வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

06 February 2012

ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம் - பாகம் 10

வணக்கம் நண்பர்களே!

நமது தொடரில் மேஷ லக்னத்திற்கு லக்னாதிபதி செவ்வாய், தன-களத்திராதி சுக்கிரன்,  3, 6-க்குடைய புதன் முதலானோர் துவாதச பாவங்களில் அமரும் போது தரும் பலன்களை பற்றி பார்த்தோம்.

இடையில் கொஞ்சம் இடைவெளி விடும்படியாகிவிட்டது.  எமக்கு தற்போது இருக்கும் சூழ்நிலைகளால் தொடர்ச்சியாக பதிவுகளை எழுதமுடிவதில்லை.  இருந்த போதிலும் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுத ஆசையாக இருக்கிறது.  உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது பதிவுகளை எழுதினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.  சும்மாவேனும் கடமைக்கு தினமும் பதிவு என்று ஒப்பேத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.

அதிலும் இந்த மாதிரியான தொடர் பதிவுகளையெல்லாம் தொடர்ந்து எழுதினால் எழுதுகின்ற எனக்கும் அதை படிக்கின்ற உங்களுக்கும் ஒருவித சோர்வான மனநிலை வருவதை தவிர்க்க முடியாது.  எனவே ஒரு இடைவெளி விட்டு எழுதும் போது நீங்களும் வேறு சில பதிவுகளை படிக்கவும், அல்லது எனது பழைய பதிவுகளை மீண்டும் படிக்கவும் அவகாசம் கிடைக்கும்.  எனக்கும் சிந்திக்க நேரமும் கிடைக்கும்.  

சரி பதிவுக்கு செல்வோம்.

இந்த தொடரில் தற்போது மேஷ லக்னதத்திற்கு சுகாதிபதியும் வீடு, மனை, வாகனம், கல்வி முதலியவற்றை குறிக்கின்ற 4-க்கு அதிபதியான சந்திரன் பன்னிரு வீடுகளில் அமரும் போது தரும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

பொதுவாக எந்த லக்னத்திற்கும் சந்திரன் அமரும் ராசியே ஜாதகரின் ஜென்ம ராசியாகும்.  ஜென்ம ராசியானது ஜென்ம லக்னத்திற்கு இணையாக பலன்தரக் கூடியது.  லக்னம் என்பது உயிர் என்றால், சந்திரன் இருக்கும் ராசி உடல் போன்றது.  சந்திரன் மனோக்காரகனுமாவார். 

கோச்சாரத்தில் உலவும் நவக்கிரகங்கள் நம் உடலை பாதிக்கின்றன.  லக்னப்படி ஆதிபத்யங்களை கொண்டு நாம் கணிக்கும் பலன்கள் உள்ளத்தை பாதிக்கின்றன.  எனவே தான் தசா புக்தி பலன்களுக்கு ஆதிபத்யத்தின் அடிப்படையிலும், கோச்சார பலன்களை கிரகங்களின் காரகத்துவத்தின் அடிப்படையிலும் பலன்களை சொல்ல வேண்டும் என்கிறது ஜோதிடம்.  நாம் கோச்சார பலன்களை ஜென்ம ராசிப்படியே கூறுகிறோம்.  எனவே சந்திரன் இருக்கும் வீட்டை மிகவும் கவனமுடன் ஆராய வேண்டியது அவசியம். 

சந்திரன் வளர்தலும், தேய்தலும் ஆகிய இரண்டுவிதமான நிலைகளை உடையவர்.  எனவே ஜாதகத்தில் சந்திரன் வளர் பிறையில் இருக்கிறாரா? தேய் பிறையில் இருக்கிறாரா? பௌர்ணமியா, அமாவாசையா? அல்லது ராகு, கேதுக்களுடன் இணைந்து கிரகண தோஷத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாரா? அல்லது சந்திரனுக்குரிய யோகங்களுள் ஏதேனும் அமையும் நிலையில் இருக்கிறாரா? என்றெல்லாம் ஆராய்ந்து கவனித்து பலன் சொல்ல வேண்டும்.  வெறுமனே சந்திரனை மற்ற கிரகங்களுக்கு கூறுவது போன்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு பலன் கூறினால் தவறாகிவிடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

ஜோதிடத்தில் சந்திரனை மாத்ரு காரகன் என்கிறோம்.  லக்னத்திலிருந்து எண்ணிவர 4-ராசியாக வரும் வீடு தாயாரை பற்றி அறிந்து கொள்ள உதவும்.  ஆக மேஷ லக்னத்தாருக்கு தாய்க்கு காரகனே அந்த ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார்.  எவ்வாறு சுக்கிரன் களத்திர காரகனாகி களத்திர ஸ்தானாதிபதியாக வந்தாரோ அவ்வாறே சந்திரனும் வருகிறார். 

