வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

16 January 2012

ஜோதிட ஆய்வுத் தொடர் - மேஷ லக்னம் - பாகம் 6

வணக்கம் நண்பர்களே!

பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியிருப்பீர்கள், அப்படியே நேரம் கிடைக்கும் போது நம்ம கடைக்கும் வந்ததுக்கு நன்றி.

சரி நேராக விஷயத்துக்கு வந்துவிடவா? இல்லை கொஞ்ச நேரம் அரட்டையடிக்கலாமா?

இல்லை நேராக விஷயத்துக்கு வாருங்கள்.  நீங்க பதிவு போடுறதே ஆடிககும் அமாவாசைக்கும் ஒரு முறை அதிலும் பிட்டு பிட்டாக வேறு எழுதி எங்களை ஏமாற்றி வருகிறீர்கள்.  இந்த லட்சணத்திற்கு அரட்டைக்கு சென்றால் அப்புறம் மேட்டர் அதிகம் என்று அடுத்த பதிவு வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது.

சரி உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்.

சென்ற பதிவுகளில் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துவாதச பாவங்களில் லக்னம் முதல் 6 வீடுகள் வரை அமர்ந்திருந்தால் தரும் பலன்களை பார்த்தோம்.

இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

மேஷத்தாருக்கு 2, 7-க்குடைய சுக்கிரன் 7-ம் வீடான துலாத்தில் ஆட்சி பெற்று அமரும் போது எத்தகைய பலனை தருவார்?

பொதுவாக சுக்கிரன் ஒரு சுபக்கிரகம் அவர் மேஷ லக்னத்திற்கு கேந்திர ஸ்தானமான 7-ம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார்.  எனவே பொதுவிதிப்படி சுக்கிரனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் வருகிறது.

மேலும் சுக்கிரன் களத்திர காரகனாகவும் வருகிறார்.  களத்திர காரகன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால் காரகோ பாவ நாஸ்தி என்கிறது ஜோதிடம்.

ஆக மேஷ லக்னதிற்கு 7-ல் அமர்ந்த சுக்கிரன் கெடுபலனையே தரவேண்டும் அல்லவா?

ஆனால் அப்படி கொடுப்பதில்லை.  இங்கு தான் சிறப்பு விதி வேலை செய்கிறது.

என்ன சிறப்பு விதி? கொஞ்சம் சொல்லுங்களேன்.

சுக்கிரன் 7-ல் அமர்ந்தாலும் அங்கு அவருடைய சொந்த வீடான துலாத்தில் ஆட்சி வலுவுடன் உள்ளார்.

மேலும் கேந்திரத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றால் பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றான மாளவியா யோகத்தை தரும் என்பது ஜோதிட விதியாகும்.

ஆக மேஷ லக்னத்திற்கு சுக்கிரனானவர் பொதுவிதிப்படி தோஷத்தை அளிக்க மாட்டார்.  மாறாக சிறப்பு விதிப்படி யோகத்தையே தருவார்.

பொதுவாக ஒரு கிரகம் யோகம் செய்யும் நிலையில் இருக்கும் போது தோஷத்தை செய்யாது. 

எனவே மேஷத்திற்கு 7-ல் அமர்ந்த சுக்கிரன் மாளவியா யோகபலனையே செய்கிறார்.

மாளவியா யோகத்திற்கு என்ன பலன் என்று பல நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கும். 

ஆக சுக்கினால் ஏற்படும் நல்ல பலன்கள் அனைத்தும் ஜாதகருக்கு கிடைக்கும்.

இதை தான் ஆதிபத்ய சிறப்பு என்கிறோம்.

ஒரு கிரகம் சுபனா, அசுபனா என்று பொதுவாக பார்ப்பதை விட அக்கிரகம் அந்த லக்னத்திற்கு எத்தகைய ஆதிபத்யம் பெற்று  எந்த ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

மாளவியா யோகம் பெற்ற சுக்கிரன் தனது 7-ம் பார்வையால் லக்னத்தை பார்ப்பதால் ஜாதகர் நல்ல உடல் அழகும் அமைப்பும் பெற்றிருப்பார்.  7-ம் வீடு மனைவியை குறிக்கிறதல்லவா! எனவே ஜாதகருக்கு அழகான மனைவி அமைவார்.

அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே

இப்படிப்பட்ட மனைவி ஜாதகருக்கு அமைவார்.

7-மிடம் நாம் பிறருடன் கொள்ளும் தொடர்பை குறிக்கிறது.

