வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

12 July 2011

கொடுத்தவனே எடுத்து கொண்டாண்டி...

அட அதுக்குள் இன்னொரு பதிவா! ஆச்சரியமாக இருக்கிறதா.  இருக்கட்டும்! இருக்கட்டும்!!  இனிப்பாக இருக்கும் போதே இன்னொரு லட்டு தின்றுவிட வேண்டும்.  ஆசை பூர்த்தியாகிவிடுமல்லவா!

பொதுவாக எனக்கு பதிவு எழுதவேண்டுமெனில் மனதில் ஒரு தெளிவு, உற்சாகம் இருக்கும் போது ஒரு நல்ல செய்தியை பொதுவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுகின்ற போதுதான் நான் பதிவுகளை எழுதுகிறேன்.

இப்போதும் அதே மனநிலையுடன் தான் இந்த பதிவும்.

சரி வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

கொடுத்தவனே எடுத்து கொண்டாண்டி...

கொடுத்தவன் யார்? எமையாளும் இறைவன்!  

கொடுத்ததெல்லாம் கொடுத்தார் ...அதை யாருக்காக கொடுத்தார்?
ஒருத்தருக்கா கொடுத்தார்?  இல்லை ஊருக்காக கொடுத்தார்!

இது நம்ம வாத்தியார் பாட்டு.  

க்க்கும்....  இது எங்களுக்கு தெரியாதாக்கும்,  இதையேன் இங்கு எழுதுகிறாய்!

கொஞ்சம் பொருங்கள்!  விஷயமிருக்கிறது.

ஜோதிடத்தில் பாதகாதிபத்யம் என்றொரு கான்செப்ட் இருக்கிறது. நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அது என்ன பாதகாதிபத்யம், பாதகாதிபதி என்பவர்களுக்காக சிறு விளக்கம்.

ராசிகளில் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று வகைகள் இருக்கிறது.

மேஷம், கடகம், துலாம், மகரம்              -- சர ராசிகள்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்  -- ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம்                 -- உபய ராசிகள்

இவை தங்களுக்குள் ஒன்றிக்கு ஒன்று கேந்திரமாக அமையும்.

ஜோதிடத்தில் லாப ஸ்தானம் என்று 11-மிடத்தை அழைப்பார்கள்.  இந்த உலகமே பொருளுக்காக ஏங்கும் உலகம்.   பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள்.  அப்படியானால் நமக்கெல்லாம் லாபம்!  லாபம்!!  என்றால் வாயில் நீர் ஒழுக தானே செய்யும்.  இந்த உலகில் லாபம் என்றால் வேண்டாம் என்பவர்கள் யார்?

அப்பேர்பட்ட லாப ஸ்தானமானது சர லக்னத்தில் பிறந்த மனிதர்களுக்கு பாதக ஸ்தானம் என்று ஜோதிடம் சொல்லி வைத்திருக்கிறது. நம்ம மொழியில் சொன்னால் ஆப்பெக்ஸ்.  புரியலை! ஆப்புதாங்கோ!!

அடக்கடவுளே! உள்ளதும் போச்சுடா! நொள்ளைக் கண்ணா என்கிறீர்களா! அதுவும் சரிதான்.

ஏன் சர லக்னத்தில் பிறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.  அவர்களுக்கு பார்த்து ஏன் லாப ஸ்தானத்தை பார்த்து பாதக ஸ்தானம் என்று வைத்துவிட்டார்களே என்று கேட்க தோன்றுகிறதா.  கொஞ்சம் பொருங்கள்.

ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இதைவிட பெரிய ஆப்பெக்ஸ் ஒன்று வைத்துவிட்டு போயிருக்கிறார்கள்.

அவர்களுக்கு 9-ஆம் இடம் பாதக ஸ்தானமாம்.

9-ம்மிடம் என்ன லாப ஸ்தானத்தை விட பெரிய ஸ்தானமோ என்று கேட்கிறீர்களா.  கொஞ்சம் டீப்பா போயிரலாமா!

