வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

10 January 2012

ஜோதிட ஆய்வுத்தொடர் - மேஷ லக்னம் - பாகம் - 5

நண்பர்களுக்கு வணக்கம்,

சென்ற பதிவில் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குடும்ப, களத்திர ஸ்தானாதிபத்யம் பெற்ற சுக்கிரன் துவாதச பாவங்களில் லக்னத்திலும், 2-ம் வீட்டிலும் வரும் போது என்ன பலன்களை தருவார் என்பதை பார்த்தோம்.

இந்த பதிவில் தொடர்ந்து மற்ற பாவங்களில் சுக்கிரன் தரும் பலன்களை காண்போம்.

பொதுவாக ஜோதிடத்தில் ஒரு கிரகம் இரண்டு வீடுகளுக்கு ஆதிபத்யம் பெறும் போது எந்த வீட்டிற்கு அருகில் அமர்ந்துள்ளதோ அந்த வீட்டிற்கு சுப பலனையும், எந்த வீட்டிற்கு தொலைவில் உள்ளதோ அந்த வீட்டிற்கு அசுப பலனையும் தரும் என்பது விதி.

மேலும் சுக்கிரன் ஒரு சுபக்கிரகம்.  சுபக்கிரகங்கள் கேந்திரங்களில் நின்றால் தோஷத்தை அடைவார்கள் என்பதும் ஜோதிட விதி.

அந்த வகையில் கேந்திரங்களான 4, 7, 10-ல் வரும் போது சுக்கிரன் நன்மையான பலன்களை தருவதில்லை.  லக்னத்தில் திரிகோணமும் வருவதால் அதை கணக்கில் சேர்க்கவில்லை.

மேலும் சுக்கிரனுக்கு 6-மிடம் முழுமையான மறைவு ஸ்தானமாகும்.

எனவே சுக்கிரனானவர் கேந்திரங்கள் மற்றும் லக்னத்திற்கு 6-ல் வரும் போது மட்டும் நல்ல பலன்களை தருவதில்லை.

அதிலும் சுகஸ்தானமான 4-ல் சுக்கிரன் வரும் போது ஜாதகருக்கு வசதியான வாழ்க்கையையும், வாகன யோகத்தையும் தந்துவிடுகிறார். 

நமது தொடரில் சுக்கிரன் மேஷ லக்னத்திற்கு 3-ல் வரும் போது எத்தகைய பலன்களை தருவார் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் கலைகளுக்கு காரகத்துவம் வகிப்பவர். மேஷ லக்னத்திற்கு 3-மிடம் மற்றொரு சுபக்கிரகமான புதனின் வீடாக வருகிறது.  3-மிடம் சங்கீதம், இசை, ஆடை அணிகலன்கள், போக இச்சை, தைரிய வீர்யம், இளைய சகோதரம் முதலியவற்றை குறிக்கிறது.

எனவே ஜாதகர் சங்கீதத்தில் அதிக நாட்டம் உடையவராக இருப்பார்.  நல்ல குரல்வளம் கொண்டவராக இருப்பார்.  மேலும் புதனுடைய வீட்டில் சுக்கிரன் உள்ளதால் ஜாதகர் எளிதில் காதல் வயப்படுவார்.  போகத்தில் நாட்டம் அதிகம் இருக்கும்.  ஜாதகரின் இளைய சகோதரம் பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.  3-ல் பெண் கிரகம் உள்ளதால் ஜாதகர் சற்றே கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பார்.  அதற்காக பயந்தாங்கொள்ளியாக இருக்கமாட்டார்.  ஏனெனில் லக்னம் மேஷமாயிற்றே அதையும் கவனிக்க வேண்டும்.

தனாதிபதியான சுக்கிரன் முயற்சி ஸ்தானமான 3-க்கு வந்ததால் ஜாதகர் சொந்த முயற்சியால் தனம் சேரும்.   குடும்பத்தில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும்.  களத்திர ஸ்தானாதிபதி 3-க்கு வந்ததால் இல்லறம் இனிக்கும்.

