வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

22 January 2011

ஜோதிடமும் - மனிதர்களும் - ஒர் ஒப்பீடு - சூரியன் (2) தொடர்ச்சி...

 அனைவருக்கும் வணக்கம்!

சென்ற பதிவில் ஜோதிடம் தோன்றிய முறையையும் சூரியனைப்பற்றிய சில அடிப்படையான விஷயங்களையும் எழுதியிருந்தேன்.  இந்த பதிவில் சூரியன் குறித்து மேலும் சில தகவல்களை எழுதுகிறேன். 

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் விஷயங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அளவே இல்லை அவை ஏராளமாக உள்ளன.  அவற்றை எந்த இடத்தில் எந்த விதத்தில் நமக்கு தேவையான அளவிற்கு பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்தே பலாபலன்களை ஓரளவிற்கு சரியான அளவில் கணித்து ஒரு முடிவிற்கு வர இயலும்.  ஜோதிட சாஸ்திரம் கடல் போன்றது.  நாமெல்லாம் கரையில் கால் நனைக்கும் அளவிற்கு தான் தெரிந்து வைத்திருப்போம்.  முழுமையாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்கு அறிவும் இல்லை அனுபவமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.  மேலும் நாம் பலன் கூறும் போது  ஒன்றை மனதில் வைக்க வேண்டும் அது

”இன்ன நாளில் இன்ன இடத்தில் இந்த ஜோதிடரால் நமக்கு சில விஷயங்கள் வெளியாக வேண்டும்” என்பது இயற்கையின் நியதி.  இது மறுக்க முடியாத உண்மை. இதை மீறவும் முடியாது என்பதுதான் மற்றுமொரு உண்மை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டியது அவசியம்.

சரி, இப்போது சூரியனை பற்றிய மேலாதிக்க விஷயங்களை பார்ப்போம். 

கிரகங்களின் அரசனான சூரியன் இராசிமண்டலத்தை ஒரு முறை சுற்றி வர ஒரு வருடம் ஆகிறது.  ஒரு ராசியில் ஒரு மாதம் வீதம் 12 ராசிகளில் 12 மாதங்கள் ஆகிறது.  சூரியன் தனது நட்பு கிரகமான செவ்வாயின் மேஷ ராசியில் உச்ச பலம் அடைகிறார்.  சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார்.  இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். 

சூரியன் மிகவும் பலத்துடன் சஞ்சரிக்கும் சித்திரையின் கோடை வெய்யிலை நாமெல்லாம் அனுபவித்திருப்போம் அல்லவா!  சூரியனின் கதிர்கள் நம்மை நேரடியாக பாதிக்கும் காலம் அது.  ஆனால் அந்த சூரியன் மேஷ ராசிக்கு நேரெதிர் வீட்டில் (7-ம் வீடு) சுக்கிரன் வீடான துலாத்தில் நீசனாகிப் போகிறார்.  ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கிறார்.   ஐப்பசி மாதம் அடைமழையல்லவா! எங்கே சூரியனின் பலம்!!

இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களுக்கும் வலிமையை தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் நமது முன்னோர்கள் விதிகளாகவகுத்து வைத்துள்ளார்கள்.  ஒவ்வொரு கிரகமும் பலமாக தங்களது கதிர்வீச்சை பூமியில் செலுத்தும் காலங்களை தான் உச்சம் என்றும் அவர்களின் கதிர்வீச்சு பூமியில் குறைவாக விழும் காலங்களை நீசம் என்றும் சொன்னார்கள்.  கிரகங்களின் கதிர்வீச்சு அதிகமாக உள்ள காலங்களில் பிறந்தவர்களிடம் அந்தந்த கிரகங்களுக்கு கூறப்பட்ட குணாதிசயங்கள் மிகுந்து இருக்கும் அவற்றை நாம் மனிதர்களிடம் கண்கூடாக காணலாம்   அவற்றை பின்னர் அவ்வபோது பதிவுகளில் தொடர்ந்து எழுதுகிறேன்.

