வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

21 December 2010

ஜோதிடமும் சில ஜோதிடர்களும் - ஓர் அலசல்

வணக்கம்,
             நீண்ட நாளைக்கு பிறகு தங்களை சந்திக்கிறேன்.  இணையத்தில் ஜோதிடம் குறித்து எழுதிவரும் வேளையில் ஜோதிடம் குறித்த சில சிந்தனைகள் என்னில் தோன்றுவதுண்டு அவற்றை இங்கு எழுதுகின்றேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இங்கு  அதனை எழுதவில்லை.

            நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களிடம் சில நல்ல விஷயங்கள் உண்டு என்பது எனது கருத்து ஏனெனில் ஆங்கிலேயர்கள் எந்த ஒரு விஷயத்தையும் விரிவாக அலசி ஆராய்ந்த பின்புதான் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அதுமட்டுமன்று அவர்கள்அறிந்ததை, கண்டுபிடித்தவற்றை விளக்கமாக தெரியப்படுத்துவதில் எந்தவித தயக்கமும் அவர்கள் காட்டியதில்லை.  மற்றவர்களும் தெரிந்துக்கொள்ளும் பொருட்டு எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் மனித சமுதாயத்திற்கு ஆங்கிலேயர்கள் கொடுத்த கொடைகள் ஏராளம்.  ஒரு சாதாரண மாத்திரையில் கூட அதில் உள்ள வேதிபொருட்கள், அதன் விகிதம், பயன்படுத்தும் முறை, காலம் முதலியவற்றை அச்சடித்து வெளியிடக்கூடியவர்கள்.

             அப்படிப்பட்ட ஆங்கிலேயர்கள் நம்மை ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆண்டனர் அதன் பயனாக நாம் ஆங்கிலேயரது மொழி, பழக்கவழக்கங்கள், ஆங்கில நாட்காட்டி, ஆங்கில மருத்துவம், நீதி நிர்வாகம் போன்ற பல விஷயங்களில் நாம்  ஆங்கிலேயரை பின்பற்றிவருகிறோம்.  ஆனாலும் சில விஷயங்களில் நமது பிறவி குணத்தை நாம் இன்னும் கைவிட வில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

              இந்தியாவில் சற்று மாறுபாடான குணம் நம்மில் பலருக்கு உண்டு அது தாம் அறிந்தவற்றை, தெரிந்தவற்றை தமது வாரிசுகளுக்கும், சில சிஷ்யகோடிகளுக்கும் மட்டுமே தெரியப்படுத்துவர்.  இத்தகைய சுயநலமான சிந்தனையும், குறுகிய மனப்பான்மையும் தான் நமது பெருமைகளையும், அடையாளங்களையும் இவ்வளவு காலம் நாம் இழந்து நிற்பதற்கு காரணம்.

             ஆதிகாலம் தொட்டே பல விஷயங்களையும் நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் மறைத்து வைக்கும் பழக்கத்தினால் நமக்கு கிடைக்காமலேயே மண்ணில் புதைந்து போன கலைகள் ஏராளம் ஏராளம். சுவடிகளும், வைத்திய குறிப்புகளும், ஜோதிட பொக்கிஷங்களும் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் நம்மை விட்டு ஏறக்குறைய அழிந்தே போய்விட்டன என்று கூறலாம்.

               இத்தகைய நமது குணங்களை என்னவென்று சொல்வது.  அக்காலகட்டத்தில் சரியான அச்சு ஊடகங்கள் இல்லை தகவல்களை பாதுகாக்க சரியான வழிமுறைகள் இல்லை எனவே அவற்றை  நாம் பெற தவறிவிட்டோம் என்று கொண்டாலும் இந்த விஞ்ஞான யுகத்தில்   தகவல் தொடர்பு முறையில் நாம் எவ்வளவோ முன்னேறிவிட்டோம்.  ஆனாலும் நமது மூதாதையர்களது குணமானது நமது இரத்தத்தில் ஒன்றிவிட்ட காரணத்தால் அந்த மறைக்கும் குணத்தை விடாமல் பலரும் பின்பற்றிவருவது மிகவும் வருத்தத்தை தருகிறது.

