ஜோதிடத்தில் பலன்களை கண்டறிய ஜோதிடம் பற்றிய அடிப்படைகளை தெரிந்திருந்தால் மட்டும் போதாது. கொஞ்சம் போல சிந்திக்கும் திறனும், சமயத்திற்கு தகுந்தாற்போல் அவற்றை பயன்படுத்தும் திறனும் உள்ளவர்களால் மட்டுமே சிறந்த ஜோதிடராக முடியும்.
முதலில் ஜோதிடத்தின் அடிப்படை என்ன?
ஜோதிடம் என்பது 12 ராசிகட்டங்களையும், 9 கிரகங்களையும் கொண்டு இந்த உலகில் பிறந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன்களை கண்டறிய பயன்படுத்தும் ஒரு வழிமுறை என எளிமையாக கூறலாம்.
இங்கு மற்றுமொரு விஷயம் இருக்கிறது. என்னவென்றால் இந்த 12 ராசிகளுக்கும் தனித்தனி காரகத்துவம், குணாதிசியங்கள், தன்மைகள், அமைப்பு, தோற்றம் என்று விரிந்துகொண்டே செல்லும். அவ்வாறே சூரியன் முதல் கேது வரையிலான நவக்கிரகங்களுக்கும் பல தரப்பட்ட காரகத்துவங்களை அளித்துள்ளனர்.
ஜோதிடத்தின் சூட்சுமமே இதில்தான் அடங்கியிருக்கிறது. எந்த காரகத்துவத்தை கொண்ட கிரகங்கள் எந்த காரகத்துவம் கொண்ட வீட்டில், எந்த ராசியில், எந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தில் இருக்கிறது. என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு ஜோதிட விதிகளை பயன்படுத்தி பலன்களை நிர்ணயம் செய்கின்றனர்.
அதாவது ஒவ்வொரு கிரகத்திற்கும் பலவிதமான காரகத்துவங்கள், அவ்வாறே ஒவ்வொரு ராசிக்கும் பலவிதமான காரகத்துவங்கள் என்று விரிந்துகொண்டே செல்லும். எதனோடு எதனை கலந்தால் என்னவிதமான பலன்கள் நடைபெறும் என்பதை நாம் படித்த ஜோதிட விதிகளை கொண்டு ஓரளவிற்கு கூறலாமேயன்றி துல்லியமாக மிகச்சரியாக கூறுவதில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த இடத்தில் தான் ஜோதிடருக்கு ஜோதிடர் வித்தியாசப்படுகின்றனர்.
ஏனெனில் ஜோதிடர்களின் அறிவு, அனுபவம், சமயோசித புத்தி மற்றும் தம்மிடம் ஜோதிடம் கேட்க வருகின்ற மனிதரின் மனநிலை, குணாதிசியங்கள் போன்றவற்றை அவரது ஜாதகத்தின் வாயிலாக அறிந்து அவரது மனநிலைக்கு ஏற்றாற்போல் அவர் தாங்கும் திறனுக்கு ஏற்றாற்போல் அவருக்கு நடக்கும் பலாபலன்களை கூறவேண்டும். அதற்கு ஜோதிடரும் ஓரளவிற்கு பக்குவம் அடைந்தவராய், இறைபக்தி உடையவராய், நல்லதொரு பழக்கவழக்கங்களை கொண்டவராய் இருத்தல் அவசியம். நல்ல நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதராய் இருத்தல் மிக மிக அவசியம்.
சில பேர் இருக்கிறார்கள். சனி நீசமா விளங்காது, குரு உச்சமா! ஆகா! ஓகோ! என்று ஜாதகத்தை பார்த்தும் பார்க்காமல் பலன்களை படார் படார் என்று பலன் கூற ஆரம்பிப்பார்கள். இன்னும் சில வகையான ஜோதிடர்கள் நாத்திகம் பேசுவார்கள், புறங்கூறுவார்கள், பொய் களவு போன்ற தீயசெயல்களை புரிபவர்களாகவும், மது, மாமிசம் அருந்துதல் போன்றவற்றையும், கோபம், பிடிவாதம் போன்ற குணங்களையும் கொண்டிருப்பர். மிகமுக்கியமாக எதிர்மறை எண்ணங்கள் நிரம்ப உடையவராக இருப்பர். எந்த ஒருவிஷயத்தையும் ஆக்கபூர்வமாக அணுக இயலாத மனநிலை கொண்டவராய் இருப்பர்.
