வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

26 March 2011

நினைவில் கொள்ளவேண்டிய விதிகள்

 அனைவருக்கும் வணக்கம்,

நினைவில் கொள்ள வேண்டிய ஜோதிட விதிகளாக சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன் ஆரம்ப நிலையில் ஜோதிடம் கற்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் உபயோகமாக அவை இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜாதகத்தில் லக்னம் முதல் எண்ண வருகின்ற 1,4,7,10 ஆகிய இடங்களை கேந்திரங்கள் எனவும் 1,5,9 முதலிய இடங்கள் திரிகோணங்கள் எனவும் கேந்திர, திரிகோணாதிபதிகள் பொதுவாக வலுவுள்ளவை எனவும் ஜோதிடம் கூறுகிறது.
 
கேந்திரங்களை விட திரிகோண ஸ்தானங்கள் மிகவும் வலியது.  இங்கு 6,8,12 மிட அதிபதிகள் இருந்தால் கூட நற்பலன்களை தருவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.  ஆனால் அவ்வாறான கிரகங்கள் கேந்திரங்களில் இருந்து விட்டால் வலிமைபெற்று ஜாதகருக்கு தீய பலன்களை தரும்.  எனவே திரிகோண ஸ்தானங்கள் மிகவும் வலிமை பெற்றவை நன்மைகளை தருபவை அங்கு கிரகங்கள் இருப்பது மிகவும் நன்மை பயக்கும்.

சுப கிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், சுபரோடு இணைந்த புதன் போன்ற கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகி அதே கேந்திரத்தில் ஆட்சி பெற்றாலோ அல்லது வேறு கேந்திர வீடுகளில் நின்றாலோ ஜாதகருக்கு கேந்திராதிபத்ய தோஷம் பெற்று தீய பலன்களை தருவர் அத்தகைய கிரகங்களால் ஜாதகருக்கு பெரிய நன்மை இல்லை ஆனால் அந்த கிரகங்கள் திரிகோணங்களில் இருப்பது நன்மையான பலன்களை தரும் அமைப்பாகும்.

பாப கிரகங்கள் நல்ல ஆதிபத்யம் பெற்று கேந்திரங்களில் நின்றால் மிகுந்த பலம் பெற்றுவிடும் நன்மையான பலன்களை ஜாதகருக்கு வாரி வழங்கும்.  கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோண ஸ்தானாதிபதியும் இணைந்து கேந்திரம் அல்லது திரிகோணங்களில் இருப்பதே ராஜ யோகத்தை தரும்.  

கடக லக்னத்திற்கு செவ்வாய் 5 என்ற திரிகோணத்திற்கும் 10 என்ற கேந்திரத்திற்கும் அதிபதியாவதால் மிகச் சிறந்த முதல் தர ராஜ யோகத்தை தரும் கிரகமாகிறார்.  ஆனால் மகர  லக்னத்தாருக்கு சுக்கிரன் 5 ம் மற்றும் 10மிட அதிபதியாக வந்தாலும் 10ம் இடம் கேந்திர ஸ்தானமாக வருவதால் சுபக்கிரகமான சுக்கிரன் கேந்திராதிபத்ய தோஷம் பெற்று அவ்வளவு சிறப்பான யோகத்தை மகர லக்னத்தாருக்கு தருவதில்லை.

கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் ஒன்றை விட மற்றொன்று வலிமையானது, எப்படியெனில் 1-ம் இடத்தைவிட 4ம் இடம் வலியது, அதைவிட 7ம் இடம் வலியது அதைவிட 10ம் இடம் மிகவும் வலியது.  அவ்வாறே திரிகோணங்களில் 1-ஐ விட 5ம், 5-ஐவிட 9-ம் வலிமையான திரிகோண ஸ்தானங்களாகும்.

துலா லக்னத்தாருக்கு சனியானவர் 4, 5 மிடங்களுக்கு அதிபதியாவதால் தரும் யோகப் பலன்களை விட ரிஷப லக்னத்தாருக்கு பெரிய கேந்திரம் மற்றும் திரிகோண ஸ்தானங்களான 9, 10 மிடங்களுக்கு அதிபதியாகி தரும் யோகம் மிகவும் உயர்வான ராஜ யோகமாக விளங்கும்.

லக்னத்தில் கேந்திரமும் திரிகோணமும் அடங்கியுள்ளது ஆனால் மிகவும் வலிமை குறைந்த கேந்திர திரிகோண ஸ்தானமாக வருகிறது.  ஆயினும் லக்னாதிபதி ஜாதகருக்கு நன்மையான பலன்களையே செய்கிறார்.

