வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

27 October 2010

ஜோதிடம் பற்றிய சில கருத்துகள் - பாகம் 2

         அனைவருக்கும் வணக்கம் சென்ற பதிவில் ஜோதிடம் குறித்த சில கருத்துக்களை கூறியிருந்தேன்.  ஜோதிடமானது நமது விதியமைப்பை தெரிந்து கொள்ள உதவுகிறது.  நாம் சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நமது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் இப்பிறவியில் அமைகிறது.  இப்பிறவியில் செல்வந்தர் வீட்டில் பிறந்து இன்பமாக வாழ்வதும், ஏழையின் வீட்டில் பிறந்து இளமையில் துன்பத்தை அனுபவிப்பதும் நமது வினைப் பயன்களின் விளைவால் ஏற்படுவதே அகும்.

    உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பாவ புண்ணியங்கள் ஏற்படுகின்றன. பிற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்கின்றன.  எனவே அத்தகைய உயிரினங்களால் இயற்கையில் எத்தகைய மாற்றமும், விளைவும் ஏற்படுவதில்லை.  ஆனால் மனிதன் மட்மே இயற்கையை தனது விருப்பத்திற்கேற்றாற் போல் மாற்றி வாழ முற்படுகின்றான்.  அதனால் அவன் பல செயல்களை இயற்கையை மாற்றி செயல்பட துவங்குகின்றான்.  இதன் விளைவாகவே அவனது செயல்களுக்கு ஏற்ற பலன்களை அவன் பெறுகின்றான்.

            நியூட்டனின் மூன்றாவது விதியை நாம் அனைவரும்  பள்ளிப் பாடத்தில் படித்திருப்போம். அது ‘எந்த வினைக்கும் எதிர் வினை உண்டு’ என்பதாம்.  நன்மை செய்தால் பிற வகைகளில் நன்மைகள் நம்மை தேடி வரும்.  அதுவே தீமை செய்தால் பிற வழிகளில் தீமையான பலன்களே நம்மை வந்தடையும்.

           ஜாதகத்தில் 5, 9 ம் இடங்கள் நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கு இப்பிறவியில் நாம் அடையப்போகும் பலன்களை எடுத்து கூறும் இடமாகும்.  நமது மொத்த ஜாதகமுமே நாம் செய்த வினைகளுக்கு ஏற்றவாறு தான் பலா பலன்களை நமக்கு தரும்.

           நாம் நமது ஜாதகத்தின் மூலம் நமது கர்ம வினைகளை தெரிந்து கொள்கிறோம்.  ஆனால் நமக்கு எப்போது யோகம் வரும், நமது தீமைகள் எப்போது நம்மை விட்டு அகலும்.  நான் பணக்காரனாக ஆவேனா.  கார்,  பங்களா வாங்குவேனா.  எனக்கு நல்ல வேலை எப்போது கிடைக்கும், திருமணம் எப்போது ஆகும்.  எனக்கு ஏன் இந்த நோய் வந்தது, அது எப்போது தீரும். கடன் எப்போது தீரும்.  பகை எப்போது அகலும் போன்ற பல வினாக்களை எழுப்பி ஜோதிடர் நமக்கு சாதகமாக பலன்களை சொல்லுவாரா என்று பார்க்கின்றோம்.  ஜோதிடரும் தனக்கு தெரிந்த வகையில் ஜாதகத்தை அலசி உங்கள் வினாக்களுக்கு தகுந்த விடையை தருகிறார்.  அது நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் இருந்தால் மகிழ்ச்சியையும் இல்லாவிட்டால் வருத்தமும், ஜோதிடத்தின்பால் அவநம்பிக்கையும் ஏற்படுகிறது.