            சமீபகாலமாக சில மாதங்களுக்கு முன்பு நான் வலைபூக்களில் பார்வையிட்ட போது ஜோதிடம் சம்பந்தமான ஒரு வலைதளத்தை பார்வையிட நேர்ந்தது.  வகுப்பறை என்ற அந்த வலைப்பூவின் ஆசிரியரின் எழுத்து நடையும் ஜோதிட சம்பந்தமாக அவரது பாடங்களும் ஓரளவிற்கு நன்றாகதான் இருந்தது.  நான் ஜோதிடனும் அல்ல, ஜோதிடம் எனது தொழிலும் அல்ல என்று அந்த ஆசிரியர் தன்னைபற்றி கூறியிருந்தார்.  ஜோதிடம் சம்பந்தமாக அவரது கருத்துகளை படித்து ஏறக்குறைய தமிழ் ப்ளாக்கர்கள் பலரும் அவரது தளத்தில் உறுப்பினராக இணைந்தும்  அவரது தளத்தை பார்த்தும் தங்களது கருத்துகளை அங்கு பதிவிட்டு வந்தனர்.

              இதில் ஒருவர் அந்த இணைய தளத்தில் அவரது பாடங்களை காப்பி செய்து தனது தளத்திலும் தனது ஜோதிட மென்பொருளிலும் பயன்படுத்திக் கொண்டார் என்று அந்த ஆசிரியர் தனது வலைதளத்தில் எழுதியிருந்தார்.  இதனை அனைத்து வாசர்களும் வன்மையாக கண்டித்தனர் நான் உட்பட.

               அந்த ஜோதிட வலைதளத்தின் ஆசிரியர் தனது எழுத்துக்களை காப்பி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், இனிமேல் தனது வலைதளத்தில் ஜோதிடத்தை பற்றி அலசப்போவதில்லை என்றும் எழுதியிருந்தார்.  மேலும் ஜோதிடம் சம்பந்தமாக புதிய இணைதளம் தொடங்கப்போவதாகவும் அதற்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிகப்போவதாகவும் .  அதுவரை தனக்கு வேண்டிய சீனியர் மாணவர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் வகுப்பு எடுப்பதாகவும் தனது பதிவில்  எழுதியிருந்தார்.  மேலும் புதியவர்கள் பலரது விண்ணப்பங்களை நிராகரித்து பலருக்கும் மின்னஞ்சல் பாடங்களை அனுப்புவதில்லை.

               பொதுவாக எல்லா இடங்களிலுமே திருடர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அதுவும் இணையத்தில் சொல்லவே வேண்டாம் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும் தங்கச் சுரங்கம் இணையம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.  இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கதான் செய்யும்.  நமது மனதிருப்திக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் வலைப்பூவில் பலருக்கும் உபயோகமாக நாம் எழுதும் போது சிலர் காப்பி செய்தால் அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படக்கூடாது என்பது எனது கருத்து.  எனக்கு தெரிந்த வரை தமிழில் பல வலைபூக்களில் இந்த காப்பி செய்யும் வேலைகள் ஏராளம் உள்ளன.  இதற்கெல்லாம் கவலைப்பட்டு கதவை சாத்துபவர்கள் இணையம் பக்கமே வராமல் பாதுகாப்பாக அவர்களது கருத்துகளை தங்களோடு மட்டுமே பூட்டி வைத்துக் கொள்ள வேண்டியது தான். இல்லையென்றால் புத்தகம் எழுத போய்விட வேண்டியது தான்.

               நாம் அனைவரும் பிறக்கும் போது எதையும் கற்றுக்கொண்டு வரவில்லை, இறக்கும் போது எதையும் இங்கிருந்து எடுத்துக்கொண்டும் போக போவதில்லை.   நாம் எவற்றை பிறருக்கு கற்பிக்கிறோமோ அவற்றை இந்த உலகில் இருந்தே நாமும் கற்றோம்.  என்ற கீதாசாரத்தை பலரும் மறந்து விடுகின்றனர்.  ஏதோ தானே எல்லாவற்றையும் கண்டுபிடித்ததை போலவும், தான் மட்டுமே முயன்று படித்து தனது அறிவால் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டதாகவும், பிறர் வியாபார நோக்கத்துடன் அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்று கோடீஸ்வரராக மாறிவிட்டதாயும் சிலருக்கு ஒருவித நினைப்பு ஏற்படுவதுண்டு.