இப்படிப்பட்ட மனிதர்களும் ஜோதிடத்தைப் பற்றி சில பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் தம்மிடம் ஜாதகம் பார்க்க வருகின்ற மனிதர்களிடம் எப்படி பேசுவது, நல்ல மற்றும் கெட்ட பலன்களை எவ்வாறு எடுத்துச் சொல்லுவது என்ற வழிமுறையெல்லாம் பார்க்கமாட்டார்கள். கெட்ட பலன் என்றால் அப்படியே சொல்ல வேண்டியது தானே. இருப்பதை தானே சொல்லமுடியும். அதற்கு எதற்கு பூசி மெழுக வேண்டும். என்று எதிர் கேள்வி வேறு கேட்பார்கள். பரிகாரமா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது? பரிகாரம் செய்தால் பலன்களை மாற்ற முடியாது? இப்படியாக பலன்சொல்லும் மிகவும் புத்திசாலியான?! ஜோதிடர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இப்படிப்பட்ட மனநிலைகொண்ட மனிதர்களிடம் பேசுவதும், பழகுவதுமே மிகவும் ஆபத்தான விஷயம். அவர்களிடம் போய் எனக்கு பலன்சொல்லுங்களேன். என்று தனது மற்றும் தனது குடும்பத்தாருடைய ஜாதகங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு நமது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டால் தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிவிடும்.
பொதுவாக மனிதர்களிடம் மனநிலை என்னவென்றால் வாழ்க்கையில் பல வெற்றிகளையும், முயற்சிகளையும் உடைய மனிதர்கள் ஜோதிடம் என்றில்லை கடவுளை கூட நம்புவதற்கோ, வழிபடுவதற்கோ நேரம் இல்லாதவர்களைப்போல எப்போதும் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள்.
அவர்களுக்கு ஒரு தோல்வி, ஒரு சறுக்கல் என்று வந்துவிட்டால் போதும் அவ்வளவுதான் ஒரேடியாக உட்கார்ந்துவிடுவார்கள். அவர்களுக்குடைய மனம் ஒருவித மாற்றத்தையும், நம்பிக்கையும் எதிர்பார்த்து அதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை தேடிக்கொண்டிருக்கும். அல்லது அவர்களது தோல்விகளுக்கு சரியான ஒரு காரணத்தை உணராமல் அல்லது அந்த காரணம் கிடைக்காத பட்சத்தில் அதற்கு வலுசேர்ப்பது போல் எந்த ஒரு விஷயம் கிடைத்தாலும் அதை அப்படியே கெட்டியாக பிடித்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இனம் இனத்தோடு தான் சேரும்.
வெற்றியாளர்கள் வெற்றியாளர்களையே விரும்புவர். தோல்வியாளர்கள் சக தோல்வியாளர்களுடன் இணைந்து தங்களது இயலாமையை, ஆற்றாமையை பகிர்ந்து கொள்வர்.
இது மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ஒருவித மனோமனாநிலை எனலாம்.
சரி இப்படிப்பட்ட மனிதர்கள் தமக்கு ஒரு பிரச்சினை, கஷ்டம் என்று வந்த போது தான் ஜாதகத்தையே பார்க்க ஆரம்பிக்கின்றனர். நமது கஷ்டங்கள் எவ்வளவு காலம் நீடிக்கும். நமது பிரச்சனைகள் எப்போது தீரும் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் ஜோதிடரிடம் செல்கின்றனர். அப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும், வாழ்வில் தோல்விகளாலும், துரோகங்களாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அந்த மனிதர்களுக்கு ஜோதிடர்கள் நல்ல மனோதிடத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தான் ஜோ-”திடம்” என்ற பெயரை வைத்தனர் பெரியோர்கள்.