ஆக மேஷ லக்னத்திற்கு 3-ல் உள்ள சுக்கிரன் ஜாதகருக்கு பெரிய யோகத்தையெல்லாம் செய்யக்கூடியவரல்ல.  மேஷலக்ன பாவியான மிதுனாதிபதி புதன் பலம் பெற்றாலும் அது மேஷ லக்னத்திற்கு நன்மையாக இராது.  எனவே சுமாரான பலன்கள் தான்.

அடுத்ததாக சுக்கிரன் 4-ல் கடகத்தில் அமரும் போது தரும் பலன்களை பார்ப்போம்.

கடகத்தில் சுக்கிரன் பகைபெற்றாலும் தனாதிபதி கேந்திரம் பெற்றதால் பலம் பெறுகிறார்.  மேலும் சுக்கிரனுக்கு 4-ல் திக்பலம் உண்டு.  எனவே ஜாதகருக்கு வாக்குவன்மை, கல்வியில் தேர்ச்சி, தனபிராப்தி, வாகன யோகம், போன்ற நல்ல பலன்களை தருவார்.

சுக்கிரன் மேஷ லக்னத்திற்கு 7-க்குடைய கேந்திராதிபத்யமும் வருகிறது.  எனவே 4-மிடமான மற்றொரு கேந்திரத்தில் அமரும் போது கேந்திராதிபத்ய தோஷத்தையும் தருகிறார்.

என்னப்பா இது நல்லது செய்வார்னு சொல்ற

அப்புறம் தோஷத்தை தருவார்னும் சொல்ற

முடிவா நீ என்னதான் சொல்ல வர்ற

அதுவா அதுவந்து குடுப்பார் ஆனா குடுக்கமாட்டார்....

வரும்......   ஆனா வராது..........

கேந்திராதிபத்ய தோஷத்தால் மனைவிக்கு பீடை, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், வாகனத்தில் கெண்டம் போன்ற தீய பலன்களும் நடைபெறும்.  கடகத்தில் உள்ள மேஷ லக்ன பாவியான புதனின் ஆயில்ய நட்சத்திர சாரத்தில் சுக்கிரன் இருந்தால் தீயபலன்களே அதிகம் நடைபெறும்.  இங்கு சுக்கிரன் 4-ல் உள்ளார்.  சுகஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கு் போது சுகத்திற்கு ஏது குறை என்றெல்லாம் பல்லவி பாட முடியாது.  காலை வாரிவிட்டுவிடும்.  இதைதான் சாரபலம் என்கிறோம்.

எந்த கிரகமும் எந்த வீட்டில் பலம் பெற்றிருந்தாலும் அது அமர்ந்திருக்கும் நட்சத்திரம் லக்னத்திற்கு சாதகமான கிரகத்தின் நட்சத்திரமாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் யோகம் முழுமையாக கிடைக்காது.  சாரத்தை பார்க்க வேண்டுமானால் நவாம்சத்தையும் பார்க்க வேண்டும்.  பலருக்கு நவாம்சம் பார்த்து பலன் சொல்லனும் என்றாலே  அலர்ஜிதான்.

பலன்கள் ஓரளவிற்காவது துல்லியமாக இருக்க வேண்டுமென்றால் வெறும் ராசி கட்டத்தை மட்டும் பார்த்துவிட்டு தசா புக்தி போட்டு பார்த்து பலன் சொன்னால் போதாது.  நவாம்சத்தையும், கோச்சார பலன்களையும் சேர்த்து பலன்களை அறிய முயன்றால் நமது பலன்கள் வட்டத்தில் விட்டத்தை நெருங்கலாம்.

