புகளுக்கு குறைவிருக்காது. என்றாலும் சுக்கிரனுக்குரிய முழுமையான யோகம் என்பது இங்கு கிடைக்கவில்லையே.
எனவே தான் சரியான வயதில் கிடைக்கும் யோகமே யோகம் எனக்கொள்க. மற்றவையெல்லாம் சாபம் தான் போங்கள்.
சரி. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்கொண்டிருக்கிறேன். விஷயத்திற்கு வருவோம். எங்கே விட்டேன்....
பாவங்களின் காரகத்துவமே கிரகங்களின் காரகத்துவத்தை காட்டிலும் வலிமையானது. பாவ காரகத்தின் தன்மைக்கு ஏற்பதான் கிரகங்களின் காரகத்துவத்தை நாம் பயன்படுத்த வேண்டும்.
ஒருவருக்கு செவ்வாய் தசா நடப்பதாக கொள்ளுங்கள்.
செவ்வாயானவர் 12 பாவங்களுள் தாம் எந்தெந்த வீடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளதோ அதன் பாகாரகத்திற்கு ஏற்ப செவ்வாயின் கிரக காரகத்துவம் செயல்படும்.
இங்கு தொடர்பு என்பது செவ்வாய் இருக்கும் வீடு, செவ்வாய் பெறும் ஆதிபத்யங்கள், செவ்வாய் பார்க்கும் வீடுகள் மற்றும் செவ்வாயுடன் இணைந்த கிரகங்களின் வீடுகள் ஆகியவற்றை குறிக்கும்.
இந்த அனைத்து வீடுகளின் பலன்களையும் செவ்வாய் தனது தசா காலங்களில் வெவ்வேறு புக்தி காலங்களில் தருவார்.
செவ்வாயனவர்,
1-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் முன்கோபம், முரட்டு குணம், அதிக காம இச்சை, வலிமையான, இளமையான உடலமைப்பு போன்ற பலன்கள் நடைபெறும்.
2-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் முரட்டுத் தனமான பேச்சு, மற்றவர்களை கடுமையாக திட்டுதல், ஏளனம் செய்தல், குடும்பத்தில் கலகம் போன்ற பலன்கள் நடைபெறும்.
3-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் உடன் பிறப்புகளுடனான தொடர்புகள், அசாத்திய தைரியம், காதுகளில் பிரச்சினைகள், போன்றவையும்.
4-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் வீடு, நிலம், இயந்திரங்கள், கல்வி ஆகியவை சார்ந்த பலன்கள் ஏற்படும்.
5-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஒழுக்க குறைவு, காதல், கற்பழிப்பு, கெட்ட நடத்தைகள், வீர விளையாட்டுகள் எனவும்
6-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் தசைபகுதிகளில் நோய், காரமான உணவை உட்கொள்ளுதல், விபத்துகள், கடன், நோய், அறுவை சிகிச்சை, ஆபத்தான செல்ல பிராணிகளை வளர்த்தல் போன்ற பலன்கள்.
7-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் மனைவி வழியில் சில பிரச்சினைகள், எதிரிகள் முதலியனவும்
8-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் விபத்து, தற்கொலை, வலி வேதனைகள் போன்றவையும்
9-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் இயந்திரங்கள் மற்றும் நிலம் தொடர்பான உயர் கல்வி, தகாத பெண் உறவுகள் போன்றவையும்
10-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் வீடு, நிலம், இயந்திரங்கள் தொடர்பான தொழில்கள் எனவும்
11-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் கெட்ட நண்பர்கள், சுயநலம், பேராசை போன்ற பலன்களும்
12-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ரகசிய நடவடிக்கை, வீடு, நிலம் இவற்றில் முதலீடு, ஊதாரித்தனமான செலவினங்கள் போன்ற பலன்களும் நடைபெறும்.
இங்கு செவ்வாய் ஒரு பாபக்கிரகமாதலால் என்னதான் லக்னத்திற்கு யோகாதிபதியானாலும் சில தீயபலன்களையும் தாம் தொடர்பு கொள்ளும் பாவத்திற்கு ஏற்ப தருவார்.