          உண்மையில் நாம் எப்போதும் பிறர்க்கு உதவும் வகையில் நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.  நம்மால் முடிந்த உதவிகளை பிறர்க்கு செய்து கொண்டே இருக்க வேண்டும்.  பலன் கருதி எந்த செயலையும் செய்யக் கூடாது.  பலன் ஏற்பட்டாலும் அதன் மீது பற்று ஏற்படக்கூடாது.  நாம் நமது கடமையை செய்து கொண்டே இருக்கவேண்டும்.  

             இன்றைய உலகில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் பெறுவது, கொடுப்பது என்பது சமுதாயத்தில் பழகிபோய்விட்ட ஒன்றாகும்.  லஞ்சம் நமது பாவ மூட்டையை மேலும் அதிகமாக்குமே ஒழிய வேறு எந்த நன்மையும் அதனால் இல்லை.  எந்த பணியையும் பலன்கருதாது செய்ய பழகிகொள்ள வேண்டும் அது அலுவலகப் பணியாயினும் சரி, சமுதாய பணியாயினும் சரி.  அதனையே அப்பர் பெருமகான் ‘என் கடன் பணிசெய்து கிடப்பதேயல்லாமல் வேறறொன்றறியேன் பராபரமே’ எனப் பாடியுள்ளார்.   

              முடிந்தவரை நாம் எளிமையாக வாழ பழகிக் கொள்ளவேண்டும்.  தேவையற்ற ஆடம்பரங்களுக்கு ஆசைப்பட கூடாது.  கோயில்களில் ஏற்பாடு செய்யப்படும் அன்னதானம் மற்றும் ஊருக்கு பொதுவாக செய்யப்படும் காரியங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு பலன் கருதாமல் உழைக்க வேண்டும்.  இப்படி செய்வதின் மூலம் நமது கர்ம வினைகள் பெருமளவு கரைந்துவிடும்.

             நம்மிடம் வசதிகள் இருப்பின் ஏழைக் குழந்தைகளுக்கு படிக்க, உண்ண, உடுக்க வசதிகளை நாம் செய்து தரவேண்டும்.  அவை நமது வறுமையை போக்கும், எந்த நிலையிலும் நமக்கு ஆகாரம் கிடைக்கும் வழியாகும்.  அவ்வப்பொழுது சிறைச்சாலை, மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு துன்பப்படுபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம்.  ஏனெனில் நமது ஜாதகத்தில் ஏதோ ஒருவகையில் மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் வரும் அப்போது நாம் இயல்பாக செய்து வந்த செயலினால் அந்த கர்ம வினையானது கழிந்து போக வாய்ப்புண்டு.  அவ்வாறே சிறைசாலைக்கும் பொருந்தும்.  அவ்வபொழுது அவசியம் ஏற்பட்டால் இரத்த தானம் செய்யவதும்; விபத்துகள் ஏற்படும் நிலை நமது ஜாதகத்தில் இருந்தால் அவை நமக்கு அதிக பாதிப்பை தராது.  

             இவையெல்லாம் நடைமுறை வாழ்வில் இயல்பான முறையில் செய்யும் பரிகாரங்களாகும்.  இதனால் நமது பாவ வினைகள் கழிவதோடு மட்டுமல்லாமல் பல புண்ணிய செயல்களுக்கு வித்திடுவதாக அமையும்.

              நாம் உடலால் உள்ளத்தால் பிறர்க்கு செய்யும் நன்மைகளே நமது கர்ம வினைகளை நாம் அனுபவித்து கழிக்கும் வழியாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் ஆலயங்களை எழுப்பி அதன் மூலம் பல நல்ல காரியங்களை செய்ய நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றனர்.  ஆனால் நாம் தான் பகுத்தறிவு என்றும் மூடநம்பிக்கை என்றும் அவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் விலகி வாழ்ந்திருக்கிறோம்.

            அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

2 comments:

 1. Sir
  I have sent a mail to ur gmail id with my horoscope details
  kindly go thro 7 revert back

  ReplyDelete
 2. தங்களுக்கு மின்னஞ்சலில் பதில் அனுப்பியுள்ளேன். பார்க்கவும்.

  நன்றி.

  ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.