வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

11 January 2011

ஜோதிடமும் - மனிதர்களும் - ஓர் ஒப்பீடு




ஆதிகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் கிரகங்களை வெறும் கண்களால் பார்க்கும் சக்திகளை பெற்றிருந்தார்கள்.  சமீபத்தில் நான் ஒரு வலைதளத்தில் ஒரு பதிவை படித்ததாக ஞாபகம், கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது, அந்த அதிசய மூலிகையின் மேல் நின்று ஆகாயத்தை பார்த்தால் பகலில் கூட நட்சத்திரங்கள், நவகிரகங்கள் பளிச்சென நம் கண்களுக்குத் தெரியுமாம்.  அத்தகைய அறிவும், ஆற்றல்களையும், அனுபவங்களையும் நிரம்ப பெற்றவர்கள் நம் முன்னோர்களான தவமுனிவர்கள்.

நமது  முன்னோர்கள் வானில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் சூரிய, சந்திரர்களின் சஞ்சாரங்களை கொண்டு காலநிலைகளை கணக்கிட பயன்படுத்தி வந்துள்ளனர்.  ஜோதிடத்தின் ஆரம்பம் வான சாஸ்திரம் ஆகும். காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட கிரக நிலையில் இருக்க பிறந்தவர்களின் வாழ்வில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை கவனித்து  அவற்றை சேகரித்து ஒப்பிட்டு பார்க்க தொடங்கினார்கள்.  தங்களின் அனுபவத்தில் கிடைத்த தகவல்கள் பலவற்றையும் திரட்டி ஓலைச்சுவடிகளில் எழுதிவந்தனர்.  அந்த அடிப்படையில் தோன்றியதே ஜோதிடம் என்னும் அரிய கலையாகும்.
 
குறிப்பிட்ட காலகட்டத்தில் கிரகங்கள் அந்தந்த ராசிகளில் இருக்கப் பிறந்தவர்கள் இன்னின்ன பலன்களை அனுபவித்தனர்.  எனவே பிற்காலத்தில் அவ்வாறான கிரக அடைவுகளை பெற்று பிறந்தவர்களுக்கும் அத்தகைய பலாபலன்கள் ஏற்படலாம் என தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் கிரகங்களுக்கும், இராசிகளுக்கும் குணாதிசயங்களையும், இன்ன பிற இயல்புகளையும் நிர்ணயித்தனர்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.  ஜோதிடத்தில் முதன்மையான கிரகம் சூரியன் ஆகும்.  கிரகங்களுக்கு தலைவனாக இருக்கும் சூரியன் ஜோதிடத்தில் நெருப்பு கிரகமாக குறிப்பிடப்படுகிறது.  பிறந்த ஜாதகத்தில் சூரியன் ஆதிக்கம் அதிகமாக இருக்கப் பிறந்தவர்கள் உஷ்ண, பித்த தேகம் கொண்டவர்களாகவும்.  எந்த காரியத்தையும் கணகச்சிதமாக நிறைவேற்றக் கூடியவராகவும், நேர்மையான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  சூடான உணவு பதார்த்தங்களை மிகவும் விரும்பி உண்ணக்கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

காட்டிற்கு ராஜா சிங்கம். கர்ஜிக்கும் சிங்கத்தின் குரலைக் கேட்டாலே மற்ற மிருகங்களுக்கு எல்லாம் உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்துவிடும்.  இயற்கையாகவே தலைமை தாங்கும் குணம் இயல்பாக அவர்களிடம் இருக்கும்.  சூரியன் ஆதிக்கம் பெற்ற பலரும் அத்தகைய குணங்களை பெற்றிருப்பினும் வெளியில் நாம் பார்க்கும் போது சாதாரண இயல்புடையவர்களாக தெரிவார்கள்.  ஆனால் மிக முக்கியமான நெருக்கடியான நிலை ஏற்படும் போதுதான் அவர்களின்  உண்மையான சுபாவம் நமக்கு தெரியவரும்.  

சூரியன் நல்ல நிலையில் அமைந்தவர்ககள் மிகவும் நேர்மையாகவும், ஒளிவு மறைவு இல்லாத, தன்னலமில்லாமல் வாழும் இயல்புடையவர்கள்.  தங்கள் கண்முன்னே நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க தயங்காதவர்கள்.  பொய், சூது, வாது. திருட்டு போன்ற தீயகுணங்களை அறவே வெறுப்பவர்கள்.  தங்களைப் போலவே மற்றவர்களும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அவர்களிடம் இருக்கும்.  இவர்களுக்கு கோபம் வரும்படி யாரும் நடந்து கொள்ளக்கூடாது. தவறி கோபம் வந்தால் வெடித்து சிதறிவிடுவார்கள்.  தங்கள் முன்னே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தங்களது எதிர்ப்பை எவ்விதத்திலேயும் காட்ட துணிந்தவர்கள்.

12 இராசிகளில் சிம்ம லக்னம்  சூரியனின் ஆட்சிவீடாகும்.  மேற்கண்ட குணாதிசயங்கள் ஏறக்குறைய சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் அல்லது சிம்ம ராசியில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்களுக்கும் காணப்படும்.  மேலும் மற்ற லக்னங்களில் பிறந்திருந்தாலும் சூரியன் பிறந்த ஜாதகத்தில் நல்ல ஆதிபத்யம் பெற்று  ஆட்சி, உச்சம், நட்பு பெற்று  நல்ல நிலையில் அமைந்திக்க பிறந்தவர்கள் அனைவருக்கும் மேற்கண்ட சூரியனின் குணாதியங்கள் பெற்றிருப்பர்.

