வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

27 January 2012

ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம் - பாகம் 8

வணக்கம் நண்பர்களே!

என்னடா இது தொடரே ரெம்ப பெரிசு இதுல இவரு இடையில வேற மொக்கை பதிவெல்லாம் எழுதறாரே.  இவரு எந்த காலத்துல தொடரை எழுதி முடிக்கிறது.  நாம எப்போது எல்லாவற்றையும் படிக்கறது என்ற உங்கள் பெருமூச்சு, ஆதங்கம் எனக்கு கேட்க தான் செய்கிறது.

என்ன செய்வது.  சில நேரங்களில் விளக்கம் என்று கொடுத்தால் வேறு பல விஷயங்களும் இடையில் வந்துவிடுகிறது.  கொட்டி தீர்த்துவிடுகிறேன்.  உண்மையில் தொடரை எக்காரணத்தை கொண்டும் இடையில் நிறுத்திவிட மாட்டேன் கவலை வேண்டாம்.  என்ன இடையில் கொஞ்சம் காலம் அதிகமாகலாம் ஆனாலும் முடித்துவிடுவேன்.

சென்ற பதிவில் மேஷ லக்னத்தாருக்கு புதன் லக்னத்தில் அமரும் போது தரும் பலன்களை எழுதியிருந்தேன்.

பொதுவாக எந்த லக்னத்திற்கும் பாபிகளான 3, 6, 8, 12-க்குடையவர்கள் பலம் பெறக்கூடாது.  அப்படியே பலம் பெற்றாலும் அவற்றை சமாளிக்க லக்னாதிபதி, யோகாதிபதிகள் பலம் பெற வேண்டும்.  இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் போராட்டம், துன்பம் தான் தொடர்கதைகளாகி விடும்.

அந்த வகையில் மேஷ லக்னத்திற்கு புதனானவர் ஒரு பாவியாகிறார். 

பொதுவாக ஒரு கிரகம் எப்போது பலம் பெறும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றால், கேந்திர கோணம் பெற்றால், சுபர் பார்வை, சேர்க்கை பெற்றால், சுயசாரம் பெற்றால், திக்பலம், வர்க்கோத்தமம் பெற்றால் அக்கிரகமானது பலம் பெற்றுவிடுகிறது.

ஒரு லக்னத்திற்கு எந்தெந்த கிரகங்கள் இத்தகைய நிலைகளை பெற்று பலம் பெறலாம்.  எந்தெந்த கிரகங்கள் பலம் பெறக்கூடாது என்பதையும் நாம் அறிவோம்.  அந்த வகையில் மேஷ லக்னத்திற்கு புதன் பலம் பெறக்கூடாது. 

பெற்றால் என்னவாம்?

பிரச்சினைகள் தான்.

எனவே தான் மேஷ லக்னத்தில் புதன் அமரும் போது சமம் என்ற நிலையை அடைந்தாலும் லக்னத்தில் புதன் திக்பலம் பெற்றுவிடுகிறார்.  மேலும் லக்னமானது கேந்திரம், திரிகோணம் ஆகிய இரண்டும் இணைந்த இடம்.  மேலும் லக்னமானது ஜாதகரை நேரடியாக குறிக்குமிடம்.  இந்த இடத்தில் பலம் பெறும் லக்ன பாபியான புதன் எப்படி ஜாதகருக்கு நன்மையை செய்வார்.

எனவே மேஷ லக்னத்திற்கு புதன் பலமிழக்க வேண்டும்.

புதன் எப்படி பலமிழப்பார்?

புதன் பகை நீசம் அடைய வேண்டும், மறைய வேண்டும், சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாக வேண்டும்.  அப்படி பலமிழக்கும் புதன் ஜாதகருக்கு பெரிதாக நன்மையையெல்லாம் செய்துவிட மாட்டார்.  மாறாக பலம் குறைவதால் தீமையை செய்ய புதனால் இயலாது.   தீமை குறைவாக  அலலது இல்லாமல் இருந்து நல்ல கிரகங்கள் பலம் பெற்றுவிட்டால் போதாதா ஜாதகர் வெற்றிபெற.