ஜோதிடத்தில் கேந்திரங்கள் என்று 1, 4, 7, 10 ஆகிய இடங்களை சொல்லி வைத்திருக்கிறார்கள்.  இவற்றுள் 1-ஐ விட 4ம் இடம் வலிமையான கேந்திரம், 4ஐ விட 7 வலிமையான கேந்திரம், 7ஐ விட 10ம்மிடம் மிகவும் வலிமையான கேந்திரம்.  ஒரு கட்டிடத்திற்கு நான்கு பக்கமும் உள்ள வலுவான தூண்கள் போன்றது இந்த கேந்திரங்கள்.  இந்த கேந்திரங்களில் கிரகங்கள் அமையப்பெற்றால் அவை வலிமையாக அமைந்து லக்னத்திற்கு நேரடியாக பலன்களை கொடுக்க ஏதுவாக இருக்கும் அமைப்பாகும்.

அவ்வாறே திரிகோண ஸ்தானங்கள் என்று ஒன்று உண்டு. இதனை ஒரு முக்கோணமாக பாவிக்கலாம்.  திரிகோண ஸ்தானங்கள் என்றால் 1, 5, 9 ஆம் இடங்கள் வரும்.  இவற்றில் 1ஐ விட 5மிடம் வலிமையானது.  5ஐ விட 9ம் இடம் மிகவும் வலிமையானது.

லக்னம் கேந்திரமும், திரிகோணமும் ஒருங்கே இணைந்து வரும் அமைப்பாகும்.  ஆனால் மிகவும் வலிமை குறைந்த கேந்திர, கோணங்களாக அமையும்.  ஆனாலும் லக்னத்தில் அமரும் கிரகங்கள் வலிமையாக அமர்ந்து ஜாதகருக்கு நேரடியாக பலன்களை தரும்.

சரி கேந்திரம் பெரிதா! திரிகோணம் பெரிதா!! என்கிறீர்களா?  சந்தேகமே வேண்டாம்.  திரிகோணமே வலிமையானது.  அதிலும் மிகவும் வலிமையான திரிகோண ஸ்தானமாக வருவது 9-ம் இடம்.  உங்கள் லக்னத்திற்கு பாவியான 6, 8, 12 குடைய தீய கிரகங்கள் கூட திரிகோணத்திற்கு வந்தால் தங்கள் தீய குணத்தை மாற்றிக்கொண்டு ஜாதகருக்கு நன்மையே செய்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் திரிகோணத்தின் வலிமையை.

பாக்ய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 9-ம் இடம் வலிமையாக இருந்தால் தான் இந்த உலகில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.  இல்லாவிட்டால் எடுத்ததெற்கெல்லாம் போராட்டம் தான்.  பாக்ய ஸ்தானம் என்பது பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த நல்ல வினைகளின் அறுவடை பலன்கள்.  சட்டியில் (சஷ்டியில்) இருந்தால் தானே அகப்பையில் வரும்.  போன ஜென்மத்தின் பேங்க் பேலன்ஸ் (புண்ணியம், பிராப்த கர்மா) 9-மிடம் தந்தையையும் குறிக்கும்.  அப்பாவின் பேங்க் பேலன்ஸ் இந்த ஜென்மத்தில் நம்மை ஜம்மென்று வாழவைக்கும்.

அப்படிப்பட்ட வலிமையான திரிகோணம் போய் பாதக ஸ்தானம் என்றால் என்ன செய்வார்கள் ஸ்திர லக்னத்தில் பிறந்த ஜாதகர்கள்.  ம்ம்... அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். அதுக்கெல்லாம் ஒரு பாக்கியம், பிராப்தம் இருக்கனும்.

