வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

03 January 2012

ஆங்கிலப் புத்தாண்டு அவசியமா?

நண்பர்களுக்கு வணக்கம்.

கடலூர், பாண்டிச்சேரி போன்ற கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தானே புயலின் கடுமையான தாக்கத்தால் மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மனிதன் என்னதான் வளர்ச்சி, விஞ்ஞானம் என்று வாய்கிழிய பேசினாலும், எழுதினாலும் அடிப்படையில் அவர்கள் இன்னும் ஆதிவாசிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பதை சமீபத்திய புயல் பாதிப்புகள் நமக்கு உணர்த்தியுள்ளது.

ஒரு மனிதனின் அத்யாவசிய தேவைகளில் மிகவும் முக்கியமானது தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு மனிதர்கள் படும் துன்பம் அதை எழுத்தில் வடிக்க முடியாதது.
இத்தகைய சோகம் சூழ்ந்திருக்கும் நிலையில் பலரும் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.  அதிலும் தமிழ்கூறும் நல்லுலகம் நம் பண்பாட்டை, அடிப்படையை மறந்து ஆங்கில மோகத்தால் அறிவிழந்து  அறிவியல் அடிப்படைகளற்ற ஆங்கிலப் புத்தாண்டை தலையில் வைத்து கொண்டாடிவருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

காரணமில்லாமல் காரியமில்லை
நம் முன்னோர்கள், சித்தர்கள், தவமுனிகள் அறிவில் சிறந்தவர்கள்.  அவர்கள் எந்த ஒரு செயலையும் காரணமில்லாமல் செய்வதும் இல்லை மற்றவர்களுக்கு பின்பற்ற வழிகாட்டுவதுமில்லை.   அந்தவகையில் அவர்கள் கோள்களின் இயக்கத்தையும், வானில் கோள்கள் அமைந்துள்ள நிலைகளின் அடிப்படையிலும், வருடம், மாதம், நாள், கிழமை, வாரம், நட்சத்திரம், திதிகள், நேரம், மணி, ஓரை என்று ஒவ்வொன்றிற்கும் பெயர்களிட்டு அவர்கள் பின்பற்றி வந்தனர்.  பிற்காலத்தில் அவர்களின் வழித்தோன்றலான நாமும் அவற்றை பின்பற்றி வந்தோம்.

நம்மை நீண்ட காலம் ஆண்ட ஆங்கிலேயர்களின் தாக்கத்தால் நாம் இன்னமும் அவர்களின் வழிமுறைகளை பின்பற்றி வருவது நமக்கு சொந்த புத்தியில்லாததையே காட்டுகிறது.  அடிமை இரத்தம் நம்மை விட்டு இன்னும் விலகியபாடில்லை.

சித்திரை-1 என்றால் அது வான மண்டலத்தில் தலையாய கிரகமாகிய சூரியன் தனது உச்ச வீட்டில் தனது பயணத்தை தொடங்குகிறார் என்று பொருள் கொள்ளலாம்.

அல்லது நமது தலைவர் கலைஞர் சொல்வது போல தைத்திருநாளில் சூரியன் உத்திராயண புண்ய காலத்தில் தனது பயணத்தை துவங்குவதால் அதிலும் லாஜிக் இருக்கிறது.


உண்மையில் ஜனவரி-1 அன்று என்ன மாற்றம் நிகழ்கிறது? என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா?

எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், அடிப்படையான காரணமும் இல்லாமல் கிரிகோரியன் என்ற அரசன் நிர்ணயித்தான் அதுவும் பிப்ரவரி மாதத்தில் அறிவித்தான் என்றும், இயேசு கிறிஸ்து டிசம்பர் மாதம் அவதரித்தார் என்றும் ரோமன், ஜுலியன் அது, இது என்று ஆளாளுக்கு ஒரு வழிமுறையை கடைபிடித்து கடைசியில் ஜனவரி 1-ம் தேதி வந்துவிட்டால் அது புத்தாண்டு என்று அமைத்துவிட்டு போய்விட்டனர்.

நாமும் அவர்களுக்கு அடிமைகளாக இருந்தமையால் அவர்களது பழக்க வழக்கங்களை விடாமல் அவர்களின் சார்பில் கொண்டாடி மகிழ்கிறோம்.  கொண்டாடுவது கூட தவறில்லை.  அன்று இந்துக் கோயில்களில் வழிபாடு என்று கூட்டம் நிரம்பி வழிகிறது.
 
நம் இந்திய வழக்கப்படி சூரிய உதயம் காலை 6 மணிக்கு தோராயமாக தொடங்குகிறது.  அது தான் நமக்கு பகல் பொழுது.  ஒவ்வொரு நாளும் நாம் பகலில் தானே விழிக்கிறோம். உண்கிறோம்.  இரவில் உறங்குவது தானே நமது பழக்கம்.

நிலைமை இப்படி இருக்கையில் நமக்கு நள்ளிரவு 12 மணிக்கு  கிரீன்விச்சில் பகல் பொழுது தொடங்கும் போது நம்மவர்கள் ஹேப்பி நியூ இயர் என்று நடு இரவில் கூச்சல் போடுவது எந்த அளவிற்கு நாம் விசுவாசமான அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம் என்பதையே காட்டுகிறது.

இப்போது கடைசியாக என்னதான் சொல்ல வருகிறாய் என்று கேட்பது புரிகிறது.

