வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

11 December 2011

ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம் - பாகம் 3

வாசகர்களுக்கு வணக்கம்,

சென்ற பதிவில் மேஷ லக்னத்தாருக்கு செவ்வாய் துவாதச பாவங்களில் நிற்கும் போது தரும் பலன்கள் பற்றி 9 பாவங்கள் வரை எழுதியிருந்தேன். 

இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

செவ்வாய் மேஷ லக்னத்திற்கு 10-ம் பாவத்தில் மகரத்தில் உச்சம் பெறும் போது பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றான ருசக யோகத்தை தருகிறார்.

பொதுவாக எந்த லக்னத்திற்கும் லக்னாதிபதி உச்சம் பெறுவது மிகவும் சிறப்பான நிலை எனலாம்.  ஜாதகர் பெரிய மனிதராக சமூகத்தில் மதிக்கப்படுவார்.  புகழ் மிக்கவராக திகழ்வார்.  

இங்கு மேஷ லக்னாதிபதியே  அஷ்டமாதிபத்யம் பெறுவதால் ஜாதருக்கு கெடுபலனை தரமாட்டாரா? என்ற ஐயம் எழுவது இயல்பே.

ஒரு விதத்தில் பார்த்தால் லக்னாதிபதி உச்சம் பெற்றது நன்மை மற்றோர் கோணத்தில் பார்த்தால் அஷ்டமாதிபதி உச்சம் பெற்றது ஜாதகருக்கு கஷ்டங்களை தராதா?  என்று வினவலாம்.

இங்கு ஒரு ஜோதிட விதியை சொல்ல விரும்புகிறேன்.

எந்த ஒரு கிரகமும் யோகத்தை தரும் நிலையில் இருக்கும் போது தீய பலன்களை தருவதில்லை.

அந்த அடிப்படையில் பார்க்கும் போது லக்னாதிபதியான செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று இருக்கும் போது ஜாதருக்கு தொழில் வகையில் மேன்மையை தந்துவிடுவார்.  ஜாதகர் போலீஸ், ராணுவம், மருத்துவம், இஞ்சினியரிங், மின்சாரம் தொடர்பான துறைகளில் உயர்ந்த பதவியில் இருப்பார்.  செவ்வாய் பூமிக்காரகனாகையால் ஜாதகருக்கு வீடு, நிலம், மனை போன்றவை அமையும்.  அவற்றால் ஆதாயங்களையும் பெறுவார்கள் அல்லது அவை சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபங்களை அடைவார்கள்.  சகோதரர்களால் நன்மையும் கிடைக்கப்பெறுவார்கள்.

என்ன இருந்தாலும் செவ்வாய் ஒரு பாபக்கிரகம்.  அவர் உச்சம் பெற்றது மற்றொரு பாபக்கிரகமான சனியின் வீடு.  பொதுவாக பாபக்கிரகங்களுக்கு கேந்திரத்தில் வலு அதிகம் அதிலும் செவ்வாயும், சூரியனும் 10-ல் இருக்கும் போது திக்பலம் பெறுகின்றனர்.  மேஷலக்னத்திற்கு 10-ல் செவ்வாய் உச்சம் வேறு அடைகிறார்.  அங்கு அவருக்கு சுயசாரமும் உள்ளது.

எனவே ஜாதகர் மிகவும் மூர்க்க குணம் உடையவராக இருப்பார்.  பழி பாவங்களுக்கு அஞ்சாதவராக இருப்பார்.  இவரை கண்டால் மற்றவர்கள் அஞ்சி நடுங்குவர்.  அவசரமும், ஆத்திரமும் அதிகம் இருக்கும்.  சுபக்கிரகமான குருவின் பார்வை ஜாதகருக்கு சிறப்பான பலன்களை அதிகரிக்க செய்யும்.

மகரத்தில் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்கள் வருகிறது.  இவற்றுள் பஞ்சமாதிபதி சூரியனின் நட்சத்திரத்திலோ அல்லது தனது சுய சாரத்திலோ செவ்வாய் இருக்கும் போது ஜாதகருக்கு நன்மையான பலன்களை அதிகம் தருவார்.  தனது நீசநாதனான சந்திரனின் திருவோணத்தில் நின்றால் சுமாரான பலன்களே கிடைக்கும்.

இங்கு ஒரு நுணுக்கத்தை கவனிக்க வேண்டுகிறேன்.

எந்த ஒரு கிரகமும் அது எந்த வீட்டில் இருந்தாலும் யாருடைய நட்சத்திர சாரத்தில் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பாபக்கிரகமானாலும் அக்கிரகம் ஒரு சுபக்கிரகத்தின் சாரத்தில் நின்று அந்த சுபக்கிரகமானது லக்னத்திற்கு நல்ல ஆதிபத்யத்தை பெற்றிருந்தால்  ஜாதகருக்கு நல்ல பலனை அதிகம் தரும்.

