வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

11 July 2011

சந்திரனை தொட்டது யார்...... அட நான் தானே......

சென்ற பதிவில் மனதின் ஆற்றல்களையும், அதனை நெறிப்படுத்தினால் நம்மால் செய்ய முடியாத விஷயங்களே இல்லையென்பதையும் எழுதியிருந்தேன்.

சரி எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடலமைப்பு தானே இருக்கிறது.  அவர்களது மனமும் அவ்வாறே இருக்கிறதா என்றால் இல்லை.  மனம் தான் மனிதனை வேறுபடுத்தி வைத்திருக்கிறது.  எல்லோராலும் மனதை எளிதாக வழிக்கு கொண்டு வந்துவிட முடியுமா? என்றால் அது தான் இல்லை.

சரி என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிறீர்களா? அந்த அமைப்பும் நமக்கு வாய்க்க வேண்டும்.  வாய்ப்பது என்றால்...? அட நாம் பிறக்கும் போது சந்திரன் அமையும் நிலையை தான் சொன்னேன்.  எதுவும் இயல்பிலேயே இருக்கப்பெற்றவர்கள் தான் அந்த தன்மையை அடைய முடியும் என்கிறேன் நான்.  அப்படியென்றால் நாம் சுயமாக முயற்சிசெய்தால் நம்மால் முடியாது என்கிறீர்களா என்று கேட்டால்? எனது பதில் ஓரளவிற்கு முடியுமே தவிர முழுமையாக அத்தகைய அமைப்பு இல்லாமல் நம்மால் வெற்றி பெற முடியாது என்பதே.

அதனை தான் திருவள்ளுவரும்,

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். -- என்கிறார்.

பொருள்: ஊழியின் (கர்மவினையின்) காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

இங்கு தெய்வத்தால் ஆகாத செயல் யாது? நாம் பெற்று வந்த கர்மவினை தான்.  அதனை மாற்றுவது என்பது நம்மை படைத்த இறைவனாலும் இயலாது என்பதை தான் வள்ளுவர் அவ்விதம் குறிப்பிடுகிறார்.

அப்படியென்றால் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்கிறாரே என்றால். தெய்வத்தால் ஆகாத செயல்கள் முயற்சியால் ஆகும் என்று அவர் கூறவில்லை.  அதனை நீங்கள் மாற்ற முனைந்த அளவிற்கு உழைக்கும் போது அதனால் ஏற்படும் சிறு முன்னேற்றமே உங்களுக்கு நன்மை பயக்கும்.  அதாவது நமது முயற்சி கர்மவினைகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தும் அல்லது அவற்றை தாங்கும் வலிமையை தரும்.  அதனையே வள்ளுவர் கூலி என்று எளிமையாக எடுத்தாள்கிறார்.  அந்த கூலியை பெறவே நாம் மெய்வருத்த உழைத்தாக வேண்டும்.  உழைக்காதவர்கள் கிரகங்களின் காலில் மாட்டிய பந்து கதைதான்.

மனம் அடங்கும் அமைப்பு இல்லாதவர்களாயினும் அவர்கள் அதற்கான பயிற்சியில் தொடர்ந்து முயலும் போது அவர்களுக்கு அவர்கள் வாழ்வில் அதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் அவர்களின் செயல்களில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.  நன்மை தீமைகளை உணரப்பெற்றிருப்பார்கள்.  அவர்கள் அந்த முயற்சியையும் செய்யாமலிருந்தால் அவர்கள் முன்பு எவ்வாறு இருந்தார்களோ அவ்வாறு தான் இறுதிவரை வாழ்ந்து மடிவார்கள்.  அவர்களுக்கு மனதளவில் முன்னேற்றம் என்பது இல்லை.

உலகில் நிறைய பேர் இருக்கிறார்கள்.  வயதாகிறதே தவிர எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும்.  யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் பழக்கத்தால் அதை தவிர்க்க முடியாமல் ஒரு மாதிரி நொய் நொய் என்று அரித்துக்கொண்டிருப்பார்கள்.  பார்த்தால் பழுத்த பழம் மாதிரி தெரிவார்கள்.  சமயம் கிடைத்தால் இந்த பூனையும் பால் குடிக்கும் என்பதை காட்டிவிடுவார்கள். 

மனிதன் வளர வளர பக்குவப்படுகிறான்.  கையை நீட்டி, மூக்கை நுழைத்து, நாக்கை விட்டு அறுபட்டு முட்டி, மோதி வாழ்க்கை அவனுக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது.  அனுபவம் எதை எப்படி செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று கற்றுத்தருகிறது.  வாழ்க்கை தரும் பாடங்களை, படிப்பினைகளை கற்றுணர்ந்தவர்கள் அதனை தானும் கைக்கொண்டு பிறருக்கும் சொல்லி வழிகாட்டுகிறார்கள்.  