சில ஜாதகங்களில் எல்லா விஷயங்களையும் நோண்டி நோண்டி பார்த்தாலும் ஒன்றும் புலப்படாது.  பலருக்கும் சம்பவங்கள் நடந்து முடிந்ததை ஜாதகங்களில் இந்த கிரகத்தால் இந்த தசா புக்தி காலத்தில் இந்த பலனை தந்திருக்கிறது என்று எளிதாக கூறிவிட முடியும்.  ஆனால் இனி எதிர்காலத்தில் எந்த கிரகம் என்ன விதமான பலன்களை எப்படி தரும் என்று கணித்து கூறுவதில் தான் ஜோதிடத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

இது எல்லோருக்கும் எளிதாக கைக்கூடக்கூடிய விஷயமல்ல.  நான் உட்பட, எனக்கு சற்று ஞாபக மறதியும் உண்டு.  பல சமயங்களில் நம்ம ஜோசியமும்  ப(ல்லி)லித்துவிடும். 

சரி விஷயத்திற்கு வருவோம்.

பொதுவாக சுக்கிரன் மேஷத்தாருக்கு 4-ல் அமர்வது நல்லது தான்.

மேஷத்தாருக்கு 5-ல் சூரியனுடைய வீட்டில் அமரும் போது பலன்கள் எப்படி இருக்கும்?

சுக்கிரனுக்கு சூரியன் பகைக்கிரகம், எனவே சிம்மத்தில் சுக்கிரன் பகையாகிறார்.

ஆனாலும் 5-மிடம் திரிகோணமாயிற்றே.

முன்பே ஒரு பதிவில் நினைவில் கொள்ளவேண்டிய விதிகள் என்ற பதிவில் எழுதியிருக்கிறேன்.

எப்படிப்பட்ட பாபக்கிரகமும் திரிகோணம் வந்தால் தமது சுபாவத்தை மாற்றிக்கொண்டு ஜாதகருக்கு நல்ல பலனை கொடுத்துவிடும்.  குறைந்தபட்சம் தீய பலனை செய்வதையாவது குறைத்துக்கொள்ளும்.

அந்த வகையில் கேந்திராதிபதியான சுக்கிரன் திரிகோணம் ஏறியது சிறப்புதான்.

இங்கு போய் பகை, புகை என்று குழப்பிக்கொள்ளாதீர்கள்.  சுபக்கிரகமான சுக்கிரன் திரிகோணம் வந்ததால் ஜாதகருக்கு தனது தசாவில் யோக பலன்களையே தருவார்.

அதிலும் தனாதிபதியான சுக்கிரன் பூர்வ புண்ய ஸ்தானம் ஏறியதால் ஜாதகர் அதிர்ஷ்டசாலிதான்.  அதிக உழைப்பின்றி தனம் வரும்.  ஏஜென்சி, புரோக்கிங், ஸ்பெகுலேஷன், லாட்டரி, ஷேர்மார்க்கெட் போன்ற அதிகம் உடலுழைப்பில்லாத தொழில்களில் ஜாதகர் எளிதாக லாபத்தை அடைவார்.

ஜாதகருக்கு பெண்குழந்தைகள் அதிகம் பிறக்கலாம்.  சூரியன் பலம் பெற்றிருக்கிறாரா என்பதையும் கவனித்துக்கொள்ளுங்கள்.  அது மிகவும் முக்கியம்.  சூரியன் பலம் பெறாமல் இருந்தால் சுக்கிரனால் ஒன்றும் கொடுக்க முடியாது.  சூரியன் சிம்மத்தில் சுக்கிரனுடன் சேர்ந்து ஆட்சிபெற்றாலும், அல்லது கும்பத்திலிருந்து சிம்மத்தை பார்த்தாலும், அல்லது மேஷத்தில் உச்சம் பெற்றாலும் அற்புதமான யோக பலன்களை ஜாதகருக்கு சுக்கிரன் வழங்குவார். 