என்னதான்  சுபக்கிரகமாயினும் அக்கிரகம் பாபக்கிரகத்தின் சாரம் பெற்று லக்னத்திற்கு தீய ஆதிபத்யம் பெற்ற கிரகங்களின் சாரம் பெற்றால் அது எத்தகைய பலம் பெற்ற நிலையிலும் நற்பலனை அளிப்பதில்லை.

இது ஜோதிடத்தின் மிக முக்கியமான விஷயமாகும். கிரகங்களின் பாதசாரங்களை கண்டறிவதற்காக தான் ராசி, அம்சம்  ஆகிய இரண்டையும் ஜாதகத்தில் குறிப்பிடுகிறோம்.  பலர் அம்சத்தை கவனிப்பதேயில்லை.  அப்படியே கவனித்தாலும் அதனை ராசிக்கு சொல்வதை போன்றே பார்வை, சேர்க்கை போன்ற பலன்களையெல்லாம் சொல்கின்றனர். அது  தேவையில்லை என்பது எமது கருத்து.

அம்சம் என்பது ஒரு கிரகம் எந்த நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருக்கிறது என்பதை அறிவதற்கும்.  ராசியில் உள்ள கிரகம் அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் உள்ளது என அறிய,  அதாவது அக்கிரகம் எந்த அம்சத்தில் உள்ளது அதனால் அக்கிரகத்தின் பலன் எவ்வாறு இருக்கும் என்று அறிவதற்கும் பயன்படுகிறது.

நண்பர்களே! இந்த தொடர் சாதாரணமாக பல விஷயங்களை உள்ளடக்கியது.  வெறுமனே உங்கள் லக்னத்திற்கு மட்டும் அமைந்துள்ள கிரக நிலைகளை படித்துவிட்டு செல்லாமல்  முழுமையாக அனைத்து பதிவுகளையும் கூர்ந்து படித்துவாருங்கள்.  அவ்வப்போது தேவைப்படும் இடங்களில் பல ஜோதிட விதிகளையும், சூட்சுமங்களையும் எழுதியிருப்பேன்.  அவற்றையும் மனதில் கொண்டு படித்தால் உங்கள் ஜோதிட அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

அடுத்ததாக செவ்வாய் மேஷ லக்னத்திற்கு 11-ல் கும்பத்தில் இருக்கும் போது எத்தகைய பலன்களை தருவார்.

11-ம் இடமா? இது லாப ஸ்தானமாயிற்றே இங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய் ஜாதகருக்கு எப்போதும் லாபத்தை அள்ளி வழங்குவார் என்று கணித்தால் ஏமாந்துவிடுவோம்.

ஏன?  

மேஷலக்னத்தாருக்கு 11-மிடம் பாதக ஸ்தானமாகும்.  மேலும் இந்த வீடு தாயார் ஸ்தானமான 4-க்கு 8-மிடமாகவும் வருகிறது.  எனவே ஜாதகரது தாயாருக்கு ஜாதகரால் கஷ்டங்கள் ஏற்படலாம்.  ஜாதகருக்கே பல துன்பங்கள் இடைஞ்சல்கள் தோன்றலாம்.  11-ம் இடம் மூத்த சகோதரர்களை குறிக்கும்.  இங்கு லக்னாதிபதி அமர்வதால் ஜாதகரே அவரது பெற்றோருக்கு மூத்த பிள்ளையாக இருக்க வாய்ப்பு உண்டு.  ஒரு வேளை மூத்த சகோதரர்கள் இருப்பாராகில் அவருக்கும் ஜாதகருக்கும் இடையே உறவு சுமுகமாக இராது.

செவ்வாய் 8-க்குடையவராகி 11-ல் அமர்வதால் எதிர்பாராத வகையில் திடீரென பணவரவுகள் ஜாதகருக்கு கிடைக்கும்.

செவ்வாய் லக்னத்திற்கு 12ல் மீனத்தில் இருக்கும் போது என்ன பலன்களை தருவார்.

பொதுவாக எந்த லக்னத்திற்கும் லக்னாதிபதி 6, 8, 12ல் இருப்பது நல்லதல்ல. இங்கு மேஷலக்னத்திற்கு செவ்வாய் 12-ல் அமர்ந்தால் தலைவலி தான்.  தவளை தண்ணிக்கு இழுக்க ஓணான் வேலிக்கு இழுக்க என்ற பழமொழி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த கதிதான் ஜாதகருக்கு ஏற்படும்.  

ஜாதகர் எடுத்த காரியங்கள் சீக்கிரம் முடியாது.  அதிக அலைச்சலை தரும்.  தேவையற்ற வீண் விரய செலவுகளை ஜாதகர் அதிகம் செய்வார்.  குருவின் வீடாக இருப்பதால் செய்கின்ற செலவிற்கு ஏதாவது ஒருவகையில் பயன் இருக்கும்.  ஜாதகர் அடிக்கடி இடமாற்றங்களை விரும்புவார்.  தனது சொந்த ஊரில் இருப்பதை விட வெளியிடங்களில் சென்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

அப்பாடா! ஒரு வழியாக இப்போது தான் மேஷ லக்னத்திற்கு செவ்வாய் துவாதச பாவங்களில் அமரும் போது தரும் பலன்களை ஓரளவிற்கு கோடிட்டு காட்டியிருக்கிறேன்.  
அடுத்ததாக மேஷ லக்னத்தாருக்கு 2, 7-க்கு உடைய சுக்கிரன் துவாதச பாவங்களில் அமரும் போது எத்தகைய பலன்களை தருவார் என்பதை பற்றி எழுதுகிறேன்.