இது தான் ஜோதிடத்தில் உள்ள சூட்சுமம்.

ஆக மேஷத்தில் புதன் பலம் பெறுவதால் புதனின் தீய ஆதிபத்ய பலன்களை ஜாதகரை நேரடியாக அனுபவிக்க செய்வார்.

ஜாதகருக்கு முரட்டு தைரியம், அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை, வீண் பிடிவாதம், நோய், கடன்கள், எதிரிகள் முதலியவற்றை கொடுத்து மேஷ லக்னத்தாருக்கு எந்தெந்த வகையில் துன்பத்தை கொடுக்க முடியுமோ அவ்வாறெல்லாம் செய்வார்.  மேலும் அவர் பார்க்குமிடம் 7-மிடமென்பதால் அவருடைய மனைவிக்கும் இடைஞ்சல்களை கொடுப்பார்.  குடும்பத்தில் வேறு பெண்களினால் கணவன் மனைவியரிடையே  கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவார்.  இதெல்லாம் புதன் லக்னத்தில் அமரும் போது தரும் பலன்களாகும்.

சரி.  புதன் 2-மிடமான குடும்பம், தன ஸ்தானத்தில் அமரும் போது எப்படி பலனளிப்பார்.

ரிஷபத்தில் புதன் நட்பு என்ற நிலையில் பலம் பெற்றுவிடுகிறார்.  மேலும் தனது வீடான 3-க்கு 12-மிடமாக வருகிறார்.  எனவே 3-மிட பலன்களை புதனால் அதிகம் கொடுக்க இயலாது.  ஆனால் தனது மற்றொரு வீடான 6-க்கு திரிகோணமாக அமைவதால் 6-ம் வீட்டின் பலன்களை இங்கு புதனால் அதிகப்படுத்த முடியும்.

3-க்குடையவர் தன்வீட்டுக்கு 12-ல் மறைவதால் உடன் பிறப்புகளால் பெரிதாக நன்மை இராது என்ற போதிலும் அவர்களால் ஏதாவது தன ஆதாயங்களை பெற வைப்பார்.  ஜாதகரின் தைரிய வீரம், வீரியம் சற்று ஆட்டம் காணும்.  எதற்காவது வாக்கு கொடுத்துவிட்டு அவற்றை நிறைவேற்ற முடியாமல் மாட்டிக்கொள்வார்கள்.  ஆனாலும் புதனாக இருப்பதால் பேச்சில் கில்லாடிகளாக இருப்பார்கள்.  புளுகுவதில் மன்னர்கள்.  கல்வியால் சில நன்மைகளையும் அடையலாம்.

சரி 6-க்குடையவர்கள் 2-க்கு வந்தால்? அதுவும் பலமாக இருந்தால்.  ரோகாதிபதியாயிற்றே எனவே சிலருக்கு பேச்சில் தடுமாற்றம் இருக்கும்.  அடுத்தவர் காசில் மங்களம் பாடிவிடுவார்கள்.  சர்வ சாதாரணமாக கடன்களை வாங்குவார்கள். எக்காரணத்தை கொண்டும் திருப்பி கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. குடும்பத்தில் கடன்கள் அதிகம் இருக்கும்.  தேவையற்ற பேச்சால் வாயை கொடுத்து வம்பை, எதிரிகளை விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். கண்நோய் ஏற்படலாம்.  இப்படியாக 6-ம் அதிபதி தான் இருக்கும் வீட்டின் பலன்களை தான் பெற்ற ஆதிபத்யத்தால் பாதகமாக தருவார்.

புதன் தனது சொந்த வீடான மிதுனத்தில் ஆட்சி பெற்றால்?

