வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

09 April 2011

அன்னா ஹசாரே - காந்திஜியின் மறுபிறவி


”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - ஆனால்
தர்மம் மறுபடியும் வெல்லும்”

பாஞ்சாலி சபதம் இயற்றிய பாரதியின் வரிகள் இவை.  இந்த வரிகள் அமரத்துவம் பெற்றவை.  என்றும் நிலைத்திருப்பவை.

தற்போது தர்மத்தின் தலைவனாக உருவெடுத்திருப்பவர் நம் அனைவரின் பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு.அன்னா ஹசாரே அவர்கள்.  அகிம்சை வழியில் நின்று நாட்டின் அதிகார ஆணவ வர்க்கத்தை தன் காலடியில் விழவைத்தவர்.   மகாத்மா காந்தியின் அகிம்சை வழி என்றும் எப்போதும் எப்பேர்பட்ட கொம்பனையும் வீழ்த்தி வெற்றியை பெற்று தரும் என்று நாம் அனைவருக்கும் மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார் திரு. அன்னா ஹசாரே அவர்கள்.  

சூரியன் அஸ்தமிப்பதில்லை என்று கொக்கரித்த ஆளானாப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே தனது அகிம்சை மூலம் வீழ்த்திக் காட்டியவர் நமது தேசப்பிதா.  உறுதியான சக்கிவாய்ந்த அந்த அகிம்சா வழியின் முன்பு இந்த காலத்து அரசியல் வியாதிகள் எந்த மூலைக்கு தேறுவர்.  பாவம் அவர்களை கதிகலங்கி போக செய்தவர் திரு. அன்னா ஹசாரே அவர்கள்.

இந்தியாவை உலகம் முழுவதும் தலைகுனியச் செய்த மிகப்பெரிய ஊழல் வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் இத்தகைய காலகட்டத்தில் ஊழலுக்கெதிரான லோக்பால் சட்ட மசோதாவை தயாரிக்கும் குழுவில் மக்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று போராடியவர் திரு. அன்னா ஹசாரே அவர்கள்.  அதில் அவர் வெற்றியும் பெற்றுத் தந்துள்ளார்.  இந்த நாள் நம் அனைவரின் வாழ்விலும் நிச்சயம் ஒரு பொன்னாள் என்றால் அது மிகையாகாது.

ஏனெனில் பூனைக்கு யார் மணிகட்டுவது என்று எல்லோரும் பயந்து ஒதுங்கி போகும் இந்த காலத்தில் யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக தனி ஒரு மனிதராக நின்று போராடி பெற்ற வெற்றி என்பது ஊழல்வாதிகளுக்கு கிடைத்த முதல் சமட்டி அடி.  இப்படிப்பட்ட நேர்மையான உண்மையான மனிதர்கள் அத்திப்பூத்தாற்போல் நமது நாட்டில் இன்னும் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களுக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டிய மனிதரல்லவா அவர்.

நீதியற்ற நியாயமற்ற அரக்கர்கள் ஆளும் இந்த நாட்டில் அவரது கோரிக்கைகளை மட்டும் உடனே ஏற்றுக்கொள்ளுமா அதிகார வர்க்கம்.  தனது திமிர் தனத்தை அவரிடமும் காட்டிதான் பார்த்தது.  விடுவாரா திரு. அன்னா ஹசாரே எடுத்தார் அகிம்சா ஆயுதத்தை ஆடிப்போனது அதிகார வர்க்கம் என்ன செய்வது என்று தெரியாமல் துடித்தார்கள், தவித்தார்கள் இறுதியில் வேறு வழியில்லாமல் அவரது காலில் மண்டியிட்டார்கள்.  அகிம்சை வென்றது.  வயதானதால் உடல் தளர்வுற்றாலும் உள்ளத்தால் வலிமை மிக்கவர்களால் மட்டுமே அகிம்சை வழியில் வெற்றி பெற இயலும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

காந்திஜியின் கொள்கைகளை மறந்து ஆட்சியில் இருக்கும் அவர் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி மக்களை சுரண்டும் ஒரு கட்சிக்கு மீண்டும் காந்திஜியை நினைவூட்டியவர் என்ற பெருமை திரு. அன்னா ஹசாரே அவர்களையே சாரும்.

