வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

20 July 2011

வக்ர புத்தி ஏன் வருகிறது?

நண்பர்களுக்கு வணக்கம்!  தொடர்ச்சியான வேலைகளுக்கு இடையிலும் எனக்கு பதிவுகள் எழுத தோன்றுவதற்கு காரணம் என்ன தெரியுமா?  ஜோதிடத்தின் மீதுள்ள தணியாத தாகம்.  ஆர்வம்.  தீராத மோகம் என்று என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றணைத் தூறும் அறிவு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

அவருடைய அருள்வாக்கிற்கிணங்க ஒவ்வொரு நாளும் ஜோதிடத்தை படிக்க படிக்க, பல ஜாதகங்களை அனுபவத்தில் பார்க்க பார்க்க பலப்பல புதிய விஷயங்களும், புதிய புதிய கோணங்களும் தோன்றிய வண்ணமே இருக்கின்றன.  நாளுக்கு நாள் எனது அறிவும் அனுபவமும் கூடிக்கொண்டே செல்வதாக நான் நம்புகின்றேன்.

கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நானும் தொடர்ந்து ஜோதிடத்தை பயின்று, ஆராய்ந்து வருகிறேன்.  அப்பப்பா! எத்தனை எத்தனை விஷயங்கள், எத்தனை எத்தனை கோணங்கள்.  எவ்வளவு பெரிய ஜோதிட மேதைகளின் ஆராய்ச்சி நூல்கள் அவர்களது ஆராய்ச்சியின் வழிமுறைகள் என்று அள்ள அள்ள முத்துக்களாக வந்துகொண்டே இருக்கிறன்றது இந்த ஜோதிடத்தில்.

யாம் பெற்ற இந்த முத்துக்களையெல்லாம் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அதன் பயனாய் இந்த ஜோதிட சாஸ்திரத்தின் மீது மக்களுக்கு இருக்கின்ற அவநம்பிக்கையை என்னால் இயன்ற வரைக்கும் போக்க முனைகின்றேன்.  ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி அதன் அற்புத ஆற்றலை, அதனால் விளைகின்ற நன்மைகளை இந்த உலகிற்கு விட்டுச்சென்ற பல உயர்ந்த சான்றோர்களுக்கும், முனிவர்களுக்கும் ஏற்படுகின்ற அவப்பெயர்களும் என்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.

இந்த உலகில் எவ்வளவு பெரிய தொழில் நுட்பமாயினும், அது எவ்வளவு பெரிய விஞ்ஞான கோட்பாடுகளாயினும் சாதாரண பாமர மக்களுக்கு அவை பயன்படவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்.  தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடித்தார்.  ஆனால் அந்த வழிமுறைகளை மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று யாருக்கும்  புரியாத வகையில் ஏட்டில் எழுதிவைப்பதால் யாருக்கு என்ன பயன்?  அவர் கண்டுபிடித்த மின்விளக்குகள் குடிசையிலும் எரியும் போதுதான் அவரது கண்டுபிடிப்பின் நோக்கம் நிறைவேறும்.

என்னதான் செயற்கை கோள்கள், அனுமின் தொழில் நுட்பங்கள் என்று வந்தாலும் அவற்றால் சாதாரண பாமர மக்களுக்கு நன்மைகள் இல்லையென்றால் அதனால் யாது பயன்.

நம் முன்னோர்கள், தவமுனிகள் எவ்வளவோ பெரிய விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கும் உட்படாத கணித முறைகள், தொழில் நுட்பங்கள் போன்றவற்றை கொண்ட ஜோதிட சாஸ்திரத்தை இந்த மனித குலம் மேம்பட வேண்டும்.  அதன் பயனை சாதாரண ஏழை எளிய மக்களும் தூய்த்து நன்மை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தாம் அறிந்தவற்றை தமது கண்டுபிடிப்புகளை ஓலைகளில் எழுதிவைத்தது ஏன் என்றால் ”யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உயர்ந்த நோக்கமேயன்றி வேறென்ன.

