வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

26 February 2011

நவக்கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் பலன்கள்.

நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் அனைவரையும் வலைப்பதிவு மூலமாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  என்னுடைய சொந்த அலுவல்கள் அதிகமாக உள்ளதாலும் குடும்ப பொறுப்புகள் அதிகரித்துவிட்டதாலும் தொடர்ந்து பதிவுகள் எழுத முடிவதில்லை. போதிய நேரமின்மை காரணமாக எனது தளம் வாயிலாக அளித்து வந்த இலவச ஜோதிட ஆலோசனைகள் பகுதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். 

தொடர்ந்து பதிவுகள் எழுத எனக்கு நேரம் கிடைப்பதில்லை கிடைத்த நேரங்களில் மற்ற தளங்களில் சென்று படிக்கவே நேரம் சரியாக உள்ளது.  எவ்வளவுதான் நாம் தெரிந்து வைத்திருந்தாலும் யாம் கற்றது கைம்மண்ணளவே! கல்லாததது உலகளவு விஷயங்கள் உள்ளன.   எனக்கு விஷயங்களை பிறருக்கு சொல்வதைக் காட்டிலும் தெரிந்து கொள்ளவே மிகவும் விருப்பம் அதிகம் ஏனெனில் நான் முழுமையாக எதையும் தெரிந்து கொண்டுவிட்டதாக என்றுமே நினைப்பவனில்லை.  மேலும் மேலும் அதிகமாக, நுணுக்கமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்னை என்றுமே கரையிலேயே வைத்திருப்பதாக நான் உணர்கிறேன்.  இதுவே எனது இயல்பு.

எனது மனதில் சரியெனப் பட்ட கருத்துகளை பிறர் அறிய எழுதுவதால் ஒரு மனதிருப்தி ஏற்படுகிறது.  இதனால் என்னை ஆளாக்கிய  இந்த உலகிற்கு எனது கருத்துகள் சிறிதளவு சென்று சேர்ந்தாலும் நாம் மிகவும் மகிழ்சியடைவேன்.  என் ஒருவனால் இவ்வளவு பெரிய உலகில் பெரிதாக என்ன செய்துவிட முடியும்.  வலைதளத்தில் எனது கருத்துகளை எழுத கிடைத்த வாய்ப்பை கொண்டு நல்ல விஷயங்களை பிறருக்கு சொல்வதில் ஒரு நிம்மதி ஏற்படுகிறது.  எனவே எனக்கென நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதுவேன்.  பிடித்திருந்தால் படித்துவிட்டு பாராட்டுங்கள்.

சென்ற பதிவில் ஜோதிடத்தில் சூரியன் தரும் பலன்களை பார்த்தோம் அல்லவா.  சூரியன் புதன் சேர்க்கை வரை பலன்களை சுருக்கமாக எழுதியிருந்தேன்.  தற்போது மற்ற கிரகங்களின் இணைவு பற்றியும் சில விஷயங்களை எழுதுகிறேன்.

சூரியன் குரு சேர்க்கை ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டை தரும், பல பெரிய மனிதர்களுடன் தொடர்புகள் ஏற்படும்.  இரண்டு கிரகங்களும் பாஸ்பர நட்பு கிரகங்கள் என்பதால் அதிகளவு நற்பயன்கள் கிடைக்க ஏதுவாகும்.  

சூரியன் சுக்கிரன் சேர்க்கை மிகவும் நன்மையான பலன்களை தரும்.  ஆடை ஆபரணங்கள் மீது நாட்டம் ஏற்படும்.  கலைகளில் திறமைகள் கூடும்.  ஏதோ ஒரு துறையில் நிச்சயம் நிபுணர்களாக இருப்பார்கள.

சூரியனுடன் சனி, ராகு, கேது போன்ற பகை கிரகங்களின் சேர்க்கை நற்பலன்களை தருவதில்லை.  கெடுதலான பலன்களே ஏற்படும் கண்களில் குறைகள் ஏற்படுவதோடு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே கருத்து வேற்றுமைகள் ஏற்படும்.  உடலில் உஷ்ண கோளாறுகள் பித்த சம்பந்தப்பட்ட நோய்களை தரும்.