சரி, இப்போது தீய ஸ்தானங்களை பற்றி பார்ப்போம் 3,6,8,11 ஆகிய இடங்கள் தீய ஸ்தானங்கள் என ஜோதிடம் கூறுகிறது.  3-ஐ விட 6-ம் இடம் தீயது, 6-ஐ விட 8-ம் இடம் மிகவும் தீயது, 8-ஐ விட 11-ம் இடம் தீயது.  2ம்மிடமும் 12ம் இடமும் சம வலிமை உடையவை.  அதிக நன்மைகளோ அல்லது தீமைகளையோ செய்வதில்லை.

மிகவும் கொடிய ஸ்தான அதிபதிகளாக விளங்கும் 6, 8 அதிபதிகள் கேந்திரங்களில் நின்று ஆட்சி, உச்சம் பெற்றால் அவர்களைவிட  லக்னாதிபதி மிகவும் வலிமையாக இருக்க வேண்டியது அவசியம் இல்லாவிட்டால் ஜாதகரை தலையெடுக்க விடாமல் செய்து ஒழித்து கட்டிவிடும்.  ஆனால் அந்த தீய அதிபதிகள் கூட திரிகோணம் வந்தால் நன்மையான பலன்களையே தருகின்றனர்.  என்னே திரிகோண ஸ்தானங்களின் மகிமை.  ஆனால் அந்த பாவ பலன்ளை ஏதோ ஒரு வகையில் கெடுத்து விடுகின்றனர்.

சர (மேஷ, கடக, துலா, மகர) லக்னங்களுக்கு 11 மிடம் , ஸ்திர (ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப) லக்னங்களுக்கு 9-ம்மிடம் மற்றும் உபய (மிதுன, கன்னி, தனுசு, மீன) லக்னங்களுக்கு 7மிடமும் பாதக ஸ்தானங்களாகிறது.  பாதக ஸ்தானங்களுக்கு அதிபதிகள் பாதகாதிபதிகாகின்றனர்.  அவர்கள் ஜாதகருக்கு பாதக பலன்களை செய்கின்றனர்.  பாதகாதிபதிகளை விட பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்கள் அதிக பாதகங்களை செய்கின்றனர்.

இங்கே பாருங்கள்! மிதுன லக்னத்தாருக்கு சுபக்கிரகமான குருவானவர் 7, 10 ஆகிய கேந்திரங்களுக்கு அதிபதியாகி கேந்திராதிபத்ய தோஷம் பெறுவது போதாது என்று உபய லக்னமான மிதுனத்திற்கு 7மிடமாகிய பாதக ஸ்தான அதிபதியாகவும் வருவதால் இருமடங்கு தீய பலன்களை தரும் கிரகமாகிறார்.  புதன் மட்டும் சளைத்தவரா என்ன! குருவின் தனுசு, மீன லக்னங்களை ஒரு கை பார்க்காமல் விட்டுவிடுவாரா என்ன!.  சிறு திருத்தம் புதன் தனித்தோ அல்லது சுபக்கிரகங்களுடன் இணைந்தோ இருக்க வேண்டும்.

பொதுவாக 2, 7-மிடங்களை மாரக ஸ்தானங்கள் என்று கூறுவார்கள்.  ஏனெனில் 8-மிடம் ஆயுள் ஸ்தானம் அதற்கு 12-மிடமாகிய 7-மிடம் மாரக ஸ்தானமாகிறது.  அவ்வாறே 8-க்கு 8-மிடமாக 3-மிடமாக வரும், இதுவும் ஆயுளை குறிக்கும். 3-க்கு 12-மிடமாக 2-மிடம் வருவதால் அதுவும் மாராக ஸ்தானமாகிறது.

சரி இப்போது குரு, புதன் விஷயத்திற்கு வருவோம் இவர்கள் கேந்திராதிபதி, பாதகாதிபதி மற்றும் மாரகாதிபதி என்று வருகின்றனர்.  அப்படியானால் பாதகத்தையும் மாரகத்தையும் செய்யுமா என்றால்.  பாதகம் செய்யும் கிரகம் மாரகம் செய்யாது.  மாரகம் செய்யும் கிரகம் பாதகம் செய்யாது.  கருணையுள்ள கிரகங்கள் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் செய்யும் இரண்டையும் செய்யாது.  இது ஒரு பொது விதி.

