வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

07 August 2011

தேரான் தெளிவும்.... தெளிந்தான்கண் ஐயுறவும்....


தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

ஒருவரைப் பற்றி நன்றாக ஆராயாமல் அவரை முழுமையாக நம்புவது என்பது மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும். இந்த உலகில் யார் யார் எப்படிப்பட்டவர்கள், எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி எப்படி மாறக்கூடியவர்கள் என்பதை யாராலும் கணிக்கவே முடியாத ஒன்று.

நல்லவர்கள் என்று நாம் அனைவராலும் நம்பப்படும் ஒரு மனிதர் பின்னாளில் தனது சூழ்நிலையால் மாறிவிடக்கூடும். அவர் இயல்பில் நல்லவராகவே கூட இருந்திருக்காலாம் ஆனால் காலத்தின் சூழல் அவரை அத்தகைய நிலைக்கு மாற்றியிருக்கும்.

சிலர் இயல்பில் தீயவராய் இருப்பர் ஆனால் வெளியில் அவருடைய தவறுகள் அவ்வளவாக தெரியாமல் இருந்திருக்கும் மேலும் அவரது செயல்பாடுகளால் அவருடைய தீய குணங்கள் வெளியில் தெரியாமல் மறைத்திருக்கும். எனவே அவர் மற்றவர்களின் பார்வையில் நல்லவராக தெரிவார்.

இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி நன்றாக ஆராயாமல் அவர்களிடம் நட்பு கொள்ளுதல் மற்றும் அவரை முழுமையாக நம்புதல், நமது இரகசியங்களை அவர்களிடம் சொல்லுதல் போன்ற செயல்கள் என்றென்றும் தீராத துன்பத்தை நமக்கு கொடுத்துவிடும்.

துன்பம் என்பது இருவகையாக கொள்ளலாம். உடலால் நாம் அனுபவிக்கும் துன்பம். அது வலி, வேதனை என்று ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கும். அந்த காலம் முடிந்தபின்பு அதனுடைய வேதனைகள் குறைந்துவிடும். அல்லது மறைந்துவிடும். இதைக்கூட ஒருவரால் பொறுத்துக்கொள்ள முடியும்.

ஆனால் மனதினால் நாம் அடையும் துன்பம் இருக்கிறதே அப்பப்பா! அதனை வார்த்தைகளில் வடிக்க முடியாது. அந்த சம்பவத்தை பற்றி நினைவுகள் வரும் போதெல்லாம் நாம் அடையும் வேதனைக்கு அளவே இருக்காது. அந்த துன்பம் எக்காலமும் நம்மனதில் நிலைக்கொண்டிருக்கும். அதற்கு முடிவே இல்லை. சிலகாலம் மறந்திருந்தாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அந்த துன்பத்தை நாம் நினைத்து அனுபவிக்க வேண்டும்.

அத்துன்பம் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு நினைவிற்கு வரும் என்பதால் அது தீரா(த) இடும்பை (துன்பத்தை) தரும் என்றார் வள்ளுவப் பெருந்தகை.

தேரான் தெளிவு - இது தரும் துன்பத்தை தான் மேலே விளக்கியிருந்தேன்.

சரி இப்போது அடுத்தது தெளிந்தான்கண் ஐயுறவும்.

ஒருவரைப் பற்றி நாம் நன்றாக ஆராய்ந்து அறிந்தாயிற்று, அவரது குணவியல்புகள் அனைத்தும் நாம் சோதித்து அறிந்து கொண்டுவிட்டோம். எந்த வகையில் நோக்கினாலும் அவர் குற்றமற்றவர் என்பதை பல தருணங்களில் நாம் உணர்ந்திருப்போம்.

அப்படிப்பட்ட நல்லவராக நாம் நம்பிய அந்த மனிதர் மீது பின்னாளில் நாம் கொள்ளும் ஐயமானது நமக்கு எந்நாளிலும் துன்பத்தை தருவதாகும்.

எப்படியெனில் நாம் நம்பிய அந்த மனிதர் எப்போதும் தம் இயல்பில் மாறமல் தவறிழைக்காமல் என்றும் தெளிந்த நீரோடையாய், மாசறு முத்தாய், குன்றிலிட்ட விளக்காய் என்றென்றும் ஒளிவீசிக் கொண்டிருப்பார்.

ஆனால் நாம் ஆராயாமல், அவசரப்பட்டு, அறிவிழந்து, உண்மைகளை உணராமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அறியாமல் அவரைப் பற்றி நாம் தவறாக எண்ண கால சூழ்நிலைகள் இடம் கொடுத்துவிடும். நாமும் அவரைப் பற்றி தவறாக எண்ணிக் கொண்டு மனதில் வைத்துக் கொண்டு குமுறிக்கொண்டு இருப்போம்.

இன்றில்லாவிட்டாலும் மற்றொருநாள் நமக்கு உண்மைகள் நிச்சயம் தெரிய வரும். அப்படி தெரிந்த பின்பு நாம் அடையும் துயரம் இருக்கிறதே. அப்பப்பா! அதற்கு அளவே இல்லை. அதுவும் ஒரு நல்ல மனிதனை, நல்ல குணவியல்புகள் கொண்டவரை, தன் நினைவிலும் மற்றொருவருக்கு தீங்கிழைக்காத அப்பழுக்கற்ற மனிதனை நமது அவசரப் புத்தியால் தவறாக எண்ணிவிட்டோமே! என்று எண்ணி வருந்தும் ஒரு துன்பம் என்பது இப்பிறவியில் மட்டுமல்ல பல பிறவிகளுக்கும் நம்மை தொடர்ந்து வரும்.

