வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

30 September 2011

உள்குத்துக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?..

ஒரு வழியாக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் அறிவிப்புகளும், கூட்டணிக் குழப்பங்களும் முடிவிற்கு வந்துவிட்டன.  7 முனைப்போட்டியாம்.  எந்த முனைக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும்? அலசுவோமா?

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தர பகைவனும் கிடையாது என்றொரு அடைமொழி சொல்லப்படுவதுண்டு.  இது எதற்கென்றால் யார் வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கொள்(ளை)கை அடிப்படையில் கூட்டணி அமைக்கத்தான்.

அந்த அடிப்படையில் தான் இதுவரையிலான தமிழக அரசியல் வரலாற்றில் கூட்டணிகள் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன.  ஆனால் தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக அரசியலுக்கு வந்து சில நாட்களே ஆன கட்சிகள் கூட தனித்து நின்று தேர்தலை சந்திக்க துணிந்திருக்கிறது என்றால் என்ன பொருள்? அவர்களுக்கு வேறு வழியில்லை.  மேலும்  நடக்க இருப்பது வெறும் உள்ளாட்சி தேர்தல் மட்டுமே இதில் நம் பலத்தை சோதித்துக்கொண்டால் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய கட்சிகளுடன் பேரம் பேசி தேவையான சீட்டுகளை பெற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்ற கணக்கு தான்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட ஜெயா, விஜயகாந்த் கூட்டணியால் யாருக்கு லாபம் என்று பார்ப்பதை விட கலைஞர் மீண்டும் ஜெயித்து வந்துவிடக்கூடாது என்பதில் இருவருமே ஒற்றுமையாக இருந்ததால் கூட்டணி அமைத்தார்கள்.


தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ஜெயாவிற்கு விஜயகாந்த் உடனான கூட்டணி ஒரு தெம்பை அளித்தது எனலாம்.  ஆனால் பதவிக்கு வந்தவுடன் இனி யாரும் நம்மை அசைக்க முடியாது என்ற எண்ணமும் (முன்பு பதவியில் இருந்தவர்களும் இப்படிதான் நம்பினார்கள் பாவம் அவர்களின் நம்பிக்கை பொய்க்க கூடாது), நாமே விஜயகாந்தை மேலும் மேலும் வளர்த்து பெரிய ஆளாக்கிவிடக் கூடாது என்ற அரசியல் சாதுர்யமுமே ஜெயா தனித்து நிற்க காரணமாக இருந்திருக்கிறது.

எதிர்முகாமில் திமுக, காங்கிரஸ் கூட்டணிகள் உடைந்துவிட்டது என்பதைவிட கலைஞரின் அரசியல் சாதுர்யத்தால் காங்கிரசை சாயம் வெளுக்க வைக்க இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்தும், கனிமொழி கைதுக்கு அவர் மனதில் இருந்த நெருடலுக்கு ஆறுதலும் தேடிக்கொண்டுள்ளார்.  தோல்விகள் கலைஞருக்கு புதிதல்ல.  மேலும் இப்போது இருக்கின்ற நிலையில் அவர்களால் உடனடியாக மீண்டெழ முடியாத நிலை. இதுவே நாடாளுமன்ற தேர்தலாக இருக்கும்பட்சத்தில் இவ்வாறு கழற்றிவிட முயன்றிருப்பாரா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

கம்யூனிஸ்ட்கள் கிடைத்தவரை லாபம் என நினைத்து விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.  விஜயகாந்த் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதுடன் இனி வரும் தேர்தலில் இதே வழிமுறையை கையாண்டால் நிச்சயம் தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாக வாய்ப்பு ஏற்படும். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் விழிப்புடன் இருக்க வேண்டும்.  அது என்னவெனில் எந்த காரணத்தை கொண்டும் முழ்குகின்ற காங்கிரஸ் உடன் அவர் கூட்டணி வைத்துவிடக் கூடாது.  அவ்வாறு அவர் அணி அமைத்தால் நிச்சயம் அவர் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து விடுவார் என்பது நிச்சயம்.