உதாரணமாக ஒருவனுக்கு சீரியசான நோய் என்கிற ஏதாவதொன்று வந்துவிட்டால் அதோடுதான் மனிதன் வாழ்நாள் முழுவதும் போராடுவான்.  வேறோரு சீரியஸ் நோய் அவனுக்கு வராது.

பொதுவாக உச்சம் பெறும் கிரகங்கள் அந்த வீட்டிற்கு 7ம் வீட்டில் நீசத்தன்மை பெறும்.  மேஷத்தில் உச்சனாகும் சூரியன் அதற்கு 7ம் வீடான துலாத்தில் நீசனாகிறார்.  இவ்வாறு அனைத்து கிரகங்களும் உச்ச வீட்டிற்கு நேர் எதிரான 7ம் வீட்டில் நீசனாகும்.

குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு 5-ல் சூரியன் வரும் போது வக்கிரம் பெறுவர்.  9-ல் சூரியன் வரும் போது வக்கிர நிவர்த்தி பெறுவர் என்பது பொதுவிதி.

பொதுவாக ஒருவர் ஜாதகத்தை பார்த்த மட்டில் உடனே பலன் சொல்ல ஆரம்பித்து விடக்கூடாது.  அவரது ஆயுளை முதலில் பார்க்க வேண்டும்.  ஆயுள் இருந்தால் தான் நாம் சொல்லும் பலன்களை அவர் அனுபவிக்கும் யோகம் ஏற்படும்.  எனவே ஆயுளை தோராயமாக கணித்து பின்பு பலன்களை கூற ஆரம்பிக்க வேண்டும்.  ஆயுர்த்தாய கணிதம் எல்லாம் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் அப்படி கணித்தாலும் அதுவும் தோராயமான ஆயுளாகத்தான் வரும்.  ஜோதிடத்தில் எதையும் துல்லியமாக கூற மிகுந்த அனுபவம் தேவைப்படும்.

ஆயுளை தோராயமாக கணிக்க ஒரு பாடல் உண்டு கீழே பாருங்கள்.

”அட்டமன் ஈராறு, ஒன்பான, அணி
          திரி, ஏகம், நூறு
எட்டுடன், பன்னொன்று, ஐந்தில் இருந்திட
        எழுபத்தைந்து
விட்ட ஆறாமிடத்தினில் மேவிடில் 
         நூறிற்பாதி
மட்டிலா நாலு பத்து ஏழ்
        வயது அற்பமாகும்”.

ஈராறு-12, ஒன்பான்-9, அணி-2, திரி-3, ஏகம்-1

அட்டமாதிபதி எனப்படும் 8ம்மிட அதிபதி 1,2,3,9,12 ல் இருந்தால் ஜாதகருக்கு தோராயமான வயது 100 என பாடல் கூறுகிறது.

5,8,11-ல் இருந்தால் வயது 75, 

அவர் 6-ல் இருந்தால் நூறில் பாதி 50 வயது, 

அவர் 4,7,10-ல் இருந்தால் அற்ப ஆயுளை தருவார் என்பது பாடல் நமக்கு விளக்கும் கருத்தாகும்.   இங்கு அற்ப ஆயுள் என்பது 32 வயதிற்குள் வரும்.

.இது அட்டமாதிபதி எனப்படும் 8-மிட அதிபதியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தரும் ஆயுளாகும்  ஜோதிடர்கள் மற்ற விதிகளையும் கருத்தில் கொண்டு கணக்கிட்டால் ஜாதகருக்கு ஆயுள் அதிகமாக இருக்க வழியுண்டு.

மிகவும் அதிகமாக ரூல்ஸ் கூறி குழப்பிவிட்டேனா.  ஜோதிடத்தில் விதிகளுக்கா பஞ்சம்,  சரி அடுத்த பதிவில் மேலும் குழம்ப காத்திருங்கள்.....
அதுவரை தங்களிடமிருந்து விடைபெறுவது
சு. மணிகண்டன்

1 comment:

  1. கருணானிதி அவர்களுக்கு கடக லக்கனமாகி 8க்குரிய சனி நாலாம் வீட்டில் உள்ளார் ... கிட்டத்தட்ட 100 வயதை நெருங்கிவிட்டார்.. அப்படியானால் இந்த பாடல் பொய்யா? சனி பகவான் ஆயுள் காரகர் உச்சம் அடைந்து, 8 ம் அதிபதியும் ஆகிறார் என்று நீங்கள் விளக்கம் கூறினாலும் ஆயுள்ளை கணிக்க இம்முறை உகந்ததல்ல என்றாகிறதல்லவா??

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.