சரி உபய லக்னத்திற்கு வருவோம்.  அவிங்களுக்கு மட்டும் என்ன வாழுதாம்.  சர லக்னத்தாருக்காவது லாபம் தான் இல்லை.  ஸ்திர லக்னத்தாருக்கு பாக்யம் இல்லை. ஆனால் உபய லக்னத்தாருக்கு என்று வைத்தானே இறைவன் 7-ம்மிடத்தை கொடுமைடா சாமி!  அதான் காலம் முழுக்க நம்ம கூடவே இருந்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக காலிபண்ணும் மனைவி ஸ்தானம் தான் அவிய்ங்களுக்கு பாதக ஸ்தானம்.

லாபம் இல்லாவிட்டால் கூட ஏதோ இருப்பதை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டிவிடலாம்.  பாக்கியத்தில் குறையென்றாலும் கூட ஏதோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று குறைபட்டுக்கொண்டு வாழ்ந்து விடலாம்.  ஆனால் மனைவி?!!!.... பாதகமென்றால்  மெல்லவும் முடியாது, முழுங்கவும் முடியாது. வாழவும் முடியாது, சாகவும் முடியாது! இரண்டுகெட்டான் நிலைமை.  இப்போது சொல்லுங்கள் யார் தேவலாம்.

இப்போது பாதக ஸ்தானங்கள் என்றால் எந்தெந்த ஸ்தானங்கள் என்று அறிந்துகொண்டோம்.  பாதக ஸ்தானத்தின் அதிபதி கிரகமே பாதகாதிபதியாவார்.

இந்த பாதக ஸ்தானாதிபதி எந்த ஸ்தானத்தில் அமர்கிறாரோ அந்த ஸ்தானம் ஜாதகருக்கு பாதக பலன்களை தரும்.  இந்த பாதகாதிபதி தீமையான பலன்களை தமது தசா புக்தி காலங்களில் தருவார்.  பாதகாதிபதியை விட பாதக ஸ்தானத்தில் அமரும் கிரகம் அதிக பாதகத்தை தரும் என்பது ஜோதிட விதி.

பொதுவாக ஒரு வீட்டதிபதியை விட அந்த வீட்டில் அமரும் கிரகமே வலிமையாக அந்த வீட்டின் பலனை நடத்தும்.  

இது எப்படியெனில் உங்களுக்கு ஒரு சொந்த வீடு இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.  அந்த வீட்டில் நீங்கள் சகல வசதிகளுடன் நல்ல ஆனந்தமாக, மகிழ்ச்சியாக குடியிருக்கிறீர்கள்.  நீங்கள் வீட்டில் இருக்கும் வரை உங்கள் வீட்டில் நீங்கள் வைத்தது தான் சட்டம்.  உங்கள் விருப்பம் போல டி.வி. பார்க்கலாம், கேரம் விளையாடலாம். இன்னும் என்னனென்னவோ செய்யலாம்.

அப்படி நீங்கள் ஆனந்தமாக இருக்கும் போது உங்களுக்கு வேண்டிய ஒருவர் உங்களிடம் ஒரு உதவியை கேட்டு வருகிறார்கள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.  தாராளமாக அவர் கையும், மனமும் நிறையும் அளவிற்கு போதும் போதும் என்ற அளவிற்கு கொடுப்பீர்கள் அல்லவா!!  உதவி கேட்டு வந்தவர் திக்குமுக்காடி போகும் அளவிற்கு கொடுத்துவிடுவீர்கள்.  இது தான் கிரகங்கள் தங்கள் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கும் போது தரும் பலன்கள்.

இப்படி பட்ட நீங்கள் ஒரு பெரிய அதிகாரி.  உங்களுக்கு பெரிய அலுவலகத்தில் உயர்ந்த பதவி இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.  உங்கள் அலுவலகத்தில் நீங்கள் தான் முதன்மையானவர்.  உங்களுக்கு தான் வானளாவிய அதிகாரம் என்று இருக்கிறது.  நீங்கள் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  நீங்கள் அந்த அலுவலகத்தில் இருக்கும் போது உங்களிடம் உங்களுக்கு வேண்டியவர் உதவி கேட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்.