மேலே கூறியவற்றிலிருந்து நாம் அறிய வேண்டியது என்னவென்றால் செவ்வாயின் காரகத்துவத்தை அந்தந்த பாவங்களுடன் ஏற்படும் தொடர்புகளை கொண்டு பலன்களை கூற வேண்டும் என்பதாம்.
இவ்வாறே மற்றக் கிரகங்களுக்கும் பலன்களை அறிய முயன்று பாருங்கள். நடைமுறையில் எவ்வாறு நடைபெறுகின்றது எனவும் கவனித்து வாருங்கள். அனுபவத்தில் உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
காரகத்துவத்தில் மேலும் ஒரு முக்கியமான விஷயம் அடங்கியிருக்கிறது.
அது யாதெனில்,
ஒவ்வொரு பாவமும் தன்னுள் 12 வீடுகளின் காரகங்களை கொண்டுள்ளது.
நிதானமாக யோசித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.
உதாரணமாக 6-ம் பாவத்தினை எடுத்துக்கொள்வோம்.
6-ம் பாவகத்தின் முக்கியமான சில காரகத்துவங்கள் என்ன?
குணமாகும் நோய்கள், தீருகின்ற கடன்கள், வெல்ல முடிந்த எதிரிகள், உணவு உடைகள், போட்டிகளில் வெற்றிகள், உடல் உழைப்பு, தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்கள், வாடகை வீடு, செல்லப் பிராணிகள் முதலியவற்றை குறிக்கும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
6-ம் பாவத்தில் உள்ள,
லக்ன பாவ காரகம் (உடல்) - நோய், வெற்றிகள்
2-ம் பாவ காரகம் (தனம்) - கடன்கள், திருப்பி தரக்கூடிய பொன் பொருள்கள்
3-ம் பாவ காரகம் - வழக்கு, தைரியம்
4-ம் பாவ காரகம் - பொருட்களை வாங்குதல், வாடகைக்கு விடுதல்
5-ம் பாவ காரகம் - விளையாட்டுப் போட்டிகள்
6-ம் பாவ காரகம் - உணவு, உடை, பணிபுரிதல், வேலையாட்கள், உடலுழைப்பு
7-ம் பாவ காரகம் - சத்ரு ஜெயம், மனைவியின் மூலதனம்
8-ம் பாவ காரகம் - கடின உழைப்பு, நோய், கடன்கள் திடீரென அதிகரித்தல்
9-ம் பாவ காரகம் - ஆய்வுகளில் வெற்றி, கடன், வழக்குகளில் பணம் முடக்கம்
10-ம் பாவ காரகம் - தொழில் மற்றும் பதவி உயர்வுகள்
11-ம் பாவ காரகம் - போட்டி மற்றும் வழக்குகளில் வெற்றி
12-ம் பாவ காரகம் - வாங்கிய கடன்களை, பொருட்களை திருப்பி கொடுத்தல்
இவ்வாறு 6-ம் பாவத்தில் உள்ள காரத்துவமானது 12 பாவங்களுக்கும் ஏற்றபடி மாற்றமடைகிறது. இவ்வாறே மற்ற பாவங்களின் காரகத்துவங்களும் 12 பாவங்களுக்கு ஏற்றவாறு குறித்துக் கொள்ளுங்கள்.
இவற்றுள் இன்னுமொரு உட்பிரிவு கூட உள்ளது. எப்படியெனில்
6-ம் பாவத்தின் லக்ன காரகம் நோய் என வைத்துக்கொள்ளுங்கள். இந்த நோயானது ஜாதகருக்கு எந்தவிதமான நோய்கள், உடலில் எந்த பாகத்தில் ஏற்படும் என்பதையும் காணலாம்.