துன்பத்தில் வாடும் மனிதர்களுக்கு சரியான வழியை, திசையை காட்டி, நல்ல புத்தியை சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் திசை, புத்தி பலன்கள் என்று பெயரிட்டனர்.
ஆனால் இன்று நடைமுறையில் உள்ள ஜோதிடம் என்ன? அதன் பெயர் ”ஜோதிடம்” இல்லையாம் ”சோதிடமாம்”. ஜோதிடத்தில் வடமொழி எழுத்து வருவதால் பார்ப்பனர்கள் நம்முடைய சோதிடத்தை மாற்றிவிட்டார்களாம். ஆரிய-திராவிட மோதல் என கதை இப்படி போகிறது.
உண்மையில் ஒரு விஷயத்தை சொல்லட்டுமா! தமிழும் சமஸ்கிருதமும் சமகால மொழிகள். பல சொற்களில் தமிழில் சமஸ்கிருதமும், சமஸ்கிருதத்தில் தமிழும் கலந்து இருப்பதை காணலாம். ஆதிகாலத்தில் இன்று இருப்பது போல பேப்பர், பேனா போன்ற வசதிகள் மிகவும் குறைவு. எந்த ஒருவிஷயத்தையும் பதவுரை, விளக்கவுரை என்றெல்லாம் கதையளக்க முடியாது. முடிந்தவரை எவ்வளவு சுருக்கமாக எழுத முடியுமோ அவ்வளவு சுருக்கமாக எழுத முயன்றார்கள்.
எனவே சமஸ்கிருதத்தில் சுருக்கமாக சுலோகங்களாக எழுதிவைத்தார்கள். சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகத்திற்கு, ஒருபக்கத்திற்கு, ஏன் 5 பக்கங்களுக்கு கூட தமிழில் விளக்கம் எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் அதில் அடங்கியிருக்கின்றது. தமிழிலேயே குறள் போன்று செய்யுள் வடிவில் எழுதியதும் இந்த காரணத்தால் தான்.
என்ன ரூட் மாறிவிட்டேனா? எங்கே விட்டேன்....ஆங்....
இன்று நடைமுறையில் உள்ள ஜோதிடம் என்ன?
இன்று சோதிடம் அறியாத மக்களை பயமுறுத்தி பணம் பறிக்க போலிகளுக்கு பயன்படுபவை தோஷங்கள் என்றால் மிகையல்ல. செவ்வாய் தோஷம், நாக தோஷம், புத்ர தோஷம், கெண்டம், செய்வினை என்று மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை பயமுறுத்தி தீட்டு தோஷம் கழிக்க, தகடு செய்ய என்று பலவழிகளில் பணம் பறிப்பது பல போலி ஜோதிடர்களின் பழக்க தோஷம் என்றாகிவிட்டது.
உண்மையில் பணத்திற்காக பார்த்து சொல்வது ஜோதிடமே அல்ல. அது வியாபாரம். ஜோதிடம் ஒரு தொழிலும் அல்ல. எப்படி அரசியல் என்றால் சமூகத்திற்கு செய்யும் தொண்டோ அவ்வாறே ஜோதிடமும் மக்களுக்கு செய்யும் ஒரு தொண்டே. ஆனாலும் அரசியலில் பதவியில் உள்ளவர்களுக்கு அரசாங்கம் ஊதியம் கொடுப்பது போல் தொடர்ந்து பலருடைய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்வதால் நாளடைவில் மக்களே தங்களால் இயன்ற சிறு தொகையை ஜோதிடரின் செலவினங்களுக்காக அளிக்கத்தொடங்கினர்.
ஆனால் அதுவே ஜோதிடர்களின் பேராசையாக மாறி மக்களிடம் பணம் பறிக்கும் அளவிற்கு சென்றுவிட்டதுதான் கொடுமை. இன்னும் பல வி.ஐ.பி ஜோதிடர்கள் நாட்டில் இருக்கிறார்கள் அவர்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டுமென்றால் 10,000 முதல் 50,000 வரையெல்லாம் கட்டணம் வாங்குகிறார்கள். மக்களும் சென்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கு போய் சொல்வது. ”இருக்கிற மகராசன் அள்ளிமுடியறான் உனக்கேன் வலிக்குது என்கிறீர்களா?” அதுவும் சரிதான்.
