வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

26 January 2012

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்

வணக்கம் நண்பர்களே!

நமது ஜோதிட ஆய்வுத் தொடரானது ஒரு குறிப்பிட்ட ராசியை மட்டும் லக்னமாக கொண்டவர்கள் படிக்கக்கூடிய அவர்களுக்கு மட்டும் பயன்படக்கூடியதாக இல்லாமல் ஜோதிடத்தை கற்க, பலன் கூற விரும்பும் ஆரம்பநிலை ஆர்வலர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் படி முடிந்தவரை எழுதிவருகிறேன்.

மேஷ லக்னத்திற்கு என்று எழுதினாலும் அதில் பல ஜோதிட விதிகள் விளக்கங்கள், லாஜிக் போன்றவற்றை முடிந்த வரை பயன்படுத்தி எழுதுகிறேன்.  இவற்றை வெறும் மேஷ லக்னத்தார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று நினைத்தால் எமது நோக்கமே நிறைவேறாது.

மற்ற லக்னத்தில் பிறந்தவர்களும் நமது லக்னம் வரட்டும் அதுவரை மேலோட்டமாக படிக்கலாம் என்று நினைக்ககூடாது.  நான் என்றைக்கு இந்த தொடரை முடிப்பது.  நீங்கள் என்றைக்கு உங்கள் லக்னத்தை படிப்பது.  இதெல்லாம் நடக்கிற காரியமா?  அதுவரை நான் இருப்பேனா? அல்லது நீங்கள் தான் தொடர்ந்து படிக்க முடியுமா?   ஏதோ இன்று இந்த விஷயங்களை எழுத இறைவன் என்னை அனுமதிக்கிறார்.  கால நேரங்கள் கூடிவருகிறது.  ஆனால் நாளை எனக்கு ஒரு பிரச்சினை, சிக்கல் என்றால் என்னால் எப்படி தொடர்ந்து எழுத முடியும்?  நாளை நடப்பதை யார் அறிவார்?

ஐயா! ஒரு ஜோதிடராக இருந்துகொண்டு நீங்கள் இப்படி கூறலாமா? உங்களுக்கு தான் எதிர்காலம் நன்றாக தெரியுமே என்றுதானே கேட்க வருகிறீர்கள்.  என்னைவிட பெரிய பெரிய ஜோதிட மேதைகள் எல்லாம் சொல்லிய பலன்களே நடக்கவில்லை.  நானெல்லாம் எந்த மூலைக்கு.

இறைவன்!!.  அவன் ஒருவனே அனைத்தும் அறிந்தவன்.  இருப்பதை இல்லாமல் செய்வதும்.  இல்லாததை இருப்பதாக செய்வதும் அவனது திருவிளையாடல்களே.  அவனை அடைந்தவர்களுக்கு, அவன் தாள் பணிந்தவர்களுக்கு நடக்கும், நடக்கவிருக்கும் பலன்களை மாற்றும் வல்லமை படைத்தவன் இறைவன்.  ஜோதிடம், ஜோதிடரெல்லாம் ஒரு கருவியே.

எனவே எனது தொடர் என்பதெல்லாம் ஒரு வழிமுறைகள் தான். நான் தொடர்ந்து எழுதுவது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அதுவரை இந்த தொடரில் எழுதும் விஷயங்களை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் உடன் பணிபுரிபவர்கள் இவர்களது ஜாதகங்களில் உள்ள நிலைகளை கவனித்து பாருங்கள்.

நானும் ஜோதிடத்தை படிக்கும் போது  ராசி பலன்களை படிக்கும் போது நேராக எனது ராசியான சிம்மத்தை படித்துவிட்டு சிம்மத்திற்கு சரியாக எழுதி இருந்தால் தான் மற்றவற்றை படிப்பேன்.   இதெல்லாம் ஆரம்பநிலை அனுபவங்கள்.