வாழ்க்கையில் கடைசி பெஞ்ச் கண்மணிகள் சிலர் மட்டும் வாழ்க்கை நடத்தும் பாடத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் பரீட்சையில் கோட்டை விட்டுவிடுகிறார்கள்.  அதன் விளைவு!  துன்பம் தான்.

சரி வாங்க விஷயத்துக்கு வருவோம்.

சந்திரன் மனதை குறிப்பவர் அல்லவா? சந்திரன் நல்ல நிலையில் லக்னத்திற்கு கேந்திர, கோணங்களில் குருவுடன் இணைந்தோ, அல்லது குருவால் பார்க்கப்பட்டோ இருக்கப் பிறந்தவர்கள் தெளிந்த நீரோடை போன்று இருப்பார்கள்.  அவர்களிடம் எதிலும் ஒரு தெளிவு இருக்கும்.  

குரு அறிவிற்கு காரகன் அல்லவா! குருவோடு இணையும் சந்திரன் எதையும் அறிவுடன் ஆராயும் தன்மையை தரும்.  அப்படியென்றால் அறிவு என்பது என்ன? அறிவு என்பது நமது வாழ்வில் நாம் அறிந்த விஷயங்கள், அவை படிப்பறிவாகவோ அல்லது அனுபவ அறிவாகவோ இருக்கும்.  

அந்த அறிவுக்கு காரகனான குருவுடன் நமது எண்ணங்களுக்கு காரகனான சந்திரன் இணையும் போது என்ன நடக்கும்.  நமது கடந்த கால வாழ்வில் நாம் அறிந்த விஷயங்கள், படிப்பினைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அவற்றின் நன்மை தீமைகளை விளைவுகளோடு ஆராய்ந்து பின்பு செயல்படுத்தி வெற்றி காண்பார்கள்.

நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களும் ஆராய்வார்கள் எப்படி தெரியுமா  கோழியிலிருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையிலிருந்து கோழிவந்ததா? என்று அதற்குள் ஆம்லேட் வந்துவிடும்.  குழப்பிக்கிற குட்டை கேஸ்கள் தான்.

எண்ணம் போல் வாழ்வு.  

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.  -- என்றார் வள்ளுவர்.

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை  எண்ணியவாறே அடைவர்.

அத்தகைய உறுதி எவ்வாறு கிடைக்கப்பெறும் என்பதை தான் மேலே விளக்கியிருக்கிறேன்.

பார்த்தீர்களா! வள்ளுவர் ஒரு தலைச்சிறந்த ஜோதிடராக இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை எவ்வாறு எளிமையாக எழுதிவைத்து சென்றுள்ளார்.  இன்றும் வள்ளுவ குலத்தில் உதித்த பல சான்றோர்கள் ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவாற்றல் பெற்றவர்களாக இருக்க கண்டிருக்கிறேன்.  அவர்கள் கூறும் பலன்கள் அப்படியே நடந்தேறும்.

மேலும் சந்திரன் லக்னத்திற்கும் மறையாமல் இருக்க வேண்டும்.  லக்னத்திற்கு மறைந்துவிட்டால் என்ன ஆகும்.  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று பாட ஆரம்பித்துவிடுவார்கள்.  அவர்கள் நினைப்பது ஒன்று அவர்களுக்கு நடப்பது ஒன்றாக இருக்கும். அதாவது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை தான்  தும்பிகையை இறைவன் மாற்றி வைத்துவிடுவான்.

லக்னம் என்பது நமது தலையை குறிக்கும்.  தலையில் என்ன இருக்கிறது. மூளை இருக்கிறது. அது களிமண் கலரில் இருப்தாலோ என்னவோ தலையில் என்ன களிமண்ணா இருக்கிறது என்று கேட்கிறார்களோ என்னவோ?!.  இல்லையில்லை அந்த களிமண்ணை நமக்கு வேண்டிய வடிவில் உபயோகிக்க நாம் மூளையை பயன்படுத்துவதால்  நமது மூளைக்கு களிமண் என்றொரு பெயர் பொருத்தமானது தான். 