அதாவது 6-க்குடையவர்
லக்னத்துடன் தொடர்பு கொண்டால் உடலின் செயல்திறன் குறைபாடு, தலை பாகத்தில் உள்ள நோய்கள்
2-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் கண், பல், வாய் தொடர்பான நோய்கள்
3-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் மனம், நரம்பு, உடல் வலிமை, காது, மூக்கு, தொண்டை தொடர்பான நோய்கள்
4-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் இருதயம், உடலில் உற்பத்தி செய்யும் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள்
5-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் விந்தணுக்கள், இரத்த அணுக்கள் தொடர்பான நோய்கள்
6-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் வயிற்றுப் பகுதியல் ஏற்படும் நோய்கள்
7-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் தொற்று நோய், கிட்னி தொடர்பான நோய்கள்
8-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் உடல் உறுப்புகளை இழத்தல், மர்ம ஸ்தானங்களில் ஏற்படும் நோய்கள்
9-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் பாரம்பரிய நோய்கள், பரம்பரை வியாதிகள்
10-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் தேவைக்கு அதிகமாக உடலில் சக்தி உற்பத்தியாவதால் வரும் நோய்கள்
11-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் வைட்டமின்கள் மற்றும் கால் மூட்டுகள் தொடர்பான நோய்கள்
12-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஒவ்வாமை, ரகசிய மற்றும் உறுப்புகள் செயலிழத்தல், கால் பாதங்கள் தொடர்பான நோய்கள்.
6-ம் பாவத்தின் 2-ம் பாவக் காரகம் கடன் ஆகும். யார் மூலம் கடன் கிடைக்கும் என்பதை இந்த 6-ம் அதிபதி 12 வீடுகளுடன் தொடர்பு கொள்வதை கொண்டு அறியலாம்.
லக்னத்துடன் தொடர்பு கொண்டால் சுய முயற்சியால் கடன் கிடைக்கும்.
3 எனில் சகோதர்கள் மூலமும்,
4-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் தாய், வீடு, நிலம், வாகனம், கல்வி முதலியவற்றின் மூலம் கடன் பெறலாம்.
இவ்வாறாக வரிசையாக 12 காரகங்களின் வாயிலாக 6-ம் அதிபதி தொடர்பு கொள்ளும் வீடுகளுக்கு ஏற்ப கடன்கள் கிடைக்கும்.
இவ்வாறே 6-ம் பாவத்தின் மற்ற காரகங்களும் 12 பாவங்களில் எவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளனவோ அந்த பாவங்களின் மூலம் அந்த பலன்கள் நடைபெறும் என அறியலாம்.
இவ்வாறாக காரகத்துவத்தை சமயத்திற்கு, இடத்திற்கு தகுந்தவாறு பயன்படுத்தும் போதுதான் ஜோதிடத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. நல்ல அனுபவமும், நுண்ணறிவும் மிகுந்த ஜோதிடர்கள் ஒரு ஜாதகத்தை பல கோணங்களிலும் அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வினை கூறும் ஆற்றலைப் பெற்றிருப்பார்கள்.
ஒரு பாவத்திற்குள் ஏகப்பட்ட காரகத்துவங்கள், அவ்வாறே கிரகங்களும் இடத்திற்கு தகுந்தவாறு தம்மை, தமது காரகத்துவங்களை மாற்றிக்கொள்ளும் சுபாவம் கொண்டவை இவற்றையெல்லாம் ஆராயந்து அறிந்து கொள்ளும் போது தான் ஜோதிடத்தில் தமெக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும். சிறந்த ஜோதிடராகவும் பரிணமிக்க முடியும். இதற்கு தேவை தெளிவான, நிதானமான மனநிலையும், முடிவெடுக்கும் திறனுமேயாகும். விடாமுயற்சியால் நாமும் முயன்றால் இறையருளால் நமக்கும் அவை வாய்க்கப்பெறும் என்று கூறி விடைபெறுகிறேன்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
good info
ReplyDeleteகாரகத்துவம் பற்றி பல தகவல்களைக் கொண்டதான இக்கட்டுரை நன்றாயுள்ளது. நன்றி.
ReplyDelete////விடாமுயற்சியால் நாமும் முயன்றால் இறையருளால் நமக்கும் அவை வாய்க்கப்பெறும் என்று கூறி விடைபெறுகிறேன்////
ReplyDeleteஆயிரம் பேர கொன்னாதானே அரை வைத்தியனே ஆக முடியும் :))
@கிருஷ்ணா
ReplyDeleteஅதானே :))
Superb,very useful
ReplyDeleteநன்றி மிக அற்புத விளக்கம்
ReplyDeleteநன்றி உங்க ஆக்கத்திற்கு
ReplyDeleteSemma
ReplyDeleteஅருமை
ReplyDelete