சிம்மத்தில் சுக்கிரனுடைய நட்சத்திரமான பூரம் வருகிறது.  எனவே சுக்கிரன் சுய சாரம் பெற்றால் பலம் கிடைத்துவிடும்.  குருவின் பார்வையை பெற்றால் பலன்கள் இன்னமும் சிறப்பாக நடைபெறும்.

மற்றோரு கோணத்தில் பார்த்தால் 5-மிடம் ஜாதகருடைய புத்தியை குறிக்கிறது.  அங்கு காதல் கிரகமான சுக்கிரன் மேஷ லக்னத்திற்கு 7-க்குடையவராகி 5-ல் அமர்வதால் பெறும்பாலும் ஜாதகருக்கு காதல் திருமணம் அமைய வாய்ப்புகள் ஏற்படும்.  அல்லது திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் அன்னோன்யமாக வாழ்வார்.

ஜாதகர் நல்லதொரு இறைநம்பிக்கை உடையவராக திகழ்வார். சக்தி வழிபாடு உகந்தது. 

இந்த சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக்கிரகங்கள் இணைந்தால் பலன்கள் சிறப்பாக இராது.

ஏனெனில் சிம்மத்தில் பாபக்கிரகங்கள் அதிகம் இருந்தால் ஜாதகர் சம்பாத்தியத்திற்கு மிகவும் போராட வேண்டிய நிலை ஏற்படும்.  அந்நிலையில் சுக்கிரன் ஒன்றும் பெரிய நன்மையை அளித்துவிட முடியாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

சரி சுக்கிரன் புதன் வீடான கன்னியில் நீசம் பெற்று 6-ல் மறைந்துவிட்டார்.  இதற்கு என்ன பலன்? சொல்லுங்கள் பார்ப்போம்.

என்ன யூகித்துவிட்டீர்களா?

அதே அதே

தனாதிபதி, வாக்காதிபதி, குடும்பாதிபதியான சுக்கிரன் களத்திர ஸ்தானாதிபதியாகவும் வருகிறார்.

அவர் கன்னியில் ப்யூஸ் போயிட்டார்.  போறாத குறைக்கு மறைவு ஸ்தானம் வேறு.  சுத்தமாக வாஷவுட்.

நீசபங்கம் பெற்றாலும் ஒன்றும் தேறாது.  ஏதோ சுமாராக வண்டி ஓடும் அவ்வளவுதான்.

ஜாதகருடைய வார்த்தைக்கு மதிப்பு இருக்காது.  சும்மா ஏதாவது உளறிக்கொண்டிருப்பார்.  பொருளாதாரம் படுத்துக்கும். ஐயா துட்டுக்கு சிங்கியடிக்க வேண்டியது தான்.  அது கூட பரவாயில்லை.  நல்ல மனைவி அமையாது,  மனைவி நோயாளியாக இருப்பார்,  சுக்கிலத்திலும் ஒழுங்கற்ற தன்மை இருக்கும்.  இல்லறம் இனிக்காது.  பொதுவாக சுக்கிரன் நீசம் பெற்றவனுக்கு பெண்கொடுக்காதே என்று சொல்வார்கள்.  இங்கு மறைவு வேறு.  பெண்களாக இருந்தால் கண்டபடி சென்று வாழ்கையை சீரழித்து கொள்வார்கள்.

மேலும் ரோக ஸ்தானம் என்பதால் அதுவும் புதனுடைய வீடாக அமைவதால் தோல் வியாதிகள், செக்ஸ் சம்பந்தப்பட்ட வியாதிகள், சர்க்கரை வியாதி,  சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஜாதகருக்கு ஏற்படும்.  பெண்கள் எதிரிகளாக அமைவார்கள்.  உறவினர்கள் பகைவர்களாவார்கள்.

குருவின் பார்வை இருந்தால் பாதிப்புகள் அகலும்.  குரு பலம் பெற்று பார்க்க வேண்டும்.  மகரத்தில் நீசனாகி 9-ம் பார்வையால் பார்த்தால் ஒன்றும் மாறாது.  மாறாக மீனத்தில் ஆட்சி பெற்று 7-ம் பார்வையாக பார்த்தால் ஓரளவிற்கு தீயபலன்கள் குறையும்.