ஒரு மனிதன் பொதுவாழ்வில் தூய்மையானவனாக, நேர்மையாளனாக வாழ்ந்தால் அந்த மனிதன் பொது நலனுக்காக போராட முனைந்தால் எப்பேர்ப்பட்ட கொடுங்கோலனும் அவனைக் கண்டு அஞ்சுவான்.  சத்தியத்தின் முன்பு அநீதி பயந்து ஓடி ஒளிந்து போகும்.  இது இயற்கையின் நியதி.  பொதுப் பிரச்சனைகளுக்காக போராட நினைப்பவர்கள் அப்படிப்பட்ட தூய்மையான மனிதர்களாக வாழ்ந்தால் அன்றி அவர்கள் போராட்டம் என்றும் வெற்றி பெறா.  

இன்று தன்னை இனத்துக்காக போராடியவன், மதத்துக்காக போராடியவன், மொழிக்காக போராடியவன் என்றெல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்டு பெருமை பேசி பல பட்டங்களை தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு திரிகின்றனரே சிலர்.  அவர்கள் போராட்டம் என்றேனும் வெற்றி பெற்றதா என்றால் இல்லை.  ஏனெனில் சுயநலமிக்க அத்தகைய மனிதர்கள் அதற்கான பலன்களை தமக்காக அறுவடை செய்து கொண்டார்கள்  அவர்களின உண்மைச் சுய ரூபத்தை இந்த நாடும் நாட்டு மக்களும் நன்கு அறிவர்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வெற்றிபெற்றமைக்காக நம் நாட்டுமக்கள் என்றென்றும் திரு. அன்னா ஹசாரே அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளனர்.  அவரது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பது ஊழல், அதிகார,  ஆணவ  வர்க்கத்திற்கு எதிராக மக்கள் பெற்ற வெற்றியாகும்.  

திரு. அன்னா ஹசாரே அவர்களது போராட்டத்திற்கு ஊடகங்கள் மிகச் சிறப்பாக தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன.  ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகங்கள் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளன.  

தமிழ் வலைப்பதிவர்களாகிய நாம் அனைவரும் இந்த போராட்டத்தின் வெற்றியை நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டுச் செல்ல வேண்டும்.  
தாங்கள் சொந்தமாக தங்கள் பதிவில் திரு. அன்னா ஹசாரே அவர்களின் போராட்டத்தைப் பற்றி நிச்சயம் எழுத வேண்டும்.  எழுத இயலாமல் போதிய நேரம் கிடைக்காதவர்கள் தாங்கள் படித்தவற்றை மற்றவர்களும் தெரிந்துகொள்ளும் வழியில் பிறருக்கு மின்னஞ்சலில் இணைப்பு சுட்டியை (லிங்க்) இணைத்து அனுப்பிவைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.  இதனை அனைவரும் ஒரு கடமையாகவே செய்ய வேண்டும் என்று தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

ஊழலுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெற வேண்டிய நேரம் இது.  மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டால் தான் தீய சக்திகள் நம் நாட்டை விட்டு அகலும்.  இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க்கும்.

வாழ்க பாரதம்! வளர்க நின் புகழ்!!
வந்தே மாதரம்! ஜெய்ஹிந்த்!!

2 comments:

  1. நன்றி ரவிசந்திரன் அவர்களே. திரு. அன்னா ஹசாரே அவர்களைப்பற்றி வலைதளத்தில் நீங்கள் படித்தவற்றை அவைரிடமும் மின்னஞ்சலில் பகிந்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.