வணக்கம் நண்பர்களே!.
தொடர் தொடர்கிறது.
தொடர் தொடர்கிறது.
சென்ற பதிவில் மேஷ லக்னத்தாருக்கு 3, 6-க்குடைய பாவியான புதன் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளில் அமர்ந்தால் தரும் பலன்களை பற்றி பார்த்தோம்.
பொதுவாக புதன் ஒரு பலமில்லாத கிரகம், தன்னுடன் சேரும் கிரகத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். மேலும் புதன் ஒரு இரட்டை கிரகம் எந்த பலனையும் இரட்டையாக தருபவர். எனவே புதன் இரட்டைப்படை ராசிகளிலோ அல்லது தனது வீடுகளான மிதுனம், கன்னியிலோ அமரும் போது பலன்களை இரட்டையாக தருவார்.
உதாரணமாக ஒருவருக்கு மிதுனம் அல்லது கன்னி 10-ம் வீடாக அமைந்து அதில் புதன் அமர்ந்து பலம் பெற்றால் மேற்கண்ட பலன் தவறாமல் நடக்கும். என்ன பலன்?
ஜாதகர் ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் செய்வார்.
இந்த அமைப்பு 4-ல் இருந்தால்? ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்கள், வீடுகள் அமையலாம்.
இது ஒருவித கோணத்தில் பார்க்கும் முறைதான். அதற்காக இந்த பலன் அப்படியே நடக்க வேண்டுமென்பதில்லை. பலருக்கு இப்படி நடந்திருக்கிறது. சிலருக்கு வேறு அமைப்புகளால் நடவாமல் இருந்திருக்கலாம். இதையும் கவனியுங்கள் என்பதற்காக கொடுக்கப்பட்ட குறிப்பு இது.
சரி இப்போது தொடருக்கு வருவோம். மேஷ லக்னத்திற்கு 7-மிடமான துலாத்தில் புதன் அமர்ந்தால் என்ன பலனைத் தருவார்.
அய்யய்யோ! நான் சொல்லவேயில்லையே அதற்குள் நீங்களாக இரண்டு மனைவிகள் என்று சொன்னால் அதற்கு நான் பொறுப்பில்லை.
இங்கு மேஷ லக்னத்திற்கு புதனின் ஆதிபத்யங்கள் என்ன?
3-மிடமான தைரிய, வீர்யம், 6-மிடமான நோய், எதிரி, கடன் முதலியன.
7-ம் வீடு மனைவியை குறிக்கும் இடம். நாம் தொடர்பு கொள்ளும் பலரையும் இந்த இடத்தின் மூலம் அறியலாம்.
அப்படிப்பட்ட இந்த இடத்தில் 6-க்குடையவர் வந்து நட்பு பலம் பெற்றால் என்ன பலன்.
7-ம் வீட்டு காரகத்துவ பலன்களுக்கு இடைஞ்சல் கொடுக்கத்தானே செய்யும்.
புதன் ஒரு சிறிய கிரகம். சூரிய மண்டத்தில் சூரியனை மிக அருகில் முதல் வட்டப்பாதையில் விரைவில் சுற்றி வரும் கிரகம். நல்ல ஒளியுடைய கிரகம்.
எனவே தான் புதன் பலம் பெற்று லக்னத்தில் அமர்ந்தாலும் பார்த்தாலும் ஜாதகர் இளமையான தோற்றத்துடன் காணப்படுவார். எப்போதும் சுறுசுறுப்புடன் திகழ்வார்கள். நல்ல அழகும் அறிவும் ஒருங்கே இணைந்து காணப்படுவார்கள்.
அப்படிப்பட்ட புதன் மனைவியை குறிக்கும் ஸ்தானமான 7-ல் அமர்ந்தால்?
கரெக்ட் நீங்கள் நினைப்பது போல் மனைவி அழகானவராக, அறிவுடையவராக தான் அமைவார். புதன் லக்னத்தை பார்ப்பதால் ஜாதகரும் காதல் மன்னன் தான். மேலும் 3-மிட போக ஸ்தானாதிபதியான புதன் 7-மிடமான காம ஸ்தானத்தில் நட்பு பலம் பெற்றிருந்தால் நம்ம ஆள் மன்மதனே தான். ஆனால் லக்னத்தில் திக்பலம் பெறும் புதன் 7-ல் நிஷ்பலம் பெறுகிறார். ஆனாலும் கேந்திரத்தில் பலம் கிடைத்துவிடுகிறது.