இப்படியாக பொதுவாக பலன்களை கூறுவதை விட ஒவ்வொரு லக்னத்திற்கும் சூரியன் எந்த ஆதிபத்யம் பெறுகிறார் என்பதை பொறுத்தும் அவர் எங்கு சென்று அமர்ந்து பிற கிரகங்களின் இணைவு மற்றும் பார்வையை பெற்றிருப்பதற்கு ஏற்ப எவ்வாறு பலாபலன்களை தமது தசா புக்தி காலங்களில் சூரியன் தருவார் என்பதை ஆய்வு செய்து பலன்களை நிர்ணயிக்கும் போது தான் அது மிகச் சரியாக வரும்.  இவைகள் பொது பலன்களாக இருப்பதால் ஓரளவிற்கு மட்டுமே சரியாக வரும்.

சூரியன் மட்டுமல்ல அனைத்து கிரகங்களும் மேற்கண்ட முறையில் தான் பலன்களை தருகின்றன.  நவக்கிரகங்களில் மிகவும் சுபனாக கருதும் குரு பகவான் மிகக் கொடிய பாவியாக தீய பலன்களை ரிஷப மற்றும் துலா லக்னத்தாருக்கும், மிதுன, கன்னி லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும் தமது தசா புக்தி காலங்களில் அவர் அமர்ந்த இடத்திற்கு ஏற்றவாறு வழங்கியிருப்பார்.  அனுபவித்தவர்களை கேட்டு பாருங்கள்.  பலரும் மாரகத்தையும் அதற்கொப்பான கொடிய பலன்களை யும் அனுபவித்திருப்பார்கள்.

தீய கிரகம் என்று கூறப்படும் சனி பகவான் தரும் நற்பலன்களை ரிஷப லக்னத்தாரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

எனது அனுபவத்தில் இந்த குரு, சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்கள் ஒருவருக்கு நல்ல பலன்களை அளவோடு ஓரளவு நிறைவாக வழங்கினாலும் நேர்வழியில் நிதானமாக உழைத்து முன்னேறி பலன்களை பெற்றவர்களாக அவர்கள் விளங்குவார்கள்.

ஜோதிடத்தில் யோகங்களை மழைபோல் பொழியும் ஒரு கிரகம் உண்டு .  அவர் கொடுக்க ஆரம்பித்தால் அவ்வளவுதான் அதற்கு அளவே இல்லாமல் போய்விடும் சாதாரண ஏழையாக அன்றாடங் காய்ச்சியாக இருப்பவன் கோமானாக, பெரிய தனவானாக புகழையும் பொருளையும் மிகக் குறுகிய காலத்தில் பெற்று ஓகோ என வாழ வைக்கும் அந்த கிரகம் எது தெரியுமா.  ராகு பகவான் தான்.

ஆமேட எருது சுறா நண்டு கன்னி
தன்னில் கருநாகம் புகுந்திட பூமேடந் தன்னில் ராச யோகம் 
                         என்று ஜாதக அலங்காரத்தில் ஒரு பாடல் உண்டு.

ஆம்! ராகு பகவான் யோக பலன்களை அளிக்க ஆரம்பித்தால் போதும்.  இவரா ! இந்த மனிதரா!! இந்த அளவிற்கு வாழ்வில் உயர்ந்து போனார் என்று நம்மால் நம்ப முடியாமல் போகும் அளவிற்கு பலன்களை வாரி வழங்குவார்.  என்ன அவர்கள் நேர்வழியில் அந்த நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள்.   ஏதாவது மறைமுகமான வழியிலேயே அவர்கள் அதனை பெற்றிருப்பார்கள.  சட்டம்,  ரெய்டு எல்லாம் இவர்களிடம் ஒன்றும் எடுபடாது.  ஒரே ஏப்பம் தான்.  எல்லாமே ஸ்வாகா. எப்படி வந்தால் என்ன கொழுக்கட்டை கிடைத்தால் சரி என்கிறீர்களா.  அது சரி.  மேலும் படியுங்கள்.

அரசியல், திரைப்படத்துறை, விளையாட்டுத் துறை, பங்குச்சந்தை என்று பல பிரபலங்கள் புகழ்பெற்ற நிலையில் இருந்த போது அவர்களுக்கு நடைபெற்ற ராகு திசை தான் அவர்களை அத்தகைய நிலைக்கு உயர்த்தியது.  என்ன ஒரு குறை என்றால் அவர்கள் அதனால் மன நிறைவுபெற்றதாக உணர மாட்டார்கள்.  எங்கோ! ஏதோ! ஒரு குறை மனதில் அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்.  இது தான் பாவக் கிரகங்கள் தரும் யோகபலன்களுக்கும் சுப கிரகங்கள் தரும் யோக பலன்களுக்கும் உள்ள வேறுபாடு.  சுப கிரகங்கள் யோகபலன்களை நேர்வழியில் தருவார்கள்.  பாவ கிரகங்கள் எப்படியாவது தங்கள் வேலையை முடித்து விடும்.

