வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

31 December 2010

கருவறை முதல் கல்லறை வரையில்.......

இந்த உலகில் வாழ்வதற்கு அனைவருக்கும் இன்றிமையாதது பணம்.  ஏனெனில் பணத்தின் வாயிலாகவே நமது தேவைகள் பூர்த்தியாகின்றன. மனிதன் ஆசைப்பட்டதெல்லாம் பணத்தின் மூலமாகவே நிறைவேற்ற முடியும். பணம் இல்லையேல் இன்றைய வாழ்க்கை சூழலில் மனிதன் பிணத்திற்கு சமமானவனாக மதிக்கப்படுகிறான்.

தெய்வப் புலவர் வள்ளுவப் பெருந்தகை அவர்கள்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை,
பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என இரண்டே வரிகளில் பொருளின் அவசியத்தை எழுதிவைத்துள்ளர்.

ஆதிகாலத்தில் பண்டமாற்று முறை வளர்ச்சியடைந்து தற்போது பணம் என்றாகி பின்பு கிரெடிட் கார்ட் என்ற அளவில் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் வாங்கவும் விற்கவும் இணையவழி பண பரிவர்த்தனை முறைகள் உதவுகின்றன.

பணமானது உண்மையிலேயே நமக்கும் நமது சந்ததிகளுக்கும் பயன்பட வேண்டுமாயின் அது நமது உழைப்பின் வாயிலாக மட்டுமே ஈட்டப்பட வேண்டும்.  உழைப்பானது உடல் உழைப்பாகவும், அறிவின் ஆற்றலாகவும் வெளிப்பட்டு நமக்கு தக்க ஊதியத்தை பெற்றுத்தரும்.  இது எல்லா தொழில்களுக்கும் பொதுவானது.

வள்ளுவன் அறம் பொருள் இன்பம் வீடுபேறு என்று முதலில் அறத்தையே வைத்தார்.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஆறறிவு உடையவர்கள்  விலங்குகளை விட அறிவில் மேம்பட்ட நிலை பெற்றவர்கள் நன்மை தீமை உணர்ந்தவர்கள் எனவே அவர்கள் முதலில் அறம் என்னும் நியாய வழியிலேயே வாழ வேண்டும்.  மனிதர்க்கு முதன்மையானது அறமே பின்புதான் அவன் அவ்வழியில் நின்று பொருளீட்ட வேண்டும் அப்படி ஈட்டிய பொருளை அவன் நல்ல வழியில் அனுபவிக்க வேண்டுமாயின் அது அறவழியில் ஈட்டப்பட்டதாக இருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் அவன் பணத்தின் மூலம் இன்பத்தை முழுமையாக அடைய முடியும் என்பதை வள்ளுவன் கூற்று நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இதெல்லாம் ஆரம்ப பள்ளிபாடத்தில் நாம் படித்தது ஆனால் நடைமுறை வாழ்வில் வள்ளுன் கூறிய வழியில் எத்தனை பேர் வாழ்கின்றனர் என்றால் உலகில் அத்தகைய மனிதர்களை நாம் தேட வேண்டியுள்ளது.  ஆம் அரிதிலும் அரிதாகவே மனிதரில் நல்லவர்கள் உள்ளார்கள்.  நாட்டில் அதர்மம் தலைதூக்குவது மனிதகுலத்திற்கு அழிவையே ஏற்படுத்தும்.

படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோ என்று போவான் என்றான் பாரதி.

ஆம் அறிவில் மேம்பட்ட படித்த மேதைகளாக அதிகாரத்தில் இருக்கும் பல மனிதர்கள் தாம் இலஞ்சம் , ஊழல் போன்ற கீழ்த்தரமான வியாதிகளால் பீடிக்கப்பட்டுள்ளனர்.  இன்று இந்தியா முழுவதுமே பரவியுள்ள இத்தகைய நச்சுக்காற்றால் ஏற்படும் அழிவுகளையும் துன்பங்களையும் இந்த ஈனப்பிறவிகள் அறிவார்களா. அறிந்தும் தமக்கு என்று வந்தபின்பு அய்யோ! நான் என்ன பாவம் செய்தேனோ என்று மட்டும் அலறுகின்றனர். 