நாட்கள் ஆக ஆக பல ஜாதகங்களை பார்க்கும் போது அவர்களுக்கு இந்த பலனை செய்ய எந்த கிரக நிலை காரணம், எதனால் அவர்கள் மரணமடைந்தார்கள், பதவி பெற்றார்கள், அவர்களது குணாதிசியங்கள் எப்படியிருக்கிறது.  அவர்கள் வாழ்வில் அடைந்த இன்ப, துன்பங்கள் என்ன? அவர்களது ஜாதகங்கள் அவர்களுக்கு எப்படி பலனளித்தது என்று கவனிக்க ஆரம்பித்த போது பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.

நான் ஜோதிடத்தினை கற்க ஆரம்பித்த போது எதுவும் தெரியாது.  ராசி என்றால் என்ன? லக்னம் என்றால் என்ன? தசா புக்தி இருப்பு எப்படி போடுவது  என்பதை போன்ற ஆரம்பகட்ட விஷயங்களை அறியவே பல நாட்கள் ஆனது.  அடிப்படையான புத்தகங்களை படித்து படித்து சலித்து போனது தான் மிச்சம்.  பலரும் பல வழிமுறைகளை சொல்லி குழப்பியிருப்பார்கள்.

சரி அனுபவஸ்தர்களை, ஜோதிட தொழிலில் உள்ளவர்களை கேட்கலாம் என்றால் அவர்களுக்கு பல அடிப்படை விஷயங்கள் தெரிவதே இல்லை.  தெரிந்தாலும் சொல்லமாட்டார்கள்.  எதாவது ஒரு விஷயத்தை பிடித்துக்கொண்டு அங்கேயே தொங்கி கொண்டிருப்பார்கள். எதை கேட்டாலும் அதான் சொன்னேனே ஏழரை சனி அதுமுடியட்டும். என்பார்கள் நீங்கள் தட்சிணையை வைத்துவிட்டு கிளம்ப வேண்டியது தான்.  அவர்களிடம் பிடிவாதம், சரியான ஜோதிட ஞானம் இல்லாமை, நேரமின்மை முதலிய பல பிரச்சினைகள் இருக்கும். 

அய்யா இப்படியிருக்கிறதே என்று ஆரம்பித்தால் நான் சொன்னா சொன்னது தான்.  எவ்வளவோ பேருக்கு நான் சொன்னபடி நடந்திருக்கு.  எங்க அப்பா  தாத்தா எல்லோரும் பரம்பரை ஜோசியர், அதற்கெல்லாம் வாக்கு பலிதம் வேண்டும்.  தெய்வ அனுக்கிரகம் வேண்டும் என்றெல்லாம் விளக்கம் வரும்.

வாக்கு பலிதம் இருந்தால் அப்புறம் எதற்கு அய்யா ஜாதகம் பார்க்கனும்.  பார்காமலே பலன் சொல்ல வேண்யது தானே.  சொல்கின்ற விஷயங்களில் லாஜிக் இருக்க வேண்டாமா? ஒரு வழிமுறையை கடைபிடிக்க வேண்டாமா?

அதெல்லாம் எனக்கு தெரியாது இனிமேல் தெரிந்து கொள்ளவும் முடியாது.  எனக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் எனது நேரத்தை வீணாக்காதீர்கள் கிளம்புங்கள் என்று வந்தவரை விரட்டியடிப்பார்கள். அவர்களுக்கு பணம் முக்கியமே தவிர சாஸ்திரம் முக்கியம் என்பதல்ல.

அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் சொல்வது தான் விதிகள், விளக்கங்கள் எல்லாம் மற்றவர்கள் சொல்வதையோ அல்லது நூல்களில் உள்ள விளக்கங்களையோ ஏற்கமாட்டார்கள்.  இப்படிப்பட்ட ஜோதிடர்களும் நாட்டில் இருக்கதான் செய்கிறார்கள்.  நானும் பலரை சந்திந்து உரையாடியிருக்கிறேன்.

குறைகுடம் தான் கூத்தாடும்.  முற்றிய நெல்மணிக் கதிர் தலைசாய்ந்து தான் காணப்படும்.  அறிவில் சிறந்தவர்கள், சாஸ்திர விற்பன்னர்கள் எப்போதும் அடக்கத்துடனே இருப்பர்.  முடிந்தவரை  நல்லதொரு விளக்கத்தை அறியாதவர்களுக்கு சொல்லி வழிகாட்டுவர்.  அப்படிப்பட்டவர்கள் சிலரே இருக்கின்றனர். 