உங்கள் சொந்த வீட்டில் நீங்கள் அவருக்கு கொடுத்ததையா கொடுப்பீர்கள்.  அவர் என்ன கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் அள்ளி வழங்கி விட மாட்டீர்களா.  அதுவும் கவர்மெண்ட் காசு என்றால் கேட்கவே வேண்டாம்.  நம்ம வீட்டு காசா, பணமா இந்தா என்ன வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று ஒரேடியாக தூக்கி கொடுத்துவிடுவீர்கள் அல்லவா.  இதுதான் கிரகங்கள் உச்ச வீட்டில் இருக்கும் போது தரும் பலன்கள்.  இந்த பலன்கள் ஆட்சி பெற்ற நிலையில் கொடுத்த பலன்களை விட பலமடங்கு அதிகம் இருக்கும்.

இதே நபராகிய நீங்கள் வீட்டிலும் இல்லை, அலுவலகத்திலும் இல்லை.  ஒரு வேலை நிமித்தமாக உங்கள் நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இப்போது உங்களுக்கு வேண்டிய அந்த நபர் உதவி கேட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு அந்த நண்பரின் உதவியோடு உங்களுக்கு வேண்டிய அந்த நபருக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்வீர்கள் அல்லவா!  இது தான் கிரகங்கள் நட்பு வீட்டில் அமர்ந்திருக்கும் போது தரும் பலன்கள்.

நீங்கள், சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்கள் எதிரியின் வீட்டில் அல்லது அவரது ஆதிக்கம் மிகுந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இப்போது அதே நபர் உங்களிடம் உதவி கேட்டு வந்தால் என்ன செய்வீர்கள்.  பாவம்.  ஏம்பா! நானே இங்கன வந்து மாட்டிகிட்டு அவஸ்தை பட்டுகிட்டு கிடக்கிறேன். இங்க இருக்கறவனுங்க எந்த நேரத்தில என்ன பன்னுவானுங்களோ! தெரியலை.  நீ வேற போற இடத்துக்கெல்லாம் வந்து என் உயிரை வாங்கறியே.  சரி! சரி!! என்ன வேண்டும் கேட்டு தொலை என்று நீங்கள் வேண்டா வெறுப்பாக கேட்க.  

வந்தவர் ஐயா! சாமி! எனக்கு நீங்க தான் பார்த்து எதாச்சும் செய்து என்னை வாழவைக்கனும், நீங்க இல்லாட்டி நான் செத்து போயிடுவேன் ராசா! என்று கும்பிடு போட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்.  நீங்க தான் நல்லவராச்சே!  சூழ்நிலையால் உங்களால் அவர் விரும்பியதை செய்ய முடியாவிட்டாலும் உங்கள் கழுத்தில், கையில் இருப்பதையாவது கழட்டி கொடுத்து.  இத பாரு இந்த நேரத்தில என்னால இத தான் செய்ய முடியும்.  இத வச்சிகிட்டு எப்படியாவது பொழைச்சிக்கோ.  எனக்கு வேற வழி தெரியலை என்று கொடுத்துவைப்பீர்கள் அல்லவா!  இது தான் கிரகங்கள் பகைவீட்டில் இருக்கும் போது செய்யும் பலன்கள்.

நீங்கள் எதோ ஒரு சூழ்நிலையில் ஜெயிலில் அல்லது காவல் நிலையத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.  இப்போது பார்த்து அந்த நபர் உங்களிடம் உதவி கேட்டால் என்ன செய்வீர்கள்.  அட போப்பா இங்கன நானே டவுசரு கழண்டு போய் கிடக்கிறேன்.  என்னைய காப்பத்தவே வழியை காணோம். இதில உனக்கு என்னத்த செய்யறது.  நானே இங்க சோத்துக்கு பிச்சை எடுத்துகிட்டு கிடக்கிறேன். இங்கயும் வந்து என்னை தொந்தரவு பண்ணாதே! போ! போ! என்று விரட்டாத குறையாக துரத்திவிடுவீர்கள் அல்லவா!  இது தான் கிரகங்கள் தங்கள் நீச்ச வீட்டில் இருக்கும் போது தரும் பலன்கள்?!!....