             நாம் கற்ற விஷயங்கள் அனைத்தும் பலரது அரிய ஜோதிட ஆராய்ச்சியில் கண்டறிந்து அவற்றை அவர்கள் எல்லாம் தன்னலம் கருதாமல் இந்த பூவுலகில் அனைவரும் தெரிந்துகொள்ளட்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடும் அவற்றை சுவடிகளிலும் நூல்களிலும் எழுதி வைத்து சென்றுள்ளனர்.  மேலும் இணையத்தில் ஜோதிட கணிதங்கள் தொடர்பான பல மென்பொருட்களும், இணையதளங்களும் இலவசமாகவே காண கிடைக்கின்றன.

              அவற்றிற்கெல்லாம் அவர்கள் விலைகேட்பதில்லை தாம் கற்ற வித்தை பிறர்க்கும் பயன்படட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலேயே அவர்கள் அவற்றை படைத்தனர்.  இணையத்தில் ஜகன்னாத ஹோரா என்றறொரு ஜோதிட மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.   நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் எக்ஸ்பி விலைகொடுத்து வாங்கி தங்கள் கணினியில் பதிந்துள்ளோம் என்று பார்த்தால் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கும்.  இதல்லாம் பதிப்புரிமை மீறல்கள் இல்லையா.  இவர்களெல்லாம் காப்பிரைட் சட்டத்தை மதிப்பவர்களா என்று எண்ணி பார்க்க வேண்டும்.

           எனவே தனது எழுத்துகள் களவுபோய்விட்டன என்றெல்லாம் உரிமைகொண்டாடுவதற்கு முன் நாம் பிறருடைய ஜோதிடநூல்களை ஸ்கேன் செய்து தனது தளத்தில் வெளியிடுகிறோமே.  அவர்களது மென்பொருட்களையெல்லாம் இலவசமாக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தனது தளத்திலேயே இணைப்பு வேறு கொடுத்துள்ளோமே அதன் மதிப்பு என்ன என்றெல்லாம் சிந்தித்து பார்த்தால் நான், எனது எழுத்து போன்ற விஷயங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

           வெறும் அடிப்படை பாடங்கள் எழுதுவது என்பது அனைவருக்கும் மிக எளிது அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமல்ல.  அந்த ஆசிரியரை விட விஷயம் தெரிந்த பலபேர் நாட்டில் உள்ளனர்.  அவர்களெல்லாம் எவ்வளவோ விஷயங்களை இந்த உலகிற்கு கொடுத்து சென்றுள்ளனர்.  அமரர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது கே.பி. என்னும் புதிய வழிமுறையை எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் உலகிற்கு வழங்கி சென்றுள்ளார்கள்.  எனவே வெறும் வார்த்தை ஜாலம் மூலமே ஜோதிடத்தை எழுதிவிடலாம் என்றால் விஷயம் அறிந்த ஜோதிடர்கள் அனைவரும் அதனை கண்டு நகைக்க செய்வார்களே அன்றி வேறென்ன சொல்ல.

               கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு மேல் தனது வலைபூவில் ஜோதிடம் குறித்து அலசாத விஷயங்களை இனிமேல் தனது புதிய ஜோதிட இணைய தளம் வழியாக அலச போவதாகவும், அவையெல்லாம் ஜோதிடத்தில் மேல்நிலை பாடங்களாம் அதனை படிக்க வேண்டுமாயின் அவரது தளத்தில் பயணர் எண், கடவுச்சொல் வேண்டி தங்களது விபரங்களை அவருக்கு மின்னஞ்சல் மூலம் முன்பதிவு செய்யுமாறு அவரது தளத்தில் எழுதியுள்ளார்.  மற்றவர்களுக்கு பழைய வகுப்பறையிலேயே கதை எழுதுவார் அதை படித்து கொள்ள வேண்டுமாம்.  அவரது புதிய ஜோதிட இணைய தளத்திற்கு வாசர்களை இழுக்க இப்பவே பல தூண்டில்களை தொங்க விட்டுள்ளார்.  அதாவது அலசுவது போல அசுவார் மற்றவை மின்னஞ்சலில் என்று முடித்துவிடுவார். நமக்கு சப்பென்று ஆகிவிடும் மிகவும் வேடிக்கைதான் போங்கள்.  அதற்கு ஜால்ரா போடும் கூட்டம் வேறு. 