ஒரு ஜாதகத்தை எடுத்தால் எந்தெந்த அம்சங்களை பார்க்க வேண்டும்.  எப்படியெல்லாம் அலசி ஆராய வேண்டும் எந்தெந்த கோணங்களில் பார்க்க வேண்டும்.  என்றெல்லாம் இந்த தொடரில் தொடர்ந்து எழுத இருக்கிறேன். பெயருக்குதான் மேஷ லக்னம் என்று எழுதுகிறேனே தவிர இந்த விஷயங்களை, வழிமுறைகளை நீங்கள் அனைத்து லக்னங்களுக்கும் பயன்படுத்தி பாருங்களேன்.  உங்களுக்கே ஒரு தெளிவு பிறக்கும்.

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் ஜாதகர் எப்படிப்பட்டவர்.  அவருடைய லக்னாதிபதியின் நிலையென்ன? அவருக்கு யோகாதிபதிகள் எப்படியிருக்கிறார்கள்.  லக்ன பாபிகள், பாவக்கிரகங்கள் வலிமை அடைந்திருக்கிறதா? அவர்களுக்கு தற்போது நடக்கும் தசா புக்திகள் எவை?  தசா புத்தி நாதர்கள் ஜாதக்தில் இருக்கும் நிலை என்ன? அவர்களுக்கு கோச்சாரப்படி சாதகமான நேரமாக இருக்கிறதா?  என்றெல்லாம் பார்க்க வேண்டும். 

இவற்றில் நமக்கு பல நிலைகள் புலப்படாமல் இருந்துவிடும்.  வேறொரு சமயத்தில் பார்ததால் அடடா இதை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் வரும்.  இதையெல்லாம் கடந்துதான் ஓரளவிற்கு வெற்றிகரமான ஜோதிடராக முடியும்.  நானெல்லாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கிறது.

பல ஜாதகங்களில் பெரிதாக ஒன்றும் இருக்காது.  இருந்தாலும் நமக்கு புலப்படாது.  ஏனெனில் நம்மில் பலரும் சாதாரண பாமரர்களே. பல பெரிய மனிதர்களின் ஜாதகங்களை பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை.  தலைவர்களின் ஜாதக விபரங்கள் எல்லாம் உண்மையானவையாக இருப்பதில்லை.  முன்னுக்கு பின் முரணாக இருக்கும்.  ஒவ்வொருவரும் ஒரு நேரத்தை குறித்திருப்பார்கள்.

சில ஜாதகங்களில் பார்த்தால் கிரக நிலைகள் சிறப்பாக இருக்கும்.  ஆனால் ஜாதகர் வெகு சாதாரண நிலையில் இருப்பார்.  நாம் இப்படியிருக்குமே. இந்த பலன் நடந்திருக்குமே என்றெல்லாம் கேட்டால் அதெல்லாம் இல்லை மாறாக கஷ்டப்படுகிறேன் என்பார்.  சில ஜாதகங்களில் சுமாரான கிரக நிலைகளே இருக்கும்.  ஏதோ ஒரு கிரகத்தின் தசா அவரை உயரத்தில் அமர்த்தியிருக்கும்.

பலருக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் வித்தியாசம் தெரியாத நிலை.

நல்ல நிலையில் இருப்பவர்கள் மேலும் மேலும் இன்பத்தை பெற துடிக்கிறார்கள்.  அதனால் அவர்களுக்கு தற்போது அடைந்துவரும் பலன்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.  மனநிறைவு கொள்வதில்லை.  மாறாக முன்னுக்கு வருகிறேன் பேர்வழி என்று கண்டபடி எதையாவது செய்து சிக்கலை உருவாக்கிக்கொண்டு துன்பப்படுகிறார்கள்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு

நம்மில் எல்லோருமே யோகத்தை அனுபவிக்க துடிக்கிறோம்.