இன்றைக்கு நானெல்லாம் செய்வது என்னவென்றால் அறிஞர்பெருமக்கள் அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதுவது போல ஜோதிடத்தை கண்டறிந்து நமக்களித்த முனிவர்களின் எண்ணங்களை, அவர்களது நோக்கங்களை, அவர்களது அரிய கண்டுபிடிப்புகளை பிறருக்கு எளிமையான வழியில் கொண்டுச்செல்ல எம்மால் இயன்ற அளவிற்கு யான் புரிந்து கொண்ட அளவில் எமது அறிவைகொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிமையாக கொண்டுசெல்ல இந்த வலையுலகம் எனக்கு கிடைத்த வாய்ப்பாக நான் கருதுகின்றேன்.

இங்கும் பல நண்பர்கள், ஜோதிட ஆர்வலர்கள் பலரும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து என்னை எழுத தூண்டிவருகின்றனர். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களின் ஆசியால், நல்லெண்ணங்களால் மேலும் மேலும் நான் ஊக்கம் பெற்று இன்னும் பல படைப்புகளை, ஆக்கங்களை உங்களுக்கு தர வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் பீறிட்டு எழுகிறது.

முன்னுரை என்று ஆரம்பித்தால் அதுவே ஒரு பெரிய பதிவாகிவிடும் போலிருக்கிறது.  சரி வாருங்கள் விஷயத்திற்கு செல்வோம்.

வக்ரம் அது வாழ்க்கை சக்கரம்.

ஜோதிடத்தில் கிரகங்கள் வக்ரம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டிருப்பார்கள்.  உங்கள் ஜாதக கட்டத்தை எடுத்து பார்த்தீர்களானால் அதில் சில, பல கிரகஙக்களுக்கு அருகில் (வ) என்று அடைப்புக் குறிக்குள் எழுதியிருக்க காண்பீர்கள்.

வக்ரம் என்றால் என்ன?

வக்ரம் என்பது பின்னோக்கி செல்லுதல் என்று பொருள்.

பின்னோக்கி செல்லுதல் என்றால் ரிவர்ஸ் கியரே தான்.  கிரகங்கள் பின்னோக்கி செல்லமுடியுமா?  இந்த பிரபஞ்சத்தில் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டு அதன் மீதுள்ள ஈர்ப்பு விசையின் காரணமாகவும் மற்றக் கிரகங்கள் தங்களுக்குள் உள்ள எதிர்ப்பு விசையின் காரணமாகவும் தங்களுக்குள் சுழன்றுக்கொண்டு சூரியனையும் வட்டவடிவ பாதையில் தொடர்ந்து சுற்றி வருகின்றன.

கிரகங்கள் சுற்றுவதற்கும், சூரியனை சுற்றி வருவதற்கும் காரணம் காந்த ஆற்றலே. ஒத்த துருவங்கள் ஒன்றை யொன்று விலக்கும்.  எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்.  இந்த விலக்கும் விசையும், ஈர்ப்பு விசையும் தான் கிரகங்களின் இயக்கத்திற்கு காரணம்.

இப்படியாக ஒரே நிலையில் தம்மை தாமே சுற்றிக்கொண்டு சூரியனையும் தங்களுக்குரிய வட்டப்பாதையில் கிரகங்கள் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன.  வட்டப்பாதையில் சுற்றும் போது நேர்திசையில் தான் கிரகங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன.  ஆனால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது நமக்கு கிடைக்கும் தோற்றத்தை வைத்து நாம் கிரகங்கள் எதிர் திசையில் சுற்றுவதாக அல்லது பின்னோக்கி நகர்வதாக காண்கிறோம்.  இதையே அந்த கிரகங்கள் வக்ர கதியில் சஞ்சரிப்பதாக கூறுகிறோம்.