என்னைப் பொருத்தவரையில் ஜோதிடராக இருப்பவர் தனது அறிவால், உடலால் தனக்கென வேறுதுறையில் ஒரு தொழிலை செய்துகொண்டே நேரம் கிடைக்கும் போதும் விடுமுறையிலும் தம்மிடம் வருவோர்க்கு பலன்கள் சொல்வதே சரியாகும்.
இல்லை முழுநேரமும் ஜோதிடம் பார்ப்பவராயிருந்தால் மக்கள் அவர்களால் முடிந்த சன்மானத்தை அளிக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு தமது பணியை தொடர்ந்து செய்துவர வேண்டும்.
இந்த இரண்டும் அல்லாமல் ஜோதிடம் பார்ப்பதற்கென இவ்வளவு கட்டணம் தரவேண்டும் பணம் கொடுத்தால் பலன் சொல்வேன் இல்லையென்றால் சொல்லும் பலனில் கைவைப்பேன் என்று பணத்திற்காக ஜோதிடம் சொல்பவர்களை என்னவென்று சொல்வது. அரசியல் இன்று வியாபாரமாகி விட்டதைப் போல் ஜோதிடமும் பிஸினெஸ் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜோதிட சாஸ்திரம் தனது மரியாதையை இழக்கத் தொடங்கியதே இப்படிப்பட்ட செயல்களால் தான் என்றால் அது மிகையாகாது. மக்கள் மனதிலும் ஜோதிடத்தை பற்றியும் ஜோதிடர்களைப் பற்றியும் ஒருவித ஏளனமான மனநிலை ஏற்பட இப்படிப்பட்ட ஜோதிடர்களே காரணம். ஜோதிடம் மட்டுமல்ல பணத்திற்காக மட்டுமே செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலும் அதன் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதாவது ஜோதிடராகப்பட்டவர் பணத்தின் மீது பற்றுவைக்கக்கூடாது, தம்மை நம்பி வந்தவருக்கு வழிகாட்ட முயல வேண்டும் என்பது தான் இதில் அடங்கியிருக்கும் நீதி.
இந்த இடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஒரு நல்ல விஷய ஞானமுள்ள ஜோதிடர் தமது பணியை கவனித்துக்கொண்டே ஓய்வு நேரத்தில் ஜோதிடம் பார்ப்பவராகவோ அல்லது முழுநேர ஜோதிடராகவோ இருந்துக்கொண்டு பிறருக்கு வழிகாட்டும் போது நம் மக்களின் குணத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும்.
பத்து ரூபாய் கொடுத்துவிட்டு குடும்பத்தில் உள்ள அத்தனை பேருடைய ஜாதகத்திற்கும் பலன் சொல்ல வேண்டும் என்று நீட்டுவார்கள். அதிலும் ஜோதிடரின் திறமையை சோதிப்பதற்காகவே வந்திருப்பார்கள். நோண்டி நோண்டி கேள்வி கேட்கும் அவர்களை திருப்திபடுத்துவதற்குள்ளாக போதும் என்றாகிவிடும் ஜோதிடருக்கு.
பொழுதுபோக்கிற்காக ஜோதிடம் பார்ப்பவர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். அவர்கள் வேலையென்னவென்றால் எங்கெல்லாம் யாரெல்லாம் ஜோதிடர் என்று தென்படுகிறாரோ அவரிடமெல்லாம் தமது ஜாதகத்தை காட்டி பலன் கேட்டுவிட துடிப்பார்கள். எனக்கு ஏகப்பட்ட யோகங்கள் இருக்கிறதாமே? நான் பெரிய ஆளாக வருவேனாமே? அவர் சொன்னார் நீங்களும் பார்த்து சொல்லுங்கள் என்பார்கள். நாம் மாற்றிசொன்னால் இவருக்கு ஜோதிடம் தெரியாது என்று முடிவு செய்துவிடுவார்கள்.