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், சிந்தனைகள் மூளைக்கு சென்று செயல் வடிவம் பெறுகின்றன.  அந்த மூளைக்கு காரகன் குரு பகவான்.  அதனால் தான் அறிவிற்கு குரு காரகனாகிறார்.  மனதிற்கு காரகன் சந்திரன்.  எனவேதான் எண்ணங்கள், செயல்களாக வேண்டுமென்றால் குரு சந்திரன் தொடர்பு லக்னத்திற்கு மறையாமல் இருக்க வேண்டும் என்று எவ்வளவு பொருத்தமாக கொடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

சந்திரன் மறைந்தால்,  நீச்சம் பெற்றால் அல்லது குருவோடு தொடர்பு இல்லையென்றால் என்ன ஆகும்.  ஆகாச கோட்டை கட்ட மட்டுமே பயன்படும். கனவுலகில் வாழ்ந்து கனவிலே காலம் சென்றுவிடும்.  எது வாழ்வில் நடக்காதோ, சாத்தியமில்லையோ அந்தமாதிரியான விஷயங்களாக பார்த்து லட்சியமாக எடுத்துக்கொண்டு அது நடந்தால் எப்படி இருக்கும்.  அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்று சொல்வதால் தனக்கும், பிறருக்கும் யாதொரு பயனும் இல்லை.

பூனை கருப்போ, வெள்ளையோ அது எலியை பிடித்தாக வேண்டும்.  இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்.

சந்திரன், சனியோடு இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருக்கப்பிறந்தால் சதா அவர்கள் மனதில் எதாவது ஒன்றை அலசிக்கொண்டே இருப்பார்கள்.  சட்டென்று ஒரு முடிவிற்கு வர மாட்டார்கள்.  எதிலும் எளிதில் திருப்தி பட மாட்டார்கள்.  மேலும் மேலும் என்று ஆழத்திற்கு சென்றுக்கொண்டே இருப்பார்கள்.  தன்னையும் இறைவனையும் அறியும் அவர்களது ஆராய்ச்சி மட்டும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சந்திரன் செவ்வாயுடன் தொடர்பு கொண்டால் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள்.  அறிவுநிலையில் எதையும் ஆராய்ந்து செயல்பட உணர்ச்சிகள் இடம் கொடுக்காது.  கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்றால் கேட்கவா போகிறார்கள்.  ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள்.

சந்திரன் புதனோடு தொடர்பு கொண்டால் சமயோசித புத்தியுடையவர்கள், நேரத்திற்கு, இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள்.  இந்த இணைவுடன் குரு சம்பந்தம் (சேர்க்கை அல்லது பார்வை) ஏற்பட்டு லக்னத்திற்கு கேந்திர, கோணமாக அமைந்தால் அதுதான் சிறந்த ஜோதிடராக இருக்க கிரக நிலைகள்.

சந்திரன் சூரியனோடு இணைந்தால் அது அமாவாசை யோகம், சம சப்தமாக இருந்தால் பௌர்ணமி யோகம்.  சூரியன் விழிப்பை குறிப்பவர், சந்திரன் கற்பனையை குறிப்பவர் இவர்கள் இருவரும் இணைகின்ற நிலை என்பது சந்திரனுக்கு பாதகமான நிலைதான் என்பது தான் உண்மை.  
 
சூரியனோடு மற்ற கிரகங்கள் இணையும் போது அஸ்தமனமாகும்.  அதாவது சூரியனின் ஒளியில் அந்த கிரகங்கள் மறைந்து போகும். அந்த கிரககங்களின் காரகபலன்களை சூரியனே பெற்று தனது தசா புக்திகளில் செய்வார்.  ஆனால் சந்திரனுக்கு அஸ்தமன தோஷம் இல்லை அதற்கு பதில் அமாவாசை (தோஷம்) யோகமாம்.

அமாவாசையில் சந்திரன் ஒளியற்று காணப்படுகிறார்.  சந்திரனின் சிறப்பே அதன் பூரண ஒளிதான்.  அதை இழந்துவிடும் சந்திரன் தரும் பலன்கள் எப்படி இருக்கும்.  சந்திரன் தாய்க்கு காரகன் என்று ஜோதிடத்தில் கூறுவார்கள்.  அத்தகைய தாயின் அன்பை அமாவாசையில் பிறந்த குழந்தைகள் பெற இயலாத நிலை ஏற்படும்.  தாயன்பு பெறாமல் வளர்ந்த குழந்தைகள் மென்மையான மனம் படைத்தவர்களாக இருப்பதில்லை.  அவர்கள் செய்யும் செயல்களிலும் பாவ, புண்ணியங்கள் பார்க்க மாட்டார்கள்.  தான் வாழ எதைவேண்டுமானாலும் செய்யும் ஒருவித குரூர மனப்பான்மை அவர்களிடம் இருக்கும்.