கிரகங்களில் சூரியன், சந்திரன் ஆகிய இருவருக்கும் எந்த காலத்திலும் வக்ர கதியே கிடையாது. அவை எப்போதும் நேர்கதியிலேயே சஞ்சரிக்கும் யாராவது மறந்து போய் சூரிய, சந்திரனுக்கு பக்கத்தில் (வ) என்று போட்டு விடாதீர்கள்.  அவ்வாறே ராகு, கேதுக்களும் எப்போதும் எதிர்திசையிலேயே சஞ்சரிக்கும் எனவே அதனையும் வக்ரம் என்று நாம் குறிப்பிடுவதில்லை.  

இது எப்படியென்றால் நமது நண்பர் எப்போதாவது பார்ட்டி கீர்ட்டி என்றால் கொஞ்சம் போல ஜாலியாக இருக்க டாஸ்மாக் சரக்கடித்துவிட்டு கொஞ்சம் போல வீரமாக பேசுவார்.  எனவே அவர் அப்போது வக்ரமாக இருக்கிறார்  என்று வாடையை வைத்து நாம் தெரிந்து கொண்டு கொஞ்சம் மரியாதை கொடுப்பது போல பேசுவோம்.  ஆனால் சில குடிமகன்கள் எப்போதும் சரக்கடித்துக் கொண்டு மிதந்து கொண்டே இருப்பார்கள்.  அவர்களுக்கு நேர்கதியே கிடையாது.  எனவே அவர் வக்ரமாக இருக்கிறார் என்றெல்லாம் நாம் சொல்லவே தேவையில்லை.  நாம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நம்மாள் எப்போதும் போதையிலே தான் இருப்பார்.  என்ன விளக்கம் போதுமா!  சும்மா :))

கிரகங்களின் வக்ர நிலையைப் பற்றி “ஜோதிட ரத்தனா“ திரு.S. சந்திரசேகரன் என்ற ஜோதிடர் அவர்கள் மிக எளிதாக புரியும் படி தமிழோவியம் என்ற தளத்தில் வரைபடம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.  அதனை தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
 

நன்றி: “ஜோதிட ரத்னா“ திரு. S. சந்திரசேகரன் அவர்கள், தமிழோவியம் தளம்.

இந்த வரைபடத்தில் புதனின் நிலையை பாருங்கள்.  சூரிய மண்டலத்தில் மிகச்சிறிய வட்டப்பாதையை கொண்டது புதன் கிரகம்.  புதன் சூரியனையும் ராசி மண்டலத்தையும் சுற்றி வருகின்ற நகர்வை சிறிய வட்டங்களாக பு1, பு2, பு3 என்று வரிசையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்போது பு1 என்ற நிலையில் புதன் பூமியிலிருந்து பார்க்கும் போது துலா ராசியில் தெரிகிறார்.  எனவே புதன் துலாத்தில் உள்ளார் என்கிறோம்.  தொடர்ந்து புதனானவர் நேர்கதியில் சென்றுகொண்டு சூரியனையும், ராசி மண்டலத்தையும் சுற்றி வருகிறார்.  பு5 என்ற நிலைக்கு வரும் வரை புதனின் இயக்த்தில் எந்த மாறுதலையும் நாம் காண இயலாது.  அதுவரை நேர் கதியிலேயே செல்கிறார்.  பு5 என்ற நிலையில் புதன் மகர ராசியில் இருக்கிறார்.

அடுத்ததாக பு6 என்ற நிலைக்கு செல்லும் போது புதனானவர் கும்ப ராசிக்கு செல்ல வேண்டும்.  ஆனால் அவ்வாறு செல்லாமல் மகர ராசியிலேயே பின்னோக்கி நகர்வதாக நமக்கு தெரிகிறது ஏன்?  அதாவது புதனானவர் தனது வட்டப்பாதையின் அடுத்த பாகத்திற்கு வந்துவிட்டபடியால் அவரால் கும்ப ராசிக்கு செல்ல முடியவில்லை.  எனவே மகர ராசியில் பின்னோக்கி செல்வதாக நமக்கு தெரிகிறது.  அவர் கும்பத்திற்கு செல்ல வேண்டுமென்றால் சூரியன் நகர வேண்டும்.