பொதுவாக உபஜெய ஸ்தானாதிபதிகள் 3, 6, 10, 11-ல் இருக்கும் போது நல்ல பலன்களை தருவார்கள்.  அந்த அடிப்படையில் 3-ல் ஆட்சி பெற்றதால் பலம் பெற்றுவிடுகிறார். மேலும் தனது மற்றொரு வீடான கன்னிக்கும் 10-ல் கேந்திரத்தில் பலம் பெற்றுவிடுகிறார். எனவே ஜாதகரின் முயற்சிகள் வெற்றிபெறும்.  எண்ணங்களை நிறைவேற்ற கடுமையாக உழைப்பார்கள்.  மிகுந்த புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்கள். நல்ல தைரியசாலியாக இருப்பார்கள்.  ஜாதகரின் இளைய சகோதரர்கள் நல்ல நிலையில் இருப்பார்கள்.

மேலும் 6-க்குடையவர் பலம் பெறுவதால் போட்டிகளில் வெற்றி, பத்திரிக்கை, எழுத்துலகம் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஆதாயம் போன்றவற்றையும் கொடுப்பார்.  எதிரிகள் பலமாக இருப்பார்கள்.

ஆனாலும் புதன் மேஷ லக்னத்திற்கு பாவியாவதால்  அவர் பலம் பெறுவதால் அவர்களுக்கு இதனால் நன்மையான பலன்களை தொடர்ந்து பெற முடியாத நிலையேற்படும்.  அவற்றில் ஏதாகிலும் பிரச்சினைகளை ஏற்படுத்த தான் செய்வார்.  சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாக இருந்தாலும், குருவின் பார்வையை பெற்றாலும் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கும்.

அடுத்ததாக மேஷ லக்னத்திற்கு கேந்திரமான 4-மிடமான கடகத்தில் புதன் பகை என்ற நிலையை அடைகிறார்.

குருவின் மனைவிக்கும் சந்திரனுக்கும் பிறந்தவர் தான் புதன் என்று சாஸ்திரம் சொல்கிறது.  கிரகங்களில் ஏது கணவன் மனைவி அதிலும் கள்ளத்தொடர்பு என்றெல்லாம் நாத்திகர்கள் கிண்டல் செய்வது சகஜம் தான் என்றாலும் அதில் ஏதாவது ஒரு விஷயத்தை மறைமுகமாக சொல்வதற்காக தான் நம் முன்னோர்கள் அவ்வாறு நம்மை போன்ற மானிடர்கள் செய்யும் செயல்களுடன் தொடர்பு படுத்தி வைத்தனர்.  

ராகு, கேதுக்களின் கதையும் அப்படிதான்.  எனவே நாம் கதையில் வருவதற்கெல்லாம் லாஜிக் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏமாந்துவிடுவோம்.  ராகு கேதுக்களை பற்றி இவ்வாறு சொல்லாமல் இருந்திருந்தால் அதனை இத்தனை ஆயிரம் வருடங்களாக நாம் இவற்றை நினைவில் நிறுத்தியிருக்க முடியாது.  சந்ருவின் வலைப்பக்கம் என்ற தளத்தில் ராகு கேதுக்களை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.  நேரமிருந்தால் சென்று படித்துப் பாருங்கள்.

எனவே சந்திரன் தனது மகனான புதன் மீது பாசமாக நட்பாக இருக்கிறார்.  ஆனால் புதனோ சந்திரன் செய்த தகாத செயலால் அவர் மீது பகைமை கொண்டு அவரது வீட்டில் பகையாகிறார்.  அவ்வாறே குரு பகவானை தனக்கு சமமாக கருதுகிறார்.  ஆனால் குருவோ புதனை ஏற்றுக்கொள்ள மறுத்து பகைத்தன்மையை காட்டுகிறார்.  சூரியன், சனியின் கதையும் இப்படிதான் வருகிறது.  அதனை அந்த இடத்தில் குறிப்பிடுகிறேன்.

இதெல்லாம் ஒரு கதைதான்.  ஆனால் கிரக நட்பு, பகைத்தன்மைகளை மிகச்சுலபமாக நினைவில் நிறுத்துவதற்கு இவை நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறதல்லவா?

