வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

14 March 2011

இயற்கையை எவராலும் மீற முடியாது



இயற்கையை எவராலும் மீற முடியாது. ஆம்! இறைவனே இந்த பூவுலகில் பிறந்து வந்தாலும் அது தான் நிதர்சனமான உண்மை. 
 
இராமாயண காவியத்தில் மகா விஷ்ணுவே இராமனாக அவதரித்தார்.  அரசர் குலத்தில் பிறந்தாலும் அவர் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதை நாம் அனைவரும் அறிவோம்.   இறைவனே அவ்வாறு துன்பத்தை அனுபவித்து நமக்கெல்லாம் படிப்பினையாக வாழ்ந்து காட்டினார்.  நாமெல்லாம் சாதாரண மானிடர்கள் நமது சக்தியெல்லாம் இங்கு எடுபடாது. லோக்கல் பாஷையில் சொன்னால் உங்க பப்பு இங்க வேகாதுடோய்!!.

ராவணன் எப்பேர்பட்ட வீரன்,  பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன், சிவபக்தன்,  நவக்கிரகங்களையெல்லாம் தனது படிக்கட்டில் கட்டி அதன் மீது ஏறி நடந்து சென்றுதான் தினமும் அரியணையில் அமர்வானாம்.  அப்பேர்பட்ட கொம்பனையெல்லாம் விதி வீழ்த்திவிட்டது நாமெல்லாம் எம்மாத்திரம்.

சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தையும், சுனாமி பேரலையும் ஏற்படுத்திய பேரழிவு காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை.  அப்பப்பா எத்துணை துயரம்.  ஜப்பான் எப்பேர்பட்ட நாடு நாமெல்லாம் ரேடியோவில் செய்தி கேட்ட காலத்தில் அவர்கள் தொலைதொடர்பு  தொழில்நுட்பத்தில் எங்கோயோ சென்றுவிட்டனர்.  அப்படிபட்ட அறிவும், ஆற்றலும், கடின உழைப்பும் மிக்கவர்கள் ஜப்பானியர்கள்.  அவர்களிடம் இல்லாத நவீன தொழில் நுட்பங்களே இல்லை எனலாம்.

எப்பேர்பட்ட நிலநடுக்கத்தையும் தாங்கும் நவீன தொழில்நுட்பத்தில் வீடுகளை ஜப்பானியர்கள் அமைத்திருந்தனர்.  ஆனால் இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் அவையனைத்தும் சாதாரண விளையாட்டு பொம்மைகளாகிவிட்டன பார்த்தீர்களா!  ஆம்! இயற்கையை எவராலும் வெல்லவே முடியாது.  நாம் ஒரு வழியில் சென்றால் அது வேறுவழியில் வந்து நம்மை காலி செய்துவிடும்.

இயற்கையை மதித்து, இயற்கையை வணங்கி, இயற்கையின் வழியில் குறுக்கிடாமல் மனிதன் வாழும் வரை இயற்கை தன்னிடம் உள்ள எல்லா  வளங்களையும், நன்மைகளையும் அளித்து நம்மை செம்மையாய் வாழ வைக்கும்.  இயற்கையின் வழியில் ஓரளவிற்கு மேல் குறுக்கீடு செய்தால் பின்பு மனிதன் பந்தாடப்படுவான் என்பது தான் சமீபத்திய ஜப்பான் நிகழ்வுகள் நமக்கு சொல்லும் செய்தி.

மனிதன் இந்த உலகில் பிறந்தது முதல் இறப்பு வரை எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்கிறான்.  புதிய கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி என்று என்னவெல்லாம் வந்துவிட்டாலும் இயற்கையின் முன்பு அவன் சிறு குழந்தைக்கு சமமாவான்.  எனவே ஆணவம் கொண்டு பிறரை அழிக்க முற்படுபவர்கள் தானே அழிந்து போவார்கள்.  மனிதன் தன்னிடம் உள்ளதை பிறருக்கு பகிர்ந்தளிக்க தவறிவிட்டான்.  அது செல்வமானாலும் சரி, அறிவு சார்ந்த விஷயமானாலும் சரி!  இருப்பவர்கள் இல்லாதவருக்கு அளித்து சமதர்மமாக வாழ்வதே அமைதியான, மகிழ்ச்சியான வாழ்கைக்கு வழி.

மனிதன் ஆணவத்தால் தனக்கு தானே சவக்குழியை வெட்டிக்கொண்டு பரிதாபமாக அதில் தானே விழுந்துகொண்டிருக்கிறான் என்பதையே அவனது கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.  ஆம் அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமேயல்லாமல் அவற்றை அழிவிற்கு பயன்படுத்தியதால் தான் முன்பு ஜப்பான் தரைமட்டமாகியது.  தற்போது அதே ஜப்பான் தனது அணுசக்தி நிலையங்களை பெரும் ஆபத்தில் விட்டுவிட்டது.  அதனால் மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாகியுள்ளது.

பாதுகாப்பிற்கு வைத்துள்ள கத்தியானது அதை வைத்திருப்பவனையே பதம் பார்ப்பது போல் அணுசக்தியானது மனித குலத்தினை முற்றிலும் அழித்துவிடுமோ என்ற அச்சம் இன்று நம்மிடையே தலைப்பட  துவங்கியுள்ளது.  என்னதான் பாதுகாப்பிற்காக என்றாலும் கத்தியை பயன்படுத்துவது சரியான வழிமுறையாகாது என்பதை போல இன்று அணுசக்தியை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்றாலும் அது நம்மை என்றாவது ஒருநாள் நிச்சயம் அழிக்கப்போவது உறுதி.