பிறகு நாம் தவறை உணர்ந்து என்னதான் மன்றாடினாலும் உடைபட்ட மனது உடைந்ததுதான். அது எந்தநாளும் மறுபடியும் பழைய நிலையை அடைவது என்பது இல்லை.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது
நாவினாற் சுட்ட வடு.


ஆயிரம் குற்றவாளிகள் கூட சட்டத்தால் தண்டிக்கப்படாமல் நிரபராதி என விடுவிக்கப்படப்படலாம்.

ஆனால்....

ஒரே ஒரு நிரபராதி, குற்றம் செய்யாத மனிதன் எக்காரணத்தைக் கொண்டும் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு விடக்கூடாது.

என்றார் அண்ணல் காந்தியடிகள்.

சந்தர்ப்ப சாட்சியங்கள், பலதரப்பட்ட ஆதாரங்களை வைத்து ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறோம்.

கீழ்க்கோர்ட்டில் குற்றவாளியானவன், சுப்ரீம் கோர்ட்டில் விடுவிக்கப்படுகிறான் என்றால் என்ன பொருள். அவனைப் பற்றிய ஆதாரங்கள் அந்த குற்றத்தை அவன் தான் செய்தான் என்பதை 100 சதவீதம் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட வில்லை. எனவே சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக கொண்டு அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

ஏன்னெனில் ஒரு நிரபராதி எக்காரணத்தைக் கொண்டும் தவறாக எண்ணி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் தான் நமது சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாகவே பலதரப்பட்ட வகையில் வாத, பிரதிவாதங்கள், ஆதாரங்களை கொண்டு ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் தான் நீதிமன்றங்களில் வழக்குகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.

நீதி என்பது பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இழப்பீடாக இருப்பதைக்காட்டிலும் குற்றமற்றவரை தண்டிக்காமல் இருப்பதே உயர்ந்தது.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


கண்ணகி ஏன் மதுரையை எரித்தாள் என்பதை நாமனைவரும் பள்ளிப் பாடத்திலேயே படித்திருப்போம், படித்திராதவர்கள் கேட்டறிந்திருப்பர்.

இதை தான் வள்ளுவரும்

தன்நெஞ்சறிந்து பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

என்றார்.

இங்கு பொய் என்பது நாம் பேசும் பொய்யுரைகளை மட்டும் குறிப்பதல்ல. நாம் வாழ்வில் பின்பற்றும் வழிமுறைகளையும் சேர்த்தே பொய்யற்க என்றார் வள்ளுவப் பெருந்தகை.

பொய்த்தபின் உங்கள் நெஞ்சே உங்களை தினம் தினம் சுடும். உங்களை தண்டிகக வேறு எந்த வழிமுறைகளும் வேண்டாம். எனவே வாழ்வில் எந்த நிலையிலும் பொய்யற்க வாழ்தலே சிறந்தது.

வள்ளுவம் நம் வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தி வருவது. அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் ஏற்றது. எந்நாளும் நம்மை வழிநடத்த வல்லது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் வள்ளுவர் கூறிய வழியில் வாழ்ந்தால் எந்நாளும் நமக்கு துன்பம் இல்லை என்பதே வள்ளுவம் நமக்கு உணர்த்தும் உண்மை.

எத்தனையெத்தனை மனித பிறவிகள் எடுத்தாலும் நம் அனுபவத்தால் உணரமுடியாத பல விஷயங்களை தமது அமரத்துவம் வாய்ந்த குறள்களால் வள்ளுவர் நமக்கு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். வள்ளுவர் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் கொடை. எந்நாளும் அவரை வணங்குவோம். அவர்காட்டிய வழியில் வாழ்வோம் என்று கூறி நிறைவு செய்கிறேன்.

நன்றி.

3 comments:

  1. சோதிடத்த விட்டுட்டு குறளுக்கு தாவிட்டீங்க....சமிபத்திய அனுபவ ஜோதிட போலியின் பாதிப்போ :))

    ReplyDelete
  2. //Your comment will be visible after approval.//

    யாரோ பயப்படுத்தீடாங்க போல :))

    ReplyDelete
  3. @கிருஷ்ணா

    வாங்க கிருஷ்ணா! நாம எந்நாளும் சோதிடத்தை விடமாட்டோம். கூடவே பொறந்தது என்னிக்கும் நம்ள விட்டுப் போகாது. அடுத்த பதிவுல தூள் கிளப்பிடலாம்.

    ஃஃஃஃஃஃ//Your comment will be visible after approval.//

    யாரோ பயப்படுத்தீடாங்க போல :))ஃஃஃஃஃ

    போலி!?.... இதுக்கெல்லாம் பயந்தா கடைய நடத்த முடியுமா?

    ஆனா அவன் இங்கவும் வந்து ங்கோ..... அப்படீன்னு ஆரம்பிச்சான்னு வைங்க அப்புறம் நமக்கு ஏறிடும். அதான்....

    இதுக்கு கூட குறள் இருக்கு கேக்கறீங்களா?!

    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில்.

    இனிமே பதில் எல்லாம் குறள்வழிதான் எப்பூடி.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.