நான் சொல்வதை படித்து விட்டு ஜோதிடம் எல்லாம் சுத்த கப்சா! அவர்கள் கடுமையாக உழைத்து போராடி அந்த நிலைக்கு வந்தார்கள் என்று கூற முனைய வேண்டாம்.   என்ன தான் ஆயுளுக்கும் கடுமையாக உழைத்தாலும் சேராத செல்வமும் செல்வாக்கும்  மிக குறுகிய காலத்தில் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது முன்வினைப் பயனால் அன்றி வேறென்ன.  ஆம் வினைப்பயன் தான் நம் வாழ்வை நிர்ணயிக்கிறது.  தீதும் நன்றும் பிறர் தர வாரா.  நாம் செய்த புண்ணிய பலன்களின் விளைவையும் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும்.  பாவமும் புண்ணியமும் கழிந்த நிலைதான் பிறவா நிலை அதுவே ஞானியரின் முக்திநிலை.

என்ன! யோகம் என்று படிக்கும் போதே ஆ!! என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறீர்களா.  அதே ராகு பகவான் தான் தீமை செய்யும் நிலையில் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் போது தரும் பலன்களை கண்டால் ஐயோ! என் எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது என்று வருந்துவீர்கள்.  ஆம்!  எப்பேர்பட்ட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் கூட ஒரே நாள் இரவில் தலைகீழாக வாழ்க்கையை புரட்டி போடும் போது என்ன செய்வார்கள்  பாவம்.  விமானத்தில் ஏறி உயரே சென்றவர்கள் ராக்கெட் வேகத்தில் கீழே வந்து விழுவார்கள். ஒருவன் செல்வத்தை கூட இழக்கலாம் ஆனால் இது நாள் வரை கட்டிக் காத்த பேரையும், புகழையும் ஒருவன் இழப்பானேயானால் அது மரணத்திற்கு சமமானதல்லவா!

அவ்வாறே கேது பகவான் ஒருவருக்கு வாழ்வில் ஞானத்தை தரும் பொருட்டு அவனுக்கு வாழ்வில் விரக்தி ஏற்படும் அளவிற்கு துன்பங்களை தருவார்.  ராகுவை போல் கொடுப்பவரில்லை கேதுவைப் போல் கெடுப்பவரில்லை என்பது ஜோதிட பழமொழி.  இந்த உலகில் எல்லாமே மாயை, பொய் அனைவரும் சுயநலவாதிகள் என்ற உண்மையை நமக்கு வாழ்வில் படிப்பினையாக தருபவர் கேது.  அதனால் தான் ஜோதிடம் அவரை ஞானக் காரகன், மோட்சக் காரகன் என்று அழைக்கிறது.   ஞானம் வந்த பின்பு மனிதன் மீண்டும் பழைய நிலைக்கு அழைத்தாலும் செல்ல மாட்டான் அல்லவா.  அதனால் தான் ஞானிகளுக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றாக தெரிகிறார்கள்.

இன்னும் சுவாரஸ்யமான பல விஷயங்களை இங்கு எழுத விருப்பம் தான்.  பெரிய பதிவாக இருந்தால்  நன்றாக இருக்காது.  எனவே தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன். கருத்துரைகள், விளக்கங்களை பின்னூட்டம் வாயிலாக கேளுங்கள்.  அதுவே எனக்கு மேலும் எழுத ஊக்கத்தை தருவதாக அமையும்.

நன்றி.

4 comments:

  1. வாங்க! ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

    ReplyDelete
  2. கண்டிப்பாக வருகிறேன் தலைவா. ஏதோ நம்மால் முடிந்தது இவ்வளவுதான். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சித்தூர்ஜி.

    ReplyDelete
  3. நண்பரே,
    நல்லாவே எழுதறிங்க. ஆனால் பலனை பிட்டாதராதிங்க. தந்தாலும் சிறப்பு விதிகளையும் கூடவே தரப்பாருங்க.

    நான் ஒரு பதிவுல சுக்கிர சூரிய சேர்க்கை நடந்தா விந்து வறளும்னு எழுதினதா ஞா.

    என்னை கிழிக்க ஒரு சான்ஸு கிழிங்க..

    ReplyDelete
  4. ராகு விருச்சகத்தில் (ஏழில் உச்சம்) இருந்து ராகு திசை நடரந்தால் நல்ல பலனா? என்பதை சொல்லவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.