ஏன் இந்த விஷப்பரீட்சை, உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் அழிக்கப்படல் வேண்டும்.  இயற்கையின் வழியில் மனிதன் வாழ தலைப்படல் வேண்டும்.  அதுவே நம்மை என்றும் அச்சமின்றி வாழ துணைபுரியும்.

இந்த மனித வாழ்வு நிலையற்றது.  மாயை சூழ்ந்தது  ஆனால்  இவற்றை உண்மை என்று நம் மனம் நம்புகின்றது.  ஆனால் உண்மையான பரம்பொருளை நம் மனம் சந்தேகிக்கிறது.  நமது ஊணக் கண்ணால் கண்டால்தான் உண்மை என நம்புவேன் என்று அடம்பிடிக்கிறது.  ஞானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறது.  இதற்கு சொன்னால் புரியாது பட்டால் தான் புரியும் போலும்.

முற்பிறவி, மறுபிறவி என்றெல்லாம் இருக்கிறதா! நான் முற்பிறவியில் என்னவாக இருந்தேன், மறுபிறவியில் என்னவாக ஆவேன் என்று புத்தரிடம் ஒருவன் கேட்டானாம்.  அதற்கு புத்தர் சொன்னது பிறந்துவிட்டோம் இவ்வுலகில் வாழும் வழியைப் பார்ப்போம் என்றாராம்.

நாம்  இவ்வுலகில் பிறந்தது முதல் நினைவு தெரியும் காலம் வரை ஒரு 20 -25 ஆண்டுகள் சென்றுவிடுகிறது.  இறுதிகாலத்தில் 50-70 வயது வரை முதுமைகாலத்தில் நோய் நொடியுடன் போராடி வாழ்க்கையை முடித்துக் கொள்ள நேரிடுகிறது.  இந்த உலகில் நாம் ஓரளவிற்கு நன்றாக வாழும் காலம் என்று பார்த்தால் தோராயமாக எஞ்சியுள்ள 20-25 ஆண்டுகளே!

இத்தகைய வாழ்வில் நாம் பெரிதாக நமக்காக என்ன சாதித்துவிட போகிறோம்.  மிஞ்சி மிஞ்சி போனால் நடுத்தர குடும்பத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களை நிலைநிறுத்தி ஒரு திருமணம் செய்து வைப்பார்கள்.  அதுவும் அவர்கள் பெற்றோரின் சொற்படி கேட்டு நடந்தால் தான் முடியும்.  இல்லையென்றால் அதுவும் இல்லை.  தங்களது சேமிப்பையெல்லாம் கொண்டு ஒரு வீட்டை கட்டி முடிப்பார்கள்  வேறு என்ன பெரிதாக செய்து விட முடியும்.  பணக்காரர்களின் நிலையே வேறு, அவர்களுக்கு பணத்தை தவிர வேறு சிந்தனையே கிடையாது.  பணத்தை முறையற்ற வழிகளில் சம்பாதிப்பதும், அதை வீணாக அழிப்பதிலுமே அவர்களது ஆயுள் முடிந்து விடும்.

இது தான் வாழ்க்கையா இதற்கு தான் நாம் பிறந்தோமா! என்று என்றாவது நாம் சிந்தித்திருக்கிறோமா.  மனிதனாக பிறந்தவன் தெய்வமாகலாம் என்று பாடியுள்ளார்களே.  எப்படி தெய்வமாவது என்றாவது சிந்தித்திருக்கிறோமா.  தெய்வமாக கூட ஆக வேண்டாம் குறைந்த பட்சம் மனிதனாக வாழ வேண்டாமா.  மிருகமாக அல்லவா பலரும் உலகில் நடமாடுகின்றனர்.

அதிகாரத்தில் இருப்போர், செல்வத்தில் திளைப்போர், கற்றறிந்த சான்றோர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் எதை எடுத்து வந்தோம் இந்த உலகில், எதை எடுத்துச் செல்லப் போகிறோம் இங்கிருந்து.  சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.  தயவு செய்து இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.  அனைவரையும் சமமாக பாவியுங்கள்.

இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கின்றார்.  பிறருக்கு நாம் செய்யும் தீமை இறைவனுக்கு செய்வதற்கு ஒப்பானது.  ஏழையின் கண்ணீரை, துயரை துடைக்க இறைவன் நமக்கெல்லாம் ஒரு அறிய வாய்ப்பாக அறிவை, செல்வத்தை, அதிகாரத்தை கொடுத்துள்ளான்.   இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு மனமுவந்து தாருங்கள், பிறர் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி ஓடோடிச் சென்று உதவி செய்யுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் கடமையை செய்யாமல் இருக்காதீர்கள்.  செய்யும் கடமைக்கு பிரதிபலனை எதிர்பாராமல் இறைவனுக்கு செய்யும் சேவையாக  நினைத்து மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.  இறைவன் என்றும் உங்களை ஆசீர்வதிப்பார். துன்பங்கள் இன்றி மகிழ்ச்சியாக வாழ அல்லது  மிகுந்த துன்பத்தின் போதும் இறைவன் உங்களை கைவிடாமல் என்றும் துணையிருப்பார்.

வாழ்க வளமுடன்
நன்றி.

2 comments:

  1. //எக்காரணத்தைக் கொண்டும் கடமையை செய்யாமல் இருக்காதீர்கள். செய்யும் கடமைக்கு பிரதிபலனை எதிர்பாராமல் இறைவனுக்கு செய்யும் சேவையாக நினைத்து மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். இறைவன் என்றும் உங்களை ஆசீர்வதிப்பார். //

    unmai..
    vaalththukkal

    ReplyDelete
  2. தங்கள் வாழ்த்துக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.