7-ம் அதிபதியான சுக்கிரன் பலம் பெற்றால் மனைவி என்னவோ நன்றாக குத்துக்கல் மாதிரி தான் இருப்பார். ஆனால் சதா குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார். எனவே ஜாதகருக்கு மனைவியால் பிரச்சினைகள், சண்டை சச்சரவுகள், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் முதலியவற்றில் இழுபறி நிலை. சுற்றங்களுடன், சொந்த பந்தங்களுடன் பிரச்சினைகள் போன்றவை இருக்கும். ஏன்? புதன் பெறும் ரோகாதிபத்யத்தால் தான்.
இப்படிதான் அதையும், இதையும், சேர்த்து கூட்டு குருமா மாதிரி ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் பலன் சொல்ல வேண்டும்.
ஆரம்ப நிலையில் உள்ள ஜோதிட மாணவர்கள் இப்படி தைரியமாக பலனை கணக்கிட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ரொம்ப துல்லியமாக சொல்லனும்னு ஏகப்பட்ட விதிகளையும், வழிமுறைகளையும் போட்டு குழப்பிக்கொண்டால் அப்புறம் பலன் சொல்ல வாயே வராது. எனக்கும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்கிறது. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்பது பழமொழி. பலன் சொல்ல சொல்ல தான் அனுபவத்தில் நன்றாக வரும்.
இப்போது புதன் 8-ல் மறைந்தால் என்ன பலன்.
ஆகா 3, 6-க்குடைய புதன் மறைந்துவிட்டார். தொல்லை விட்டது. கெட்டவன் கெட்டுடில் கிட்டிடும் ராஜ யோகம் என்று விபரீத ராஜயோகத்தை நினைத்துக் கொண்டு நின்றால் ஏமாந்துவிடுவோம். ஏன்?
8-மிடம் என்பது என்ன?
ஆயுள் ஸ்தானம், இங்கு 6-க்குடைய ரோகாதிபதி நின்றால் ரோகத்தினால் ஆயுள் முடியலாம். அல்லது எதிரியால் கண்டங்கள், விபத்துகள் ஏற்படலாம். போரினால், ஆயுதங்களால் மரணம் ஏற்படலாம். இந்த புதனுடன் சுக்கிரன், செவ்வாய், சனி முதலியவர்கள் கூடி 8-ல் காணப்பட்டால் குழந்தை பிழைப்பதே அரிது.
செவ்வாய் லக்னாதிபதியாயிற்றே அப்புறம் ஏன் இப்படி என்றால்? அவர் பாபக்கிரகம், ஆட்சி பெற்று வலுத்துவிட்டார். இங்கு லக்னாதிபத்யத்தை விட அஷ்டமாதிபத்யமே பலமாக நடக்கும். மேலும் பாவிகளுடன் வேறு கூடி கும்மியடிக்கிறார். அதனால் கெடுதல் தான்.
ஒரு விதத்தில் பார்த்தால் புதனுக்கு ஸ்தான பலம் இல்லை மேலும் ரோகாதிபதி மறைந்துவிட்டது போன்றவை நன்மை தான். எதிரி ஒழிந்து போவான். கடன்கள் இராது. நோய்களிலிருந்து விடுதலை என்றாலும் இங்கு புதன் வேறு வகையில் பலம் பெற்றுவிட்டால் இந்த பிரச்சினைகளே ஜாதகருக்கு தீராத தலைவலியை கொடுத்துவிடும்.
விபரீத ராஜ யோகத்தினை தரவேண்டும் என்பதற்கிணங்க திடீரென உயர்வு, எதிரிகளின் சொத்துக்கள் முதலியன கிடைக்கலாம் என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை. எனினும் இங்கு ராஜயோகம் என்பதை விட துன்பத்தை தரும் புதன் மறைந்துவிட்டார் என்பதே ஆறுதலான விஷயம். நிறைய ஜாதகங்களில் விபரீத ராஜயோகம் ஒன்றும் பிரமாதமாக வேலை செய்வதில்லை. எனவே ரொம்பவும் எதிர்பார்க்க வேண்டாம்.
மேலும் விருச்சிக ராசி மறைபொருளை குறிப்பிடக்கூடிய இடம். இங்கு புத்திசாலிதனத்தை குறிக்கும் புதன் அமர்வதால் ஜாதகருக்கு பிரபஞ்ச ரகசியங்கள் வெளிப்படும். மறைபொருள் விஷயங்களான ஜோதிடம், ஆன்மீகம், மாந்திரீகம் முதலியவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். அவற்றில் தேர்ச்சியும் பெறுவார்கள்.
புதன் 9-மிடமான தனுசில் இருக்கும் போது எப்படி பலனளிப்பார்?