நாம் நமக்கான அடையாளங்களை இழக்காமல் இருப்பது தான் தமிழனுக்கு பெருமை.  அதைவிடுத்து அடுத்தவர்களுக்கு பல்லக்கு தூக்கிகளாக இருந்தோமானால் அதுவே நிரந்தரமானதாகிவிடும்.  பிறகு நாதியற்ற மனிதனாக, அடிமை வம்சத்து வழித்தோன்றலாக வாழ்ந்து மடிவது நம்மை செதுக்கிய, நமக்கு வாழ வழிகாட்டிய முன்னோர்களுக்கு நாம் தேடித்தரும் அவமானம்.

அய்யன் திருவள்ளுவர் கூறியது போல்

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

என்ற குறளின் கருத்திற்கிணங்க நம் அறிவை கொண்டு ஆராய்ந்து தெளிந்து அறிவுள்ள மனிதனாக வாழ வேண்டுகிறேன்.

நன்றி.

2 comments:

  1. ///நள்ளிரவு 12 மணிக்கு கிரீன்விச்சில் பகல் பொழுது தொடங்கும் போது நம்மவர்கள் ஹேப்பி நியூ இயர் என்று நடு இரவில் கூச்சல் போடுவது எந்த அளவிற்கு நாம் விசுவாசமான அடிமைகளாக வாழ்ந்து வருகிறோம் என்பதையே காட்டுகிறது.///
    :))
    உங்க கோவம் நியமானது தான்....

    ஆனா நம்மோட தகுதி என்னனு யோசிச்சு பார்த்தா சிப்பு தான் வருது....இங்கிலிஷ்காரன் கண்டுபுடிச்ச Computer ல,Google காரன் ப்ளாக்-ல ஓசியா எழுதிட்டு தமிழ் உணர்வ பத்தி,திருவள்ளுவர பத்தி சொல்லி என்ன அண்ணே ஆக போகுது .......இது surviaval....

    இதே நாம உள்ளுருல இருந்தா பண்ணையார் ஒருத்தன் அதிகாராம் பண்ணுவான்.....இப்போ உலக பண்ணையாரா அமெரிக்கன் இருக்கான் ...it's all in the Game :)

    பக்கத்துள்ள உள்ள மலையாளியோடையே நம்மால் இந்தியன் என்ற உணர்வோடு இருக்க முடியவில்லை :(

    உண்மையான ஆன்ம உணர்வு உள்ளவனுக்கு இங்கிலிஷ்காரனோ,மலையாள காரனோ,தமிழனோ எல்லாம் ஒன்னு தான் :)

    ReplyDelete
  2. வாங்க கிருஷ்ணா!

    ///ஆனா நம்மோட தகுதி என்னனு யோசிச்சு பார்த்தா சிப்பு தான் வருது....இங்கிலிஷ்காரன் கண்டுபுடிச்ச Computer ல,Google காரன் ப்ளாக்-ல ஓசியா எழுதிட்டு தமிழ் உணர்வ பத்தி,திருவள்ளுவர பத்தி சொல்லி என்ன அண்ணே ஆக போகுது ///

    நம்ம தகுதியை நாம குறைவாக எடை போட்டதால் (அ) மறந்துவிட்டதால் தான் சிப்பு வருது.

    நம்மாளுங்க தகுதியை நம்மளை விட இங்கிலீஷ்காரன் நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கான். அவுங்களுக்கு நம்மை பத்தி தெரிஞ்சளவுக்கு கூட நம்மாளுங்களுக்கு தெரியலை அதான் வேதனையே.

    இங்கிலீஷ்காரன் கண்டுபுடிச்ச கம்யூட்டர், கூகுள் மூலமா நான் அவுங்களை திட்டலை. நம்மாளுங்க சொந்த புத்திய மறந்துட்டு இப்படி வாங்கின காசுக்கும் மேல கூவுறானுங்களேன்ற ஆதங்கம் தான்.

    திருக்குறள் உதாரணம் அட வளவளன்னு எழுதறதுக்கு பதிலா நறுக்குன்னு நாலு வார்த்தை சொல்ல உபயோகப்பட்டுது அதான்.

    ///பக்கத்துள்ள உள்ள மலையாளியோடையே நம்மால் இந்தியன் என்ற உணர்வோடு இருக்க முடியவில்லை :(
    ///

    நாம வீட்ல பங்காளி சண்டை போடுவோம். எதிரி வந்தா மட்டும் ஒற்றுமையா சண்டை போடுவோம்ல அப்படி தான் இதுவும்.

    இங்க நாம சொல்ல வந்தது என்னன்னா... ஆங்கில புத்தாண்டா ரொம்ப கூவாதீங்க. நமக்குன்னு ஒரு வழிமுறை இருக்கே அதை கொஞ்சம் ரோசிங்க.

    கிருஸ்துமஸ், ரம்ஜான் வந்தா நம்ம இந்துக்கள் கொண்டாடுறாங்களா? அமைதியா வாழ்த்து சொல்றதில்லையா அதுமாதிரி இருந்துட்டு போகலாமே.

    ///உண்மையான ஆன்ம உணர்வு உள்ளவனுக்கு இங்கிலிஷ்காரனோ,மலையாள காரனோ,தமிழனோ எல்லாம் ஒன்னு தான் :)////

    கிருஷ்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்க :)

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.