மேஷத்தில் பிறந்த ஜாதகர்களுக்கு சுக்கிரன் 7-ல் ஆட்சி பெற்றால் என்ன பலனை தருவார்.  யோசித்து வையுங்கள். 

அடுத்த பதிவில் அலசி ஆராய்வோம்.....

10 comments:

  1. ஐயா மேஷ லக்னத்திற்கு - சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக்கிரகங்கள் இணைந்தால் பலன்கள் சிறப்பாக இராது என்று சொல்றிங்களே .மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் தானே.இதை பற்றி சிறிது எழுதவும்

    ReplyDelete
  2. //**Blogger Sathish said...

    ஐயா மேஷ லக்னத்திற்கு - சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாபக்கிரகங்கள் இணைந்தால் பலன்கள் சிறப்பாக இராது என்று சொல்றிங்களே .மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய் தானே.இதை பற்றி சிறிது எழுதவும்**//

    வாங்க சதீஷ்,

    செவ்வாய் லக்னாதிபதியாக இருந்தாலும் பாபக்கிரகங்களுள் ஒன்றாக வருவதாலும், மேஷ லக்னத்திற்கு அஷ்டமாதிபத்யம் பெற்றதாலும் அவர் பாபியே.

    மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட பாபக்கிரகங்கள் சிம்ம வீட்டில் இருந்தால் பாதிப்பு அதிகம் இருக்கும். செவ்வாய் சுக்கிரன் மட்டும் இருந்தால் ஜாதகர் புத்திகூர்மைமிக்கவராக இருப்பார். ஆனால் செவ், சுக்கிர சேர்க்கை அதுவும் சூரியன் வீட்டில் குரு பார்வையின்றி இருப்பது அவ்வளவாக நல்லதல்ல. ஜாதகரின் மனம் எப்போதும் காமத்திலேயே இருக்கும். ஜாதகரின் வாரிசுகளுக்கு ஏதேனும் பிரச்சினைகளை உண்டு பண்ணும். இப்படி விவரித்துக்கொண்டே போகலாம்.

    ReplyDelete
  3. நன்றி ஐயா , தங்களின் விளக்கங்கள் அருமையாக உள்ளது .பொதுவாக வலைதளங்களில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை மனைவி மூலம் யோகம் ஆனால் காம உணர்வுகள் அதிகம் என்று படித்து இருக்கிறேன் .

    ReplyDelete
  4. அண்ணே ! உங்க விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் எளிதில் யாவரும் புரிந்துக்கொள்ளும்படியும் அழகாக உள்ளது . அதுவும் நட்சத்திர சாரம் கருத்தில்கொண்டு பலன் சொல்கிறிர்களே அது மிக மிக அருமை !
    மிக்க நன்றி !

    (நம்ம தொடர் இப்ப மேஷம் லக்னம் பற்றியது என்றாலும் என் ஜாதகத்தில் தொடர்புள்ளமையால் சொல்கிறேன் /கேட்கிறேன் . எனக்கும் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருவருமே பூரம் நட்சத்திர சாரத்தில்.(நவாம்சத்தில் இருவருமே துலாத்தில் உள்ளார்கள்.) விருச்சக லக்னம் ,லக்கினத்தில் உள்ள சனி பத்தாம் பார்வையால் அவர்களை பார்க்கிறார். சூரியனோ புதனுடன் கன்னியில்.
    குரு மூன்றில் நீச்ச பங்கம் . ரிசப ராசி மிருகசிரிசம் நட்சத்திரம்.
    செவ்வாய் சுக்கிரன் இருவரும் 6 ,12 அதிபதிகளா செயல்படுவார்களா 1 ,7 அதிபதிகளா செயல்படுவார்களா ?? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நேரமிருந்தால் பதில் சொல்லவும் சார் .)