எனவே ஜாதகர் வியாபாரத்தில் நல்ல லாபம் அடைவார்.  சுக்கிரனின் காரகத்துவங்களான வீடு, வாகனம் போன்றவற்றால் நன்மைகள் ஏற்படும்.

என்னதான் நல்ல நல்ல பலன்களாக இருந்தாலும் 7-ல் இருப்பது சுக்கிரனாயிற்றே. அவர் பார்ப்பது லக்னமாயிற்றே.  சும்மா விடுவாரா சுக்கிரன்.

ஜாதகரின் மனதில் காதல், காம எண்ணங்களை தோற்றுவிக்கதான் செய்வார்.  ஜாதகர் நல்ல ஆடை, ஆபரணங்களுடன் ஆடம்பரமாக மைனர் போன்று காட்சியளிப்பார்.

இந்த யோகத்தை தரும் சுக்கிரன் பாபக்கிரகங்களுடன் சேராமலோ அல்லது பார்க்கப்படாமலோ இருந்தால் மிகவும் நல்ல பலனை தரும்.  அப்படி பார்த்துவிட்டால் அதற்கு ஏற்றபடி பலன்களை குறைத்துவிட வேண்டியது தான்.

மேஷ லக்னத்திற்கு பாபகிரகங்கள் சனி, புதன் மற்றும் ராகு, கேது போன்ற கிரகங்களாகும்.

இது சுக்கிரனுக்கு மட்டுமல்ல பொதுவாக யோகம் அளிக்கக்கூடிய எந்த கிரகங்களானாலும் பாபிகள் பார்வை, சேர்க்கை கூடாது.  பகை, நீசம், அஸ்தனம், கிரகயுத்தம் போன்றவற்றில் இருக்கக்கூடாது.  இருந்தால் என்னவாம?  ஒன்றும் இல்லை

ஆமாம்! யோகம் ஒன்றும் வேலை செய்யாது.  அப்புறம் ஜோதிட புஸ்தவத்தை படித்துவிட்டு எனக்கு அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது.  ஆனால் ஒன்னையும் காணோமே என்று புலம்பகூடாது.

சரி அடுத்ததாக சுக்கிரன் 8-ல் விருச்சிக ராசியில் இருக்கும் போது என்ன பலனை தருவார்.

பொதுவாக சுக்கிரன் 8-ல் இருப்பது அஷ்ட லட்சுமி யோகம் என்று கூறுவார்கள்.  ஏனெனில் அவர் தனது 7-ம் பார்வையாக லக்னத்திற்கு 2-மிடத்தை பார்க்கிறார்.  எனவே பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.  இங்கு சுக்கிரன் தன் வீட்டை  பார்க்கிறார்.  பொதுவாக எந்த கிரகமும் 8-ல் மறையக்கூடாது என்பது விதி.  ஆனால் தனாதிபதி மட்டும் 8-க்கு செல்லலாம்.  ஏனெனில் நேர் 7-ம் பார்வையாக தன் வீட்டை பார்த்துவிடும்.  தன் வீட்டை பார்க்கும் கிரகம் அவ்வீட்டிற்கு பலத்தை அளித்துவிடும்.

எனவே ஜாதகருக்கு உழைக்காமல் வரும் செல்வம், உயில், இன்சூரன்ஸ், லாட்டரி, புதையல் போன்றவற்றின் மூலம் பணம் கிடைக்கும்.

ஏனெனில் 8-மிடம் எதையும் திடீரென கிடைக்கும் பலன்களை குறிக்கும்.  மேலும் மரணத்தையும் குறிக்கும் வீடாகும்.  எனவே தான் அந்த வழிகளில் ஜாதகருக்கு தனம் கிடைக்கும் என்று சொல்கிறேன்.

சரி துட்டு கெடிச்சா போதுமா? நிம்மதி வேணாமா?

7-மிடம் மனைவியை குறிக்கிறது.  8-மிடம் மரணத்தை குறிக்கிறது.  ஆக மனைவியை குறிக்கும் கிரகம் மரண ஸ்தானம் ஏறியதால் என்ன பலன்.  சுக்கிரன் மறைந்ததால் அதுவும் 8-க்கு சென்றதால் மனைவிக்கு பாதிப்பு எற்படும்.  மனைவிக்கு உடல் நலம் பாதிக்கும், அல்லது கணவன் மனைவி பிரிவு ஏற்படும்.  அல்லது ஜாதகரின் மனைவி இறக்க நேரிடும்.

இந்த பலன் செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் ஜாதகருக்கே கூட கெண்டாதி தோஷங்களை தரும்.  ஏனெனில் செவ்வாய் இங்கு லக்னாதிபதியல்லவா! மேலும் அஷ்டம ஸ்தானத்தில் வலிமையும் அடைகிறார்.