புதன் 4-ல் இருக்கும் போது பகை பெற்று பலம் குறைந்தாலும் கேந்திர பலம் கிடைத்துவிடுகிறது.  எனவே தனது தீய ஆதிபத்ய பலன்களை ஜாதகருக்கு கொடுக்க ஏதுவாகிவிடுகிறது.  4-க்கு 12-மிடமான 3-க்கு அதிபதி மற்றும் 6-க்குடையவராகிய புதன் 4-ல் வரும் போது ஜாதகருக்கும் அவருடைய தாயாருக்குமான உறவு சரியாக இராது.  தாயாரின் அன்பை ஜாதகர் பெறமுடியாது.

மேலும் 4-மிடம் ஜாதகரின் சுகஸ்தானமாகவும் வருகிறது.  இங்கு ரோகாதிபதி இருந்தால்? சுகம் பாதிக்க்ப்படும்.  வீடு, மனை, வாகனம் போன்றவற்றில் பிரச்சினைகள் இருக்கும்.

ஆனாலும் ஜாதகர் கல்வியில் திறமையானவராக இருப்பார்.   4-மிடம் வித்தை ஸ்தானமாயிற்றே.  அங்கு அமரும் புதன் ஜாதகருக்கு வித்தையை அதிகப்படுத்துவார்.  சந்திரனுடனான இணைவு மிகவும் சிறப்பு.   ஜோதிடம், கணிதம் போன்றவற்றில் ஜாதகர் சிறப்பானவராக இருப்பார்.  சுக்கிரனும், புதனும் 4-ல் இணைவது விஷ்ணு - லஷ்மி யோகமாகும்.  இங்கு புதன் உச்சம் பெற்ற குருவுடன் இணைவதும் மிகவும் சிறப்பாகும்.  சூரியனுடனான இணைவும் புத ஆதித்ய யோகத்தை தரும்.  என்றாலும் புதன் மேஷத்திற்கு பகைவராயிற்றே என்றால் இங்கு புதனால் பகைத்தன்மையை காட்ட முடியாத நிலையேற்பட்டு விடுகிறது.

இப்படியாக புதன் தான் பெற்ற ஆதிபத்யத்தால் தான் பலம் பெறும் வீடுகளில் அந்த வீட்டின் பலன்களை கெடுபலனாக மாற்றி ஜாதகருக்கு அளிக்கிறார்.  வேறுசில கிரக நிலைகளால் நன்மையான பலன்களையும் தருகிறார்.

ஒரு கிரகம் கேந்திர, கோணங்களில் அமரும் போது தனது ஆதிபத்ய பலன்களை சிறப்பாக செய்யும்.  மறைவிடங்களில் அமரும் போது பலம் பெற்றால் தனது காரகத்துவ பலன்களையாவது செய்யும்.  தன்னுடன் இணைந்த, தன்னை பார்த்த கிரகங்களுக்கு எற்றவாறு தனது காரகத்துவ பலன்களை மாற்றி கொண்டு அதற்கேற்றவாறு பலன் தரும்.

எனவே நல்ல கிரகங்கள் அந்த லக்னத்திற்கு யோகாதிபதிகள், சுபர்களின் சேர்க்கை, பார்வை முதலியவற்றை பெற்றால் நல்ல பலன்களை மேலும் அதிகரித்து ஜாதகருக்கு வழங்கும்.  தீய கிரகங்கள் பலம் பெற்றால் தீய பலன்களை அதிகரிக்கும்.  தான் அமரும் வீட்டின் பலன்களை கெடுத்துவிடும். இது பொதுவான விதியாகும்.

அந்த அடிப்படையில் தான் புதன் மேஷ லக்னத்திற்கு தீய வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறுவதால் அவர் பலம் பெறும் வீடுகளில் அந்த வீட்டின் பலன்களை கெடுத்துவிடுகின்றது.  மேலும் சொந்த வீட்டில் பலம் பெற்றாலும் தலைவலிதான்.  இவற்றை சமாளிக்க லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும்.  அல்லது சுபக்கிரகங்களின் பார்வை, சேர்க்கை முதலியவற்றை பெற்றால் தீமை அதிகம் இராது.