ஒன்றை அடையும் வரை இருக்கும் வெறி.  அதை அடைந்த பின்பு இருப்பதில்லை.

இன்றைக்கு இந்திய குடியரசு தினம்.  நாம் இந்தியர்கள்.  விடுதலை பெறும் வரை இருந்த ஒற்றுமை. வேட்கை இன்று நம்மிடையே இல்லை.

விளைவு ?

நம்மை நாமே கொள்ளையடித்து, ஏமாற்றி, அடிமையாக்கி துன்பத்தில் உழல்கிறோம். நல்லதொரு தலைவனை எதிர்பார்த்து ஏங்குகிறோம்.  ஆனால் தனிமனித ஒழுக்கத்தை எத்தனை பேர் பின்பற்ற முன்வருகிறோம்?.

நீரளவே ஆகுமாம் ஆம்பல்- கற்ற
நூலளவே ஆகுமாம் மெய்யறிவு

குளத்தில் உள்ள நீரின் அளவிற்கு ஏற்றபடி தான் தாமரை தண்டின் உயரமும் இருக்கும்.

சமுதாயத்தில் உள்ள மக்களின் தன்மைக்கு ஏற்பதான் அவர்களுக்கு அமையும் தலைவனும் இருப்பான்.  கீழ்மக்களில் உயர்குணம் கொண்ட தலைவன் எங்கிருந்து வரமுடியும்.  வானத்திலிருந்தா குதித்து வரமுடியும்?   மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.  கொள்ளைக்கூட்டத்திற்கு நல்லவன் எப்படி தலைமை தாங்க முடியும்?

இன்று ஒரு க்யூவில் நின்று பொறுமையாக வாங்குபவர்கள் எத்தனை பேர்?  அதிலும் குறுக்கு வழி.  ஏமாற்று, லஞ்சம், திருட்டு.  கிடைத்தவரை லாபம்.  வரிசையில் நின்றால் ஏமாளி.  பிழைக்க தெரியாதவன், சாமர்த்தியம் இல்லாதவன் என்கிற அவப்பெயர்.

இன்றைய உலகில் எல்லோரும் அரிச்சந்திரனாக வாழ முடியாது தான்.  ஆனால் ஒரு குறைந்தபட்ச நியாயம், மனித நேயம், இரக்க உணர்வு கூட இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.  எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை இருக்கிறது.

கெட்டவர்கள் கூட எதோ சந்தர்ப்பவசத்தால், விதிவசத்தால் தவறுகளை செய்கிறார்கள் என்று சொல்லாம்.  ஆனால் எவனொருவன் தன்னைத் தானே நல்லவன், வல்லவன், ஊருக்கு உழைத்த உத்தமன், என்று பிதற்றுகிறானோ அவனிடம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  பல அரசியல் வியாதிகள் இந்த கேட்டகிரியில் தான் வரும்.  அடுத்தவனை துன்புறுத்தி, அழித்து, அபகரித்து வாழுகின்ற வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

நான் சொல்கிறேன்.  இப்படி வாழ்வதைவிட சாவதே மேல்.  நமக்கு முன்பிருந்தவர்கள் இப்படி வாழ்ந்திருந்தால் நமக்கு என்ன மிஞ்சியிருக்கும்.  நாம் மட்டும் ஏன் இப்படி வாழ்கிறோம்.  உலகில் தர்ம நியாயங்கள் குறையும் போது தான் இயற்க்கை தனது சீற்றத்தை காட்டுகிறது.  பேரழிவுகள் ஏற்படுகிறது.

நாம் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் என்றால் ஒரு கர்மாவை அனுபவிக்க பிறந்திருக்கிறோம் என்று பொருள்.  அந்த கர்மா இன்பமாகவும் இருக்கலாம் துன்பமாகவும் இருக்கலாம்.

நம்மில் அறிவில் தெளிவுபெறும் வரை எதையெதையோ செய்கிறோம்.  ஆனால் ந்ன்கு தெரிந்த பின்? கற்றபின் செய்தால்?.  படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான் என்றான் பாரதி.  இருக்கின்ற கர்மாவுடன் புதிய கர்மாவையும் அல்லவா சேர்த்து செய்கிறோம்.  வினையை விதைத்துவிட்டு திணையை எதிர்பார்த்தால்?