முன்பே சொல்லியிருக்கிறேன். என்னதான் பாவிகளானாலும் அவர்கள் திரிகோணத்திற்கு வந்தால் தங்கள் குணத்தை மாற்றிக்கொண்டு நன்மையை செய்வார்கள். ஆனால் அந்த வீட்டின் பலன்களை கெடுத்துவிடுவார்கள்.
தனுசில் சுபக்கிரகமான குருவின் வீட்டில் சமம் என்ற நிலையில் அமரும் புதன் தனது ஆதிபத்ய பலன்களை இங்கு நன்றாக ஜாதகருக்கு பயன்படும் வகையில் தருவார். காரிய வெற்றி, தைரியம், வீரம், இளைய சகோதரத்தால் நன்மைகள், எதிரிகள், கடன்கள், நோய் தொல்லைகளிலிருந்து விடுதலை, வம்பு வழக்குகளில் வெற்றி போன்ற பலன்களை சிறப்பாக தருவார்.
ஆனாலும் 9-மிடத்தின் முக்கிய ஆதிபத்யங்களான தந்தை, தருமம், தெய்வ நம்பிக்கை முதலிய பலன்களை மாற்றிவிட தான் செய்வார். ஜாதகருக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஒற்றுமையிராது. தெய்வ நம்பிக்கை குறையும், நாத்திக விவாதங்கள் செய்வார்கள் எதையும் எதிர்பார்த்தே தான தருமங்களை செய்வார்கள்.
புதன் 10-மிடமான மகரத்தில் இருக்கும் போது என்ன பலனை தருவார்?
10-மிடம் என்பது கேந்திரங்களுள் வலிமையான கேந்திரம். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். இங்கு சுபக்கிரகமான புதன் அமர்வது சிறப்பு. அமலா யோகம் என்றும் சொல்வார்கள். மேலும் 10-க்கு திரிகோண ஸ்தானாதிபதியான புதன் இங்கு அமர்வது ஜாதகரை தொழில் ரீதியாக உயர்த்திவிடும். மேலும் உப ஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11 மிட அதிபதிகள் உப ஜெய ஸ்தானங்களிலேயே அமர்வதும் நல்லது.
ஆனாலும் இங்கு புதனின் ஆதிபத்யங்களான 3-க்கு 8-மிடமாக மகரம் வருகிறது. எனவே 3-மிடத்தின் பலன்கள் சற்று குறைந்து போகவும் இடமுண்டு. அவ்வாறே 6-மிடத்திற்கு 5-மிடமாக வருவதால் 6-ம் வீட்டின் பலன்கள் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. எனவே தொழில் வகையில் எதிரிகளால் இடைஞ்சல்கள் இருக்கும். தொழிலில் அடிக்கடி மாற்றங்கள் இருக்கும்.
ராணுவம், காவல்துறை, போன்ற தைரியம் மிகுந்த தொழில்கள் அமையலாம். அல்லது ஜோதிடம், கணிதம், பத்திரிக்கை, தொலைத்தொடர்பு, பயணங்கள் சம்பந்தப்பட்ட தொழில்களாக இருக்கலாம். சனி இருக்கும் நிலையையும் கவனித்து சொல்ல வேண்டும்.
11-மிடமான கும்பத்தில் புதன் அமரும் போது பலன்கள் எப்படியிருக்கும்?
சர லக்னமான மேஷத்திற்கு 11-மிடம் பாதக ஸ்தானமாகும். மேலும் பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகம் பாதகத்தை அதிகம் செய்யும் என்பது ஜோதிட விதியாகும்.
அந்த அடிப்படையில் தீய ஆதிபத்யங்களை பெற்ற புதன் 11-மிடமான பாதக ஸ்தானம் ஏறினால் கெடுபலன்களை அதிகமாக கொடுப்பதற்கு வழியேற்பட்டுவிடும். மேலும் 11-ல் அமரும் கிரகம் எந்த பலனையும் அதிகரித்து கொடுக்கும். அந்த விதத்தில் தீமை அதிகம் ஏற்படும்.
11-ல் அமரும் புதன் தனது 3-ம் வீட்டு ஆதிபத்யத்திற்கு திரிகோணத்தில் அமர்வதால், காரிய வெற்றி, துணிச்சல், தைரியம், போகம், ஆளடிமை முதலிய பலன்களை அதிகப்படுத்தி தருவார்.