சாதாரண அலுவலக உதவியாளர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை நிர்வாகத்தில் புறையோடிய புண்ணாக இந்த வியாதி பரவிக்கிடக்கிறது.  புண்ணில் சொரிந்து சொரிந்து சுகம் காணும் சொறிநாய்களாக இந்த மனிதர்கள் வாழ்கிறார்கள்.  மிகவும் மட்டரகமான இந்த திருட்டு பட்டப் பகலில் அடுத்தவன் பாக்கெட்டில் கைவைக்காத குறையாக அடித்து பிடித்து பிடுங்கும் பல ஜென்மங்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன. 

இத்தகைய (பண) எலும்பு வெறிபிடித்த நாய்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை சாதராண கூலித்தொழிலாளியிடம் கூட கையேந்தும் இந்த ஜென்மங்கள் லஞ்சம் வாங்க செய்யும் பம்மாத்து வேலைகளை எழுத ஏடுகள் கொள்ளாது.  பணத்துக்காக தம் கடமையை செய்யாதவர்கள் அதே பணத்திற்காக எதையும் செய்ய துணிவார்கள் பெற்ற தாயையும், மகளையும் கூட .................. துணிந்தவர்கள் ஏழையின் வயிற்றெறிசலும், கண்ணீரும் வேதனையும் இவர்களை ஒருநாளும் சும்மா விடவே விடாது. இல்லாதவனையும் இயலாதவனையும் பிடுங்கித் தின்னும் பிணந்திண்ணிக் கழுகுகள் இவைகள்.

உழைத்தவன் உணவிற்காக ஏங்கி கிடக்க  அவன் கழிவுகளை பொறுக்கி தின்னும் ஜென்மங்கள் தான் இவைகள்.  ஏழை ஒரு தீப்பெட்டிக்கு கூட வரி செலுத்தி தான் இந்த நாட்டில் வாழ்கிறான்.  அவன் உரிமைகளை, உடமைகளை ஒட்டுண்ணி போல் உறிஞ்சி வாழும் இந்த ஜென்மங்கள் எப்படி வாழ்வில் நற்கதி அடைய இயலும்.  இறைவன் தன் நியாய தீர்ப்பை நிச்சயம் அந்த பாவ ஆன்மாக்களுக்கு அளித்தே தீருவான்.

அரசு பள்ளியில் கைநிறைய ஊதியம் வாங்கும்  ஆசிரியர்கள் நடத்தும் பாடம் வகுப்பில் புரியாது.  ஆனால் அவர்களிடம் டியூஷன் சென்று பாருங்கள் அவர்களது பாடம் நடத்தும் திறமையை.  பிளந்து கட்டிவிடுவார்கள்.

மருத்துவமனையில் ஒரு மணிநேரம் கூட மருத்துவம் பார்க்காத மருத்துவர்கள் இரவு 12 மணிவரை கூட கிளினிக்கில் உட்கார்ந்துகொண்டு கிழி கிழி என கிழித்து விடுவர்கள்.

அரசு  பேருந்துகளில் சில்லரை கொடுப்பதற்கு ஆயிரம் முறை யோசித்து பயணி ஏமாந்து விடமாட்டானா என்று ஏங்கும் நடத்துனர்கள் எத்தனை எத்தனை இந்த நாட்டில்.  100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினால் சில்லறை கொடுக்க எத்தனை ஏச்சு, பேச்சு, முனகல், திட்டு என்று வரும்.  ஆனால் கடையில் கலெக்ஷன் ஆன சில்லறையை கொடுத்து கமிஷன் மட்டும் தவறாமல் வாங்கிவிடுவார்கள்.