இப்போது பு7 என்ற நிலையை பாருங்களேன்.  மகர ராசியில் பின்னோக்கி சென்ற புதன் தற்போது தனுசு ராசியில் இருப்பதாக பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு தெரிகிறது.  உண்மையில் புதன் தனுசு ராசியில் தான் தெரிகிறார்.  ஆனால் நேர்கதியில் இல்லை வக்ர கதியில் தெரிகிறார்.  நேர்கதியில் பு3 என்ற நிலையில் இருக்கும் போது இருப்பார்.  பு7 என்ற நிலையில் வக்ர கதியில் இருப்பார்.  பு8 ல் துலா ராசியில் இருப்பார். அதாவது வட்டத்தின் முன்பகுதியில் செல்லும் போது நேர் கதியாகவும், பின்பகுதியில் செல்லும் போது வக்ர கதியாகவும் நமக்கு தெரிகிறது. 

இவ்வாறே தான் சுக்கிரனுக்கும் வக்ர நிலை ஏற்படுகிறது.  புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் உள்வட்ட கிரகங்கள் எனப்படுகிறது.  சூரியன் இருக்கும் ராசிகளிலோ அல்லது முன் பின் ராசிகளிலோ தான் இந்த கிரகங்கள் அமைந்திருக்கும்.  அதாவது புதன் சூரியனை விட்டு 1 ராசிக்கு மேல் முன்போ அல்லது பின்போ போக மாட்டார்.  தற்போது ஆடி மாதம் என்பதால் சூரியன் கடகத்தில் இருப்பார்.  புதனானவர் மிதுனம், கடகம், சிம்மம் ஆகிய மூன்று ராசிகளுக்குள்ளாக மட்டுமே இந்த மாதம் முடிகின்ற வரை இருப்பார்.  சூரியனை விட்டு இரண்டு ராசிகளுக்கு மேல் சுக்கிரன் செல்ல மாட்டார்.

இதனை ஜாதக கணிப்பின் போது நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  எந்த ஜாதகத்திலாவது சூரியனை விட 2 ராசிகளுக்கு மேல் முன், பின்னாக அதாவது சூரியனிருக்கும் வீட்டிற்கு 4ல் அல்லது 10ல் சுக்கிரன் இருந்தாலோ 

அல்லது

சூரியனை விட 1  ராசிக்கு மேல் முன், பின்னாக அதாவது சூரியனிருக்கும் வீட்டிற்கு 3ல் அல்லது 11ல் புதன் இருந்தாலோ

அந்த ஜாதகம் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுக்கொள்ளுங்கள்.

இவ்வாறே வெளிவட்ட கிரகங்கள் என்றழைக்கப்படும் செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரகங்களுக்கும் வக்ர கதியை கண்டு கொள்ளலாம்.  இந்த கிரகங்களின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையை விட பெரியது.  எனவே இந்த கிரகங்களுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது அந்த கிரகங்கள் வக்ர கதியில் உள்ளதாக நமக்கு தெரியும்.

அதாவது தேராயமாக சூரியனுக்கு 5ல் வரும் போது குருவும், சனியும் வக்ர நிலையில் சஞ்சரிக்க ஆரம்பிப்பார்கள், 9ல் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார்கள்.  செவ்வாய், புதன், சுக்ரன் ஆகியோரின் வக்ர நிலையை பஞ்சாங்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஒவ்வொரு கிரகமும் எவ்வளவு நாட்கள் வக்ர நிலையில் இருப்பார்கள் என்பதற்கான விபரங்கள் கீழே தந்திருக்கிறேன் பாருங்கள்.