இவ்வாறு அனைத்து கிரகங்களையும் மேஷ லக்னத்திற்கு எழுதி முடித்த பின்பு தான் ரிஷப லக்னத்தை பற்றி எழுத முடியும்.  இப்படியாக 12 லக்னங்களுக்கும் அனைத்து கிரகங்களும் துவாதச பாவங்களில் இருக்கும் போது தரும் பலன்களை அலசி எழுதவிருக்கிறேன்.  

என்ன ஒரு கஷ்டம் என்றால் மற்றவர்களைப் போல் தொடர்ந்து பதிவுகள் எழுத நேரம் கிடைப்பதில்லை.  ஆனாலும் நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதி முடித்துவிடுவேன்.

நான் எழுதுவது உங்களுக்கும் எனக்கும் சேர்த்து தான்.  உங்களுக்கு தகவல்களை எழுதும் அதே வேளையில் எனக்கு நானே தகவல்களை தொகுத்து பார்க்க ஒரு வாய்ப்பாக இந்த வலைதளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். 

அடுத்த பதிவில் சந்திப்போம்.

4 comments:

 1. ///அம்சம் என்பது ஒரு கிரகம் எந்த நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருக்கிறது என்பதை அறிவதற்கும். ராசியில் உள்ள கிரகம் அம்சத்தில் எந்த கிரகத்தின் வீட்டில் உள்ளது என அறிய, அதாவது அக்கிரகம் எந்த அம்சத்தில் உள்ளது அதனால் அக்கிரகத்தின் பலன் எவ்வாறு இருக்கும் என்று அறிவதற்கும் பயன்படுகிறது.///

  அண்ணே,திரகோணம்,சப்த அம்சம்,D-30,D-60 இது எல்லாம் என்ன ?

  http://www.vedicastrologer.org/jh/
  பொழுது போக்காக ஜெகநாதன் ஹோரா வாவை நான் உபயோகிக்கிறேன்...இதில் A -Z நெரிய விஷயங்கள் உள்ளது போல தெரிகிறதே ....இதில் KP சிஸ்டம் வேறு உள்ளது...இது பற்றி தங்கள் கருத்து என்ன :)

  ReplyDelete
 2. ///அண்ணே,திரகோணம்,சப்த அம்சம்,D-30,D-60 இது எல்லாம் என்ன ?

  http://www.vedicastrologer.org/jh/
  பொழுது போக்காக ஜெகநாதன் ஹோரா வாவை நான் உபயோகிக்கிறேன்...இதில் A -Z நெரிய விஷயங்கள் உள்ளது போல தெரிகிறதே ....இதில் KP சிஸ்டம் வேறு உள்ளது...இது பற்றி தங்கள் கருத்து என்ன :)////

  வாங்க கிருஷ்ணா!

  இன்றைய பஞ்சாங்க சண்டையில் அம்சமே கேள்விக்குரியதாகிவிட்டதே? சந்திவேளைகளில் பிறந்தவர்களுக்கு ராசி, நட்சத்திரங்களே மாறிவிடும். நிலைமை இப்படி இருக்க திரேகோணம், சப்த அம்சம், D-30, D-60 etc., இதெல்லாம் வைத்து குழப்பிகொண்டால் மண்டையில் இருக்கிற கொஞ்ச நஞ்ச மயிரும் கொட்டிவிடும். இதெல்லாம் தேவையா நமக்கு?

  அப்புறம் ஜகன்நாத ஹோராவில் KP சிஸ்டம் முழுமையாக கொடுக்கவில்லை. நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகளை மட்டும் கொடுத்திருப்பார்கள். இன்னும் விபரம் வேண்டுமானால் வேறு KP சாப்ட்வேர்களை தான் உபயோகிக்க வேண்டும். நம்ம டவுசர் பாண்டி வாயை கிளறினால் நிறைய விஷயங்கள் கிடைக்கும். ஆனால் ஆள்தான் கிடைக்கமாட்டேங்குறார்.

  ReplyDelete
 3. மகரத்தில் சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாயின் நட்சத்திரங்கள் வருகிறது. இவற்றுள் பஞ்சமாதிபதி சூரியனின் நட்சத்திரத்திலோ அல்லது தனது சுய சாரத்திலோ செவ்வாய் இருக்கும் போது ஜாதகருக்கு நன்மையான பலன்களை அதிகம் தருவார். தனது நீசநாதனான சந்திரனின் திருவோணத்தில் நின்றால் சுமாரான பலன்களே கிடைக்கும்.
  super

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.