இப்போது புரிகிறதா கிரகங்கள் தங்கள் வீட்டின் பலன்களை விட தாங்கள் அமர்ந்த வீட்டின் பலன்களை தான் ஜாதகருக்கு அதிகம் வழங்குகின்றன.

சரி பாதக ஸ்தானத்தின் உண்மையான தாத்பரியம் என்ன?

ஜோதிடத்தில் விதியென்று இருக்குமானால் அதற்கு விளக்கமும் இருக்கும்.  நாம் விதியை மட்டும் அப்படியே பயன்படுத்துவோம்.  அதற்கான விளக்கம் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது.

கிரகங்களில் குரு, சனி, செவ்வாய் போன்றவர்கள் சிறப்பு பார்வை பார்க்கும் தன்மை பெற்றவர்கள்.  ஆனாலும் அனைத்து கிரகங்களும் தான் அமர்ந்த வீட்டிற்கு 7-ம் வீட்டை நேர் பார்வையாக பார்ப்பார்கள்.  இது ஏறக்குறைய அனைத்து ஜோதிடர்களும் அறிந்த உண்மை.

கிரகங்களுக்கு மட்டும் தான் பார்வை இருக்கிறதா.  ராசிகளுக்கும் பார்வை இருக்கிறது.

என்ன புரியவில்லையா?  குழப்பமாக இருக்கிறதா?

ஆம் ராசிகளும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும் தன்மை உடையவை.

ஆகாயத்தில் ராசிக்கட்டம் என்று பிரித்து வைத்திருந்தார்களே ஜோதிடத்தை உருவாக்கிய முனிவர்கள்.  அப்படி என்றால் என்ன?

27 நட்சத்திரங்கள் என்றால் வெறும் 27 எண்ணிக்கையிலான நட்சத்திரங்கள் மட்டுமில்லை அவை.  பல நட்சத்திரங்களின் கூட்டம் தான் ஒரு நட்சத்திரம் என்று அவர்கள் அழைத்தார்கள்.  அதாவது அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள்.  வானில் குதிரை போன்று அமைப்புடைய நட்சத்திரங்களின் கூட்டத்தையே அஸ்வினி நட்சத்திரம் என்று பெயர் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
அப்படியான நட்சத்திர கூட்டங்களை 27 பிரிவுகளாக பிரித்து அவற்றை ஒவ்வொன்றையும் 4 பாதங்களாக மாற்றி அந்த நான்கு பாதங்களும் மற்றும் வேறு ஒரு நட்சத்திரத்தின் மற்ற பாதங்களும்  ஆக 9 பாதங்களை கொண்டது ஒரு ராசி என்று பிரித்தார்கள்.  அதனுடைய தோற்றம் ஆடு போன்று இருந்ததால் அதன் பெயர் மேஷம்.  இப்படி போகிறது கதை.

அப்படியானால் ஒவ்வொரு ராசியிலும் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கக்கூடும்.  அவற்றின் பிரகாசம் வான மண்டலத்தில் எவ்வளவு இருக்கும்.  ஒவ்வொரு ராசியும் எவ்வளவு ஒளியுடன் திகழும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.  

நாம் சூரியன் என்று அழைக்கிறோமே அவரே ஒரு நட்சத்திரம் தான்.  என்ன அவர் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அவரது பிரகாசம் அதிகமாக இருக்கிறது.  அவரைப்போன்று பல கோடி சூரியன்களை போன்றவை நட்சத்திரங்கள்.  அவை நமக்கு வெகு தொலைவில் உள்ளதால் நமக்கு மிகச் சிறியதாக தெரிகிறது.  உண்மையில் அவை ஒவ்வொன்றும் ஒரு சூரியன்கள் என்றால் நினைத்து பார்க்கவே பிரம்மாண்டமாக இருக்கிறதல்லவா!  எவ்வளவு பெரிய அறிவாற்றல் மிக்கவர்கள் ஜோதிடத்தை ஏற்படுத்திய மகான்கள்.