புதன் 24 நாட்கள், சுக்கிரன் 42 நாட்கள் (அப்படியே திருப்பி போடுங்க!), செவ்வாய் 80 நாட்கள், குரு 120 நாட்கள், சனி 140 நாட்கள்.

இப்போது கிரகங்களின் வக்ர நிலையைப் பற்றி நீங்கள் ஓரளவிற்கு தெளிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

சரி வக்ர நிலைகளில் இருக்கும் போது கிரகங்கள் எவ்வாறு பலன்களை அளிக்கும்.  இதுதான் ஜோதிடத்தில் முக்கியமான கேள்வி.

பொதுவாக சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் ஜாதகத்தில் வக்கரம் பெற்றால் சுபத்தன்மை அக்கிரகங்களுக்கு அதிகரிக்கும்.  அவ்வாறே பாபக் கிரகங்களான சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் வக்ரம் பெற்றால் பாபத்தன்மை பலமடங்கு அதிகரித்துவிடும்.

ராகு, கேதுக்கள் எப்போதும் வக்ர நிலையிலேயே சஞ்சரிப்பதால் அவற்றிற்கு எப்போதும் பலம் அதிகம்.  மற்ற அனைத்து கிரகங்களை விட வலிமையுடையவை ராகு, கேதுக்களே.  அதிலும் ராகுவை விட கேதுவிற்கு இன்னமும் பலம் அதிகம்.  அதனால் தான் கேதுவைப் போல் கெடுப்பாரில்லை என்றனர்.  

பிரபல ஜோதிட அறிஞர், ஜோதிட வாசஸ்பதி திரு. மு. மாதேஸ்வரன் அவர்கள் ஒரு ஜோதிட மாநாட்டில் ஏன் ராகுவிற்கு 18 வருடமும் கேதுவிற்கு 7 வருடமும் தசா வருடத்தை நிர்ணயித்தனர் என்பதை தனது கற்பனை திறத்தினால் மிக அழகாக குறிப்பிடதாக தனது நூலில் எழுதியிருக்கிறார்.

ராகு மனித தலையும் பாம்பின் உடலும் கொண்டது.  எனவே அதனிடம் விஷத்தன்மை குறைவாகவே இருக்கும்.  எனவே 18 ஆண்டுகள் ராகு திசையை மனிதர்கள் ஓரளவிற்கு தாக்குபிடிக்க முடியுமாம்.

ஆனால் கேதுவோ பாம்பின் தலையையும், மனித உடலையும் கொண்டவர்.  அதுவும் 5 தலை நாகத்தின் தலைப்பகுதியை கொண்டவர்.  மிகவும் அதிகமான கொடிய விஷத்தன்மை உடையவர் என்பதால் அவருடைய கொடுமையான பலன்களை மனிதர்களால் தாங்க இயலாது.  இதை உணர்ந்த நம் முனிவர்கள் கேதுவிற்கு 7 வருடங்களை தசா காலமாக அமைத்தனர். என்று உரையாற்றியதாக எழுதியிருந்தார்.

எவ்வளவு அழகான கற்பனை பாருங்கள்.

ஆனால் நவக்கிரகங்களுக்கு தசா வருடங்களை பிரித்ததன் அடிப்படைக்கு வேறு காரணம் உள்ளது.  அதனை இனி வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

சுபக்கிரகங்கள் லக்னத்திற்கு சுபராக அமைந்து நன்மை செய்யும் அமைப்பில் இருந்து அக்கிரகங்கள் வக்ரம் பெற்றால் அந்த கிரகங்களின் சுபத்தன்மை மேலும் அதிகரித்து லக்னத்திற்கு நல்ல சுப பலன்களை அதிகமாக வழங்கும்.  