இப்படிதான் ஒவ்வொரு கிரகமும் ஒரு வீட்டில் இருக்கும் போது நாம் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  நடப்பு தசா புக்திகளை பார்க்க வேண்டும்.  அல்லது கடந்து சென்ற தசா புக்திகளை பார்த்து இந்த கால கட்டத்தில் இத்தகைய பலன்கள் நடைபெற்றனவா? என்று ஜாதகரை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். 

அவற்றிலிருந்து ஜாதகருக்கு நன்மை செய்யும் கிரகங்கள் எவை?  அவர்களது தசா புக்திகள் எப்போது வருகிறது. என்று கண்டறிந்து அவர்களுக்கு நன்மையை சொல்ல வேண்டும்.  அவ்வாறே தீய பலன் ஏற்படும் காலத்தையும் முன்கூட்டியே சொல்லி எச்சரிக்க வேண்டும்.

ஆக ஜோதிடம் என்பது சாதாரணமாக நாம் வாயில் வருவதையெல்லாம் எடுத்துவிடக்கூடியதல்ல.  ஒரு முறைக்கு பலமுறை யோசித்து உறுதிசெய்த பிறகே பலன்களை சொல்ல வேண்டும்.  நாம்பாட்டுக்கு கற்பில்லாதவள் என்று கூறிவைக்க பெண்ணின் வாழ்க்கையே பறிபோய்விடும். 

ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கும் போது அதன் காரகத்துவ, ஆதிபத்ய பலன்களுள் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.  அவை நல்லதாகவும் இருக்கலாம் அல்லது தீயதாகவும் இருக்கலாம்.  அதையெல்லாம் ஆராயாமல், உறுதிப்படுத்தாமல் நாம் பாட்டுக்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கூறிவைத்தால் அது நம்மிடம் பலன் கேட்பவருக்கு மிகவும் சங்கடத்தை தரும்.

அடுத்ததாக பாக்கிய ஸ்தானமான 9-ல் குருவின் வீடான தனுசுவில் சுக்கிரன் அமரும் போது எத்தகைய பலனை தரும்.

பொதுவாக கேந்திராதிபதிகள், தன லாபாதிபதிகள் பாக்கிய ஸ்தானம் பெற்றால் மிகவும் நல்ல பலனை தருவர்.

அந்தவகையில் தனாதிபதியான சுக்கிரன் குருவின் வீட்டில் பாக்கிய ஸ்தானம் பெற்றதால் தனவிஷயங்களில் சிறப்பான பலன்களை தருவார்.  களத்திர ஸ்தானாதிபதி என்று கொண்டாலும் அவர் பாக்கியம் பெற்றது சிறப்பே.

எனவே ஜாதகர் நல்ல குடும்பம், நல்ல மனைவி, நீண்ட தூர பயணங்களால் நன்மை, முதலீடுகளால் ஆதாயம் போன்ற நல்ல பலன்களை பெறுவார்.  ஜாதகர் தர்ம சிந்தனை உடையவராகவும் இருப்பார் என்றாலும் சுக்கிரனாக இருப்பதால் பிரதிபலன் கருதியே எதையும் செய்வார்கள்.

ஆக தனுசில் இருக்கும் சுக்கிரன் மேஷத்தாருக்கு நன்மையான பலனையே தனது தசாக்காலங்களில் தருவார்.

அடுத்ததாக 10-ல் சனியின் மகரத்தில் இருக்கும் போது சுக்கிரன் எத்தகைய பலன்களை தருவார்.

இங்கு சப்தம கேந்திராதிபத்யம் பெற்ற சுக்கிரன் தசம கேந்திரமான 10-க்கு வந்ததால் கேந்திராதிபத்ய தோஷத்தை தந்துவிடுவார்.  ஏனெனில் இங்கு சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெறவில்லை.  எனவே யோகத்தை தர வழியில்லை.  எனவே தோஷத்தை தந்துவிடுகிறார்.

மேலும் சனியின் வீட்டில் சுக்கிரன் அமர்ந்ததால் செக்ஸ் விஷயங்களில் உணர்ச்சிகளை அதிகப்படுத்தி ஒழுக்க குறைவை ஏற்படுத்துவார்.  மேலும் இந்த இடம் தொழில் ஸ்தானமாகையால் தொழிலில் சக பணியாளர்களுடன் தேவையற்ற செக்ஸ் சம்பந்தமான சர்ச்சைகளில் ஈடுபட்டு பெயர் கெட வாய்ப்புள்ளது.  தொழிலில் அவப்பெயர் ஏற்படும்.  நாட்டம் குறையும்.  சனியின் சேர்க்கையோ அல்லது பார்வையோ சுக்கிரனுக்கு இருந்துவிட்டால் நிச்சயம் இந்த பலன்கள் நடக்கும்.  மற்றபடி சுபக்கிரகமானதால் சொகுசான தொழில் அமையும்.  வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்களாக இருக்கலாம்.