சந்திரன் சுக்கிரனோடு இணையப் பெற்றவர்கள் நல்ல கலையார்வம் மிக்கவர்கள்.  ஆடல், பாடல், ஆனந்தம் என்று அவர்கள் மனதில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.  சந்திரன் மனதிற்கு காரகன், சுக்கிரன் கலைகளுக்கு காரகன், பெண்களுக்கு காரகன்.  இந்த இணைவு சதா எப்போதும் பெண்களை சுற்றி சுற்றியே வரும் வண்டாக இருக்க வைக்கும். அவர்கள் மனதிலும் அதன் தாக்கம் அதிகம் இருக்கும்.

சந்திரன் ராகு, கேதுக்களோடு இணைவது கிரகண தோஷம் ஆகும்.  ராகுவோடு இணைந்த சந்திரன் ராகுவின் காரகங்களை மனதில் அதிகம் ஏற்படுத்துவார்.  ரகசியமான உளவு வேலைகள், பொய், களவு, ஏமாற்றுதல் போன்ற தீய பலன்களும் ஏற்படும்.  கேதுவோடு இணைந்த சந்திரன் ஞான மார்க்கத்திற்கு வழிகாட்டுவார்.  கேது பகை நீசம் போன்ற நிலைகளில் சந்திரனுடன் குரு பார்வையின்றி இணைந்திருந்தால் போலி சாமியார், கஞ்சா, அபின், போதை பழக்கம் போன்றவற்றிற்கு மனம் நாடும்.

அப்பாடா ஒரு வழியாக பதிவு போட்டாயிற்று.  இப்போது சொல்லுங்கள் 

சந்திரனை தொட்டது யார்............. நான் தானே! (தலைப்பு மேட்சாகுதுங்கோ!)

சும்மா கொஞ்சம் தொட்டு தொட்டு பேசும் தென்றல் போல எழுதிய கட்டுரை இது.. டீப்பா போகனும்னா ஜாதகத்தை பார்க்னும்ங்கோ!  வர்ட்டா........

இன்னும் வரும்...

3 comments:

 1. அற்புதம் நண்பரே..

  உங்களுடைய அறிமுகம் கிடைத்த பின்னர் நான் வாசிக்கும் புதிய பதிவு இதுவே எனலாம்..

  நீண்ட இடைவெளி விட்டுவிட்டீர்கள் இல்லையா ?

  போகட்டும்..

  கட்டுரைக்கு வருகிறேன்..

  அருமை அருமை..

  என்ன தெளிவான நடை ?

  அதிலும் பலரும் கையாள சிரமப்படும் திருக்குறளுக்கு..

  தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
  மெய்வருத்தக் கூலி தரும். -- என்கிறார்.

  தாங்கள் தந்துள்ள விளக்கம்..

  சூப்பர்..

  இரண்டாவது திருக்குறளுக்கும் அப்படியே

  அடுத்து..

  தங்களுடைய அறிவுத்திறம் வெளிப்பட்டுள்ள இடம்..

  //பார்த்தீர்களா! வள்ளுவர் ஒரு தலைச்சிறந்த ஜோதிடராக இருக்க வேண்டும்.//

  இறுதியாக சந்திரனுக்குரிய பலன்கள்

  என யாவும் அற்புதம் நண்பரே.

  வாழ்த்த வார்த்தைகளே இல்லை..

  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூ போல
  தாமதமாக ஆக்கம் தந்திருந்தாலும..

  இது ஒரு குறிஞ்சிப் பூவே...

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 2. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!

  உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகள் எனக்கு கிடைத்தது நான் செய்த பாக்கியம். உங்களது வாழ்த்துக்கள் என்னை மேன் மேலும் எழுத உற்சாகப்படுத்துகின்றது.

  இனியும் இது போன்ற ஆக்கங்களை தொடர்ந்து எழுதுகிறேன்.

  ReplyDelete
 3. //சந்திரன், சனியோடு இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டோ இருக்கப்பிறந்தால் சதா அவர்கள் மனதில் எதாவது ஒன்றை அலசிக்கொண்டே இருப்பார்கள். சட்டென்று ஒரு முடிவிற்கு வர மாட்டார்கள். எதிலும் எளிதில் திருப்தி பட மாட்டார்கள். மேலும் மேலும் என்று ஆழத்திற்கு சென்றுக்கொண்டே இருப்பார்கள். தன்னையும் இறைவனையும் அறியும் அவர்களது ஆராய்ச்சி மட்டும் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.//

  உண்மை தான் அண்ணா :)

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.