நாமெல்லாம் தை தை என்று பொங்கல் வைத்து கொண்டாடும் தைமாதம் சூரியன் மகரத்தில் உதயமாகிறார். தைபிறந்தால் வழி பிறக்கும் அல்லவா! சூரியன் மகரத்தில் சஞ்சரிக்கும் காலம் தேவர்களின் பொழுது விடியும் காலம் ஆகும்.  சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் அந்த காலமே உத்திராயண புண்ணிய காலம் என்று கூறுகிறோம்.  மகாபாரதத்தில் பிதாமகர் பீஷ்மரை அர்ச்சுனனின் அம்புகள் துளைத்தெடுக்கிறது. அம்பு படுக்கையில் வீழ்கிறார் அவர்.  ஆனால் உயிர் மட்டும் பிரியவில்லை. தாம் விரும்பும் போது உயிரை விடும் வரம் பெற்றவர் பீஷ்மர்  அவர் உத்திராயன புண்ணிய காலத்தில் தமது உயிர் பிரியவேண்டும் என கருதியே மரணப் படுக்கையில் வாழ்ந்தார் என்றால் உத்திராயண புண்ணிய காலத்தின் சிறப்புகளை என்னவென்று சொல்வது.  சூரியன் கடக ராசியில் தெற்கு நோக்கி சஞ்சரிக்கும் காலம் தட்சிணாயனம் என்று கூறுகிறோம். 

சூரியன் நமது உடலில் நமது ஆன்மாவை குறிப்பவர்.  ஆம் நமது ஆன்மா சூரியனை போன்றே தூய்மையானது, ஓளிமிகுந்தது.  நம் ஆன்மா இறைவனுக்கு ஒப்பானது. நாமெல்லாம் நமது ஆன்மாவை உணராத நிலையில் தான் வாழ்ந்து வருகிறோம்.  ஆன்மாவை உணர்ந்து தெளிந்தவர்கள் இறைநிலையை அறிந்து ஞானியாகிறார்கள்.  எனவேதான் அவர்கள் எல்லா உயிர்களிலும் இறைவனை கண்டார்கள்.  ஜோதிடம் சூரியனை ஆத்ம காரகன் என விளிக்கிறது.  சூரியன் வலுப்பெற பிறந்தவர்களுக்கு உள்ளொளி அதிகம் இருக்கும் அதுவே அவர்களை வழிநடத்தும்.

நமக்கு ஆத்மாவை (உயிரை) அளிப்பவர் தந்தை, உயிருக்கு உடலை அளிப்பவர் தாய் எனவே சூரியனை தந்தைக்கும் காரகனாக வகுத்துள்ளனர்.  சூரியன் நமது உடல் உறுப்புகளில் வலது கண்ணை குறிக்கிறார்.  சூரியன் பாதிப்படைந்தால் வலக்கண்ணில்  குறையுண்டாகும்.  அவரே நம் உடலில் இதயத்தையும் குறிப்பவர்.  எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொன்னார் அல்லவா! அத்தகைய உறுதியை நாம் சூரியன் வலுப்பெற பிறந்தவர்களிடம் காணலாம்.  சூரியன் வலிமை குறைந்தோ அல்லது பாப கிரகங்களால் பாதிப்படைந்தோ காணப்பட்டால் இதய நோய்கள் உண்டாகும்.

 பொதுவாக சூரியனுடன் எந்த கிரகம் இணைந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் வலுப்பெற்றுவிடும்.  சூரியனுடன் தோராயமாக 10 பாகைக்குள் இணைந்தால் அந்த கிரகம் அஸ்தமனம் ஆகிவிடும் அதாவது அந்த கிரகத்தின் கதிர்வீச்சை விட சூரியன் கதிர்வீச்சு அதிகம் இருக்கும்.  எனவே அக்கிரகத்தின் பலன்களை (குணாதிசயங்களை) விட சூரியனின் பலன்களே மேலோங்கி இருக்கும்.

 சூரியன் சந்திரனோடு இணைந்து சஞ்சரிக்கும் காலம் அமாவாசை என்கிறோம்.  அமாவாசையில் பிறந்தவர்கள் தாங்கள் நினைத்ததை எந்த வழியிலும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள்.  அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.  கழுத்தையே அறுத்தாலும் உண்மையை சொல்லமாட்டார்கள்.  அமைதிப்படை திரைப்படத்தில் சத்தியராஜ் நடித்ததை பார்த்திருப்பீர்கள் அல்லவா!  கோயிலில் தேங்காய் உடைப்பதை அடித்து பிடித்து பொறுக்கி தின்பவர் பின்பு மிகப்பெரிய அரசியல்வாதியாக உயர்வார்.  இயல்பில் நமது அரசியல்வாதிகளில் பலரும் அமாவாசை யோகத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் நிஜத்தில் இப்போதும் பலர் இருக்கிறார்கள்.  அவர்கள் செய்யும் அரசியலே அதற்கு சாட்சி. 