    நன்றி .

    ReplyDelete
  5. perumal shivan said...

    ////***எனக்கும் சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருவருமே பூரம் நட்சத்திர சாரத்தில்.(நவாம்சத்தில் இருவருமே துலாத்தில் உள்ளார்கள்.)

    விருச்சக லக்னம்,லக்கினத்தில் உள்ள சனி பத்தாம் பார்வையால் அவர்களை பார்க்கிறார். சூரியனோ புதனுடன் கன்னியில்.

    குரு மூன்றில் நீச்ச பங்கம் . ரிசப ராசி மிருகசிரிசம் நட்சத்திரம்.

    செவ்வாய் சுக்கிரன் இருவரும் 6 ,12 அதிபதிகளா செயல்படுவார்களா 1 ,7 அதிபதிகளா செயல்படுவார்களா ?? ***////

    வாங்க பெருமாள்சிவன்.

    நம்ம பதிவுக்கு தொடர்பான கேள்விதான் கேட்டு இருக்கிறீர்கள்.

    செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை ராசியிலும் அம்சத்திலும் உள்ளனர். இந்த சேர்கையை குருவும் பார்க்கவில்லை. மாறாக சனி பார்க்கிறார்.

    முந்தைய கமெண்டில் இதற்கான பதில் எழுதியிருக்கிறேன் அந்த பலன் உங்களுக்கு நடக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

    மேலும் களத்திர காரகன் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி பாதிக்கப்பட்டுள்ளதால் உங்கள் மனைவிக்கு ரோகம் காட்டும் மற்றும் திருமணத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

    இது 6, 12 அதிபதிகள் கூடி சனி பார்த்ததால் ஏற்படும் பலன்.

    ஆனால் 1, 7-க்குரியவர்கள் கேந்திரம் ஏறி அந்த வீட்டதிபதி உச்சம் பெற்ற புதனுடன் சேர்ந்து குரு பார்வை பெற்றதால் பிரச்சினைகள் வந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்மையாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    குரு நீசம் பெற்றாலும் அவர் பார்வைக்கு பலனுண்டு.

    ஆமாம் குரு நீச பங்கம் என்று எப்படி சொல்கிறீர்கள். அம்சத்தில் உச்சமா? அல்லது வக்ரமா?

    என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலும் வீடு கொடுத்த சனி பலம் பெறவில்லை. குரு சந்திரனுக்கு கேந்திரமும் பெறவில்லை.

    எனவே குடும்பாதிபதி பாதிக்கப்பட்டதால் குடும்பத்தில், தனவிஷயங்களில் போராட்டம்தான்.

    இந்த பலன்கள் நீங்கள் குறிப்பிட்ட கிரகநிலைகளை வைத்து சுருக்கமாக சொன்னது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பெருமாள்சிவன்.

    ReplyDelete
  6. ////வாங்க பெருமாள்சிவன்.

    நம்ம பதிவுக்கு தொடர்பான கேள்விதான் கேட்டு இருக்கிறீர்கள்.

    செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை ராசியிலும் அம்சத்திலும் உள்ளனர். இந்த சேர்கையை குருவும் பார்க்கவில்லை. மாறாக சனி பார்க்கிறார்.

    முந்தைய கமெண்டில் இதற்கான பதில் எழுதியிருக்கிறேன் அந்த பலன் உங்களுக்கு நடக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.////

    அண்ணே ! நானும் சில ஜோதிட வலைத்தளங்களை படிப்பதால் சிறு ஜோதிட அறிவு அல்லது புரிந்துக்கொள்ளும் தன்மை உடையவன்.