எனவே மேஷ லக்னத்தாருக்கு ஜாதருக்கும் தாய்க்குமான உறவில் சில பிரச்சினைகள், தாயன்பில் குறைபாடுகள், தாயாருக்கு உடல்நல பாதிப்புகள் போன்றவை ஏற்படத்தான் செய்யும்.  இது மாத்ருகாரகன் ஸ்தானாதிபதியாக வந்ததன் பலன்.

4-மிடம் என்பது சதுர்த்த கேந்திரம்.  சந்திரன் வளர்பிறையில் சுபன், தேய்பிறையில் பாபி.  அந்த அடிப்படையில் ஜாதகர் பிறக்கும் போது வளர்பிறை சந்திரனாக இருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தை தரும் அமைப்பில் வந்துவிடுகிறார்.  தேய்பிறையில் பிறந்திருந்தால் பாபிகள் கேந்திராதிபதிகளானால் நல்ல பலன்களை அதிகம் தரும் என்ற விதிப்படி நற்பலன் அளிக்கிறார். 

சரி. வளர்பிறை, தேய்பிறை என்றால் எப்படி கணக்கெடுத்துக் கொள்வது?  அமாவாசை முடிந்த மறுநாளே வளர்பிறை என்று எடுத்துக்கொண்டு சந்திரனை சுபனாக கருதி பலன்களை சொல்லலாமா? இல்லை கீழே கவனியுங்கள்.

சந்திரனுக்கு பலமே அவர் பெற்ற பூரண ஒளி தான். 

எனவே வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி வரையிலான சந்திரனை முழுச்சுபனாக எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வாறே தேய்பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி வரையிலான சந்திரன் முழு பாபியாகிறார்.

இது சந்திரனின் சுப, பாப தன்மையை அறிந்து  பயன்படுதும் ஒரு வழிமுறை.  என்னடா இவரு தேய்பிறை சந்திரனை போய் வளர்பிறைன்னு சொல்றாரு.  தெரியாம சொல்றாரோ என்னவோன்னு நீங்க நினைக்க கூடாது பாருங்க.  அதுக்கு தான் இந்த விளக்கம்.

எனவே மேஷத்தை பொருத்தமட்டில் சந்திரன் தேய்பிறையில் இருந்தால் பாபி என்கிற நிலையில் கேந்திராதிபத்ய தோஷம் அகன்று நல்ல பலன்களை அளிக்கிறார். வளர்பிறை என்றாலும் அதிக கெடுதல் என்றில்லை.  சிறப்பாகவே பலனை தருவார்.  என்றாலும் சில நேரங்களில் நல்ல பலன்களை கிடைக்க விடாமல் செய்துவிடுகிறார். [எப்பூடி நல்லாவே குழப்புறேனா? :) :)  ]

சரி இப்போது மேஷத்திற்கு லக்னத்திலேயே அமரும் சந்திரன் எவ்வாறு பலன்களை தருகிறார் என்று பார்க்கலாம்.

சந்திரன் 4-க்குடையவராகி லக்ன கேந்திரம் ஏறி நட்பு என்ற வலிமையான நிலை பெற்றுவிடுகிறார்.  மேலும் தன் வீடான கடகத்திற்கு 10-ல் கேந்திர பலமும் பெற்றுவிடுகிறார்.  எனவே ஜாதகருக்கு கல்வி, வீடு, மனை, வாகனம், தாயன்பு போன்றவற்றில் நற்பலன்களை வழங்குகிறார். 

ஆனாலும் சந்திரன் மனோக்காரகனாயிற்றே அவர் அமர்ந்திருக்கும் வீடு யுத்தகிரகமான செவ்வாயின் வீடு.  எனவே ஜாதகருக்கு உஷ்ணமான தேகம், உடலில் வெட்டுக் காயங்கள், தீப்புண்கள் ஏற்படுதல், அளவுக்கதிகமான கோபம் முதலியவற்றையும் சேர்ந்தே கொடுப்பார்.

மேஷத்தில் இருக்கும் சந்திரனை குரு, சூரியன் ஆகியோர் சேர்ந்தோ அல்லது பார்த்தோ இருந்தால் சந்திரன் எந்த பிறையில் இருந்தாலும் மிக நன்மையான பலன்களை ஜாதகருக்கு வாரி வழங்குகிறார். 