சூரியன் சந்திரனுக்கு நேர் எதிர் வீட்டில் இருக்கும் காலம் பௌர்ணமி யோகம் ஆகும்.  வெள்ளை வெளேரேன்று கள்ளம் கபடமற்ற உள்ளத்தினை பௌர்ணமி யோகத்தில் பிறந்தவர்கள் பெற்றிருப்பார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல அவர்களது முகமும் வட்ட வடிவில் சந்திரனைப் போன்று ஒளிவீசும்.  மிகவும் அழகாக இருப்பார்கள்.  ஒளிவு மறைவு என்பது அவர்களுக்கு தெரியாது.  அவர்கள் எதை செய்தாலும் பிறருக்கு தெரிந்து விடும்.  மிகவும் நல்ல குணத்தினை பெற்றவர்கள்.

சூரியனும் செவ்வாயும் இணைந்து ஒருவர் ஜாதகத்தில் இருந்தால் அவர்களிடம் பேசும் போதும், பழகும் போதும்  சற்று எச்சரிக்கையாக இருங்கள்.  எந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள் என்று தெரியாது.  மிகவும் உணர்ச்சிவசப்படுபவர்கள், அவர்கள் வார்த்தைகளில் அனல் பறக்கும் கண்கள் கோவைப்பழம் போல சிவந்து இருக்கும். மெலிந்த சராசரியான உடல்அமைப்பும் சற்றே உயரமானவர்களாகவும் இருப்பார்கள்.  தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும்.  அசுர வேகத்தில் காரியங்களை செய்து முடிப்பதில் அசகாயசூரர்கள்.  உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும்.  ஆண்களாயின் அவர்களுக்கு விரைவில் விந்து வெளியேறிவிடும்.  பெண்களாயின் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்.  எளிதில் அவர்களின் உடல் பசியை தீர்க்க முடியாது.  தகிப்பார்கள். மற்ற கிரகங்கள் லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ சம்பந்தம் ஏற்பட்டால் மேற்படி பலன்களில் சற்று குறையலாம்.

சூரியன் புதன் சேர்க்கை ஒருவரை மிகுந்த கெட்டிக்காரர் ஆக்கும்.  பேச்சிலேயே பிறரிடம் காரியம் சாதித்து விடுவார்கள்.   புதன் சாதுர்யம் மிக்க கிரகமாகும்.  கணக்கில் புலி என பெயரெடுப்பார்கள்.  இதனை புது ஆதித்ய யோகம் என்று ஜோதிடம் விளக்குகிறது.  எனது அனுபவத்தில் சிலருக்கு இந்த சேர்க்கை உள்ளவர்களை பார்த்திருக்கிறேன் அவர்கள் கல்வியில் தேர்ச்சி இல்லையென்றாலும் அனுபவ அறிவு மிகுதியாக உள்ளவர்களாக இருப்பார்கள்.

நான் எனது அனுபவத்தில் கண்ட பலன்களையே இங்கு பதிவிட்டு வருகிறேன்.  அனுபவம் அதிகம் ஏற்பட்டால் மேலும் பல நுணுக்கங்கள் புலனாகும்.  தொடர்ந்து மேலும் மேலும் ஆராய்ந்தால் தான் அனுபவங்கள் கிடைக்கும்.  இறைவன் அருள் இருந்தால் மட்டுமே ஓரளவிற்கு நாம் ஜோதிடத்தில் தேர்ச்சியடைய இயலும் என்பது எனது தாழ்மையான கருத்து.

பதிவு பெரிதாக வந்தால் விஷயங்கள் மனதில் பதியாது.  எனவே அடுத்த பதிவில் தொடர்ந்து எழுதுகிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றி
சு. மணிகண்டன்.



6 comments:

  1. Thank you expecting more about sun

    ReplyDelete
  2. >>>guna said...
    thankyou<<<

    தங்களின் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. >>>>>R.Ravichandran said...
    Thank you expecting more about sun<<<<<<

    தங்களின் வருகைக்கு நன்றி ரவிச்சந்திரன் அவர்களே. தங்களுக்கு விரைவில் பதில் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  4. தெளிவான மற்றும் ஆழமான கருத்துகள். நன்றி.

    ReplyDelete
  5. நன்றி தினேஷ்

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.