அடுத்ததாக 11-ல் சுக்கிரன் இருப்பது சிறப்பு.  ஏனெனில் அவர் தனாதிபதியாகவும் வருகிறார்.  எனவே தன லாபத்தை ஏற்படுத்தும்.  மேலும் சுக்கிரன் களத்திர ஸ்தானாதிபதியாகவும் வருகிறார்.  எனவே ஜாதகருக்கு பல பெண்களின் தொடர்பும் ஏற்படும்.  மேஷ லக்னத்திற்கு 11-மிடம் பாதக ஸ்தானம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.  இங்கு சுக்கிரன் பாபிகளால் பாதிக்கப்படக்கூடாது.  பாதிக்கபட்டால் பணக்கஷ்டங்களும், பெண்களால் தொல்லைகளும் ஏற்படும்.

இறுதியாக சுக்கிரன் 12-ல் மீனத்தில் உச்சம் பெற்றால் தரும் பலன்களை பார்க்கலாம்.

பொதுவாக எந்த கிரகமும் 12-ல் இருந்தால் நல்லதல்ல பலம் குறைந்துவிடும் என்று ஜோதிட விதி கூறுகிறது.  ஆனால் இங்கு சுக்கிரன் இருந்தால் நல்ல பலனை தருவார் என்றும் கூறுகிறது.  எப்படி?

தனாதிபதி உச்சம் பெற்றது சிறப்பு.  மேலும் எந்த கிரகமும் 12-ல் பலம் பெற்றால் அதன் ஆதிபத்ய பலனை விட காரகத்துவ பலனை சிறப்பாக செய்யும் என்று மறைந்த ஜோதிட மேதை திரு. பி.வி். ராமன் எழுதிய பாவார்த்த ரத்னாகரா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுக்கிரனின் காரகத்துவங்களான ஆடம்பர வாழ்க்கை, மனைவி, பொன் பொருள் சேர்க்கை, வீடு, வாகன யோகம் போன்ற பலன்கள் சிறப்பாக நடைபெறும்.  ஆனால் இங்கு சுக்கிரன் பாவிகளுடன் சேர்ந்து பலம் குறைந்துவிடக்கூடாது.  அப்படி பலம் குறைந்தாலும் கூட குருவின் பார்வையைப் பெற்றால் நன்மையான பலனையே செய்யும்.

அதே சமயத்தில் இந்த பலன்கள் நடைபெற வேண்டுமானால் அந்த ஸ்தானாதிபதிகளும் பலம் பெற்றிருக்க வேண்டும். 

அதாவது வீடு, வாகனம் பெற 4-ம் அதிபதியான சந்திரன் வலு குறைந்து மறைந்து காணப்பட்டால் பலன்கள் கிடைக்காது.

இந்த விதியை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.  ஏனெனில் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெற்றதால் நன்மையை செய்கிறார்.  மற்ற லக்னங்களுக்கு பலம்  குறைந்து காணப்பட்டால் நன்மை என்று கூறக்கூடாது.

நண்பர்களே! ஜோதிடத்தில் எந்த விதியும் நிரந்தரமானதல்ல.  கிரகங்கள் அமரும் இடத்திற்கு ஏற்ப விதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டு சரியான விதிமுறைகளுடன் ஓரளவிற்கு சரியான பலன்களை ஜாதகரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டால் அவருக்கு வழிகாட்ட ஏதுவாக இருக்கும்.  அதைவிடுத்து எல்லாவற்றையும் ஜோதிடரே புட்டு புட்டு வைக்க வேண்டும் என்று நினைத்தால் புட்டு வருவதற்கு பதில் ஆப்பு தான் வரும் ஜாக்கிரதை. 

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். 

7 comments:

  1. பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி நண்பரே!
    ஜோதிட முத்துச் சிதறல்கள் கோர்ப்பதற்கு அருமையாக குவித்துத் தருகிறீர்கள்...
    நீங்கள் கூறும் விதிகள் என்னும் இடத்தில் அந்த வார்த்தைகளின் நிறத்தை மாற்றிக் காண்பித்தால் கூட நன்றாக இருக்கும்.
    தொடருங்கள்.... படித்து வுருகிறோம்.