இந்த நட்சத்திரங்கள் கூட்டமாக நிரம்பிய இடம் தான் ராசி சக்கரம்.  ஒவ்வொரு ராசியும் ஏராளமான ஒளியை பெற்று திகழும்.  இவற்றுள் ஒரு ராசியின் ஒளி மற்றொரு ராசியின் மீது விழுவதால் ஏற்படும் விளைவுகளையே பாதக ஸ்தானம் என்று பெயர் வைத்தார்கள்.

ராசிகளில் சர ராசியானது ஸ்திர ராசியை பார்க்குமாம்.

ஸ்திர ராசியானது சர ராசியை பார்க்கும்.

உபய ராசியானது உபய ராசியை பார்க்கும்.

சரம், ஸ்திரம், உபய ராசிகள் யாவை என்று ஆரம்பத்திலேயே கூறியிருக்கிறேன்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளின் ஒளிகள் அந்த ராசிகளுக்கு 11-ம் ராசியான ஸ்திர ராசியின் மீது விழுமாம்.  ஏற்கனவே அந்த ராசிகளுக்குள்ளேயே ஏகப்பட்ட ஒளிவெள்ளம்.  இந்த நிலையில் வேறொரு ராசியில் இருந்து வேறு ஒளி வந்து விழுந்தால் அந்த ராசியின் நிலை என்னவாகும்.  அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமல்லவா!! அதான் பாதக ஸ்தானம். இப்போது புரிகிறதா?!!.....

இவ்வாறே ஸ்திர ராசிகளின் பார்வை சர ராசிகளான 9-ம் வீட்டின் மீதும்.  உபய ராசிகளின் பார்வை உபய ராசிகளின் மீதும் விழுவதால் அவை பாதக ஸ்தானங்களாகின்றன.

அப்படியென்றால் எல்லா சர ராசிகளும் ஏன் மற்ற ஸ்திர ராசிகளை பார்க்கவில்லை.  சர ராசிகள் 11-மிட ஸ்திர ராசியை மட்டும் பார்க்கும் படி தான் வான மண்டலத்தின் அமைப்பு இருக்கிறது.  அதனால் தான் அவ்வாறு அமைந்தது.


இது தான் பாதக ஸ்தானம் என்று அமைத்ததின் தாத்பரியம்.  பாதக ஸ்தானத்தில் உள்ள கிரகங்களும், பாதகாதிபதியும் ஜாதகருக்கு நன்மையை தனது தசாபுக்தி காலங்களில் செய்வதில்லை.  மாறாக தீமையான பலன்களை செய்துவிடுகின்றன.

கொடுத்தவனே எடுத்து கொண்டாண்டி... (தலைப்பு மேட்சாகுதுங்கோ!)

இவ்வாறு ஜோதிடத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் ஏகப்பட்ட காரண காரியங்கள் இருக்கின்றன.  நமது சிற்றறிவிற்கு அவை எட்டாததாலும், உணர்ந்தவர்கள், அறிந்தவர்கள் யாரும் நமக்கு விளக்கி சொல்லாததாலும் நமக்கு கிடைத்த விஷயங்களை வைத்து ஒப்பேற்றிகொண்டிருக்கிறோம்.

நான் எழுதியதிலேயே மிகப்பெரிய பதிவு இதுவாக தான் இருக்கும்.  இந்த சாதனையையும் இன்னொரு நாள் நானே முறியடிப்பேன்.  படிக்கதான் யாருமில்லை. சரி, வர்ட்டா.........

இன்னும் வரும்...