அக்கிரகம் லக்னத்திற்கு பாவியாக அமைந்து தீமை செய்யும் அமைப்பில் இருந்து வக்ரம் பெற்றால் தீமை அதிகம் தராது.  ஏனெனில் அக்கிரகம் வக்ரம் பெற்றதால் சுபக்கிரகமாகி சுபத்தன்மை அதிகம் பெற்றுவிடுகிறது.  எனவே தீமையை குறைக்கும் நிலையை வக்ரம் எற்படுத்திவிடுகிறது.  அதற்காக நன்மையை தரும் என்று கருதக்கூடாது,  தீமையை குறைவான அளவிலே செய்யும் என்ற அளவிற்கு தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறே பாபக்கிரகங்கள் லக்னத்திற்கு சுபராக அமைந்து நன்மை செய்யும் அமைப்பில் இருந்து வக்ரம் பெற்றால் வலிமை பெற்று லக்னத்திற்கு நன்மையை தருகிறது.  ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் சுபக்கிரகம் வக்ரம் பெற்று தரும் நன்மையை விட பாபக்கிரகம் வக்ரம் பெற்று தரும் நன்மை நல்ல வழியில் ஜாதகருக்கு கிடைக்காது.  மிகக் கொடிய பாவச்செயல்களில் ஜாதகரை ஈடுபடுத்தி அவருக்கு லாபம், மற்றும் பல நன்மையான பலன்களை தருகின்றன.  ஆனால் மன நிம்மதி போய்விடும்.  திருட்டு, கொள்ளை, வழிப்பறி, ஊழல், கள்ளச்சாராயம், ஏமாற்றுதல் போன்றவற்றால் வரும் பணம் எப்படி நிம்மதியை தரும்.

பாபக்கிரகங்கள் லக்னத்திற்கு பாவியாக அமைந்து தீமைசெய்யும் நிலையில அமர்ந்து வக்ரம் பெற்றால் வலிமை பெற்று விடுகிறது.  எனவே ஜாதகருக்கு மிகவும் கொடுமையான பலன்களை தமது தசா புக்தி காலங்களில் தரும்.

ஏன் சுபக்கிரகங்கள் வக்ரம் பெற்றால் சுபத்தன்மை அதிகம் என்றனர்.  மேலே குறிப்பிட்ட படத்தில் பாருங்கள் உள்வட்ட கிரகங்களான புதன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் நேர் கதியில் செல்லும் போது பூமிக்கு சற்று தொலைவில் செல்கின்றனர்.  ஆனால் வக்ர கதியில் சஞ்சரிக்கும் போது வட்டத்தின் அடுத்தப் பகுதியில் பூமிக்கு அருகில் சஞ்சரிக்கின்றனர்.  எனவே அக்கிரகங்களின் கதிர்வீச்சை எளிதாக நாம் பெற முடியும்.  எனவே தான் சுபக்கிரகங்களுக்கு வக்ர நிலையில் சுபத்தன்மை அதிகம் என்றனர்.   

மேலும் நீச்ச வீட்டில் இருக்கும் கிரகம் வக்ரம் பெற்றாலும் அக்கிரகம் பூமிக்கு அருகில் இருப்பதால் பலம் பெற்று நீச பங்கம் அடைகிறது.  அவ்வாறே உச்ச வீட்டில் இருந்து வக்ரம் பெற்றால் சுப பலம் மேலும் அதிரித்துவிடுகிறது.  அதிகமான சர்க்கரை உடலுக்கு கெடுதல் என்ற அடிப்படையில் உச்ச கிரகம் வக்ரம் பெற்றால் நீச பலனை தரும் என்றனர்.  உண்மையில் கெடுபலனை தான் தருகிறது.

நட்பு, பகை வீடுகளில் வக்ரம் பெறும் போது ஆட்சி பெற்ற கிரகம் தரும் பலனை அக்கிரகங்கள் அடைகின்றன.  ஆட்சி பெற்ற வீட்டில் வக்ரம் பெற்றாலும் பலம் அதிகரிக்கும்.  ஆனால் அக்கிரங்கள் லக்னத்திற்கு சுபக்கிரகங்களாக இருக்க வேண்டும்.