ஆனால் புதன் 6-க்குடையவராகவும் வருவதால் அளவுக்கு அதிகமான துணிச்சலால் ஜாதகரை வம்பிலும் மாட்டிவிடுவார். கடன்கள் எளிதில் கிடைக்கும், எதிரிகளும் அப்படியே அதிகம் இருப்பார்கள். நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை தருவார். நண்பர்களும், பகைவர்களும் அதிகம் இருப்பார்கள். அல்லது நண்பர்களே பகைவர்களாவதும் உண்டு. கல்வியால் நன்மைகள் ஏற்படும். 11-ல் அமரும் புதன் நன்மை தீமை ஆகிய இரண்டுவிதமான பலன்களையும் கலந்தே தருவார்.
தீய ஆதிபத்யங்கள் பெற்ற புதன் 12-ல் மீனத்தில் அமரும் போது நீச்சமடைந்துவிடுகிறார். எனவே எதிரிகள் இருக்கமாட்டார்கள். இருந்தாலும் அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது. வலிமையில்லாமல் இருப்பார்கள். கடன்கள் அடைபட்டுவிடும், நோய்களில் இருந்து விடுதலை முதலிய பலன்கள் ஏற்படும். ஆனாலும் 3-க்குடையவர் மறைந்து பலம் குறைவது நல்லதல்லவே. தைரியம், வீரியம் குறைந்துவிடும். முயற்ச்சிகள் மிகுந்த அலைச்சலுக்கு பிறகே பலிதமாகும். பேச்சுத்திறமை இருக்காது. கல்வியில் தடைகள் ஏற்படும். இளைய சகோதரர்களால் நன்மை ஒன்றும் இராது. அவர்களே நொடிந்து போய் இருப்பார்கள்.
ஆனாலும் இங்கு புதன் நீச்சபங்கம் அடைந்திருக்கிறாரா என்றும் கவனிக்க வேண்டும். ஒரு வேளை இங்கு புதன் நீச்ச பங்கம் அடைந்திருந்தாலும், அல்லது தனது நட்சத்திரமான ரேவதியில் இருந்தாலும் புதனுக்கு வலிமை கிடைத்துவிடும் என்பதால் மேற்கண்டவற்றால் சில தீயபலன்களை தர முடியும் என்றாலும் 12-ல் மறைந்துவிடுவதால் இவற்றை எளிதில் ஜாதகர் சமாளிப்பார்.
இப்படியாக மேஷ லக்னத்தாருக்கு 3, 6-க்குடைய ஆதிபத்யங்களை பெற்ற புதன் துவாதச பாவங்களில் அமரும் போது பலன்களை அளிக்கிறார். இவர் உப ஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ல் அமரும் போது ஓரளவிற்கு நல்லதுதான் என்றாலும் மாரகாதிபதியான சுக்கிரன், பாதகாதிபதியான சனி போன்றவர்களுடன் இணைந்து எங்கிருந்து தசா நடத்தினாலும் மேஷத்தாரை கடுமையான தொல்லைகளுக்கு உட்படுத்துவார். மாரகம் அல்லது மாரகத்திற்கொப்பான கெண்டங்கள், நோய்கள், வம்பு, வழக்குகள், எதிரிகளால் ஆபத்துகள் போன்ற பலன்களை நிச்சயம் கொடுப்பார்.
எனவே புதன் பகை நீசம் அடைந்து பலம் குறைய வேண்டும் அல்லது மறைந்துவிட வேண்டும். சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் ஆனாலும் நல்லது தான். ஏனெனில் சூரியன் மேஷ லக்ன சுபர் என்பதால் புதனின் அஸ்தமன பலன்களை தான் ஏற்று அவற்றை நற்பலன்களாக மாற்றி ஜாதகருக்கு தருவார்.
ஒரு ஜாதகத்தில் ஏகப்பட்ட விஷயங்கள், நுணுக்கங்கள் இருக்கின்றன. இவற்றுள் சேர்க்கை, பார்வை, நட்சத்திர சாரம் முதலியவற்றால் பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றபோதிலும் கிரகங்களின் ஸ்தான பலத்தின் அடிப்படையில் தாம் பெற்ற ஆதிபத்யத்திற்கேற்ப தான் அமரும் வீட்டின் நிலைக்கேற்ப பலன்களை முதன்மையாக தரும்.
இந்த தொடரில் வரும் பலன்கள் முழுமையாக நடைபெறாவிட்டாலும் ஓரளவிற்காவது நிச்சயம் நடைபெறும். ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் நாம் கிரகத்தின் காரக பலன்களை சொல்வதை காட்டிலும் அக்கிரகம் பெறும் ஆதிபத்ய பலன்களை அது அமரும் ஸ்தானங்களுக்கு ஏற்ப நிர்ணயித்தால் சரியாக வரும்.