11 comments:

  1. அன்புடன் வணக்கம் தோழரே,

    மிகத் தெளிவான, பொறுமையான அலசல்..
    அடிப்படையிலிருந்து நடத்துவதாக படுகிறது..
    இதுதான் வேண்டும்..

    ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று
    தனித்தனியே சுட்டியுள்ள பாங்கு அருமை..

    எல்லாம் சரி...
    உடனடியாக நீங்கள் அடுத்த ஆக்கம் தந்தேயாக வேண்டும்..

    ஆம் பாதக ஸ்தானம் குறித்து சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பிக்கும் வழியை சொல்லாவிட்டால் எப்படி ?

    ஏன் எனில் தெரிந்தோ தெரியாமலே ?
    விரும்பியோ விரும்பாமலோ ?
    கஷ்டத்திற்கு ஆட்பட்டாக வேண்டும் என்பது விதி..

    ஆனால் ..
    அதிலிருந்து விலகும் வழி ...
    எல்லோருக்கும் தெரியாதே ?

    தங்களைப் போன்ற கற்றோர் தானே சொல்ல வேண்டும் ..

    எனவே தயவு செய்து உடனடியாக சர, ஸ்திர, உபய ராசிக்காரர்கள் ( லக்கினத்தார் ) என்ன செய்து இந்த பாதகத்திலிருந்து தப்பிக்கலாம் என்று சொன்னால்
    பெரும் புண்ணியமாய் போகும்..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  2. வாங்க! திரு. ஜா.ரா! உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

    //பாதக ஸ்தானம் குறித்து சொல்லிவிட்டு அதிலிருந்து தப்பிக்கும் வழியை சொல்லாவிட்டால் எப்படி ?//

    என்ன பரிகாரம் செய்யலாம் என்று தானே கேட்கிறீர்கள். அதைபற்றிதான் நம்ம தலை முருகேசன் அண்ணாச்சி விலாவரியாக எழுதியிருக்கிறாரே.

    //உடனடியாக சர, ஸ்திர, உபய ராசிக்காரர்கள் ( லக்கினத்தார் ) என்ன செய்து இந்த பாதகத்திலிருந்து தப்பிக்கலாம் என்று சொன்னால்
    பெரும் புண்ணியமாய் போகும்..//

    ரொம்ப அவசரமோ! பரிகாரம் பற்றி நினைக்கும் போது எனது நினைவிற்கு வந்த குறள்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.

    பொருள்: ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே (ஊழே) முன் வந்து நிற்கும்.

    இறைவன் மிகப்பெரியவன். அவனின்றி ஒரு அணுவும் அசையாது. தாங்கள் அறியாததா! நன்றி.

    ReplyDelete
  3. //படிக்கதான் யாருமில்லை. //

    அண்ணே நாங்க இருக்கோம் படிக்க ....
    வரலாறு ரொம்ப முக்கியம்னே.....நீங்க எழுதுங்க ...
    வருங்கால தலை முறை உங்களை வாழ்த்தும்
    இது எல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்க பட வேண்டிய முத்துச் சிதறல்கள் :)

    ReplyDelete
  4. உங்கள் ஆதரவிற்கு நன்றி ராஜா!

    ReplyDelete
  5. Pls explain the meaning of "vakram"

    ReplyDelete
  6. வக்கரம் பற்றி நிச்சயம் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்ல வேளை ஞா. படுத்திட்டீங்க. அனேகமா அடுத்த பதிவு வக்ரம் பற்றியதாக தான் இருக்கும்.

    ReplyDelete
  7. @தனி காட்டு ராஜா

    //இது எல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிக்க பட வேண்டிய முத்துச் சிதறல்கள் :) //

    இதுல உள்குத்து எதுவும் இல்லையே :)

    ReplyDelete
  8. நல்ல பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள். மனந்தளராதீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @Rathnavel

    உங்களின் ஊக்கத்திற்கு நன்றி.

    ReplyDelete
  10. நன்றி ஐயா

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.