    ஆமாம் ! எனக்கு எப்பொழுதும் காமம் பற்றிய சிந்தனையும் ஆர்வமும் அதிகம் .சதா எந்நேரமும் அதன் நினைப்பில் முழுகுவதுமுண்டு .
    எனக்கு இன்னும் திருமணமாகவில்லை பெண் பார்த்து பார்த்து கவலைகள்தான் மிச்சம்
    எல்லாம் கூடி வந்து ஏதோ ஒரு காரணத்தால் நின்றுவிடுகிறது .

    ///குரு நீசம் பெற்றாலும் அவர் பார்வைக்கு பலனுண்டு.
    ஆமாம் குரு நீச பங்கம் என்று எப்படி சொல்கிறீர்கள். அம்சத்தில் உச்சமா? அல்லது வக்ரமா?///

    நீச்ச குருவை அந்த வீட்டதிபதி சனி லக்கினத்திலிருந்து மூன்றாம் பார்வையால் பார்க்கிறார் மற்றும் திரிகோணம்,கேந்திரம் (லக்னம்)சனி ஏறியுள்ளார் .
    இது நீச்ச பங்கம்தானே ? குரு சுய வர்க்கம் 5 பரல் .

    ////என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலும் வீடு கொடுத்த சனி பலம் பெறவில்லை. குரு சந்திரனுக்கு கேந்திரமும் பெறவில்லை.////

    இது உண்மைதான் சனி பகை மற்றும் சுய பரல் 2 மட்டுமே !

    ///எனவே குடும்பாதிபதி பாதிக்கப்பட்டதால் குடும்பத்தில், தனவிஷயங்களில் போராட்டம்தான்.///
    நான் குடும்பத்தை விட்டு வேலை காரணமாய் வெளியில் உள்ளேன் .சரிதான்
    ஆனால் நான் யாருக்கும் கடன் பட்டதில்லை அதிக வருமானம் இல்லைஎன்றாலும் இருக்கும் பணத்தில் சிக்கனமாய் வாழ்பவன். மொத்தத்தில் போராட்டம்தான் .

    அண்ணே ! நான் காலசந்தியில் பிறந்த ஜாதகம் லக்னம் துலாமா அல்லது விருசிகமா என்று தெரியாமல் புலம்பிகிடப்பவன் சரியான பிறந்த நேரம் தெரியவில்லை .ஒரு அரை மணிநேர வித்தியாசத்தில் தெரியும் . இதுதான் உன் லக்னம் என்று நெத்தியில் அடித்தாற்போல் சொல்ல ஜோதிடத்தில் ஏதேனும் வழி உள்ளதா ?
    (தெரியாமல் கஷ்டப்படுகிறேன் நீங்கள் தெரிந்தவர்கள் என்பதால் கேட்க்கிறேன் )
    மறுபடியும் சுய ஜாதக கேள்விக்கேட்டு நட்ச்சரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம் உங்களுக்கு நேரமிருந்து சூழ்நிலை ஒத்துவந்தால் மட்டும் பதில் சொல்லவும் ..

    நன்றி !

    ReplyDelete
  7. ////என்னதான் குரு நீசபங்கம் என்று விதிகள் சொன்னாலும் வீடு கொடுத்த சனி பலம் பெறவில்லை. குரு சந்திரனுக்கு கேந்திரமும் பெறவில்லை.////
    அண்ணே ! பொதுவா எல்லோரும் குருவோ சந்திரனோ இருவரும் கேந்திரத்திலிருந்தா நல்லதுன்னு சொல்றாங்களே திரிகோனதிலிருந்தா நல்லதில்லியா ??? எனக்கு குரு,சந்திரன், சூரியன் + புதன் ஒருவருக்கொருவர் 5 ,9 ல் உள்ளனர் .