அப்படியானால் எப்போதெல்லாம் ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படிப்பட்ட ஜோதிடரை அணுகவேண்டும். பலன்களை அறிந்தபின்பு எப்படி நடந்துகொள்ள வேண்டும். போன்ற வினாக்கள் எழுவது இயல்பே. கீழே கொடுத்துள்ளதை பாருங்கள்.
- ஒருவருக்கு வாழ்வில் திடீர் என நிகழும் துன்பங்கள், துயரங்கள் ஏற்படும் போதும்
- தொடர்ந்து வரும் கடன்கள், பணம் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போதும்,
- தீராத வியாதிகள், நோய்கள், அடிக்கடி நிகழும் விபத்துகள் போன்ற உடல்சார்ந்த பிரச்சினைகளின் போதும்.
- திருமணம், வீடு, நிலம், வாகனங்கள் விற்றல், வாங்குதல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகளின் போதும்.
- வாழ்வில் நமக்கேற்றதொரு உயர்கல்வியை தேர்ந்தெடுக்கவும்
- புதிதாக ஒரு தொழிலை பெரும் முதலீட்டில் தொடங்கும் போதும், வேலைவாயப்பிற்காகவும், மேற்கல்விக்காகவும் வெளிநாடுகளுக்கு செல்ல முயலும் போதும்.
- எவ்வளவு முயன்றும் தாம் கற்ற கல்விக்கேற்ற நல்லதொரு வேலைவாய்புகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படும் போதும்.
- திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒரு வாரிசு பிறப்பதில் தடை தாமங்கள் ஏற்பட்டாலும் அல்லது பிறந்த குழந்தையின் உடல் நலத்தில் அடிக்கடி குறைபாடுகள் ஏற்படுதல். குழந்தை பிறந்தவுடன் குடும்பத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றிற்காகவும்
நமது ஜாதகத்தில் என்னபிரச்சினை என்றும் அதற்கு என்ன தீர்வு என ஒரு நல்லதொரு விஷய ஞானம் உள்ள ஜோதிடரை அனுகலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள காரணங்கள் போன்று நம் வாழ்வில் மிகமுக்கியமான சம்பவங்கள் மற்றும் நம் வாழ்வின் அவசியமான, முடிவெடுக்க முடியாத சந்தர்ப்பங்களின் போதும் நமது ஜாதகத்தைக் கொண்டு ஜோதிடரிடம் அணுகி அதற்கான தீர்வுகள், பரிகாரங்கள் இருப்பின் அவற்றையும் செய்து வரலாம். எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் மாற்றங்கள் ஏற்படவில்லையாயின் இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு அமைதியாக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.
ஆற்றில் தேங்கியுள்ள அழுக்கு நீரானது வெள்ளம் வரும் போது அடித்துக்கொண்டு செல்வது போல நல்ல நேரமும், காலமும் வரும் போது நமது பிரச்சினைகள் தாமாகவே தீர்ந்துவிடும். கெட்டது என்று ஒன்று நிகழ்ந்தால் நல்லது என்று ஒன்று நிச்சயம் நிகழும். வாழ்க்கை சக்கரம் என்பதும் ஒருவித சுழற்ச்சிதான்.
இங்கு ஒரு விஷயம் முக்கியம் நாம் பொதுவில் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்யாமல் எப்போதும் போல் நமது கடமையை, முயற்சியை செய்து வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தவறான வழியில் வாழ்வில் முன்னேற முயலக்கூடாது. உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். இது இயற்கையின் நியதி.
இந்த காரணங்கள் அல்லாது சும்மா எதற்கெடுத்தாலும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடர்கள் தோறும் சென்று குழப்பிக்கொண்டிருப்பதை தான் நாட்டில் இன்று பலரும் செய்துவருகின்றனர். அவர் அப்படி சொன்னார். இவர் இப்படி சொல்கிறார். யார் சொல்வது சரி, தவறு என்று புரியாமல் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் இகழ்வாக பேசுவது தவறு.
பொதுவாக நாட்டில் நல்லதொரு ஜோதிடரை கண்டறிவது என்பது மிகவும் முதன்மையான பணி.
மொழிநடையில் கூறியதையே திரும்ப கூறுவது குற்றம் என்றாலும் இந்த இடத்தில் அவசியம் கருதி மறுபடியும் மேலே எழுதியதை திரும்ப குறிப்பிடுகிறேன்.