ஆண்களிடம் வீரம் பேசும் வீராதி வீரர்கள் பெண்களை கண்டால் குழையும் வீட்டு நாய்கள் எல்லா அலுவலகங்களிலும் ஏராளம் உண்டு.

இன்னும் எத்தனையோ அலுவலகங்களில் பகல் கொள்ளையடிக்கிறார்கள்  என்னத்தை சொல்ல.

இருப்பவர்கள் கொடுக்கிறார்கள்.  உனக்கென்ன அவர்கள் எல்லாம் நேர்மையாகவா சம்பாதிக்கிறார்கள் கொஞ்சம் எனக்கு கொடுத்தால்தான் என்ன குறைந்தா போய்விடுவார்கள் என்ற நினைப்பால் இல்லாதவனையும் இயலாதவனையும் அல்லவா அலைகழிக்கிறார்கள்.

 ஆனால் இதுகளுக்கு எல்லாம் பதவி வேண்டுமாம், பதவி உயர்வு வேண்டுமாம், ஊதியத்தை உயர்த்த வேண்டுமாம் இல்லாவிட்டால் வேலை நிறுத்தம் செய்வார்கள் புறகணிப்பார்கள் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்வார்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பார்கள்.

ஏழைக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் தன் கடமையை செய்யமாட்டார்கள். தவறி செய்ய நேர்ந்தாலும் காலம் கடத்துவதும்.  இயன்ற வரையில் அவர்களிடம் ஏதாவது அடித்து பிடித்து பிடுங்கி தின்பதும் ச்சே இதெல்லாம ஒரு பிழைப்பா.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிறது பகவத்கீதை

ஆனால் இங்கு செய்யும் கடமைக்கும், செய்யாத கடமைக்கும் கூட அரசு படியளக்கிறது.  ஆனாலும் அதுவும் போதாமல் தலைசொறியும் கூட்டத்தை என்னவென்று சொல்வது.  எங்கே எடுத்து செல்லப்போகிறார்கள் இந்த செல்வத்தை (பாவத்தை) தம்மை அறியாமலேயே தம் சந்ததிக்கும் அல்லவா சேர்த்து பாவத்தை மூட்டை கட்டுகிறார்கள்.  நுனிமரத்தில் இருந்து கொண்டு அடிக்கிளையை அல்லவா வெட்டுகிறார்கள் இந்த மூடர்கள் இவர்கள் படித்து என்ன பயன்.  குப்பையில் போடட்டும் அவர்களது படிப்புகளையும் பட்டங்களையும்.

ஈதல் இசைபட வாழ்தல் என்றானே வள்ளுவன்

ஈதல் என்பது பொருளை மட்டுமல்ல தமது உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் ஏழை மக்களுக்காகவே ஈந்து விட்டு சென்றனரே சான்றோர்.  அவர்கள் வாழ்ந்த நாட்டிலா இவ்வளவு கேவலமான நிலை.  இந்தியா ஊழலில் உலகில் 3-ம்மிடமாம் அய்யகோ இந்த நாட்டில் தானா புத்தனும், காந்தியும், காமராஜரும் இன்னும் பல யோகிகளும் பிறந்தனர் என்ற ஐயம் எழுகிறதே.  அவர்களது தியாக வாழ்கையை வீணக்கிவிட்டார்களே இந்த பாவிகள்.
    
நெஞ்சு பொறுப்பதில்லையே
இந்த நிலைகண்ட மாந்தரை நினைத்து விட்டால்

என்ற பாரதியின் வரிகளை நினைத்து குமுறுகிறது நெஞ்சம்.

3 comments:

 1. அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  இதையும் படிச்சி பாருங்க
  சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

  ReplyDelete
 2. தங்கள் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தாங்கள் குறிப்பிட்ட உஜிலாதேவி தளம் நான் தவறாமல் படிக்கும் தளங்களுள் ஒன்றாகும்.

  நன்றி.

  ReplyDelete
 3. நல்ல கருத்து நன்றி...

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.