எந்த ஜாதகத்திலும் யோகாதிபதிகளுடன் இணைந்த கிரகங்கள் எப்போதும் தங்கள் ஆதிபத்ய, காரகத்துவ பலன்களை நன்மையாக மாற்றி ஜாதகருக்கு வழங்குவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் சூரியனும், சந்திரனும் எந்தவொரு ஜாதகத்திற்கும் மிக முக்கியமான கிரகங்கள் ஆவர்.  இந்த சூரிய, சந்திரர்கள் மட்டும் லக்னத்திற்கு கேந்திர, கோணங்களில் அமர்ந்திருந்தால்.  ஜாதகத்தின் அடிப்படை நிலை வலிமையடைந்து விடுகிறது.  மற்ற யோகாதிபதி நிலைகலெல்லாம் அப்புறம் தான்.

இவர்களுள் ஒருவர் கேந்திர, கோணங்களில் இருந்தால் பாதி வலிமையாவது கிடைத்துவிடுகிறது.  இருவருமே மறைந்து இருந்தால் ஜாதகம் பலமற்று இருக்கும்.  லக்னாதிபதியும் மறைந்து, பகை நீசம் பெற்றுவிட்டால் யோகாதிபதிகளாவது ஓரளவிற்கு சுமாராக இருந்து தசா புக்திகளை நடத்துகிறார்களா என்று பாருங்கள்.  அதுவும் திருப்தியான நிலையில் இல்லையென்றால் உங்களிடம் வந்திருக்கும் ஜாதகம் வெகு சாதாரண ஜாதகம்.  இதற்கு உங்களால் ஒன்றும் பெரிதாக சிறப்பான பலன்கள் எதையும் சொல்லிவிட முடியாது.  நோட்டை மூடிவைத்துவிடலாம்.  இருந்தால் தானே சொல்வதற்கு!

இதெல்லாம் ஒரு அடிப்படையான விஷயங்கள்.  இதை ஏன் இங்கு சொல்கிறாய் என்றால்?

ஒரு ஜாதகம் என்று எடுத்துக்கொண்டால் முதலில் அடிப்படை விஷயங்கள் நன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  அதைவிடுத்துவிட்டு அந்த கிரகம் ஆட்சி, இந்த கிரகம் உச்சம் ஆகா, ஓகோ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிவிடக்கூடாது என்பதற்காக தான்.  நீங்கள் பாட்டுக்கு சகட்டு மேனிக்கு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்க கவுண்டமணி படத்தில் வருவது போல் ஜாதகர் பரிதாமாய் மிக்சர் தின்றுக்கொண்டிருப்பார்.

பேஸ்மெண்ட வீக்கு, பில்டிங் ஸ்ட்ராங்கு நிக்குமா? யோசிங்க பாஸ்.

மேஷத்திற்கு 2-ல் சந்திரன் உச்சம் பெற்றால் எப்படி பலன்தருகிறார்.

பொதுவாக எந்த ஜாதகத்திலும் கிரகங்கள் தரும் பலன்களை எளிதாக கண்டுக்கொள்ள சில எளிய வழிமுறைகள் இருக்கின்றது. 

அது என்ன வழி கொஞ்சம் சொல்லுங்களேன்?

எந்த ஜாதகத்திலும் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் அடைந்திருக்கிறதா என்று பாருங்கள்.  அந்த கிரகங்கள் பெற்ற ஆதிபத்ய பலன் சிறப்படைந்திருக்கிறதா என்று கவனியுங்கள்.  அல்லது அக்கிரகத்தின் காரகத்துவ பலனாவது சிறப்படைந்திருக்கிறதா என்று பாருங்கள்.  இரண்டும் இல்லையென்றால் அக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றதால் ஜாதகருக்கு யாதொரு நன்மையும் இல்லை என்று உறுதியாக கூறிவிடலாம். 

உதாரணமாக மேஷ லக்னத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்.  சந்திரன் பெற்ற ஆதிபத்யம் தாய், வீடு, வாகனம், கல்வி முதலியன.  மேலும் சந்திரன் மாத்ரு காரகனும் ஆவார்.  எனவே சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்றால் ஜாதகரின் தாயார் சமூகத்தில் நல்ல மதிப்பான, உயர்ந்த நிலையில் உள்ளவராக இருப்பார்.

ஜாதகர் பிறக்கும் போது அவரது தாயார் சிறப்பான நிலையில் இருந்தாரா? அல்லது தற்போதும் அவ்வாறான நிலையில் இருக்கிறாரா? என்று ஜாதகரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  மேலும் 4-மிட ஆதிபத்யங்கள் சிறப்பான பலன்களை கொடுக்க வேண்டும்.  அப்படியின்றி எந்தவித சிறப்புகளுமின்றி இருந்தால் சந்திரன் வேறு எதோ ஒரு நிலையில் பாதிப்படைந்து பலம் குறைந்திருக்கிறார் என்று பொருள்.  எனவே சந்திரனை பொருத்தமட்டில் அதிகம் பலன்களை எதிர்பார்க்க வேண்டாம்.