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா ,
    உங்கள் பதிவு உண்மையானது மிகவும் அருமை ஐயா வாழ்த்துகிறேன் ..ஐயா ஒரு சிறய கேள்வி ஐயா , எனக்கு மேஷ லக்னம் 5இல் குரு+சுக்கிரன் , நவாம்சத்தில் இரண்டு கிரகமும் வர்கோத்மம் பெற்று உள்ளது ஐயா 6 இல் சூரியன் வர்கோத்மம் .குரு திசை கோடீஸ்வரனாக ஆக்குமா ஐயா ? ஐயா உங்கள் கருத்துக்காக காவல் இருக்கிறேன் ..மிக்க நன்றி ஐயா ..

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா ,
    உங்கள் பதிவு உண்மையானது மிகவும் அருமை ஐயா வாழ்த்துகிறேன் ..ஐயா ஒரு சிறய கேள்வி ஐயா , எனக்கு மேஷ லக்னம் 5இல் குரு+சுக்கிரன் , நவாம்சத்தில் இரண்டு கிரகமும் வர்கோத்மம் பெற்று உள்ளது ஐயா 6 இல் சூரியன் வர்கோத்மம் .குரு திசை கோடீஸ்வரனாக ஆக்குமா ஐயா ? ஐயா உங்கள் கருத்துக்காக காவல் இருக்கிறேன் ..மிக்க நன்றி ஐயா ..

    ReplyDelete
  10. ஐயா வணக்கம்.
    ராசியில்
    சிம்மம் லக்னம், கும்பம் ராசி, 3ல் ராகு, 4ல் குரு, 7ல் சந்திரன், சனி ஆட்சி , 8ல் சுக்கிரன் உச்சம்,9ல் லக்னாதிபதி சூரியன் உச்சம், கேது,புதன்.
    நவாம்சத்தில் லக்னம் விருச்சிகம், 2ல் சந்திரன், 3ல் குரு நீசம் ,ராகு, 4ல் செவ்வாய், 8ல் சூரியன்,சனி, 9ல் கேது, 11ல் சுக்கிரன் நீசம், 12ல் புதன்.
    என் கேள்வி
    1). ராசியில் உச்சம் பெற்ற சுக்கிரன், நவாம்சத்தில் நீசம். அப்படியென்றால் சுக்கிரன் பற்றி எதை வைத்து பலன் சொல்வது, சுக்கிரன்- உத்திரட்டாதி சனியின் நட்சத்திரக்கால்
    நட்சத்திரக்கால்
    2). குரு ராசியில் கேட்டை நட்சத்திரக்காலில் விருச்சிகத்தில் நட்பு வீட்டில் சுகஸ்தானத்தில் உள்ளது, ஆனால் நவாம்சத்தில் நீசம் பெற்று ராகுவுடன் 3ல் இனைவு. இதற்கு எப்படி பலன் சொல்வது
    3) நவாம்சத்தில் பரிவர்த்தனை யோகம் உண்டா, சுக்கிரன், புதன் 11,12க்கு பரிவர்த்தனை.
    என் இளைய மகள் ஜாதகம், நானும் ஜோதிடம் கற்றுக் கொண்டு வருகிறேன். ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டு நண்பர்கள் உறவினர்களுக்கு இலவசமாக பலன் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில்
    இந்த கேள்வியை கேட்டுள்ளேன்.
    61 வயது பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். Deputy Manager ஆக.
    கடைசியாக ஒரு கேள்வி நவாம்சத்தில் எதையெல்லாம் பார்த்து பலன் சொல்லனும்.
    நிறைய ஜோதிடர்கள் இதில் மாற்றுக் கருத்து வேறுபாடு உள்ளது.
    ராசியில் என்ன பார்க்கனும் நவாம்சத்தில் என்னவெல்லாம் பார்க்கனும்.
    நட்சத்திர சாரம் லக்னாதிபதிக்கு அந்த கிரஹம் நட்பா, பகையா என்ன பாவம் என்றெல்லாம் பார்த்து, கோச்சாரம் பார்த்து பலன் சொல்லனும் என்று தாங்கள் தெளிவாக சொல்லியது நூற்றுக்கு நூறு உண்மை.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.