மேஷத்திற்கு 5-மிடமான சிம்மம் திரிகோணமாயிற்றே.  இங்கு சூரியனின் அமரும் புதன் நட்பு என்ற பலமான நிலையை பெறுகிறார்.  எனவே தனது ஆதிபத்யத்தில் 3-க்கு 3-ஆம் வீட்டில் அமர்கிறார்.  மேலும் 6-க்கு 12-ல் மறைகிறார்.  

எனவே தனது ஆதிபத்ய பலன்களை பலமாக செய்யும் வலிமையை இழக்கிறார்.  அதேசமயத்தில் லக்னத்திற்கு யோகமான வீட்டில் அமர்கிறார்.  எனவே சிம்மத்தில் அமரும் புதனால் ஜாதகருக்கு நன்மையே ஏற்படும்.  ஜாதகர் நல்ல புத்திசாலியாக இருப்பார்.  வேத சாஸ்திரங்களின் மீது நம்பிக்கை அதிகமாகும்.  அவற்றில் திறமையானவர்களாக இருப்பர்.

மேலும் முன்பே எனது ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.  என்னதான் தீயக்கிரகங்களாக இருந்தாலும் லக்னத்திற்கு திரிகோணத்தில் வரும் போது நன்மையான பலன்களை தரும்.  ஆனால் அந்த வீட்டின் பலனை கெடுத்துவிடும்.  

அவ்வாறே சிம்மத்தில் அமரும் புதன் தனது ஆதிபத்ய பலன்களை சிறப்பாக தரும்.  காரிய வெற்றி, தைரியம், வீரியம், எதிரிகளை அடக்கியாளுதல்,  கடன், நோய்கள் நிவாரணம் போன்ற தன் வீட்டின் ஆதிபத்ய பலன்களை நன்மையானதாக கொடுப்பார்.  ஆனாலும் 5-ம் வீட்டின் முக்கியமான பலனான புத்திர தோஷத்தையும் கொடுப்பார்.  சூரியனின் பலம் மற்றும் புத்திர காரகனான குருவையும் கவனிக்க வேண்டும்.

6-ல் கன்னியில் புதன் உச்சம் பெற்றால்? எதிரி பலமாக இருப்பார்.  கடன்கள் எதாவது ஒருவகையில் இருந்து கொண்டு தான் இருக்கும்.  நோயும் அவ்வாறே தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இருக்கலாம்.  6-மிட அசுப ஆதிபத்யங்களான எதிரி, நோய், கடன், பங்காளிகள், மாமன், கலகம், சண்டை, சச்சரவு, தன நஷ்டம், திருடர் பயம், விஷ ஜந்துக்களால் பாதிப்பு, சந்தேகப்புத்தி முதலிய தீய பலன்கள் அதிகமாக இருக்கும்.  

இங்கு செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேதுக்கள் போன்றவர்கள் புதனுடன் இணைந்தால் கெடுபலன்கள் அதிகமாக நடைபெறும். கெண்டங்கள், விபத்துக்கள் ஏற்படும். இங்கு புதன் 6-ல் மறைந்துவிட்டார் என்று மகிழ்ச்சியடைய முடியாது.  ஏனெனில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் என்று எதாவது ஒருவகையில் பலம் பெற்றிருப்பார்.  சூரியனுடன் இணைந்து அஸ்தமித்தால் ஓரளவிற்கு விடுதலை கிடைக்கும்.  மற்றபடி கெடுபலனையே புதன் தருகிறார்.  

ஆனாலும் புதன் தனது காரக பலன்களை தருவார்.  அந்த வகையில் கல்வியில் சிறப்பு ஏற்படும்.  மேலும் ஒரு கிரகம் 6-ல் ஆட்சி, உச்சம் பெற்றால் ஷர்ஷ யோகத்தை தரும்.  அந்த வகையில் காரிய வெற்றி தரும், முயற்சிகள் பலிதமாகும், எதிரிகளை வெற்றிகொள்வார்கள்.  ஆனாலும் இவற்றை பெற கடுமையாக போராட வேண்டும்.