அரசியலில் நம்மை வழிநடத்தும்  பலரும் சூரியன் நல்ல நிலையில் இருக்க பிறந்தவர்களே ஆவர்.  நேர்மையற்ற அரசியல் தலைவர்களுக்கு சூரியன் தீய கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்று வலிமையுடன் இருப்பார்.  சூரியன் நல்ல நிலையில் இருக்கப்பிறந்தவர்கள் ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் கூட தனித்து தெரிவார்கள் அவர்களது முகம் பிரகாசமாகவும், மிகவும் செயல்திறன் கொண்டவர்களாகவும் இருப்பர்.  அவர்களை ஆயிரத்தில் ஒருவன் என்று கூறலாம்.  அரசனாக வாழ்பவர்கள் அல்லது அரசனுக்கு ஒப்பானவர்கள் இவர்கள். தற்காலத்தில் அரசு பதவியில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் சூரியன் வலுப்பெற்றிருப்பதை அவர்களது ஜாதகத்தில் காணலாம்.  தந்தையின் அன்பை பெற்றவர்கள் தந்தைவழி அனுகூலமும் அவர்களுக்கு உண்டு.

ஜாதக்த்தில் சூரியன் வலிமை குன்றி இருந்தால் அவர் ஆளுமைத்திறன் கொண்டவராக இருக்க முடியாது. மேலும் அவர்களுக்கு உடலில் உஷ்ண கோளாறுகள் ஏற்படும்.  கண்களில் ஒளிக்கு காரணம் சூரியனும் சந்திரனும் ஆவார்கள் என ஜோதிடம் குறிப்பிடுகிறது.  எனவே சூரியன் பாதிப்படைந்த நிலையில் பிறந்தவர்கள் கண்களில் குறைபாடுகள் உள்ளவர்களாக இருப்பர்.  சூரியன் நமது குடும்பத்தில் தந்தைக்கு காரகம் வகிப்பவர்.  எனவே தந்தை வழி உறவுகள் பாதிப்படையும் பலருக்கு தந்தையை பிரிந்தோ அல்லது தந்தை உயிருடன் இல்லாமலோ உள்ள நிலை ஏற்படும்.

சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை.  பஞ்ச பூதங்களில் சூரியன் நெருப்பை குறிக்கிறார்.  சிலரைப் பார்த்தால் நல்ல  பளபளப்பான வழுக்கை தலையுடன் பெரிய மனிதரைப் போல இருப்பார்கள் அவர்க்கெல்லாம் ஜாதகத்தில சூரியன் வலுவாக இருக்கும் சூரியன் தலை மயிரை குறிப்பவர்.  உடல் உஷ்ணத்தால் தலையில் உள்ள மயிர்களலெல்லாம் கொட்டிவிடும். 

சூரியனுக்கு உகந்த நிறம் ஆரஞ்சு நிறமாகும்.  நவரத்தினங்களில் மாணிக்க கல் சூரியனுக்கு மிகவும் உகந்தது (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா!!).  எண்கணிதத்தில் முதல் எண்ணாகிய எண் 1 சூரியனுக்குரிய எண்ணாக குறிப்பிடப்படுகிறது.  கடவுள்களில் முதன்மையான சிவன் சூரியனுக்குரிய அதிதேவதையாக உள்ளார்.   27 நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம்,  பூராடம் சூரியனின் நட்சத்திரங்களாக குறிப்பிடப்படுகிறது.

அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது என்றார் ஔவையார்.  

நான் இங்கு சொல்ல வருவது என்னவென்றால் அரிது அரிது சூரியன் வலுவாக நல்ல நிலையில் உள்ள மனிதர்களாக பிறத்தல் அரிது.   ஏனென்றால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உண்மை, நேர்மை இவற்றிற்கெல்லாம் அதிபதியான சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த ஆண்மை மிக்க ஒரு தலைவன் நமக்கு அமையாமல் இருப்பதால் தான் நாம் முதுகெலும்பற்ற மனித புழுக்களாக, லஞ்சம், ஊழல் என்ற சாக்கடையில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டியதாகிறது.  

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்ற  பாரதியின் பாஞ்சாலி சபதம் பாடல் நினைவுக்கு வருகிறது.  நிச்சயம் நமக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.  நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிட்டபடி நம் தாய்நாடு விரைவில் வல்லரசாக மாறும்.  சூரியனின் ஆதிக்கம் பெற்ற அந்த ஆதிசிவனே மனிதனாக நிச்சயம் இந்த பூவுலகில் அவதரித்து நம்மையெல்லாம் வழிநடத்த வேண்டும்.  மீண்டும் இந்த பூவுலகில் ராமராஜ்யம் விரைவில் அமைய வேண்டும் என்று நாம் அனைவரும் தினமும்  இறைவனை பிரார்திப்போம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்

சு. மணிகண்டன்.

0 கருத்துரைகள்:

Show/Hide Comments

Post a Comment

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.