மேஷத்திற்கு 2-ல் உச்சம் பெற்ற சந்திரனால் ஜாதகர் செல்வந்தராக இருப்பார்.  தாய், வீடு, வாகனம், நிலம், கல்வி முதலியவற்றால் ஜாதகருக்கு தனம் சேரும்.  ஜாதகரின் முகம் நல்ல ஒளியுடன் காணப்படும்.  சிறப்பான  பேச்சுத்திறமை உடையவராக இருப்பார். 

ஆனாலும் ஒரு கிரகம் நல்ல நிலையில் இருக்கும் போது வேறு சில நிலைகளால் தீயபலன்களையும் தர ஏதுவாகிவிடுகிறது.  எப்படியெனில் 2-ல் ஒரு கிரகம் உச்சம் பெற்றால் அது 7-மிடத்திற்கு 8-மிடமாகிவிடுகிறது.  அதாவது மனைவியின் ஆயுள் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகம் பலத்துடன் அமர்ந்திருப்பது ஜாதகரின் மனைவியின் ஆயுளுக்கு நல்லதல்ல.  எனவே ஜாதகரின் மனைவியை பிரிய நேரிடும்.  அல்லது மனைவியை இழக்க நேரிடலாம்.  களத்திர காரகனும், ஸ்தானாதிபதியான சுக்கிரனும் பாதிக்கப்பட்டால் இந்த பலன் நிச்சயம் நடந்தேரும்.

அதாவது எந்த ஸ்தானத்திற்கும் 8-ம் வீட்டில் பலம் பெற்ற கிரகம் அமர்ந்திருந்தாலும் அந்த ஸ்தானம் நலிவடைந்துவிடும் என்பது ஜோதிட விதியாகும்.  உதாரணமாக 4-க்கு 8-மிடமாக ஜாதகரின் 11-மிடம் வரும்.  11-ல் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று வலிமையடைந்தால் ஜாதகரின் தாயாருக்கு கெண்டங்களை, உடலில் நோய்களை, துன்பங்களை அதிகப்படுத்தும்.  இவ்வாறே அனைத்து ஸ்தானங்களையும் கவனித்து பலன் காணுங்கள்.

இன்னும் நிறைய விஷயங்கள், ஜோதிட விதிகள், விளக்கங்கள் ஆகியவற்றை லக்ன பலன்களுடன் இணைத்து எழுதவிருக்கிறேன்.  தொடர்ந்து படித்து வாருங்கள். பயன் பெறுங்கள்.

அடுத்த பதிவில் சந்திக்கலாமா!

5 comments:

 1. anne vanakkam ! paadam miga arumai ! niraiya vithigal erukke eathai eappo payanpaduththanumrathulathaan jothidoroda thiramai erukkaa? purinjikittu padichi niraiya jathagangal anubavaththil paarthaalthan oru theluvu varum athuthaane sollavaringa?

  mikka nanri sir.

  ReplyDelete
 2. சிம்மதோன் சார் :) எங்க ஆளையும் காணோம் பதிவையும் காணோம் ???

  ReplyDelete
 3. அண்ணே வணக்கம்னே! ஐயா படத்துல வடிவேலுக்கிட்ட ஒருத்தர் சொல்வார் நீ உன் தியேட்டர்ல‌ இன்று போய், நாளை வானு போஸ்டர் ஒட்டியிருந்த நான் தினம் வந்து வந்துல போனேனு சொல்வார். அந்த மாதிரி நீங்க பாட்டுக்கு அடுத்த பதிவில் சந்திக்கலாமானு போட்டு முடிச்சுட்டீக, நான் நித்தம் நித்தம் எப்போ சந்திக்கிறது பார்த்துக்கிட்டே இருக்கேன். அறிவுப்பெட்டகமா இருக்கீக மாசத்துக்கு ஒன்னாவது போட்டால் என்னைய மாதிரிக் கத்துக்குட்டியிலாம் வந்து படிக்கத்தோதா இருக்கும்ல.கொஞ்சம் ட்ரை பண்ணுங்களேன்.கடைசியா பதிவு போட்டே 8 மாதம் ஆயிடுச்சு.கொஞ்சம் மனசு வைங்களேன்.

  ReplyDelete
 4. அண்ணன் இப்போ லவ் மூடுல இருக்காருனு நினைக்கிரேன்........அதனால் ஜோதிடத்தை கண்டுக்க மாட்டேன்கரார் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கிருஷ்ணா! அட கண்டுபுடிச்சிட்டீங்களா! ஜோசியரும் மனுசன்தானே, அதுவும் நமக்கு வேற சின்ன வயசா அதான் ஹி ஹி.

   Delete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.