          மனிதனுக்கு பொன், பெண், மண் என்ற மூன்று ஆசைகள் உள்ளதாக அந்த காலத்தில் கூறுவர்.  தற்போது பாழாய்போன புகழ் ஆசையும் அதனுடன் சேர்ந்து மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது.  தான் அறிவில் மிகவும் உயர்ந்தவர், திறமையானவர் என்ற நினைப்பும் நம்மை எல்லோரும் பாராட்டவேண்டும் என்ற எண்ணமுமே புகழாசை ஏற்பட காரணம்.  ஆசைப்பட வேண்டியது தான் தவறில்லை அதற்காக மனிதர்கள் செய்யும் விளம்பரங்கள் இருக்கிறதே அப்பப்பா தாங்கமுடியவில்லை.  தன்னை புகழ்பவர்களுக்கு மட்டும் தவறாமல் பின்னூட்டத்தில் பதில் எழுதிவிடுவது அவரது வழக்கம். 

            புதியவர்கள் அவரது தளத்தில் உள்ள பாடங்களை படித்துவிட்டு பின்னூட்டம் மற்றும் மின்னஞ்சல் எழுதினால் அதை வெளியிடுவதில்லை பலருக்கு பதிலும் எழுதுவதில்லை.  தமது தளத்தில் ஏறக்குறைய 2000 பேர் உள்ளார்கள் என்ற தன்முனைப்புதான் இதற்கு காரணம்.  ஆரம்பகட்டத்தில் இணையத்தில் அனைவரிடமும் வலிய சென்று பழகிவிட்டு பின்பு கண்டுகொள்ளாமல் இருந்தால் புதியவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்றெல்லாம் அவர் நினைப்பதில்லை.  இந்த நிலை தொடர்ந்தால் வந்தவர்கள் திரும்பி செல்ல வெகு நாட்கள் ஆகாது.
            
             மேற்கண்டவற்றின் மூலமாக நான் விளக்க வருவது என்னவென்றால்  பலருக்கும் இணையத்தில் உலவவே நேரம் இல்லை.  இவர் மற்றவர்களுக்கு பிடித்த அறிந்து கொள்ள விரும்புகின்ற ஜோதிடம் குறித்த விஷயங்களை தமிழில் எழுதுகிறார் என்ற காரணத்தால் தான் அவரது தளத்தை பார்க்கின்றார்கள்.  அவர்களை அலட்சியம் செய்தால் விரைவில் கடையை மூடிவிட்டு செல்ல வேண்டியதுதான்.  இதே 2000 பேரும் இவருடைய இணைய தளத்தில் சேர்ந்து பணம் செலுத்தி ஜோதிடம் குறித்து கதை கேட்க வருவார்கள் என்று உறுதியாக கூற முடியுமா.  இவரைவிட விஷயம் தெரிந்த ஜோதிடர்கள் எல்லாம் அனைவருக்கும் அவர்களது பகுதியில் இருப்பார்கள் என்பது கூடவா இவருக்கு தெரியாது.
                  
             எனவே எந்த ஒரு விஷயத்திலும் தானே சிறந்தவன்,  எல்லாம் அறிந்தவன் என்று நினைத்து கொண்டு பிறரை அலட்சியம் செய்யக் கூடாது.  எதுவும் தன்னுடையது என்ற சுயநலம் இருக்க கூடாது அது தம்மையும் பிறரையும் மட்டுமல்ல புனிதமான ஜோதிட கலையையே அவமதிக்கும் செயலாகும்.  கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்ற அடக்கம் நம்மையும் பிறரையும் என்றும் உயர்த்தும்.

             இங்கு நான் எழுதிய கருத்துகளுக்கு அவரது சீனியர் மாணவர்கள் பலரும் கண்டனம் தெரிவிக்க கூடும்.  அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை அடிப்படையில் நானும் ஒரு ஜோதிடனே எனவே எனது கருத்துகளை எழுத எனக்கு உரிமை உண்டு.  எனவே அவர்களது  எத்தகைய விமர்சனங்களையும் நான் பொருட்படுத்த போவதில்லை.

            வாழ்க புனிதமான ஜோதிடக்கலை!! 
            வளர்க உண்மையான ஜோதிடர்கள்!!!.

அடுத்த பதிவில் சந்திப்போம்.
நன்றி.

சு. மணிகண்டன்

0 கருத்துரைகள்:

Show/Hide Comments

Post a Comment

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.