ஜெயா தான் இந்த பொன்னான வாய்ப்பை விஜயகாந்திற்கு ஏற்படுத்தி கொடுத்தார். அனேகமாக ஜெயா செய்யும் இரண்டாவது அரசியல் சறுக்கலாக இந்த விஷயம் இருக்கும்.

நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த பகுதிகளில் செல்வாக்காக உள்ள நபர்கள் சுயேட்சையாக நின்றால் கூட வென்றுவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. அந்தந்த பகுதிகளின் பிரச்சினைகளை பொருத்தே வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.  எனவே இங்கு அரசியல் கூட்டணிகள் என்பதெல்லாம் தேவையற்றது என்பதே கட்சிகளின் எண்ணமாக இருக்க முடியும்.

திமுக-வில் முக்கிய புள்ளிகள் அனைவரும் சிறையில் இருக்கின்றனர்.  மேலும் எந்நேரமும் வழக்கு பாயலாம் என்ற பயத்தில் இருப்பவர்களும் தேர்தல் பணி செய்ய தயங்கும் நிலை உள்ளது.  அதிமுகவோ இலவசத் திட்டங்களின் மூலம் எளிதாக மக்களின் ஓட்டுகளை பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறது.  அவர்களின் திட்டம் முழுவதும் நிறைவேறுவதும் சந்தேகமே!  ஏனெனில் கலைஞர் ஆட்சியில் அனைவருக்கும் வண்ணத் தொலைகாட்சி பெட்டி கிடைத்தது போல் ஜெயா ஆட்சியில் இலவசங்கள் கிடைக்காது என பெரும்பாலான மக்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

விஜயகாந்த் கடுமையாக உழைத்தால் சில இடங்களில் வெற்றிக்கொடி நாட்டலாம்.  ஆனால் ஒருவேளை உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்த் கணிசமான இடங்களில் வென்றால் எக்காரணத்தை கொண்டும் மீண்டும் அதிமுக அணிக்கு செல்லக்கூடாது.  அப்படி சென்றால் மக்களின் நம்பிக்கையை அவர் இழந்துவிடுவார்.  பாஜக உடன் கூட்டணி வைத்தாலும் கூட நல்லது எக்காரணத்தை கொண்டும் காங்கிரஸ்காரர்களுடன் மூழ்கும் படகில் ஏறவே கூடாது.  இவற்றை அவர் தொடரந்து பின்பற்றினால் நாடாளுமன்றத்தில் தேமுதிக நுழையும் வாய்ப்பை விரைவில் பெற வாய்ப்புகள் இருக்கிறது.

பொறுத்திருப்போம்.

2 comments:

  1. ////ஜெயா தான் இந்த பொன்னான வாய்ப்பை விஜயகாந்திற்கு ஏற்படுத்தி கொடுத்தார். அனேகமாக ஜெயா செய்யும் இரண்டாவது அரசியல் சறுக்கலாக இந்த விஷயம் இருக்கும்.////

    இதையே தான் நானும் நெனச்சேன்....
    விஜயகாந்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.....
    கருணாநிதியின் குடும்ப பற்று ...ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் நல்ல வாய்ப்பை தந்தது...
    ஜெயலலதாவின் ரத்தத்தில் ஊறிய ஆணவம் ...விஜயகாந்துக்கு ஒரு வாய்ப்பை தரும்.... :)

    ReplyDelete
  2. @கிருஷ்ணா

    வாங்க கிருஷ்ணா! நம் இருவரின் கருத்துகளும் ஒரே மாதிரியாக உள்ளதே.

    விஜயகாந்த் உண்மையிலேயே எதிர்கட்சிக்குரிய இலக்கணத்தோடு நடந்துகொண்டால் அவருடைய மக்களிடம் அவரது செல்வாக்கு வளருமேயன்றி குறையாது. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக அங்கும் இங்கும் தாவினால் இன்று மதிப்பிழந்து கிடக்கும் உதிரி கட்சிகளின் நிலைதான் அவருக்கும் ஏற்படும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.