மனிதர்களிடம் கூட வக்ர புத்தி உடையவன் என்று சொல்கிறோமே!! ஏன் என்றால் நாம் நமது சிந்தனையை முன்னோக்கி செலுத்தாமல் பின்புத்தியால் பல கீழ்தரமான காரியங்களை செய்துவிடுகிறோம்.  அதாவது மனிதனாக பிறந்தவன் ஆறறிவு உடையவன் அவன் அவனது அறிவை ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தி மனித குலத்தை முன்னேற்ற வழிகாட்டி அழைத்துச் செல்ல பயன்படுத்த வேண்டுமேயல்லாது தனது அறிவை அழிவு பணிகளுக்கு பயன்படுத்தி மனித குலத்தையே வேறறுக்க செய்துவிடுகிறான்.  எனவே தான் அப்படிப்பட்ட மனிதர்களை வக்ர புத்தி உடையவர்கள் என்கிறோம்.

இதுவரை வக்ரம் என்றால் என்ன? அக்கிரகங்கள் எவ்வாறு பலன்களை அளிக்கிறது என்று விளக்கியிருந்தேன்.  ஏன் ஒரே பதிவில் எழுதிவிட்டேன் என்றால் தொடர்ச்சியாக இருந்தால் தான் விஷயங்கள் விடுபடாமல் பொருளுடன் இருக்கும்.  எனவே அனைவரும் பொறுமையாக நேரம் கிடைக்கும் போது ஒரு முறைக்கு பல முறை நிதானமாக படித்து பாருங்கள்.  உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  மேலும் உங்களிடமும் இதுபற்றிய மேல் விபரங்கள் இருந்தாலும் எழுதுங்கள்.  ஆரோக்கியமான விவாதம் நம் கருத்துகளை மேலும் தெளிவாக்கும் என நம்புகிறேன்.

அடுத்த பதிவில் இன்னும் பல புதிய ஜோதிட விபரங்களோடு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

20 comments:

 1. அன்புடன் வணக்கம்,
  நல்லது நண்பரே!
  மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். என்போன்ற அடிப்படை ஜோதிட அறிவு உள்ளவர்களுக்கு அற்புத விளக்கமே இருந்தும் இன்னும் சில கட்டங்களோடு கூடிய உதாரணங்களை தந்திருந்தால் இன்னும் எளிதாகப் புரியும் என்பது எனது அவா... அதாவது சில பத்திகளுக்கு இடையில் அதற்கு தகுந்த உதாரணங்களை செருகலாம்.

  இருந்தும் மிகவும் சிரத்தையுடன் நேரமெடுத்து பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி. உண்மையில் பல மேலதிகத் தகவல்களை அறிந்து கொண்டேன்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  நன்றி வணக்கம்.
  தமிழ் விரும்பி.
  http://tamizhvirumbi.blogspot.com/

  ReplyDelete
 2. Thanks sir. Good post, with detailed explanation

  ReplyDelete
 3. @தமிழ் விரும்பி


  //இன்னும் சில கட்டங்களோடு கூடிய உதாரணங்களை தந்திருந்தால் இன்னும் எளிதாகப் புரியும் என்பது எனது அவா//

  வாங்க! தமிழ்விரும்பி. உங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல.

  நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். நான் ஓரளவிற்கு அடிப்படை தெரிந்தவர்களுக்காக தான் எழுதுகிறேன். அடிப்படைகளை தெரிந்துகொள்ள பல தளங்கள், புத்தகங்கள் உள்ளன. எனவே நாமும் அதையே செய்து அ, ஆ என்று சொல்லிக்கொண்டிருக்காமல் கொஞ்சம் விபரமாக எழுதலாமே என்ற எண்ணம்தான்.