    நன்றிகள் நண்பரே!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. வாருங்கள் தமிழ்விரும்பி, உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    நீங்கள் சொல்லும் யோசனையும் நன்றாக உள்ளது. ஆனால் ஏகப்பட்ட விஷயங்களை தட்டச்சுவதால் நிறம் கொடுக்க முடியவில்லை. அடுத்த பதிவுகளில் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  3. நன்றாக உள்ளது தொடருங்கள்.

    http://astrovanakam.blogspot.com/

    ReplyDelete
  4. //rajesh said...

    நன்றாக உள்ளது தொடருங்கள்.//

    வாருங்கள் ராஜேஷ். உங்கள் கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றி ஐயா, தங்களின் லக்ன வாரியான பாடங்கள் மிக அருமையாக உள்ளது.

    மேஷ லக்னத்திற்கு - எனக்கு சிம்ம சுக்கிரனுடன் செவ்வாய் (சனியின் பார்வையில் ) சேர்ந்த கேடு பலன்களை பற்றி முன்பு விளக்கி இருக்கிறிர்கள் . என்னுடைய ராசி கட்டத்தில் லக்னத்தில் ராகு,சூரியன் - புதன் இணைவு கன்னியில் (6ம்வீடு) , கேது துலாமில் (7ம் வீடு) ,சனி விருச்சிகத்தில் (8ம் வீடு) , குரு மகரத்தில் (10ம் வீடு) , சந்திரன் மீனத்தில் (12ம் வீடு) . நவாம்ஷதில் லக்னத்தில் சந்திரன் (தனுசு விட்டில்) ,கேது மீனத்தில் ( 4ம் வீடு), சூரியன் மேஷத்தில் (5ம் வீடு),குரு ரிஷபத்தில் (6ம் வீடு) , புதன் மிதுனத்தில் (7 ம் வீடு) ,சனி கடகத்தில் ( 8ம் வீடு) , செவ்வாய் ராகு இணைவு கன்னியில் (10 ம் வீடு)

    சுக்கிரன் மட்டும் நவாம்சத்தில் சிம்ம விட்டில் ( வகோதமம் - நவாம்ச லக்னத்தில் இருந்து 9 ம் இடம்) மற்றும் சூரியன் (ஐந்தாம் வீட்டின் அதிபர் ) - புதன் குரு பார்வையில் ஆறாம் விட்டில் அமர்ந்து இருக்கிறார்கள். இந்த வகோதம சுக்கிரன் மற்றும் குரு பார்வையுள்ள சூரியனால் ஆகும் பலன்களை பற்றி சிறிது எழுதவும்.

    ReplyDelete
  6. /// Sathish said...

    நன்றி ஐயா, தங்களின் லக்ன வாரியான பாடங்கள் மிக அருமையாக உள்ளது.////

    வாங்க சதீஷ், நீங்க மேஷலக்னம் தானே அப்படின்னா கொஞ்சம் பொறுமையாக நம்ம தொடரை படித்து உங்கள் கருத்தை, அனுபவத்தை எழுதலாமே. உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

    நாமும் எவ்வளவு தூரம் ஒர்க்கவுட் ஆகுதுன்னு பார்க்கலாம் அல்லது விவாதிக்கலாம் சரியா!

    நீங்கள் ஜோதிடத்தை உங்கள் ஜாதகத்திற்கு மட்டும் பார்க்காமல் பொதுவான வழிமுறைகளை, ஆராயும் வழிகளை பற்றி தெரிந்துகொண்டால் உங்களுக்கு மேலும் எளிமையாக இருக்குமே.

    நம்ம ஜாதகத்தோடு மட்டும் ஒப்பிட்டு பார்த்து சரி வரவில்லையென்றால் அப்புறம் அந்த ஜோதிட விதிகளின் மீது அவ்வளவாக ஈர்ப்பு வராது.

    ஜாதக பலன்?

    கொஞ்சம் பொறுமையாக படித்து வாருங்களேன். கடைசியில் மேஷ லக்னம் முடியும் போது உதாரண ஜாதகமாக உங்கள் ஜாதகத்தையே பதிவில் அலசி எழுதிவிடலாமா?

    ReplyDelete
  7. நன்றி ஐயா ,நீங்கள் சொல்வது சரியே அனைத்து பாடங்களின் முடிவில் என்னுடைய சந்தேங்களை கேட்டு கொள்கிறேன். மேஷ லக்ன பாட முடிவில் என்னுடைய ஜாதகத்தை உதரணமாக எடுத்து கொள்ளலாம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.