இவற்றை வலியுறுத்தவே இந்த ஆய்வுத் தொடரினை ஆரம்பித்தேன். அவற்றுடன் பல்வேறு ஜோதிட விதிகளையும் இணைத்து ஒரு கலவையாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இவற்றில் சில விஷயங்கள் விடுபட்டு போகவும் வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் உங்களின் மேலான கருத்துகளையும், உங்களுடைய ஜாதகம் அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்களுடைய மேஷ லக்ன ஜாதக அனுபவங்களையும் தெரிவித்தால் மேலும் சிறப்பாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும்.
தொடர்ந்து பார்ப்போம்..................
veri nice boss!
ReplyDeleteneramillai ennum rendumuraiyavathu nallapadikkanum appathan enakkoru thirupthi. apparam varan.
வாங்க பெருமாள்சிவன்!
ReplyDeleteஉங்கள் கருத்துகளுக்கு நன்றி. பதிவுகள் பெரியதாக இருப்பதால் ஒரு முறைக்கு பலமுறை படித்துப் பாருங்கள்.
நிறைய விஷயங்களை ஒரே பதிவில் எழுதினால் படித்தமாதிரி இருக்கும் ஆனால் நினைவில் நிற்பது கடினம். என்ன செய்வது பதிவுகளை சீக்கிரம் முடித்தாக வேண்டுமே.
மேஷ லக்ன தொடர் நன்றாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. நீங்கள் மேஷ லக்னமோ? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு லக்னத்திற்கே இவ்வளவு விலாவாரியாக அனுபவத்துடன் விளக்குகின்றீர்களே அதான் கேட்டேன். மற்றபடி உங்கள் எழுத்துக்கள் சுவராசியமாக உள்ளது.
ReplyDeleteவாங்க நாரதரே! உங்கள் கலகம் நன்மையில் முடிவதாக. :) :)
ReplyDeleteஐயா!
ReplyDeleteதொடர்ந்து பதிவுகளை வெளியிடுங்களேன். தாங்கள் பதிவுகளை வெளியிடாமல் இருப்பது போர் அடிக்கிறது. பலமுறை ஏமாற்றத்துடன் வந்து சென்று கொண்டிருக்கிறோம்.
தயவுசெய்து எதையாவது எழுதலாமே. தங்கள் பதிவுகள் நன்றாக இருப்பதால் தாங்கள் எதை எழுதினாலும் நன்றாகவே எழுதுவீர்கள் என்ற ஆவலில் கேட்கிறேன். வெறுமனே காயப்போட்டால் எப்படி?
வாங்க நாரதரே! நீங்க சொன்னது மாதிரி அடிக்கடி எழுதலாம் தான் எனக்கும் உங்கள் ஆர்வத்திற்கு தீனி போட ஆசைதான் ஆனால் என்ன செய்ய எனது பணிச்சூழல் அப்படி. விடுமுறை, ஓய்வு நாட்களில் தான் கிட்னி வேலை செய்கிறது.
Deleteஎனது லக்னம் மேஷம், ராசி விருச்சிகம். 02/04 /1983 காலை 07.௩௦
ReplyDeleteராசி கட்டத்தில் செவ்வாய், சுக்ரன்,புதன் லக்னத்தில், 7 ல் சனி , 8 ல் குரு சந்திரன் ,12 ல் சூரியன் இருகின்றனர் .
ஆனால் சாப்ட்வேர் generated horoscope ல் 12 ல் சூரியனுடன் புதன் சேருகிறார்.
மேஷ லக்னத்திற்கு 12 ல் புதன் இருப்பது நல்லது என்று கூறியுளிர்கள்
இதில் எது சரி, பலன்கள் ஏதும் மாறுபடுமா?
எனது லக்னம் மேஷம், ராசி விருச்சிகம். 02/04 /1983 காலை 07.30
ReplyDeleteராசி கட்டத்தில் செவ்வாய், சுக்ரன்,புதன் லக்னத்தில், 7 ல் சனி , 8 ல் குரு சந்திரன் ,12 ல் சூரியன் இருகின்றனர் .
ஆனால் சாப்ட்வேர் generated horoscope ல் 12 ல் சூரியனுடன் புதன் சேருகிறார்.
மேஷ லக்னத்திற்கு 12 ல் புதன் இருப்பது நல்லது என்று கூறியுளிர்கள்
இதில் எது சரி, பலன்கள் ஏதும் மாறுபடுமா?
நான் மிகவும் லேட்டாக உங்களுடை ப்ளாக்ஸ்பாட்டில் சேர்ந்துள்ளேன்....
ReplyDeleteமிகவும் பயனுள்ள ஆய்வுக்கட்டுரைகள்.. உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் ....