  கட்டம் போட்டு எழுதிகொண்டிருந்தால் பதிவு இன்னும் பெரிதாக தொடர் பதிவாக ஆகிவிடும். எனவே முடிந்தவரை எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 4. @R.Ravichandran

  உங்கள் கருத்துகளுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 5. @மாலதி

  உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 6. //ஏன் சுபக்கிரகங்கள் வக்ரம் பெற்றால் சுபத்தன்மை அதிகம் என்றனர். மேலே குறிப்பிட்ட படத்தில் பாருங்கள் உள்வட்ட கிரகங்களான புதன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் நேர் கதியில் செல்லும் போது பூமிக்கு சற்று தொலைவில் செல்கின்றனர். ஆனால் வக்ர கதியில் சஞ்சரிக்கும் போது வட்டத்தின் அடுத்தப் பகுதியில் பூமிக்கு அருகில் சஞ்சரிக்கின்றனர். எனவே அக்கிரகங்களின் கதிர்வீச்சை எளிதாக நாம் பெற முடியும். எனவே தான் சுபக்கிரகங்களுக்கு வக்ர நிலையில் சுபத்தன்மை அதிகம் என்றனர். //

  அண்ணே நீங்க எங்கியோ(வான மண்டலதுக்கே ) போய்ட்டீங்க :)

  ReplyDelete
 7. @தனி காட்டு ராஜா

  உங்கள் கருத்துக்கு நன்றி ராஜா! நான் எங்கேயும் போகவில்லை. பூமியில் தான் இருக்கிறேன். நம்ம மைண்ட் தான் கொஞ்சம் வானமண்டலத்துக்கு ஊர் சுத்த போயிடுச்சி அதான் (கற்பனை) ஹி.ஹி.

  ReplyDelete
 8. அறுமையான பதிவு படித்து மிகவும் பயன் அடைந்தோம் நன்றி

  ReplyDelete
 9. பெரும்பாலான ஜோதிடர்கள் வக்ரம் பெற்ற சுப கிரகம் பாப தன்மையும், வக்ரம் பெற்ற பாப கிரகம் சுப தன்மையும் பெறுவதாய் சொல்கிறார்கள் . நீங்கள் !?

  ReplyDelete
 10. ///perumal shivan said...

  பெரும்பாலான ஜோதிடர்கள் வக்ரம் பெற்ற சுப கிரகம் பாப தன்மையும், வக்ரம் பெற்ற பாப கிரகம் சுப தன்மையும் பெறுவதாய் சொல்கிறார்கள். நீங்கள் !?///

  வாங்க பெருமாள்சிவன்,

  நம்ம பதிவுகளையெல்லாம் உன்னிப்பா படிக்கறாப்ல இருக்கு. எனது பதிலை பதிவிலேயே சொல்லியிருக்கேனே. பொதுவா வக்ரம் பெற்ற கிரகங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு பலம் அதிகம். அடுத்ததாக வக்ரம் பெற்ற கிரகங்கள் தங்கள் இயல்புக்கு மாறான பலன்களை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

  இயல்புக்கு மாறாக என்றால் தலை கீழாக என்று கருத வேண்டாம். சுபம் அசுபமாகவும், அசுபம் சுபமாகவும் நடக்கும் என்று பொருளில்லை.

  தாங்கள் செய்யும் பலன்களை தாமதமாக அல்லது தாம் செய்ய வேண்டிய நல்ல (அ) கெட்ட பலன்களை செய்யாமல் இருக்கலாம்.

  அனுபவத்தில் இன்னும் பல ஜாதகங்களை ஆராய வேண்டியுள்ளது. பார்க்கலாம்.

  ReplyDelete
 11. AnonymousJuly 06, 2013

  தங்கள் பதிவை இப்பொழுது தான் படித்தேன். அருமையாக இருந்தது.

  ReplyDelete
 12. அருமை..தாங்கள் எங்கு உள்ளீர்கள்

  ReplyDelete
 13. I read your post today.
  It was excellent sir.

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.