ஜோதிடம் என்பது மிகப்பெரிய கடல் என்பது உண்மைதான்.  அதில் பல புரியாத விஷயங்களும் இருக்கதான் செய்கின்றது.  விதிகள் என்ற பெயரில் அவர் இங்கிருந்தால், இவர் அங்கிருந்தால், அந்த கிரகம் கூடினால், இந்த கிரகம் பார்த்தால் இந்த பலன் நடக்கும் இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என்று குழப்பியடித்திருப்பார்கள்.  நாமும் அவர்கள் கூறிய விதிகளின் படி பல ஜாதகங்களில் பார்த்தால் ஒன்றும் நடந்திருக்காது.  அப்புறம் எதற்கு விதிகள்? அது இது என்று ஏகப்பட்ட குப்பைகள்.

எந்த ஒரு விதிக்கும் ஒரு விளக்கம் இருக்கும். அதனை ஜோதிடர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பயன்படுத்தும் போது அவற்றை படிக்கும் ஆரம்பநிலை வாசகர்களுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று தான் இருக்கும்.

எத்தனை பேர் அவற்றை விளக்கியிருக்கிறார்கள்.  பல நூல்களில்  விளக்கியிருந்தாலும் அதை அறிந்துகொள்வதற்கும் நமக்கு விதியிருக்க வேண்டும்.  அமைப்பிருக்க வேண்டும்.  நமது கர்மா இடம் கொடுத்திருக்க வேண்டும்.

எனவே விளக்கம் இல்லாத விதிகளை ஆரம்பகட்டத்தில் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ளாதீர்கள்.  அவற்றை வைத்து உங்கள் ஜாதகங்களை போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்.   அதற்கான விளக்கங்களை அறிந்து கொள்ள நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.   மேலும் மேலும் நீங்கள் தேடும் போது, ஆராயும் போது அனுபவத்தில் அந்த விதிகளுக்கான விளக்கங்கள் உங்களுக்கு நாடளவில் புரிய ஆரம்பிக்கும்.  அதுவரை பொறுத்திருங்கள்.  தேடலை தொடர்ந்திருங்கள்.

ஜோதிடத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகலாம்.  ஆனாலும் விடா முயற்சியுடன், தேடலை நிறுத்திவிடாமல் அவநம்பிக்கை அடையாமல் நமது தேடலை தொடர்ந்தோமானால் இயற்கை அதன் சூட்சுமத்தை நிச்சயம் எந்த வழியிலாவது நமக்கு உணர்த்திவிடும்.

அடுத்த பதிவில் தொடர்வோம்.....

3 comments:

  1. odi ponavunukku onbhadhile guru endru een solgirargal?

    ReplyDelete
  2. வாங்க ஸ்வாமி!

    ஒன்பதாம் இடம் என்பது என்ன? அயல்நாட்டு பயணங்களை, பாக்கியத்தை, அதிர்ஷ்டத்தை தந்தையை குறிக்கும் ஸ்தானமல்லவா!

    குரு என்பவர் சுபக்கிரகமாயிற்றே. அவர் திரிகோண ஸ்தானமான 9-ல் இருப்பது மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.

    எனவே 9-ல் உள்ள குரு வெளியிடங்களில் ஜாதகரை மிகவும் உயர்த்துவார்.

    இதை தான்,

    ஓடினவனுக்கு ஒன்பதில் குரு.
    அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி

    என்ற பழமொழி மூலம் குறிப்பிடுகிறார்கள்.

    அஷ்டம ஸ்தானம் பற்றி ஜோதிடம் எப்படி குறிப்பிடுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. அங்கு தீயக்கிரகமான சனி இருந்தால் ஜாதகர் மிகவும் கஷ்டப்படுவார்.

    என்றாலும் இது பொதுவான பழமொழி, குரு லக்னத்திற்கு சுபனாக இருந்தால் இந்த பழமொழி பொருத்தமாக இருக்கும். எல்லோருக்கும் எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.