இப்படியாக ஒருகிரகம் நன்மையை செய்யும் நிலையில் இருக்கும் போது சற்று தீமையையும் தரும்.  அவ்வாறே தீமையை செய்யும் நிலையில் இருக்கும் போது நன்மையையும் தரும்.  முழுமையான நன்மை என்றெல்லாம் எவருக்குமே கிட்டாது.  இனிமையான பலாச்சுளையை பெறவேண்டுமானால் அதன் மேற்புறம் முட்கள், பிசுபிசுப்பான பால், அதன் நாறுகளை கடந்து தான் செல்ல வேண்டும்.  நோகாமல் நொங்கெடுக்க வேண்டுமென்று நினைத்தால் கிரகங்கள் நம்மை சுளுக்கெடுத்துவிடுவார்கள் ஜாக்கிரதை.

அடுத்த பதிவில் சந்திப்போம்........

8 comments:

 1. எனக்கு மேஷ லக்னம் மூன்றில் புதன் சூரியன் ராகு உள்ளது குரு இதனை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார் இதன் பலன் என்ன ?

  ReplyDelete
 2. வாங்க பிரகாஷ் நம் பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள். அப்புறம் நீங்கள் உங்கள் ஜாதகம் என்ன, எல்லோருக்கும் பலன் சொல்லும் அளவிற்கு தேர்ச்சியடைந்துவீர்கள்.

  ReplyDelete
 3. தளரா உறுதியுடன் எழுதுகிறீர்கள்.
  நல்ல தகவல்கள்.
  எண்ணிலடங்கா நன்றிகள்.

  ReplyDelete
 4. ///*Murari said...

  தளரா உறுதியுடன் எழுதுகிறீர்கள்.
  நல்ல தகவல்கள்.
  எண்ணிலடங்கா நன்றிகள்.*/////


  வாங்க Murai, உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. ஐயா , தங்கள் பாடங்கள் அருமையாக உள்ளது. மேஷ லக்னத்திற்கு புதன் 6 ல் கன்னி யில் உச்சம் பெறுகிறார். சூரியனுடன் அஸ்தமித்தால் ஓரளவிற்கு விடுதலை கிடைக்கும் என்று சொல்கிறிர்கலே . சூரியன் ஐந்தாம் அதிபதி ஆச்சே . ஐந்தாம் அதிபதி சூரியன் ஆறாம் அதிபதி புதனுடன் சேரும் பொழுது ஜாதகற்கு கேடு பலன்ககளை கொடுக்குமா.

  ReplyDelete
 6. வாங்க சதீஷ்

  கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களேவா?! :) :)

  இது உங்க கேள்வி.

  ///சூரியன் ஐந்தாம் அதிபதி ஆச்சே. ஐந்தாம் அதிபதி சூரியன் ஆறாம் அதிபதி புதனுடன் சேரும் பொழுது ஜாதகற்கு கேடு பலன்ககளை கொடுக்குமா.////

  இது பதில்.

  /////சூரியனுடன் அஸ்தமித்தால் ஓரளவிற்கு விடுதலை கிடைக்கும் என்று சொல்கிறிர்கலே.////

  நான் சொன்னது சேர்க்கையல்ல அஸ்தமனம் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதே. சூரியனும் புதனும் 10 பாகைக்குள் இருந்தால்தான் அஸ்தமனம். இல்லாவிட்டால் சேர்க்கை.

  சேர்க்கை 5-ம் ஆதிபத்ய வழியில் சற்று கெடுபலனை கொடுக்கதான் செய்யும். ஆனாலும் 6-ல் சூரியன் இருக்கலாமே.

  ReplyDelete
 7. நன்றி ஐயா,எளிமையான விளக்கத்திற்கு தந்தற்கு நன்றி .

  ReplyDelete
 8. எனது "சதுரங்க விளையாட்டின் வரலாறும் மூலமும்"(5 பதிவுகள்) என்ற பதிவில் கிரகங்களின் உச்சம், நீசம், ஆட்சி, பற்றியும் எழுதியுள்ளேன். தங்களது வாசகர்களுக்கு தெரிவிக்கவும்

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.