”நல்ல ஜோதிடர் என்பவர் நல்லதொரு அறிவு, அனுபவம், சமயோசித புத்தி மற்றும் தம்மிடம் ஜோதிடம் கேட்க வருகின்ற மனிதரின் மனநிலை, குணாதிசியங்கள் போன்றவற்றை அவரது ஜாதகத்தின் வாயிலாக அறிந்து அவரது மனநிலைக்கு ஏற்றாற்போல் அவர் தாங்கும் திறனுக்கு ஏற்றாற்போல் அவருக்கு நடக்கும் பலாபலன்களை கூறுபவராக இருக்க வேண்டும். அதற்கு ஜோதிடரும் ஓரளவிற்கு பக்குவம் அடைந்தவராய், இறைபக்தி உடையவராய், நல்லதொரு பழக்கவழக்கங்களை கொண்டவராய் இருத்தல் அவசியம். நல்ல நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதராய் இருத்தல் மிக மிக அவசியம்”.
இத்தகைய குணங்களை கொண்ட ஜோதிடரை நாம் இருக்கும் பகுதியில் விசாரித்தால் நமக்கு தெரிந்துவிடும். எவர் எப்படி பலன் சொல்கிறார், அவர் கூறியவற்றில் எவ்வாறு பலன்கள் நடைபெற்றுள்ளது என்பதையெல்லாம் நாம் தான் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். நல்லதொரு ஜோதிடரை கண்டறிந்தவர்கள் தேவையின்றி மற்ற ஜோதிடர்களிடம் சென்று அனைவரையும் சோதிக்க தேவையில்லை.
மனித வாழ்க்கை புதிர்கள் பல நிறைந்தது. பல விடைதெரியாத மர்மங்களை கொண்டது. ஜோதிடம் மட்டுமல்ல எதனாலும் சில, பல விஷயங்களுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எனவே இருப்பதை கொண்டு நிறைவுடன் வாழ்ந்து நமது கடமைகளை நிறைவேற்றுதலே அறிவுடமை.
அடுத்த பதிவில் சந்திப்போம்.......
மனித வாழ்க்கை புதிர்கள் பல நிறைந்தது. பல விடைதெரியாத மர்மங்களை கொண்டது. ஜோதிடம் மட்டுமல்ல எதனாலும் சில, பல விஷயங்களுக்கு தீர்வே கிடைப்பதில்லை. எனவே இருப்பதை கொண்டு நிறைவுடன் வாழ்ந்து நமது கடமைகளை நிறைவேற்றுதலே அறிவுடமை.
ReplyDeleteஉண்மைதான்.
வாழ்க்கைப் புதிர் பற்றிதான் இன்றைய இடுகை வெளியிட்டிருக்கிறேன்.
http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_22.html
//என்னைப் பொருத்தவரையில் ஜோதிடராக இருப்பவர் தனது அறிவால், உடலால் தனக்கென வேறுதுறையில் ஒரு தொழிலை செய்துகொண்டே நேரம் கிடைக்கும் போதும் விடுமுறையிலும் தம்மிடம் வருவோர்க்கு பலன்கள் சொல்வதே சரியாகும். //
ReplyDeleteசூப்பர்னே :)
@முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே! தங்களின் இடுகையும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@கிருஷ்ணா
ReplyDeleteவாங்க கிருஷ்ணா! பாராட்டிற்கு நன்றி.
நல்ல பதிவு. நிறைய எழுதுங்கள் மணி. உங்க எழுத்து சுவாரசியமாகவும், பொருள் உள்ளதாகவும் இருக்கிறது.
ReplyDelete@Swami
ReplyDeleteவாங்க ஸ்வாமி! உங்கள் வருகைக்கு நன்றி. நிறைய எழுதனும்னா நிறைய நேரம், நிறைய விஷயம் இருக்கனும். நம்மகிட்ட இரண்டுமே கொஞ்சம் கம்மிதான். அதுலயும் நான் இருக்கேனே பக்கா சோம்பேறி, சுகவாசி. பார்ப்போம்.